தோழியர்களே! முத்துக்களாலாகிய நல்ல மாலையையும், பூமாலையையும் தொங்கவிட்டு முளைப் பாலிகையை யும், குங்குலியத் தூபத்தையும் நல்ல விளக்கையும் வையுங்கள். உருத்திராணியும், திருமகளும், நிலமகளும் கலை மகளோடு கூடித் திருப்பல்லாண்டு பாடுங்கள். கணபதியின் சத்தியும், கௌமாரியும், மகேசுவரியும், கங்காதேவியும், முன்வந்து வெண் சாமரை வீசுங்கள். எமது தந்தையும் திருவையாற்றை உடையவனுமாகிய எம் தலைவனைப் பாடி, அவன் நிரம்ப அணிதற் பொருட்டுப் பொன் போலும் வாசனைப்பொடியை நாம் இடிப்போம்.
பூ இயல் வார் சடை எம்பிராற்கு, பொன் திருச் சுண்ணம் இடிக்கவேண்டும்,
மாவின் வடு வகிர் அன்ன கண்ணீர்! வம்மின்கள், வந்து, உடன் பாடுமின்கள்;
கூவுமின், தொண்டர் புறம் நிலாமே; குனிமின், தொழுமின்; எம் கோன், எம் கூத்தன்,
தேவியும் தானும் வந்து, எம்மை ஆள, செம் பொன் செய் சுண்ணம் இடித்தும், நாமே!
அழகு பொருந்திய நீண்ட சடையுடைய எம் பெருமானுக்கு அழகிய பொற்சுண்ணத்தை இடிக்க வேண்டும். மாம் பிஞ்சின் பிளவை ஒத்த கண்களையுடைய பெண்களே! வாருங்கள்! வந்து விரைவிற் பாடுங்கள்! அடியார்கள் வெளியில் இல்லாதபடி அவர்களை அழையுங்கள்! ஆடுங்கள்! வணங்குங்கள். எமது இறை வனாகிய கூத்தப் பிரான் இறைவியும் தானுமாய் எழுந்தருளி வந்து எம் வழிபாட்டை ஏற்று எம்மை அடிமைகொள்ளும் பொருட்டுச் செம் பொன்போல ஒளிவிடும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.
சுந்தர நீறு அணிந்து, மெழுகி, தூய பொன் சிந்தி, நிதி பரப்பி,
இந்திரன் கற்பகம் நாட்டி, எங்கும் எழில் சுடர் வைத்து, கொடி எடுமின்;
அந்தரர் கோன், அயன் தன் பெருமான், ஆழியான் நாதன், நல் வேலன் தாதை,
எம் தரம் ஆள் உமையாள் கொழுநற்கு, ஏய்ந்த பொற்சுண்ணம் இடித்தும், நாமே!
அழகிய திருநீற்றை அணிந்து கொண்டு தரையை மெழுகுதல் செய்து மாற்றுயர்ந்த பொற்பொடிகளைச் சிதறி, நவமணி களைப் பரப்பி இந்திரன் உலகிலுள்ள கற்பக மரத்தின் தோகைகளை நட்டு எவ்விடத்தும் அழகிய தீபங்கள் வைத்துக்கொடிகளை ஏற்றுங்கள். விண்ணவர்க்குத் தலைவனும் பிரமனுக்கு முதல்வனும் சக்கரத்தையுடைய திருமாலுக்கு நாயகனும் அழகிய முருகனுக்குத் தந்தையும் எம் நிலையில் உள்ளாரையும் ஆட்கொள்ளுகின்ற உமா தேவியின் கணவனுமாகிய இறைவனுக்குப் பொருந்திய பொன் போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.
காசு அணிமின்கள், உலக்கை எல்லாம்; காம்பு அணிமின்கள், கறை உரலை;
நேசம் உடைய அடியவர்கள் நின்று நிலாவுக' என்று வாழ்த்தி,
தேசம் எல்லாம் புகழ்ந்து ஆடும் கச்சித் திரு ஏகம்பன் செம் பொன் கோயில் பாடி,
பாச வினையைப் பறித்து நின்று, பாடி, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!
உலக்கைகளுக்கெல்லாம் மணிவடங்களைக் கட்டுங்கள். கருமை நிறமுடைய உரல்களுக்குப் பட்டுத்துணியைச் சுற்றுங்கள். இறைவனிடத்து அன்புடைய அடியவர்கள் நிலைபெற்று விளங்குக என்று வாழ்த்தி உலகமெல்லாம் புகழ்ந்து கொண்டாடுகின்ற காஞ்சிமா நகரிலுள்ள திருவேகம்பனது செம்பொன்னால் செய்யப் பட்ட திருக்கோயிலைப் பாடி, தளையாகிய இரு வினைகளை நீக்கி நின்று திருவருளைப்பாடிப் பொன்போலும் வாசனைப்பொடியை நாம் இடிப்போம்.
அறுகு எடுப்பார் அயனும், அரியும்; அன்றி, மற்று இந்திரனோடு, அமரர்,
நறுமுறு தேவர் கணங்கள் எல்லாம், நம்மில் பின்பு அல்லது, எடுக்க ஒட்டோம்;
செறிவு உடை மும் மதில் எய்த வில்லி, திரு ஏகம்பன், செம் பொன் கோயில் பாடி,
முறுவல் செவ் வாயினீர்! முக் கண் அப்பற்கு, ஆட, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!
பிரமனும் திருமாலும் அறுகம்புல்லை எடுத்த லாகிய பணியைச் செய்வார்கள். அவர்களைத் தவிர ஏனையோராகிய இந்திரன் முதலிய வானுலகத்தவர்களும் முணுமுணுக்கின்ற தேவர் கணங்களும் நமக்குப் பின் அல்லாமல் அவ்வறுகினை எடுக்கவிட மாட்டோம். நெருங்கிய முப்புரத்தை எய்து அழித்த வில்லையுடைய வனாகிய திருவேகம்பனது செம்பொன்னாலாகிய கோயிலைப் பாடி நகையோடு கூடிய சிவந்த வாயினையுடையீர்! மூன்று கண்களை யுடைய எம்தந்தைக்குப் பூசிக் கொள்ளும் பொருட்டுப் பொன் போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.
இவ்வுலகம் முழுவதும் உரல்களை வைப்பதற்கு இடம் போதாது என்று சொல்லும்படி பெரியவர் பலர் பல உலக்கை களைக் கொண்டு ஓங்கி இடிப்பார்கள். உலகங்கள் பலவும் இடம் போதமாட்டா என்னும்படி அடியவர் ஒன்று கூடிப் பார்ப்பதற்கு வந்து நின்றனர். நாம் நன்மையடைய, அடியார்களாகிய நம்மை ஆட் கொண்டருளி அன்றலர் தாமரை மலர் போன்ற திருவடிகளை நாம் சென்னிமேல் சூடிக்கொள்ளும்படி கொடுத்த இமவான் மருமகனாகிய பெருமானைப் பல்கால் பாடிக் களித்துப் பொன்போலும் நிறமுடைய வாசனைப் பொடியை இடிப்போம்.
சூடகம், தோள் வளை, ஆர்ப்ப ஆர்ப்ப, தொண்டர் குழாம் எழுந்து ஆர்ப்ப ஆர்ப்ப,
நாடவர் நம் தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப, நாமும் அவர் தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப,
பாடகம் மெல் அடி ஆர்க்கும் மங்கை பங்கினன், எங்கள் பரா பரனுக்கு,
ஆடக மா மலை அன்ன கோவுக்கு, ஆட, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!
கைவளையும் தோள்வளையும் பலகாலும் ஒலிக்க, அடியார் கூட்டம் புறப்பட்டு அரகரவென்று அடிக்கடி முழங்க, நாட்டில் உள்ளார் நம் இயல்பினை நோக்கி நம்மை இகழ்ந்து சிரிக்க, நாமும் அவர்கள் அறியாமையை எண்ணி நகை செய்ய, கால் அணி மென்மையான பாதங்களில் ஒலிக்கும் உமாதேவியை ஒரு பாகமாக உடையவனாகிய எங்களுக்கு மிக மேலானவனும் பெரிய பொன் மலையை ஒத்த தலைவனுமாகிய இறைவனுக்குத் திருமுழுக்கின் பொருட்டுப் பொன்போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.
வாள் தடம் கண் மட மங்கை நல்லீர்! வரி வளை ஆர்ப்ப, வண் கொங்கை பொங்க,
தோள் திருமுண்டம் துதைந்து இலங்க, சோத்தம், பிரான்!' என்று சொல்லிச் சொல்லி,
நாள் கொண்ட நாள் மலர்ப் பாதம் காட்டி, நாயின் கடைப்பட்ட நம்மை, இம்மை
ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப் பாடி, ஆட, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!
வாள்போன்ற பெரிய கண்களையும் இளமையு முடைய மங்கைப் பருவப் பெண்களே! வரிகளையுடைய வளையல் கள் ஒலிக்கவும் வளப்பம் மிகுந்த தனங்கள் பூரிக்கவும், தோளிலும் நெற்றியிலும் திருநீறுபிரகாசிக்கவும் எம்பெருமானே வணக்கம் என்று பலகாற் கூறி அப்பொழுது பறித்த அன்றலர்ந்த மலர்கள் சூட்டப் பெற்ற திருவடியைக் காட்டி நாயினும் கீழ்ப்பட்ட நம்மை இப்பிறவியிலே ஆண்டுகொண்ட முறைகளைப் பலகாற் பாடி இறைவன் திருமுழுக் கிற்குப் பொன்போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.
வையகம் எல்லாம் உரல் அது ஆக, மா மேரு என்னும் உலக்கை நாட்டி,
மெய் எனும் மஞ்சள் நிறைய அட்டி, மேதகு தென்னன், பெருந்துறையான்,
செய்ய திருவடி பாடிப் பாடி, செம் பொன் உலக்கை வலக் கை பற்றி,
ஐயன், அணி தில்லைவாணனுக்கே, ஆட, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!
உலகமுழுவதும் உரலாகக் கொண்டு மகாமேரு என்கிற உலக்கையை உள்ளத்திலே நிலைநாட்டி, உண்மை என்கிற மஞ்சளை நிறைய இட்டு மேன்மை தங்கிய அழகிய நல்ல திருப்பெருந்துறையில் இருப்பவனது செம்மையாகிய திருவடியைப் பலகாற்பாடிச் செம்பொன் மயமான உலக்கையை வலக்கையில் பிடித்துத் தலைவனாகிய அழகிய தில்லைவாணனுக்குத் திருமுழுக்கின் பொருட்டுப் பொன்போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.
முத்து அணி கொங்கைகள் ஆட ஆட, மொய் குழல் வண்டு இனம் ஆட ஆட,
சித்தம் சிவனொடும் ஆட ஆட, செம் கயல் கண் பனி ஆட ஆட,
பித்து எம்பிரானொடும் ஆட ஆட, பிறவி பிறரொடும் ஆட ஆட,
அத்தன் கருணையொடு ஆட ஆட, ஆட, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!
முத்துவடமணிந்த தனங்கள் அசைந்து ஆடவும், நெருங்கிய கூந்தலிலுள்ள வண்டுக் கூட்டங்கள் எழுந்து ஆடவும், மனமானது சிவபெருமானிடத்தில் நீங்காதிருக்கவும், செங்கயல் மீன் போன்ற கண்கள் நீர்த்துளியை இடைவிடாது சிந்த, அன்பு எம்பெரு மானிடத்தில் மேன்மேற்பெருகவும் பிறவியானது உலகப் பற்றுள்ள பிறரோடும் சூழ்ந்து செல்லவும், எம் தந்தையாகிய சிவபெருமான் அருளோடு நம்முன் விளங்கித் தோன்றவும் அவன் திருமுழுக்கின் பொருட்டுப் பொன்போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.
மாடு, நகை வாள் நிலா எறிப்ப, வாய் திறந்து அம் பவளம் துடிப்ப,
பாடுமின், நம் தம்மை ஆண்ட ஆறும், பணி கொண்ட வண்ணமும்; பாடிப் பாடித்
தேடுமின், எம்பெருமானை; தேடி, சித்தம் களிப்ப, திகைத்து, தேறி,
ஆடுமின்; அம்பலத்து ஆடினானுக்கு, ஆட, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!
பெண்களே! பக்கங்களில் பல்லினது ஒளி, நிலவு போன்று ஒளிவீசவும், அழகிய பவளம் போன்ற உதடுகள் துடிக்கவும், வாயைத் திறந்து பாடுங்கள். நம்மவன் ஆண்டு கொண்ட வழியையும் இறைபணியிலே நிற்கச் செய்ததையும் அவ்வாறு இடைவிடாது பாடி எம்பெருமானைத் தேடுங்கள். அவ்வாறு தேடி மனம் உன்மத்த நிலையையடைய, தடுமாறிப் பின்னர் மனம் தெளிந்து ஆடுங்கள். தில்லையம்பலத்தில் நடனஞ் செய்தவனுக்குத் திருமுழுக்கின் பொருட்டுப் பொன் போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.
மை அமர் கண்டனை, வான நாடர் மருந்தினை, மாணிக்கக் கூத்தன் தன்னை,
ஐயனை, ஐயர் பிரானை, நம்மை அகப்படுத்து ஆட்கொண்டு அருமை காட்டும்
பொய்யர் தம் பொய்யினை, மெய்யர் மெய்யை; போது அரிக் கண் இணை, பொன் தொடித் தோள்,
பை அரவு அல்குல், மடந்தை நல்லீர்! பாடி, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!
தாமரை மலர் போன்ற செவ்வரிபடர்ந்த இரண்டு கண்களையும் பொன் வளையணிந்த தோள்களையும் பாம்பின் படம் போன்ற அல்குலையுமுடைய மடந்தைப் பருவத்தையுடைய பெண்களே! கருமையமைந்த கழுத்தினையுடையவனும் விண்ணுலகத் தாருக்கு அமுதமாயிருப்பவனும் செம்மை நிறமுடைய கூத்தனும், தேவனும், தேவர்க்குத் தலைவனும் நம்மைத் தன் வசப்படுத்தி அடிமை கொண்டு தனது அரிய தன்மையைப் புலப்படுத்தினவனும் பொய்ம்மை யாளருக்குப் பொய்ம்மையானவனும் மெய்ம்மையாளருக்கு மெய்ம் மையானவனுமாகிய இறைவனைப் பாடிப் பொன்போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.
மின் இடை, செம் துவர் வாய், கரும் கண், வெள் நகை, பண் அமர் மென் மொழியீர்!
என்னுடை ஆர் அமுது, எங்கள் அப்பன், எம்பெருமான், இமவான் மகட்குத்
தன்னுடைக் கேள்வன், மகன், தகப்பன், தமையன், எம் ஐயன தாள்கள் பாடி,
பொன்னுடைப் பூண் முலை மங்கை நல்லீர்! பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!
மின்னல் கொடி போன்ற இடையினையும் செம்பவளம் போன்ற இதழினையும் கருமையான கண்களையும் வெண்மையான பற்களையும் இசைபொருந்திய மென்மையான மொழியினையும் உடையவர்களே! பொன்னாபரணம் அணிந்த தனங்களையுடைய மங்கைப் பருவப் பெண்களே! என்னையுடைய அமுதம் போன்றவனும் எங்கள் அப்பனும் எம்பெருமானும் மலையரசன் மகளாகிய பார்வதிக்கு அவளை உடைய நாயகனும் மகனும் தந்தையும் முன்பிறந்தானுமாகிய எங்கள் கடவுளது திருவடி களைப் பாடிப் பொன் போலும் அழகிய வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.
சங்கம் அரற்ற, சிலம்பு ஒலிப்ப, தாழ் குழல் சூழ்தரும் மாலை ஆட,
செம் கனி வாய் இதழும் துடிப்ப, சேயிழையீர்! சிவலோகம் பாடி,
கங்கை இரைப்ப அரா இரைக்கும் கற்றைச் சடை முடியான் கழற்கே,
பொங்கிய காதலின் கொங்கை பொங்க, பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!
கருங்குவளை மலர் போன்ற பெரிய கண்களையுடைய இளம் பெண்களே! ஞானமாகிய கருப்பஞ்சாற்றின் தெளிவானவனும், அதன் பாகானவனும், தேடுவதற்கு அருமையான நன்மைப் பொருளானவனும், சுவை கெடாத தேனானவனும், முக்கனிகளின் சுவையானவனும், மனத்தில் புகுந்து இனிக்க வல்ல தலைவனும், பிறவித்தளையை அறுத்து ஆண்டுகொண்டருளின கூத்தப் பெருமானுமாகிய இறைவனை நாவில் வடுவுண்டாகும்படி, துதித்துப் பாடிப் பொன் போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.
நாமும் அன்பரோடு கூடி வந்து உய்யும் வகையில் பணிசெய்யும் வகைகளைப் பாடி விண்ணுலகத்திலுள்ள தேவர்கள் கனவிலும் கண்டறியாத செந்தாமரை மலர்போலும் திருவடிகளை எமக்குக் காட்டுகின்ற செல்வமாகிய காளையை அகத்தே கொண்ட வெற்றியையுடைய கொடியையுடையவனும் சிவபெருமானும், முப்புரங்களை அழித்த வெற்றியையுடைய வீரனுமாகிய இறைவன் திருநாமங்களைப் பரவிச் சிவந்த பொன் போல ஒளியைத் தருகின்ற வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.
தேன் அகம் மா மலர்க் கொன்றை பாடி, சிவபுரம் பாடி, திருச் சடைமேல்
வான் அகம் மா மதிப் பிள்ளை பாடி, மால் விடை பாடி, வலக் கை ஏந்தும்
ஊன் அகம் மா மழு, சூலம், பாடி, உம்பரும் இம்பரும் உய்ய, அன்று,
போனகம் ஆக, நஞ்சு உண்டல் பாடி, பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!
சிவபெருமானது தேன்நிறைந்த உள்ளிடத்தை யுடைய பெருமை பொருந்திய கொன்றை மலரைப் பாடி, சிவ லோகத்தைப் பாடி, அழகிய சடையின் மேலுள்ள விண்ணிடத்து உலாவுகின்ற பெருமையமைந்த இளம்பிறையைப் பாடி, பெரிய இடபத்தைப் பாடி, வலக்கையில் தாங்கிய, தசை தன்னிடத்தில் பொருந்திய மழுவினையும் முத்தலை வேலினையும் பாடி, விண் ணுலகத்தாரும் மண்ணுலகத்தாரும் பிழைக்கும் வண்ணம் அந்நாளில் விடத்தை உணவாக உண்டதைப் பாடிப் பொன் போலும் அழகிய வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.
அயன் தலை கொண்டு செண்டு ஆடல் பாடி, அருக்கன் எயிறு பறித்தல் பாடி,
கயம் தனைக் கொன்று, உரி போர்த்தல் பாடி, காலனைக் காலால் உதைத்தல் பாடி,
இயைந்தன முப்புரம் எய்தல் பாடி, ஏழை அடியோமை ஆண்டுகொண்ட
நயம் தனைப் பாடிநின்று, ஆடி ஆடி, நாதற்கு, சுண்ணம் இடித்தும், நாமே!
சிவபெருமான் பிரமன் தலையைக் கொய்து பந்தாடினமையைப் பாடி, சூரியனது பல்லைத் தகர்த்தமையைப் பாடி, யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்துக் கொண்டமையைப் பாடி, இயமனைக் காலால் உதைத்ததைப் பாடி, ஒருங்கே உலவிய திரிபுரங்களை அம்பால் எய்து அழித்தமையைப் பாடி, சிற்றறிவும் சிறு தொழிலுமுடைய எங்களை ஆட்கொண்ட நன்மையினைப் பாடி, பாடலுக்கேற்ப நின்று தொடர்ந்து ஆடி இறைவனுக்கு வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.
வட்ட மலர்க் கொன்றை மாலை பாடி, மத்தமும் பாடி, மதியும் பாடி,
சிட்டர்கள் வாழும் தென் தில்லை பாடி, சிற்றம்பலத்து எங்கள் செல்வம் பாடி,
கட்டிய மாசுணக் கச்சை பாடி, கங்கணம் பாடி, கவித்த கைம்மேல்
இட்டுநின்று ஆடும் அரவம் பாடி, ஈசற்கு, சுண்ணம் இடித்தும், நாமே!