மானமிகு தருமத்தின்
வழிநின்று வாய்மையினில்
ஊனமில்சீர்ப் பெருவணிகர்
குடிதுவன்றி ஓங்குபதி
கூனல்வளை திரைசுமந்து
கொண்டேறி மண்டுகழிக்
கானல்மிசை உலவுவளம்
பெருகுதிருக் காரைக்கால்.
|
1
|
வங்கமலி கடற்காரைக்
காலின்கண் வாழ்வணிகர்
தங்கள்குலத் தலைவனார்
தனதத்த னார்தவத்தால்
அங்கவர்பால் திருமடந்தை
அவதரித்தாள் எனவந்து
பொங்கியபே ரழகுமிகப்
புனிதவதி யார்பிறந்தார்.
|
2
|
வணிகர்பெருங் குலம்விளங்க
வந்துபிறந் தருளியபின்
அணிகிளர்மெல் லடிதளர்வுற்று
அசையுநடைப் பருவத்தே
பணியணிவார் கழற்கடிமை
பழகிவரும் பாங்குபெறத்
தணிவில்பெரு மனக்காதல்
ததும்பவரும் மொழிபயின்றார்.
|
3
|
பல்பெருநற் கிளைஉவப்பப்
பயில்பருவச் சிறப்பெல்லாம்
செல்வமிகு தந்தையார்
திருப்பெருகுஞ் செயல்புரிய
மல்குபெரும் பாராட்டின்
வளர்கின்றார் விடையவர்பால்
அல்கியஅன் புடன்அழகின்
கொழுந்தெழுவ தெனவளர்வார்.
|
4
|
வண்டல்பயில் வனஎல்லாம்
வளர்மதியம் புனைந்தசடை
அண்டர்பிரான் திருவார்த்தை
அணையவரு வனபயின்று
தொண்டர்வரின் தொழுதுதா
தியர்போற்றத் துணைமுலைகள்
கொண்டுநுசுப் பொதுங்குபதங்
கொள்கையினிற் குறுகினார்.
|
5
|
| Go to top |
நல்லவென உறுப்புநூ
லவர்உரைக்கும் நலம்நிரம்பி
மல்குபெரு வனப்புமீக்
கூரவரு மாட்சியினால்
இல்லிகவாப் பருவத்தில்
இவர்கள்மர பினுக்கேற்குந்
தொல்குலத்து வணிகர்மகள்
பேசுதற்குத் தொடங்குவார்.
|
6
|
நீடியசீர்க் கடல்நாகை
நிதிபதியென் றுலகின்கண்
பாடுபெறு புகழ்வணிகன்
பயந்தகுல மைந்தனுக்குத்
தேடவருந் திருமரபில்
சேயிழையை மகட்பேச
மாடமலி காரைக்கால்
வள நகரின் வரவிட்டார்.
|
7
|
வந்தமூ தறிவோர்கள்
மணங்குறித்தம் மனைபுகுந்து
தந்தையாந் தனதத்தன்
தனைநேர்ந்து நீபயந்த
பைந்தொடியை நிதிபதிமைந்
தன்பரம தத்தனுக்கு
முந்தைமர பினுக்கேற்கும்
முறைமைமணம் புரிகென்றார்.
|
8
|
மற்றவனும் முறைமையினால்
மணம்இசைந்து செலவிடச் சென்
றுற்றவர்கள் உரைகேட்ட
நிதிபதியும் உயர்சிறப்புப்
பெற்றனன் போல் உவந்துதனிப்
பெருமகற்குத் திருமலியுஞ்
சுற்றமுடன் களிகூர்ந்து
வதுவைவினைத் தொழில்பூண்டான்.
|
9
|
மணமிசைந்த நாளோலை
செலவிட்டு மங்கலநாள்
அணையவது வைத்தொழில்கள்
ஆனவெலாம் அமைவித்தே
இணரலங்கல் மைந்தனையும்
மணவணியின் எழில்விளக்கிப்
பணைமுரசம் எழுந்தார்ப்பக்
காரைக்கால் பதிபுகுந்தார்.
|
10
|
| Go to top |
அளிமிடைதார்த் தனதத்தன்
அணிமாடத் துள்புகுந்து
தெளிதருநூல் விதிவழியே
செயல்முறைமை செய்தமைத்துத்
தளிரடிமென் நகைமயிலைத்
தாதவிழ்தார்க் காளைக்குக்
களிமகிழ்சுற் றம்போற்றக்
கலியாணஞ் செய்தார்கள்.
|
11
|
மங்கலமா மணவினைகள்
முடித்தியல்பின் வைகுநாள்
தங்கள்குடிக் கொருபுதல்வி
ஆதலினால் தனதத்தன்
பொங்கொலிநீர் நாகையினிற்
போகாமே கணவனுடன்
அங்கண்அமர்ந் தினிதிருக்க
அணிமாடம் மருங்கமைத்தான்.
|
12
|
மகட்கொடையின் மகிழ்சிறக்கும்
வரம்பில்தனங் கொடுத்ததற்பின்
நிகர்ப்பரிய பெருஞ்சிறப்பில்
நிதிபதிதன் குலமகனும்
தகைப்பில்பெருங் காதலினால்
தங்குமனை வளம்பெருக்கி
மிகப்புரியுங் கொள்கையினில்
மேம்படுதல் மேவினான்.
|
13
|
ஆங்கவன்தன் இல்வாழ்க்கை
அருந்துணையாய் அமர்கின்ற
பூங்குழலார் அவர்தாமும்
பொருவிடையார் திருவடிக்கீழ்
ஓங்கியஅன் புறுகாதல்
ஒழிவின்றி மிகப்பெருகப்
பாங்கில்வரு மனையறத்தின்
பண்புவழா மையில்பயில்வார்.
|
14
|
நம்பரடி யார்அணைந்தால்
நல்லதிரு அமுதளித்தும்
செம்பொன்னும் நவமணியுஞ்
செழுந்துகிலும் முதலான
தம்பரிவி னாலவர்க்குத்
தகுதியின்வேண் டுவகொடுத்தும்
உம்பர்பிரான் திருவடிக்கீழ்
உணர்வுமிக ஒழுகுநாள்.
|
15
|
| Go to top |
பாங்குடைய நெறியின்கண்
பயில்பரம தத்தனுக்கு
மாங்கனிகள் ஓரிரண்டு
வந்தணைந்தார் சிலர்கொடுப்ப
ஆங்கவைதான் முன்வாங்கி
அவர்வேண்டுங் குறையளித்தே
ஈங்கிவற்றை இல்லத்துக்
கொடுக்கவென இயம்பினான்.
|
16
|
கணவன்தான் வரவிடுத்த
கனியிரண்டுங் கைக்கொண்டு
மணமலியும் மலர்க்கூந்தல்
மாதரார் வைத்ததற்பின்
பணஅரவம் புனைந்தருளும்
பரமனார் திருத்தொண்டர்
உணவின்மிகு வேட்கையினால்
ஒருவர்மனை உட்புகுந்தார்.
|
17
|
வேதங்கள் மொழிந்தபிரான்
மெய்த்தொண்டர் நிலைகண்டு
நாதன்தன் அடியாரைப்
பசிதீர்ப்பேன் எனநண்ணிப்
பாதங்கள் விளக்கநீர்
முன்னளித்துப் பரிகலம்வைத்
தேதந்தீர் நல்விருந்தா
இன்னடிசில் ஊட்டுவார்.
|
18
|
கறிஅமுதங் குதவாதே
திருஅமுது கைகூட
வெறிமலர்மேல் திருவனையார்
விடையவன்தன் அடியாரே
பெறலரிய விருந்தானால்
பேறிதன்மேல் இல்லையெனும்
அறிவினராய் அவரமுது
செய்வதனுக் காதரிப்பார்.
|
19
|
இல்லாளன் வைக்கவெனத்
தம்பக்கல் முன்னிருந்த
நல்லநறு மாங்கனிகள்
இரண்டினில்ஒன் றைக்கொண்டு
வல்விரைந்து வந்தணைந்து
படைத்துமன மகிழ்ச்சியினால்
அல்லல்தீர்ப் பவர்அடியார்
தமையமுது செய்வித்தார்.
|
20
|
| Go to top |
மூப்புறும்அத் தளர்வாலும்
முதிர்ந்துமுடு கியவேட்கைத்
தீப்பசியின் நிலையாலும்
அயர்ந்தணைந்த திருத்தொண்டர்
வாய்ப்புறுமென் சுவையடிசில்
மாங்கனியோ டினிதருந்திப்
பூப்பயில்மென் குழல்மடவார்
செயலுவந்து போயினார்.
|
21
|
மற்றவர்தாம் போயினபின்
மனைப்பதியா கியவணிகன்
உற்றபெரும் பகலின்கண்
ஓங்கியபேர் இல்எய்திப்
பொற்புறமுன் நீராடிப்
புகுந்தடிசில் புரிந்தயிலக்
கற்புடைய மனையாருங் கடப்பாட்டில் ஊட்டுவார்.
|
22
|
இன்னடிசில் கறிகளுடன்
எய்துமுறை இட்டதற்பின்
மன்னியசீர்க் கணவன்தான்
மனையிடைமுன் வைப்பித்த
நன்மதுர மாங்கனியில்
இருந்ததனை நறுங்கூந்தல்
அன்னமனை யார்தாமும்
கொடுவந்து கலத்தளித்தார்.
|
23
|
மனைவியார் தாம்படைத்த
மதுரமிக வாய்ந்தகனி
தனைநுகர்ந்த இனியசுவை
ஆராமைத் தார்வணிகன்
இனையதொரு பழம்இன்னும்
உளததனை இடுகவென
அனையதுதாங் கொண்டுவர
அணைவார்போல் அங்ககன்றார்.
|
24
|
அம்மருங்கு நின்றயர்வார்
அருங்கனிக்கங் கென்செய்வார்
மெய்ம்மறந்து நினைந்துற்ற
விடத்துதவும் விடையவர்தாள்
தம்மனங்கொண் டுணர்தலுமே
அவரருளால் தாழ்குழலார்
கைம்மருங்கு வந்திருந்த
ததிமதுரக் கனியொன்று.
|
25
|
| Go to top |
மற்றதனைக் கொடுவந்து
மகிழ்ந்திடலும் அயின்றதனில்
உற்றசுவை அமுதினுமேற்
படவுளதா யிடஇதுதான்
முன்தருமாங் கனியன்று
மூவுலகிற் பெறற்கரிதால்
பெற்றதுவே றெங்கென்று
பெய்வளையார் தமைக்கேட்டான்.
|
26
|
அவ்வுரைகேட் டலும்மடவார்
அருளுடையார் அளித்தருளும்
செவ்வியபேர் அருள்விளம்புந்
திறமன்றென் றுரைசெய்யார்
கைவருகற் புடைநெறியால்
கணவன்உரை காவாமை
மெய்வழியன் றெனவிளம்பல்
விடமாட்டார் விதிர்ப்புறுவார்.
|
27
|
செய்தபடி சொல்லுவதே
கடனென்னுஞ் சீலத்தால்
மைதழையுங் கண்டர்சே
வடிகள்மனத் துறவணங்கி
எய்தவருங் கனியளித்தார்
யார்என்னுங் கணவனுக்கு
மொய்தருபூங் குழல்மடவார்
புகுந்தபடி தனைமொழிந்தார்.
|
28
|
ஈசனருள் எனக்கேட்ட
இல்இறைவன் அதுதெளியான்
வாசமலர்த் திருவனையார்
தமைநோக்கி மற்றிதுதான்
தேசுடைய சடைப்பெருமான்
திருவருளேல் இன்னமும்ஓர்
ஆசில்கனி அவனருளால்
அழைத்தளிப்பாய் எனமொழிந்தான்.
|
29
|
பாங்ககன்று மனைவியார்
பணியணிவார் தமைப்பரவி
ஈங்கிதளித் தருளீரேல்
என்னுரைபொய் யாம்என்ன
மாங்கனியொன் றருளால்வந்
தெய்துதலும் மற்றதனை
ஆங்கவன்கைக் கொடுத்தலுமே
அதிசயித்து வாங்கினான்.
|
30
|
| Go to top |
வணிகனுந் தன்கைப் புக்க
மாங்கனி பின்னைக் காணான்
தணிவரும் பயமேற் கொள்ள
உள்ளமுந் தடுமா றெய்தி
அணிகுழல் அவரை வேறோர்
அணங்கெனக் கருதி நீங்குந்
துணிவுகொண் டெவர்க்குஞ் சொல்லான்
தொடர்வின்றி ஒழுகு நாளில்.
|
31
|
விடுவதே எண்ண மாக மேவிய
முயற்சி செய்வான்
படுதிரைப் பரவை மீது படர்கலங் கொண்டு போகி
நெடுநிதி கொணர்வேன் என்ன
நிரந்தபல் கிளைஞ ராகும்
வடுவில்சீர் வணிக மாக்கள்
மரக்கலஞ் சமைப்பித் தார்கள்.
|
32
|
கலஞ்சமைத் ததற்கு வேண்டும்
கம்மிய ருடனே செல்லும்
புலங்களில் விரும்பும் பண்டம்
பொருந்துவ நிரம்ப ஏற்றிச்
சலந்தரு கடவுட் போற்றித்
தலைமையாம் நாய்கன் தானும்
நலந்தரு நாளில் ஏறி
நளிர்திரைக் கடல்மேற் போனான்.
|
33
|
கடல்மிசை வங்கம் ஓட்டிக்
கருதிய தேயந் தன்னில்
அடைவுறச் சென்று சேர்ந்தங்
களவில்பல் வளங்கள் முற்றி
இடைசில நாள்கள் நீங்க
மீண்டும்அக் கலத்தில் ஏறிப்
படர்புனற் கன்னி நாட்டோர்
பட்டினம் மருங்கு சார்ந்தான்.
|
34
|
அப்பதி தன்னில் எய்தி
அலகில்பல் பொருள்கள் ஆக்கும்
ஒப்பில்மா நிதியம் எல்லாம்
ஒருவழிப் பெருக உய்த்து
மெய்ப்புகழ் விளங்கும் அவ்வூர்
விரும்பவோர் வணிகன் பெற்ற
செப்பருங் கன்னி தன்னைத்
திருமலி வதுவை செய்தான்.
|
35
|
| Go to top |
பெறலருந் திருவி னாளைப்
பெருமணம் புணர்ந்து முன்னை
அறலியல் நறுமென் கூந்தல்
அணங்கனார் திறத்தில் அற்றம்
புறமொரு வெளியு றாமற்
பொதிந்தசிந் தனையி னோடு
முறைமையின் வழாமை வைகி
முகமலர்ந் தொழுகு நாளில்.
|
36
|
முருகலர் சோலை மூதூர்
அதன்முதல் வணிக ரோடும்
இருநிதிக் கிழவன் என்ன
எய்திய திருவின் மிக்குப்
பொருகடற் கலங்கள் போக்கும்
புகழினான் மனைவி தன்பால்
பெருகொளி விளக்குப் போலோர்
பெண்கொடி அரிதிற் பெற்றான்.
|
37
|
மடமகள் தன்னைப் பெற்று
மங்கலம் பேணித் தான்முன்
புடனுறை வஞ்சி நீத்த
ஒருபெரு மனைவி யாரைத்
தொடர்வற நினைந்து தெய்வத்
தொழுகுலம் என்றே கொண்டு
கடனமைத் தவர்தம் நாமங்
காதல்செய் மகவை இட்டான்.
|
38
|
இன்னிலை இவன்இங் கெய்தி
இருந்தனன் இப்பால் நீடும்
கன்னிமா மதில்சூழ் மாடக்
காரைக்கால் வணிக னான
தன்னிகர் கடந்த செல்வத்
தனதத்தன் மகளார் தாமும்
மன்னிய கற்பி னோடு
மனையறம் புரிந்து வைக.
|
39
|
விளைவளம் பெருக்க வங்க
மீதுபோம் பரம தத்தன்
வளர்புகழ்ப் பாண்டி நாட்டோர்
மாநகர் தன்னில் மன்னி
அளவில்மா நிதியம் ஆக்கி
அமர்ந்தினி திருந்தான் என்று
கிளரொளி மணிக்கொம் பன்னார்
கிளைஞர்தாங் கேட்டா ரன்றே.
|
40
|
| Go to top |
அம்மொழி கேட்ட போதே
அணங்கனார் சுற்றத் தாரும்
தம்முறு கிளைஞர்ப் போக்கி
அவன்நிலை தாமும் கேட்டு
மம்மர்கொள் மனத்த ராகி
மற்றவன் இருந்த பாங்கர்க்
கொம்மைவெம் முலையி னாளைக்
கொண்டுபோய் விடுவ தென்றார்.
|
41
|
மாமணிச் சிவிகை தன்னில்
மடநடை மயில்அன் னாரைத்
தாமரைத் தவிசில் வைகுந்
தனித்திரு என்ன ஏற்றிக்
காமரு கழனி வீழ்த்துக்
காதல்செய் சுற்றத் தாரும்
தேமொழி யவருஞ் சூழச்
சேணிடைக் கழிந்து சென்றார்.
|
42
|
சிலபகல் கடந்து சென்று
செந்தமிழ்த் திருநா டெய்தி
மலர்புகழ்ப் பரம தத்தன்
மாநகர் மருங்கு வந்து
குலமுதல் மனைவி யாரைக்
கொண்டுவந் தணைந்த தன்மை
தொலைவில்சீர்க் கணவ னுக்குச்
சொல்லிமுன் செல்ல விட்டார்.
|
43
|
வந்தவர் அணைந்த மாற்றங்
கேட்டலும் வணிகன் தானும்
சிந்தையில் அச்சம் எய்திச்
செழுமணம் பின்பு செய்த
பைந்தொடி தனையுங் கொண்டு
பயந்தபெண் மகவி னோடும்
முந்துறச் செல்வேன் என்று
மொய்குழ லவர்பால் வந்தான்.
|
44
|
தானும்அம் மனைவி யோடும்
தளர்நடை மகவி னோடும்
மானிளம் பிணைபோல் நின்ற
மனைவியார் அடியில் தாழ்ந்தே
யான்உம தருளால் வாழ்வேன்
இவ்விளங் குழவி தானும்
பான்மையால் உமது நாமம்
என்றுமுன் பணிந்து வீழ்ந்தான்.
|
45
|
| Go to top |
கணவன்தான் வணங்கக் கண்ட
காமர்பூங்கொடிய னாரும்
அணைவுறுஞ் சுற்றத் தார்பால்
அச்சமோ டொதுங்கி நிற்ப
உணர்வுறு கிளைஞர் வெள்கி
உன்திரு மனைவி தன்னை
மணமலி தாரி னாய்நீ
வணங்குவ தென்கொல் என்றார்.
|
46
|
மற்றவர் தம்மை நோக்கி
மானுடம் இவர்தாம் அல்லர்
நற்பெருந் தெய்வ மாதல்
நானறிந் தகன்ற பின்பு
பெற்றஇம் மகவு தன்னைப்
பேரிட்டேன் ஆத லாலே பொற்பதம் பணிந்தேன் நீரும்
போற்றுதல் செய்மின் என்றான்.
|
47
|
என்றபின் சுற்றத் தாரும்
இதுவென்கொல் என்று நின்றார்
மன்றலங் குழலி னாரும்
வணிகன்வாய் மாற்றங் கேளாக்
கொன்றைவார் சடையி னார்தங்
குரைகழல் போற்றிச் சிந்தை
ஒன்றிய நோக்கில் மிக்க
உணர்வுகொண் டுரைசெய் கின்றார்.
|
48
|
ஈங்கிவன் குறித்த கொள்கை
இதுஇனி இவனுக் காகத்
தாங்கிய வனப்பு நின்ற
தசைப்பொதி கழித்திங் குன்பால்
ஆங்குநின் தாள்கள் போற்றும்
பேய்வடி வடியே னுக்குப்
பாங்குற வேண்டும் என்று
பரமர்தாள் பரவி நின்றார்.
|
49
|
ஆனஅப் பொழுது மன்றுள்
ஆடுவார் அருளி னாலே
மேனெறி உணர்வு கூர
வேண்டிற்றே பெறுவார் மெய்யில்
ஊனடை வனப்பை எல்லாம்
உதறிஎற் புடம்பே யாக
வானமும் மண்ணும் எல்லாம்
வணங்குபேய் வடிவ மானார்.
|
50
|
| Go to top |
மலர்மழை பொழிந்த தெங்கும்
வானதுந் துபியின் நாதம்
உலகெலாம் நிறைந்து விம்ம
உம்பரும் முனிவர் தாமும்
குலவினர் கணங்கள் எல்லாம்
குணலையிட் டனமுன் னின்ற
தொலைவில்பல் சுற்றத் தாருந்
தொழுதஞ்சி அகன்று போனார்.
|
51
|
உற்பவித் தெழுந்த ஞானத்
தொருமையின் உமைகோன் தன்னை
அற்புதத் திருவந் தாதி
அப்பொழு தருளிச் செய்வார்
பொற்புடைச் செய்ய பாத
புண்டரீ கங்கள் போற்றும்
நற்கணத் தினில்ஒன் றானேன்
நான்என்று நயந்து பாடி.
|
52
|
ஆய்ந்தசீர் இரட்டை மாலை
அந்தாதி யெடுத்துப் பாடி
ஏய்ந்தபேர் உணர்வு பொங்க
எயிலொரு மூன்றும் முன்னாள்
காய்ந்தவர் இருந்த வெள்ளிக்
கைலைமால் வரையை நண்ண
வாய்ந்தபேர் அருள்முன் கூர
வழிபடும் வழியால் வந்தார்.
|
53
|
கண்டவர் வியப்புற் றஞ்சிக்
கையகன் றோடு வார்கள்
கொண்டதோர் வேடத் தன்மை
உள்ளவா கூறக் கேட்டே
அண்டர்நா யகனார் என்னை
அறிவரேல் அறியா வாய்மை
எண்டிசை மாக்க ளுக்கியான்
எவ்வுரு வாயென் என்பார்.
|
54
|
வடதிசைத் தேசம் எல்லாம்
மனத்தினும் கடிதிற் சென்று
தொடையவிழ் இதழி மாலைச்
சூலபா ணியனார் மேவும்
படரொளிக் கயிலை வெற்பிற்
பாங்கணைந் தாங்குக் காலின்
நடையினைத் தவிர்ந்து பார்மேல்
தலையினால் நடந்து சென்றார்.
|
55
|
| Go to top |
தலையினால் நடந்து சென்று
சங்கரன் இருந்த வெள்ளி
மலையின்மேல் ஏறும் போது
மகிழ்ச்சியால் அன்பு பொங்கக்
கலையிளந் திங்கட் கண்ணிக்
கண்ணுதல் ஒருபா கத்துச்
சிலைநுதல் இமைய வல்லி
திருக்கண்நோக் குற்ற தன்றே.
|
56
|
அம்பிகை திருவுள் ளத்தின்
அதிசயித் தருளித் தாழ்ந்து
தம்பெரு மானை நோக்கித்
தலையினால் நடந்திங் கேறும்
எம்பெரு மான்ஓர் எற்பின்
யாக்கைஅன் பென்னே என்ன
நம்பெரு மாட்டிக் கங்கு
நாயகன் அருளிச் செய்வான்.
|
57
|
வருமிவள் நம்மைப் பேணும்
அம்மைகாண் உமையே மற்றிப்
பெருமைசேர் வடிவம் வேண்டிப்
பெற்றனள் என்று பின்றை
அருகுவந் தணைய நோக்கி
அம்மையே என்னுஞ் செம்மை
ஒருமொழி உலகம் எல்லாம்
உய்யவே அருளிச் செய்தார்.
|
58
|
அங்கணன் அம்மை யேஎன்
றருள்செய அப்பா என்று
பங்கயச் செம்பொற் பாதம் பணிந்துவீழ்ந் தெழுந்தார் தம்மைச்
சங்கவெண் குழையி னாருந் தா மெதிர் நோக்கி நம்பால்
இங்குவேண் டுவதென் என்ன
இறைஞ்சிநின் றியம்பு கின்றார்.
|
59
|
இறவாத இன்ப அன்பு
வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும்
பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும்
வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும் போதுன்
அடியின்கீழ் இருக்க என்றார்.
|
60
|
| Go to top |
கூடுமா றருள்கொ டுத்துக்
குலவுதென் திசையில் என்றும்
நீடுவாழ் பழன மூதூர்
நிலவிய ஆலங் காட்டில்
ஆடுமா நடமும் நீகண்
டானந்தஞ் சேர்ந்தெப் போதும்
பாடுவாய் நம்மை என்றான்
பரவுவார் பற்றாய் நின்றான்.
|
61
|
அப்பரி சருளப் பெற்ற
அம்மையுஞ் செம்மை வேத
மெய்ப்பொரு ளானார் தம்மை
விடைகொண்டு வணங்கிப் போந்து
செப்பரும் பெருமை அன்பால்
திகழ்திரு வாலங் காடாம்
நற்பதி தலையி னாலே
நடந்துபுக் கடைந்தார் அன்றே.
|
62
|
ஆலங்கா டதனில் அண்ட
முறநிமிர்ந் தாடு கின்ற
கோலங்காண் பொழுது கொங்கை
திரங்கிஎன் றெடுத்துத் தங்கு
மூலங்காண் பரியார் தம்மை
மூத்தநற் பதிகம் பாடி
ஞாலங்கா தலித்துப் போற்றும்
நடம்போற்றி நண்ணு நாளில்.
|
63
|
மட்டவிழ்கொன் றையினார்தந்
திருக்கூத்து முன்வணங்கும்
இட்டமிகு பெருங்காதல்
எழுந்தோங்க வியப்பெய்தி
எட்டிஇல வம்ஈகை
எனஎடுத்துத் திருப்பதிகங்
கொட்டமுழ வங்குழகன்
ஆடுமெனப் பாடினார்.
|
64
|
மடுத்தபுனல் வேணியினார்
அம்மையென மதுரமொழி
கொடுத்தருளப் பெற்றாரைக்
குலவியதாண் டவத்திலவர்
எடுத்தருளுஞ் சேவடிக்கீழ்
என்றுமிருக் கின்றாரை
அடுத்தபெருஞ் சீர்பரவல்
ஆரளவா யினதம்மா.
|
65
|
| Go to top |
ஆதியோ டந்த மில்லான்
அருள்நடம் ஆடும் போது
கீதமுன் பாடும் அம்மை
கிளரொளி மலர்த்தாள் போற்றிச்
சீதநீர் வயல்சூழ் திங்க
ளூரில்அப் பூதி யாராம்
போதமா முனிவர் செய்த
திருத்தொண்டு புகலல் உற்றேன்.
|
66
|