திடம் மலி மதில் அணி சிறுகுடி மேவிய
படம் மலி அரவு உடையீரே;
படம் மலி அரவு உடையீர்! உமைப் பணிபவர்
அடைவதும், அமருலகு அதுவே.
|
1
|
சிற்றிடை உடன் மகிழ் சிறுகுடி மேவிய
சுற்றிய சடைமுடியீரே;
சுற்றிய சடைமுடியீர்! உம தொழு கழல்
உற்றவர் உறு பிணி இலரே.
|
2
|
தெள்ளிய புனல் அணி சிறுகுடி மேவிய
துள்ளிய மான் உடையீரே;
துள்ளிய மான் உடையீர்! உம தொழு கழல்
உள்ளுதல் செய, நலம் உறுமே.
|
3
|
செந்நெல வயல் அணி சிறுகுடி மேவிய
ஒன்னலர் புரம் எரித்தீரே;
ஒன்னலர் புரம் எரித்தீர்! உமை உள்குவார்
சொல்-நலம் உடையவர், தொண்டே.
|
4
|
செற்றினில் மலி புனல் சிறுகுடி மேவிய
பெற்றி கொள் பிறை முடியீரே;
பெற்றி கொள் பிறை முடியீர்! உமைப் பேணி நஞ்சு
அற்றவர் அருவினை இலரே.
|
5
|
| Go to top |
செங்கயல் புனல் அணி சிறுகுடி மேவிய
மங்கையை இடம் உடையீரே;
மங்கையை இடம் உடையீர்! உமை வாழ்த்துவார்
சங்கை அது இலர்; நலர், தவமே.
|
6
|
செறி பொழில் தழுவிய சிறுகுடி மேவிய
வெறி கமழ் சடைமுடியீரே;
வெறி கமழ் சடைமுடியீர்! உமை விரும்பி மெய்ந்-
நெறி உணர்வோர் உயர்ந்தோரே.
|
7
|
திசையவர் தொழுது எழு சிறுகுடி மேவிய
தசமுகன் உரம் நெரித்தீரே;
தசமுகன் உரம் நெரித்தீர்! உமைச் சார்பவர்
வசை அறுமது வழிபாடே.
|
8
|
செரு வரை வயல் அமர் சிறுகுடி மேவிய
இருவரை அசைவு செய்தீரே;
இருவரை அசைவு செய்தீர்! உமை ஏத்துவார்
அருவினையொடு துயர் இலரே.
|
9
|
செய்த்தலைப் புனல் அணி சிறுகுடி மேவிய
புத்தரொடு அமண் புறத்தீரே;
புத்தரொடு அமண் புறத்தீர்! உமைப் போற்றுதல்
பத்தர்கள் தம் உடைப் பரிசே.
|
10
|
| Go to top |
தேன் அமர் பொழில் அணி சிறுகுடி மேவிய
மான் அமர் கரம் உடையீரே;
மான் அமர் கரம் உடையீர்! உமை வாழ்த்திய
ஞானசம்பந்தன தமிழே.
|
11
|