திருவதிகை வீரட்டானம் - கொல்லிக்கௌவாணம்அருள்தரு திருவதிகைநாயகி உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி திருவதிகை திருநாவுக்கரசர் உழவாரத் திருப்பணி செய்யப் பெற்ற தலம். ஆதலால் அதனை மிதித்துச் செல்ல விரும்பாது அருகில் இருந்த சித்தவடம் என்னும் மடத்தில் தங்கினார். உடன் வந்த அடியார்களோடு அதிகை வீரட்டானேஸ்வரரை இடைவிடாது எண்ணிய வண்ணம் துயின்றார். இறைவன் முதிய அந்தணர் வடிவம் பூண்டு யாரும் அறியாதபடி புகுந்து சுந்தரர் தலையின் மேலே தமது திருவடி படும்படியாக வைத்துத் துயில் கொள்வாரைப் போன்று இருந்தார். உடனே நம்பியாரூரர் விழித்து எழுந்து அருமறை யோனே! உன் அடிகளை என் தலைமேல் வைத்தனையே என்று கேட்டார். நீர் துயிலும் திசையை அறியாவகை செய்தது என் முதுமை என்றார் அந்தணர். நம்பிகள் வேறொரு திசையில் தலையினை வைத்துத் துயில்கொள்ளத் தொடங்கினார். மீண்டும் அம் முதியவர் நாவலூரர் தலைமேல் தம் திருவடிகளை நீட்டிப் பள்ளி கொண்டார். நாவலூரர் எழுந்து இவ்வாறு பலதடவை மிதிக்கும் நீர் யார் என்று சினந்து கேட்டார். உடனே முதியவர் என்னை நீ இன்னும் அறிந்திலையோ என்று கூறியவாறு மறைந்தருளினார். அம்மொழி கேட்ட ஆரூரர் தம் முடியில் திருவடி வைத்தருளியவர் சிவபிரானே என்று தெளிந்து தம் பொருட்டு எளிவந்தருளிய எம்பெருமானைக் காணப்பெற்றும் அறியாமையால் இறுமாந்து இகழ்ந்துரைத்தேனே என்று வருந்தித் தம்மானை அறியாத சாதியார் உளரே என்று தொடங்கித் திருப்பதிகம் பாடித்துதித்தார்.
தம்மானை அறியாத சாதியார் உளரே? சடைமேல் கொள் பிறையானை, விடை மேற்கொள் விகிர்தன், கைம்மாவின் உரியானை, கரிகாட்டில் ஆடல் உடையானை, விடையானை, கறை கொண்ட கண்டத்து அம்மான் தன் அடிக் கொண்டு என் முடிமேல் வைத்திடும் என்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவு இலா நாயேன்- எம்மானை, எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறை போதும் இகழ்வன் போல் யானே! .
விரும்பினேற்கு எனது உள்ளம் விடகிலா விதியே! விண்ணவர் தம் பெருமானே! மண்ணவர் நின்று ஏத்தும் கரும்பே! என் கட்டி! என்று உள்ளத்தால் உள்கி, காதல் சேர் மாதராள் கங்கையாள் நங்கை வரும் புனலும் சடைக்கு அணிந்து, வளராத பிறையும் வரி அரவும் உடன் துயில வைத்து அருளும் எந்தை, இரும் புனல் வந்து எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறைபோதும் இகழ்வன் போல் யானே! .
நால்-தானத்து ஒருவனை, நான் ஆய பரனை, நள்ளாற்று நம்பியை, வெள்ளாற்று விதியை, காற்றானை, தீயானை, கடலானை, மலையின் தலையானை, கடுங் கலுழிக் கங்கை நீர் வெள்ள- ஆற்றானை, பிறையானை, அம்மானை, எம்மான்தம்மானை, யாவர்க்கும் அறிவு அரிய செங்கண் ஏற்றானை, எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறைபோதும் இகழ்வன் போல் யானே! .
சேந்தர் தாய் மலைமங்கை திருநிறமும் பரிவும் உடையானை, அதிகை மா நகருள் வாழ்பவனை, கூந்தல் தாழ் புனல் மங்கை குயில் அன்ன மொழியாள் சடை இடையில் கயல் இனங்கள் குதி கொள்ளக் குலாவி, வாய்ந்த நீர் வர உந்தி மராமரங்கள் வணக்கி, மறிகடலை இடம் கொள்வான் மலை ஆரம் வாரி ஏந்து நீர் எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறைபோதும் இகழ்வன் போல் யானே! .
திருந்தாத வாள் அவுணர் புரம் மூன்றும் வேவச் சிலை வளைவித்து, ஒரு கணையால்- தொழில் பூண்ட சிவனை, கருந் தான மதகளிற்றின் உரியானை, பெரிய கண் மூன்றும் உடையானை, கருதாத அரக்கன் பெருந்தோள்கள் நால்-ஐந்தும், ஈர்-ஐந்து முடியும், உடையானைப் பேய் உருவம் ஊன்றும் உற மலை மேல் இருந்தானை, எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறைபோதும் இகழ்வன் போல் யானே! .