திருவதிகை வீரட்டானம் - ஏழைத்திருத்தாண்டகம்அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி திருப்பாதிரிப்புலியூரில் சிலநாள் தங்கியிருந்தார். பிறகு அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் திருவதிகை செல்லும் விருப்பமுடையவராய்த் திருமாணிகுழி, திருத் தினை நகர் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு திருவதிகையை அடைந்தார். சமணர் இழைத்த துன்பங்களிலிருந்து திருவருளால் மீண்டு கடலில் கல்லே தெப்பமாகக் கரையேறிய திருநாவுக்கரசர் திருவதிகை எழுந்தருளுவது கேட்டு மக்கள் மகிழ்வோடு சிறந்த முறையில் அவரை வரவேற்றனர். தூயவெண்ணீறு துதைந்த பொன்மேனியும் தாழ் வடமும் நாயகன் சேவடி தைவரும் நெஞ்சும் நைந்துருகிப் பாய்வது போல் அன்புநீர் பொழிகண்ணும் பதிகச் செஞ்சொல்மேய செவ்வாயும் உடையராய் திருநாவுக்கரசர் அடியார் புடைசூழ திருவதிகைத் திரு வீதியுள் புகுந்து திருக்கோயிலை அடைந்து வெறிவிரவு கூவிளம் என்று தொடங்கும் திருப்பதிகம் பாடிப் போற்றினார்.
ஒரு பிறப்பு இல் அரன் அடியை உணர்ந்தும் காணார்; உயர்கதிக்கு வழி தேடிப் போகமாட்டார்; வரு பிறப்பு ஒன்று உணராது, மாசு பூசி, வழி காணாதவர் போல்வார் மனத்தன் ஆகி, அரு பிறப்பை அறுப்பிக்கும் அதிகை ஊரன் அம்மான் தன் அடி இணையே அணைந்து வாழாது, இருபிறப்பும் வெறுவியராய் இருந்தார் சொல்கேட்டு- ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!
குண்டு ஆக்கனாய் உழன்று, கையில் உண்டு, குவிமுலையார்தம் முன்னே நாணம் இன்றி, உண்டி உகந்து, அமணே நின்றார் சொல் கேட்டு, உடன் ஆகி, உழி தந்தேன், உணர்வு ஒன்று இன்றி; வண்டு உலவு கொன்றை அம்கண்ணியானை, வானவர்கள் ஏத்தப்படுவான் தன்னை, எண் திசைக்கும் மூர்த்தியாய் நின்றான் தன்னை- ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!
உறி முடித்த குண்டிகை தம் கையில்-தூக்கி, ஊத்தைவாய்ச் சமணர்க்கு ஓர் குண்டு ஆக்க(ன்)னாய், கறி விரவு நெய் சோறு கையில் உண்டு, கண்டார்க்குப் பொல்லாத காட்சி ஆனேன்; மறிதிரை நீர்ப்பவ்வம் நஞ்சு உண்டான் தன்னை, மறித்து ஒரு கால் வல்வினையேன், நினைக்க மாட்டேன்; எறிகெடில நாடர் பெருமான் தன்னை-ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!.
நிறை ஆர்ந்த நீர்மை ஆய் நின்றான்தன்னை, நெற்றிமேல் கண் ஒன்று உடையான் தன்னை, மறையானை, மாசு ஒன்று இலாதான் தன்னை, வானவர்மேல் மலர் அடியை வைத்தான் தன்னை, கறையானை, காது ஆர் குழையான் தன்னை, கட்டங்கம் ஏந்திய கையான் தன்னை, இறையானை, எந்தைபெருமான் தன்னை;- ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!.
தொல்லை வான் சூழ் வினைகள் சூழப் போந்து தூற்றியேன்; ஆற்றியேன்; சுடர் ஆய் நின்று வல்லையே இடர் தீர்த்து இங்கு அடிமைகொண்ட, வானவர்க்கும் தானவர்க்கும், பெருமான் தன்னை கொல்லைவாய்க் குருந்து ஒசித்துக் குழலும் ஊதும் கோவலனும், நான்முகனும், கூடி எங்கும் எல்லை காண்பு அரியானை; எம்மான் தன்னை;- ஏழையேன்நான் பண்டு இகழ்ந்த ஆறே!.
முலை மறைக்கப்பட்டு நீராடாப் பெண்கள் முறைமுறையால், நம் தெய்வம் என்று தீண்டி, தலை பறிக்கும் தன்மையர்கள் ஆகி நின்று, தவமே என்று அவம் செய்து, தக்கது ஓரார்; மலை மறிக்கச் சென்ற இலங்கைக் கோனை மதன் அழியச் செற்ற சேவடியினானை, இலை மறித்த கொன்றை அம்தாரான் தன்னை,- ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!.