சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

12.720   சேக்கிழார்   வெள்ளானைச் சருக்கம்


+ Show Meaning   Add audio link Add Audio

மூல மான திருத்தொண்டத்
தொகைக்கு முதல்வ ராய்இந்த
ஞாலம் உய்ய எழுந்தருளும்
நம்பி தம்பி ரான்தோழர்
காலை மலர்ச்செங் கமலக்கண்
கழறிற் றறிவா ருடன்கூட
ஆல முணடார் திருக்கயிலை
அணைந்தது அறிந்த படியுரைப்பாம்.
1

படியில் நீடும் பத்திமுதல்
அன்பு நீரில் பணைத்தோங்கி
வடிவு நம்பி யாரூரர்
செம்பொன் மேனி வனப்பாகக்
கடிய வெய்ய இருவினையின்
களைகட் டெழுந்து கதிர்பரப்பி
முடிவி லாத சிவபோகம்
முதிர்ந்து முறுகி விளைந்ததால்.
2

ஆரம் உரகம் அணிந்தபிரான்
அன்பர் அணுக்க வன்தொண்டர்
ஈர மதுவார் மலர்ச்சோலை
எழிலா ரூரில் இருக்குநாள்
சேரர் பெருமாள் தனைநினைந்து
தெய்வப் பெருமான் கழல்வணங்கிச்
சாரல் மலைநா டணைவதற்குத்
தவிரா விருப்பி னுடன்போந்தார்.
3

நன்னீர்ப் பொன்னித் திருநாட்டு
நாதர் மகிழுந் திருப்பதிகள்
முன்னி இறைஞ்சி அகன்றுபோய்
முல்லைப் படப்பைக் கொல்லைமான்
துன்னி உகைக்குங் குடக்கொங்கில்
அணைந்து தூய மதிவான்நீர்
சென்னி மிசைவைத் தவர்செல்வத்
திருப்புக் கொளியூர் சென்றடைந்தார்.
4

மறையோர் வாழும் அப்பதியின்
மாட வீதி மருங்கணைவார்
நிறையுஞ் செல்வத் தெதிர்மனைகள்
இரண்டில் நிகழ்மங் கலஇயங்கள்
அறையும் ஒலியொன் றினில்ஒன்றில்
அழுகை ஒலிவந் தெழுதலும் ஆங்கு
உறையும் மறையோர் களைஇரண்டும்
உடனே நிகழ்வ தென்னென்றார்.
5
Go to top

அந்த ணாளர் வணங்கிஅரும்
புதல்வர் இருவர் ஐயாண்டு
வந்த பிராயத் தினர்குளித்த
மடுவில் முதலை ஒருமகவை
முந்த விழுங்கப் பிழைத்தவனை
முந்நூல் அணியுங் கலியாணம்
இந்த மனைமற் றந்தமனை
இழந்தார் அழுகை யென்றுரைத்தார்.
6

இத்தன் மையினைக் கேட்டருளி
இரங்குந் திருவுள் ளத்தினராம்
மொய்த்த முகைத்தார் வன்தொண்டர்
தம்மை முன்னே கண்டிறைஞ்ச
வைத்த சிந்தை மறையோனும்
மனைவி தானும் மகவிழந்த
சித்த சோகந் தெரியாமே
வந்து திருத்தாள் இறைஞ்சினார்.
7

துன்பம் அகல முகமலர்ந்து
தொழுவார் தம்மை முகநோக்கி
இன்ப மைந்தன் தனையிழந்தீர்
நீரோ என்ன எதிர்வணங்கி
முன்பு புகுந்து போனதது
முன்னே வணங்க முயல்கின்றோம்
அன்பு பழுதா காமல்எழுந்
தருளப் பெற்றோம் எனத்தொழுதார்.
8

மைந்தன் தன்னை இழந்ததுயர்
மறந்து நான்வந் தணைந்ததற்கே
சிந்தை மகிழ்ந்தார் மறையோனும்
மனைவி தானுஞ் சிறுவனையான்
அந்த முதலை வாய்நின்றும்
அழைத்துக் கொடுத்தே அவிநாசி
எந்தை பெருமான் கழல்பணிவேன்
என்றார் சென்றார் இடர்களைவார்.
9

இவ்வா றருளிச் செய்தருளி
இவர்கள் புதல்வன் தனைக்கொடிய
வெவ்வாய் முதலை விழுங்கும்மடு
எங்கே என்று வினவிக்கேட்டு
அவ்வாழ் பொய்கைக் கரையில் எழுந்
தருளி அவனை அன்றுகவர்
வைவாள் எயிற்று முதலைகொடு
வருதற் கெடுத்தார் திருப்பதிகம்.
10
Go to top

உரைப்பார் உரையென் றெடுத்ததிருப்
பாட்டு முடியா முன்உயர்ந்த
வரைப்பான் மையின்நீள் தடம்புயத்து
மறலி மைந்தன் உயிர்கொணர்ந்து
திரைப்பாய் புனலின் முதலைவயிற்
றுடலிற் சென்ற ஆண்டுகளும்
தரைப்பால் வளர்ந்த தெனநிரம்ப
முதலை வாயில் தருவித்தான்.
11

பெருவாய் முதலை கரையின்கண்
கொடுவந் துமிழ்ந்த பிள்ளைதனை
உருகா நின்ற தாய்ஓடி
எடுத்துக் கொடுவந் துஉயிரளித்த
திருவா ளன்தன் சேவடிக்கீழ்ச்
சீல மறையோ னொடுவீழ்ந்தாள்
மருவார் தருவின் மலர்மாரி
பொழிந்தார் விசும்பில் வானோர்கள்.
12

மண்ணில் உள்ளார் அதிசயித்தார்
மறையோர் எல்லாம் உத்தரியம்
விண்ணில் ஏற விட்டார்த்தார்
வேத நாதம் மிக்கெழுந்தது
அண்ண லாரும் அவிநாசி
அரனார் தம்மை அருமறையோன்
கண்ணின் மணியாம் புதல்வனையுங்
கொண்டு பணிந்தார் காசினிமேல்.
13

பரவும் பெருமைத் திருப்பதிகம்
பாடிப் பணிந்து போந் தன்பு
விரவு மறையோன் காதலனை
வெண்ணூல் பூட்டி அண்ணலார்
முரசம் இயம்பக் கலியாணம்
முடித்து முடிச்சே ரலர்தம்பால்
குரவ மலர்பூந் தண்சோலை
குலவு மலைநாடு அணைகின்றார்.
14

சென்ற சென்ற குடபுலத்துச்
சிவனார் அடியார் பதிகள் தொறும்
நன்று மகிழ்வுற்று இன்புற்று
நலஞ்சேர் தலமுங் கானகமும்
துன்று மணிநீர்க் கான்யாறும்
துறுகற் சுரமுங் கடந்தருளிக்
குன்ற வளநாட் டகம்புகுந்தார்
குலவும் அடியேன் அகம்புகுந்தார்.
15
Go to top

முன்னாள் முதலை வாய்ப்புக்க
மைந்தன் முன்போல் வரமீட்டுத்
தென்னா ரூரர் எழுந்தருளா
நின்றார் என்று சேரர்பிராற்கு
அந்நாட் டரனார் அடியார்கள்
முன்னே ஓடி அறிவிப்பப்
பொன்னார் கிழியும் மணிப்பூணும்
காசுந் தூசும் பொழிந்தளித்தார்.
16

செய்வ தொன்றும் அறியாது
சிந்தை மகிழ்ந்து களிகூர்ந்துஎன்
ஐயன் அணைந்தான் எனையாளும்
அண்ணல் அணைந்தான் ஆரூரில்
சைவன் அணைந்தான் என் துணையாம்
தலைவன் அணைந்தான் தரணியெலாம்
உய்ய அணைந்தான் அணைந்தான் என்று
ஓகை முரசம் சாற்றுவித்தார்.
17

பெருகும் மதிநூல் அமைச்சர்களை
அழைத்துப் பெரியோ ரெழுந்தருளப்
பொருவில் நகரம் அலங்கரித்துப்
பண்ணிப் பயணம் புறப்படுவித்
தருவி மதமால் யானையினை
அணைந்து மிசைகொண் டரசர்பெருந்
தெருவு கழிய எதிர்வந்தார்
சேரர் குலம்உய்ந் திடவந்தார்.
18

மலைநாட் டெல்லை யுட்புகுத
வந்த வன்தொண் டரைவரையில்
சிலைநாட் டியவெல் கொடித்தானைச்
சேரர் பெருமான் எதிர்சென்று
தலைநாட் கமலப் போதனைய
சரணம் பணியத் தாவில்பல
கலைநாட் டமுத ஆரூரர்
தாமுந் தொழுது கலந்தனரால்.
19

சிந்தை மகிழும் சேரலனார்
திருவா ரூரர் எனும்இவர்கள்
தந்தம் அணிமே னிகள்வேறாம்
எனினும் ஒன்றாந் தன்மையராய்
முந்த எழுங்கா தலின்தொழுது
முயங்கி உதியர் முதல்வேந்தர்
எந்தை பெருமான் திருவாரூர்ச்
செல்வம் வினவி யின்புற்றார்.
20
Go to top

ஒருவர் ஒருவ ரில்கலந்து
குறைபா டின்றி உயர்காதல்
இருவர் நண்பின் செயல்கண்ட
இரண்டு திறத்து மாந்தர்களும்
பெருகு மகிழ்ச்சி கலந்தார்த்தார்
பெருமாள் தமிழின் பெருமாளை
வருகை வரையின் மிசையேற்றித்
தாம்பின் மதிவெண் குடைகவித்தார்.
21

உதியர் பெருமாள் பெருஞ்சேனை
ஓதங் கிளர்ந்த தெனஆர்ப்பக்
கதிர்வெண் திருநீற் றன்பர்குழாம்
கங்கை கிளர்ந்த தென ஆர்ப்ப
எதிர்வந் திறைஞ்சும் அமைச்சர்குழாம்
ஏறும் இவுளித் துகளார்ப்ப
மதிதங் கியமஞ் சணியிஞ்சி
வஞ்சி மணிவா யிலையணைந்தார்.
22

ஆரண மொழிகன் முழங்கிட
ஆடினர் குணலைகள் அந்தணர்
வாரண மதமழை சிந்தின
வாசிகள் கிளரொலி பொங்கின
பூரண கலசம் மலிந்தன
பூமழை மகளிர் பொழிந்திடும்
தோரண மறுகு புகுந்தது
தோழர்கள் நடவிய குஞ்சரம்.
23

அரிவையர் தெருவில் நடம்பயில்
அணிகிளர் தளிரடி தங்கிய
பரிபுர வொலிகள் கிளர்ந்தன
பணைமுர சொலிகள் பரந்தன
சுரிவளை நிரைகள் முரன்றன
துணைவர்கள் இருவரும் வந்தணி
விரிதரு பவன நெடுங்கடை
விறன்மத கரியி னிழிந்தனர்.
24

தூநறு மலர்தர ளம்பொரி
தூவிமுன் இருபுடை யின்கணும்
நான்மறை முனிவர்கள் மங்கல
நாமநன் மொழிகள் விளம்பிட
மேனிறை நிழல்செய வெண்குடை
வீசிய கவரி மருங்குற
வானவர் தலைவரும் நண்பரும்
மாளிகை நடுவு புகுந்தனர்.
25
Go to top

அரியணை யதனில் விளங்கிட
அடன்மழ விடையென நம்பியை
வரிமலர் அமளி அமர்ந்திட
மலையர்கள் தலைவர் பணிந்தபின்
உரிமைநல் வினைகள் புரிந்தன
உரைமுடி விலவென முன்செய்து
பரிசனம் மனமகி ழும்படி
பலபட மணிநிதி சிந்தினர்.
26

இன்ன தன்மையில் உதியர்கள்
தலைவர்தாம் இடர்கெட முனைப்பாடி
மன்னர் தம்முடன் மகிழ்ந்தினி
துறையுநாள் மலைநெடு நாட்டெங்கும்
பன்ன கம்புனை பரமர்தந்
திருப்பதி பலவுடன் பணிந்தேத்திப்
பொன்னெ டுந்தட மூதெயில்
மகோதையிற் புகுந்தனர் வன்தொண்டர்.
27

ஆய செய்கையின் நாள்பல
கழிந்தபின் அரசர்கள் முதற்சேரர்
தூய மஞ்சனத் தொழிலினில்
தொடங்கிடத் துணைவராம் வன்தொண்டர்
பாய கங்கைசூழ் நெடுஞ்சடைப்
பரமரைப் பண்டுதாம் பிரிந்தெய்தும்
சேய நன்னெறி குறுகிடக்
குறுகினார் திருவஞ்சைக் களந்தன்னில்.
28

கரிய கண்டர்தங் கோயிலை
வலங்கொண்டு காதலால் பெருகன்பு
புரியும் உள்ளத்தர் உள்ளணைந்
திறைவர்தம் பூங்கழல் இணைபோற்றி
அரிய செய்கையில் அவனியில்
வீழ்ந்தெழுந்து அலைப்புறு மனைவாழ்க்கை
சரிய வேதலைக் குத்தலை
மாலையென் றெடுத்தனர் தமிழ்மாலை.
29

எடுத்த அத்திருப் பதிகத்தின்
உட்குறிப்பு இவ்வுல கினிற்பாசம்
அடுத்த வாழ்க்கையை அறுத்திட
வேண்டுமென்று அன்பர்அன் பினில்பாடக்
கடுத்த தும்பிய கண்டர்தங்
கயிலையிற் கணத்தவ ருடன்கூடத்
தடுத்த செய்கைதான் முடிந்திடத்
தங்கழற் சார்புதந் தளிக்கின்றார்.
30
Go to top

மன்ற லந்தரு மிடைந்தபூங்
கயிலையின் மலைவல்லி யுடன்கூட
வென்றி வௌள்விடைப் பாகர்தாம்
வீற்றிருந் தருளிய பொழுதின்கண்
ஒன்று சிந்தைநம் மூரனை
உம்பர்வெள் ளானையில் உடன்ஏற்றிச்
சென்று கொண்டிங்கு வாருமென்று
அயன்முதல் தேவர்கட் கருள்செய்தார்.
31

வான நாடர்கள் அரிஅயன்
முதலினோர் வணங்கிமுன் விடைகொண்டு
தூந லந்திகழ் சோதிவெள்
ளானையுங் கொண்டுவன் தொண்டர்க்குத்
தேன லம்புதண் சோலைசூழ்
32

தேவர் தங்குழாம் நெருங்கிய
வாய்தனில் திருநாவ லூரர்தம்
காவல் மன்னரும் புறப்பட
எதிர்கொண்டு கயிலைவீற் றிருக்கின்ற
பூவ லம்புதண் புனற்சடை
முடியவர் அருளிப்பா டெனப்போற்றி
ஏவல் என்றபின் செய்வதொன்று
இலாதவர் பணிந்தெழுந் தெதிரேற்றார்.
33

ஏற்ற தொண்டரை அண்டர்வெள்
ளானையின் எதிர்வலங் கொண்டேற்ற
நாற்ற டங்கடல் முழுக்கென
ஐவகை நாதமீ தொழுந்தார்ப்பப்
போற்றி வானவர் பூமழை
பொழிந்திடப் போதுவார் உயிரெல்லாம்
சாற்று மாற்றங்கள் உணர்பெருந்
துணைவரை மனத்தினிற் கொடுசார்ந்தார்.
34

சேரர் தம்பிரான் தம்பிரான்
தோழர்தஞ் செயலறிந் தப்போதே
சார நின்றதோர் பரியினை
மிசைக்கொண்டு திருவஞ்சைக் களஞ்சார்வார்
வீர வெண்களிறு உகைத்துவிண்
மேற்செலும் மெய்த்தொண்டர் தமைக்கண்டார்
பாரில் நின்றிலர் சென்றதம்
மனத்தொடு பரியும்முன் செலவிட்டார்.
35
Go to top

விட்ட வெம்பரிச் செவியினில்
புவிமுதல் வேந்தர்தாம் விதியாலே
இட்ட மாஞ்சிவ மந்திரம் ஓதலின்
இருவிசும் பெழப் பாய்ந்து
மட்ட லர்ந்தபைந் தெரியல்வன்
தொண்டர்மேல் கொண்டமா தங்கத்தை
முட்ட எய்திமுன் வலங்கொண்டு
சென்றது மற்றதன் முன்னாக.
36

உதியர் மன்னவர் தம்பெரும்
சேனையின் உடன்சென்ற படைவீரர்
கதிகொள் வாசியிற் செல்பவர்
தம்மைத்தங் கட்புலப் படுமெல்லை
எதிர்வி சும்பில் கண்டுபின்
கண்டிலர் ஆதலின் எல்லாரும்
முதிரும் அன்பினில் உருகிய
சுரிகையான் முறைமுறை உடல்வீழ்த்தார்.
37

வீர யாக்கையை மேல்கொண்டு
சென்றுபோய் வில்லவர் பெருமானைச்
சார முன்சென்று சேவகம்
ஏற்றனர் தனித்தொண்டர் மேல்கொண்ட
வாரு மும்மதத் தருவிவெள்
ளானைக்கு வயப்பரி முன்வைத்துச்
சேரர் வீரருஞ் சென்றனர்
மன்றவர் திருமலைத் திசைநோக்கி.
38

யானை மேல்கொண்டு செல்கின்ற
பொழுதினில் இமையவர் குழாமென்னும்
தானை முன்செலத் தானெனை
முன்படைத் தான்எனும் தமிழ்மாலை
மான வன்தொண்டர் பாடிமுன்
அணைந்தனர் மதிநதி பொதிவேணித்
தேன லம்புதண் கொன்றையார்
திருமலைத் தென்திசைத் திருவாயில்.
39

மாசில் வெண்மைசேர் பேரொளி
உலகெலாம் மலர்ந்திட வளர்மெய்ம்மை
ஆசி லன்பர்தம் சிந்தைபோல்
விளங்கிய அணிகிளர் மணிவாயில்
தேசு தங்கிய யானையும்
புரவியும் இழிந்துசே ணிடைச்செல்வார்
ஈசர் வௌள்ளிமா மலைத்தடம்
பலகடந் தெய்தினர் மணிவாயில்.
40
Go to top

அங்கண் எய்திய திருவணுக்
கன்திரு வாயிலின் அடற்சேரர்
தங்கள் காவலர் தடையுண்டு
நின்றனர் தம்பிரா னருளாலே
பொங்கு மாமதம் பொழிந்தவெள்
ளானையின் உம்பர்போற் றிடப்போந்த
நங்கள் நாவலூர்க் காவலர்
நண்ணினார் அண்ணலார் திருமுன்பு.
41

சென்று கண்ணுதல் திருமுன்பு
தாழ்ந்துவீழ்ந் தெழுந்துசே ணிடைவிட்ட
கன்று கோவினைக் கண்டணைந்
ததுவெனக் காதலின் விரைந்தெய்தி
நின்று போற்றிய தனிப்பெருந்
தொண்டரை நேரிழை வலப்பாகத்
தொன்றும் மேனியர் ஊரனே
வந்தனை என்றனர் உலகுய்ய.
42

அடிய னேன்பிழை பொறுத்தெனை
யாண்டுகொண் டத்தொடக் கினைநீக்கி
முடிவி லாநெறி தருபெருங்
கருணைஎன் தரத்ததோ எனமுன்னர்ப்
படியும் நெஞ்சொடு பன்முறை
பணிந்தெழும் பரம்பரை யானந்த
வடிவு நின்றது போன்றுஇன்ப
வெள்ளத்து மலர்ந்தனர் வன்தொண்டர்.
43

நின்ற வன்தொண்டர் நீரணி
வேணியர் நிறைமலர்க் கழல்சாரச்
சென்று சேரலன் திருமணி
வாயிலின் புறத்தினன் எனச்செப்பக்
குன்ற வில்லியார் பெரியதே
வரைச்சென்று கொணர்கென அவரெய்தி
வென்றி வானவர்க் கருளிப்பாடு
எனஅவர் கழல்தொழ விரைந்தெய்தி.
44

மங்கை பாகர்தந் திருமுன்பு
சேய்த்தாக வந்தித்து மகிழ்வெய்திப்
பொங்கும் அன்பினில் சேரலர்
போற்றிடப் புதுமதி அலைகின்ற
கங்கை வார்கடைக் கயிலைநா
யகர்திரு முறுவலின் கதிர்காட்டி
இங்கு நாம்அழை யாமைநீ
எய்திய தென்னென அருள்செய்தார்.
45
Go to top

அரசர் அஞ்சலி கூப்பிநின்று
அடியனேன் ஆரூரர் கழல்போற்றிப்
புரசை யானைமுன் சேவித்து
வந்தனன் பொழியுநின் கருணைத்தெண்
திரைசெய் வெள்ளமுன் கொடுவந்து
புகுதலின் திருமுன்பு வரப்பெற்றேன்
விரைசெய் கொன்றைசேர் வேணியாய்
இனியொரு விண்ணப்பம் உளதென்று.
46

பெருகு வேதமும் முனிவரும்
துதிப்பரும் பெருமையாய் உனைஅன்பால்
திருவு லாப்புறம் பாடினேன்
திருச்செவி சாத்திடப் பெறவேண்டும்
மருவு பாசத்தை அகன்றிட
வன்றொண்டர் கூட்டம்வைத் தாய்என்ன
அருளும் ஈசருஞ் சொல்லுக
என்றனர் அன்பருங் கேட்பித்தார்.
47

சேரர் காவலர் பரிவுடன்
கேட்பித்த திருவுலாப் புறங்கொண்டு
நாரி பாகரும் நலம்மிகு
திருவருள் நயப்புடன் அருள்செய்வார்
ஊர னாகிய ஆலால
சுந்தரன் உடனமர்ந் திருவீரும்
சார நங்கண நாதராம்
தலைமையில் தங்கும் என் றருள்செய்தார்.
48

அன்ன தன்மையில் இருவரும்
பணிந்தெழுந் தருள்தலை மேற்கொண்டு
மன்னும் வன்தொண்டர் ஆலால
சுந்தர ராகித்தாம் வழுவாத
முன்னை நல்வினைத் தொழில்தலை
நின்றனர் முதற்சேரர் பெருமானும்
நன்மை சேர்கண நாதராய்
அவர்செயும் நயப்புறு தொழில்பூண்டார்.
49

தலத்து வந்துமுன் னுதயஞ்செய்
பரவையார் சங்கிலி யாரென்னும்
நலத்தின் மிக்கவர் வல்வினைத்
தொடக்கற நாயகி யருளாலே
அலத்த மெல்லடிக் கமலினி
யாருடன் அனிந்திதை யாராகி
மலைத்த னிப்பெரு மான்மகள்
கோயிலில் தந்தொழில் வழிநின்றார்.
50
Go to top

வாழி மாதவர் ஆலால
சுந்தரர் வழியிடை அருள்செய்த
ஏழிசைத் திருப் பதிகம்இவ்
வுலகினில் ஏற்றிட எறிமுந்நீர்
ஆழி வேந்தனாம் வருணனுக்கு
அளித்திட அவனும்அவ் வருள்சூடி
ஊழி யில்தனி யொருவர்தம்
திருவஞ்கைக் களத்தில்உய்த் துணர்வித்தான்.
51

சேரர் காவலர் விண்ணப்பம்
செய்யஅத் திருவுலாப் புறம்அன்று
சாரல் வெள்ளியங் கயிலையில்
கேட்டமா சாத்தனார் தரித்துஇந்தப்
பாரில் வேதியர் திருப்பிட
வூர்தனில் வெளிப்படப் பகர்ந்தெங்கும்
நார வேலைசூழ உலகினில்
விளங்கிட நாட்டினர் நலத்தாலே.
52

என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மன்று ளார்அடி யாரவர் வான்புகழ்
நின்றது எங்கும் நிலவி உலகெலாம்.
53

என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மன்று ளார்அடி யாரவர் வான்புகழ்
நின்றது எங்கும் நிலவி உலகெலாம்.
54

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:

          send corrections and suggestions to admin-at-sivaya.org or in the WhatsApp

This page was last modified on Fri, 26 Dec 2025 05:25:45 +0000