அறுசமயத் தலைவராய்
நின்றவருக் கன்பராய்
மறுசமயச் சாக்கியர்தம்
வடிவினால் வருந்தொண்டர்
உறுதிவரச் சிவலிங்கங்
கண்டுவந்து கல்லெறிந்து
மறுவில்சரண் பெற்றதிறம்
அறிந்தபடி வழுத்துவாம்.
|
1
|
தாளாளர் திருச்சங்க
மங்கையினில் தகவுடைய
வேளாளர் குலத்துதித்தார்
மிக்கபொருள் தெரிந்துணர்ந்து
கேளாகிப் பல்லுயிர்க்கும்
அருளுடைய ராய்க்கெழுமி
நீளாது பிறந்திறக்கும்
நிலைஒழிவேன் எனநிற்பார்.
|
2
|
அந்நாளில் எயிற்காஞ்சி
அணிநகரம் சென்றடைந்து
நல்ஞானம் அடைவதற்குப்
பலவழியும் நாடுவார்
முன்னாகச் சாக்கியர்தாம்
மொழியறத்தின் வழிச்சார்ந்து
மன்னாத பிறப்பறுக்குந்
தத்துவத்தின் வழிஉணர்வார்.
|
3
|
அந்நிலைமைச் சாக்கியர்தம்
அருங்கலைநூல் ஓதிஅது
தன்னிலையும் புறச்சமயச்
சார்வுகளும் பொருளல்ல
என்னுமது தெளிந்தீச
ரருள்கூட ஈறில்சிவ
நன்னெறியே பொருளாவ
தெனவுணர்வு நாட்டுவார்.
|
4
|
செய்வினையுஞ் செய்வானும்
அதன்பயனுங் கொடுப்பானும்
மெய்வகையால் நான்காகும்
விதித்தபொரு ளெனக்கொண்டே
இவ்வியல்பு சைவநெறி
அல்லவற்றுக் கில்லையென
உய்வகையாற் பொருள்
சிவனென்றருளாலே யுணர்ந்தறிந்தார்.
|
5
|
| Go to top |
எந்நிலையில் நின்றாலும்
எக்கோலம் கொண்டாலும்
மன்னியசீர்ச் சங்கரன்தாள்
மறவாமை பொருளென்றே
துன்னியவே டந்தன்னைத்
துறவாதே தூயசிவம்
தன்னைமிகும் அன்பினால்
மறவாமை தலைநிற்பார்.
|
6
|
காணாத அருவினுக்கும்
உருவினுக்குங் காரணமாய்
நீணாக மணிந்தார்க்கு
நிகழ்குறியாஞ் சிவலிங்கம்
நாணாது நேடியமால்
நான்முகனுங் காணநடுச்
சேணாருந் தழற்பிழம்பாய்த்
தோன்றியது தெளிந்தாராய்.
|
7
|
நாடோறும் சிவலிங்கங்
கண்டுண்ணு மதுநயந்து
மாடோர்வெள் ளிடைமன்னும்
சிவலிங்கங் கண்டுமனம்
நீடோடு களியுவகை
நிலைமைவரச் செயலறியார்
பாடோர்கல் கண்டதனைப்
பதைப்போடும் எடுத்தெறிந்தார்.
|
8
|
அகநிறைந்த பேருவகை
அடங்காத ஆதரவால்
மகவுமகிழ்ந் துவப்பார்கள்
வன்மைபுரி செயலினால்
இகழ்வனவே செய்தாலும்
இளம்புதல்வர்க் கின்பமே
நிகழுமது போலதற்கு
நீள்சடையார் தாம்மகிழ்வார்.
|
9
|
அன்றுபோய்ப் பிற்றைநாள்
அந்நியதிக் கணையுங்கால்
கொன்றைமுடி யார்மேற்றாங்
கல்லெறிந்த குறிப்பதனை
நின்றுணர்வா ரெனக்கப்போ
திதுநிகழ்ந்த தவரருளே
என்றதுவே தொண்டாக
வென்றுமது செயநினைந்தார்.
|
10
|
| Go to top |
தொடங்கியநா ளருளியவத்
தொழிலொழியா வழிதொடரும்
கடன்புரிவா ரதுகண்டு
கல்லெறிவார் துவராடைப்
படம்புனைவே டந்தவிரார்
பசுபதியார் தஞ்செயலே
அடங்கவுமென் பதுதெளிந்தா
ராதலினால் மாதவர்தாம்.
|
11
|
இந்நியதி பரிவோடு
வழுவாம லிவர்செய்ய
முன்னுதிருத் தொண்டாகி
முடிந்தபடி தான்மொழியில்
துன்னியமெய் யன்புடனே
யெழுந்தவினை தூயவர்க்கு
மன்னுமிகு பூசனையாம்
அன்புநெறி வழக்கினால்.
|
12
|
கல்லாலே யெறிந்ததுவு
மன்பான படிகாணில்
வில்வேடர் செருப்படியும்
திருமுடியின் மேவிற்றால்
நல்லார்மற் றவர்செய்கை
யன்பாலே நயந்ததனை
அல்லா தார் கல்லென்பா
ரரனார்க்கஃ தலராமால்.
|
13
|
அங்கொருநாள் அருளாலே
அயர்ந்துண்ணப் புகுகின்றார்
எங்கள்பிரான் றனையெறியா
தயர்த்தேன்யா னெனவெழுந்து
பொங்கியதோர் காதலுடன்
மிகவிரைந்து புறப்பட்டு
வெங்கரியி னுரிபுனைந்தார்
திருமுன்பு மேவினார்.
|
14
|
கொண்டதொரு கல்லெடுத்துக்
குறிகூடும் வகையெறிய
உண்டிவினை யொழித்தஞ்சி
யோடிவரும் வேட்கையொடும்
கண்டருளுங் கண்ணுதலார்
கருணைபொழி திருநோக்கால்
தொண்டரெதிர் நெடுவிசும்பில்
துணைவியொடுந் தோன்றுவார்.
|
15
|
| Go to top |
மழவிடைமே லெழுந்தருளி
வந்ததொரு செயலாலே
கழலடைந்த திருத்தொண்டர்
கண்டுகரங் குவித்திறைஞ்சி
விழவருணோக் களித்தருளி
மிக்கசிவ லோகத்தில்
பழவடிமைப் பாங்கருளிப்
பரமரெழுந் தருளினார்.
|
16
|
ஆதியார் தம்மை நாளுங்
கல்லெறிந் தணுகப் பெற்ற
கோதில்சீர்த் தொண்டர் கொண்ட
குறிப்பினை யவர்க்கு நல்கும்
சோதியா ரறித லன்றித்
துணிவதென் அவர்தாள் சூடித்
தீதினை நீக்க லுற்றேன்
சிறப்புலி யாரைச் செப்பி.
|
17
|