முருகு உலாவிய மைப் பாவு(ம்) வார் குழல் முளரி வாய் நெகிழ் வித்தார வேல் விழி முடுகுவோர் குலை வித்தான கோடு எனு(ம்) முலையாலே
முறைமை சேர் கெட மைத்து ஆர்வு வார் கடல் முடுகுவோர் என எய்த்து ஓடி ஆகமும் மொழியும் வேறிடு பித்து ஏறினார் எனும் முயல்வே கொண்டு உருகுவார் சில சிற்றா(ர்)
மனோலயம் உயிரும் ஆகமும் ஒத்து ஆசையோடு உ(ள்)ளம் உருகி தீ மெழுகு இட்டானதோ என உரையா நண்பு
உலக அவா ஒழிவித்தார் மனோலயம் உணர்வு நீடிய பொன் பாத சேவடி உலவு நீ எ(ன்)னை வைத்து ஆளவே அருள் தருவாயே
குருகு உலாவிய நல் தாழி சூழ் நகர் குமரனே முனை வெற்பு ஆர் பராபரை குழக பூசுரர் மெய்க் காணும் வீரர் தம் வடிவேலா
குறவர் சீர் மகளைத் தேடி வாடிய குழையும் நீள் கர வைத்து ஓடியே அவர் குடியிலே மயிலைக் கோடு சோதிய உரவோனே
மருகு மா மதுரைக் கூடல் மால் வரை வளைவுள் ஆகிய நக்கீரர் ஓதிய வளகை சேர் தமிழுக்காக நீடிய கரவோனே
மதிய(ம்) மேவிய சுற்றாத வேணியர் மகிழ நீ நொடியற்றான போதினில் மயிலை நீடு உலகைச் சூழ ஏவிய பெருமாளே.
நறுமணம் வீசி உலவும் மை தீட்டிய நீண்ட கூந்தலின் மீதும், தாமரை போன்ற வாயின் மீதும், அசைகின்ற விரிந்த வேல் போன்ற கண்ணின் மீதும், விரைந்து செல்வோர்களின் மனத்தைக் குலைப்பதற்கு அடிப்படைக் காரணமாக விளங்கும் மலை போன்ற மார்பகத்தின் மீதும், ஒழுக்கம் சிதறுண்டு கெட, கறுத்து (நீர்) நிறைந்துள்ள பெரிய கடலில் (பயணம்) விரைந்து செல்வார் போல் இளைப்புடன் ஓடி, உடலும் பேச்சும் மாறுதல் உறும்படி பித்து ஏறினார் என்று சொல்லும்படி முயற்சிகளை மேற்கொண்டு, அந்த உலக நெறியிலே சில அற்ப ஆன்மாக்கள் உள்ளம் உருகுபவர்கள். மன ஒடுக்கம் உற்று உயிரும் உடலும் ஒரு வழிப்பட்டு, பக்தியுடன் மனம் உருகி தீயில் இடப்பட்ட மெழுகோ என்று சொல்லும்படி அன்பு மொழிகளைக் கொண்டு உன்னைப் புகழ்ந்துரைத்து, இவ்வுலகத்தில் மண், பெண், பொன் என்ற மூவாசைகளையும் நீக்கினவர்களாய மனம் ஒடுங்கிய ஞான உணர்ச்சியில் உனது அழகிய பாதசேவை தருவதான திருவடிகளுடன் உலவுகின்ற நீ என்னை உன் மனத்தில் வைத்து அருள் புரிவாயாக. நீர்ப்பறவைகள் உலவுகின்ற அழகிய கடல் சூழ்ந்துள்ள திருச்செந்தூரில் விளங்கும் குமரனே, தலைமை பெற்ற மலையாகிய இமயத்தில் பிறந்த பரதேவதையான பார்வதியின் குழந்தையே, மறையோர்களுக்கு உரியவனே, மெய்ப்பொருளைக் காணும் வடிவேலனே, வேடர்களுடைய அழகிய மகளைத் தேடி வாடிக் குழைந்தவனே, பெரிய களவு எண்ணத்துடன் ஓடிச் சென்று வேடர்கள் இருப்பிடத்தில் இருந்த மயில் போன்ற வள்ளியைக் கொண்டு சென்ற ஜோதி சொரூபமான திண்ணியனே, வாழை, மாமரம் இவை நிரம்பிய கூடல் எனப்படும் மதுரைக்கு அருகில் உள்ள பெருமை வாய்ந்த திருப்பரங்குன்றம் என்னும் மலையில் வட்டமான குகையில் இருந்த நக்கீரர் எனும் புலவர் பாடிய வளமை வாய்ந்த தமிழைக் (திருமுருகாற்றுப்படையைக்) கேட்கும் பொருட்டு நெடு நாள் மறைந்திருந்து காத்திருந்தவனே, சந்திரனைத் தரித்துள்ள சடையினர், விரிந்த சடையினர் ஆகிய சிவபெருமான் மகிழும்படி நீ ஒரு நொடிப் பொழுதுக்கும் குறைந்த நேரத்தில் உனது மயில் வாகனத்தை பெரிய உலகைச் சூழ்ந்து வரும்படி தூண்டிச் செலுத்திய பெருமாளே.
முருகு உலாவிய மைப் பாவு(ம்) வார் குழல் முளரி வாய் நெகிழ் வித்தார வேல் விழி முடுகுவோர் குலை வித்தான கோடு எனு(ம்) முலையாலே ... நறுமணம் வீசி உலவும் மை தீட்டிய நீண்ட கூந்தலின் மீதும், தாமரை போன்ற வாயின் மீதும், அசைகின்ற விரிந்த வேல் போன்ற கண்ணின் மீதும், விரைந்து செல்வோர்களின் மனத்தைக் குலைப்பதற்கு அடிப்படைக் காரணமாக விளங்கும் மலை போன்ற மார்பகத்தின் மீதும், முறைமை சேர் கெட மைத்து ஆர்வு வார் கடல் முடுகுவோர் என எய்த்து ஓடி ஆகமும் மொழியும் வேறிடு பித்து ஏறினார் எனும் முயல்வே கொண்டு உருகுவார் சில சிற்றா(ர்) ... ஒழுக்கம் சிதறுண்டு கெட, கறுத்து (நீர்) நிறைந்துள்ள பெரிய கடலில் (பயணம்) விரைந்து செல்வார் போல் இளைப்புடன் ஓடி, உடலும் பேச்சும் மாறுதல் உறும்படி பித்து ஏறினார் என்று சொல்லும்படி முயற்சிகளை மேற்கொண்டு, அந்த உலக நெறியிலே சில அற்ப ஆன்மாக்கள் உள்ளம் உருகுபவர்கள். மனோலயம் உயிரும் ஆகமும் ஒத்து ஆசையோடு உ(ள்)ளம் உருகி தீ மெழுகு இட்டானதோ என உரையா நண்பு ... மன ஒடுக்கம் உற்று உயிரும் உடலும் ஒரு வழிப்பட்டு, பக்தியுடன் மனம் உருகி தீயில் இடப்பட்ட மெழுகோ என்று சொல்லும்படி அன்பு மொழிகளைக் கொண்டு உன்னைப் புகழ்ந்துரைத்து, உலக அவா ஒழிவித்தார் மனோலயம் உணர்வு நீடிய பொன் பாத சேவடி உலவு நீ எ(ன்)னை வைத்து ஆளவே அருள் தருவாயே ... இவ்வுலகத்தில் மண், பெண், பொன் என்ற மூவாசைகளையும் நீக்கினவர்களாய மனம் ஒடுங்கிய ஞான உணர்ச்சியில் உனது அழகிய பாதசேவை தருவதான திருவடிகளுடன் உலவுகின்ற நீ என்னை உன் மனத்தில் வைத்து அருள் புரிவாயாக. குருகு உலாவிய நல் தாழி சூழ் நகர் குமரனே முனை வெற்பு ஆர் பராபரை குழக பூசுரர் மெய்க் காணும் வீரர் தம் வடிவேலா ... நீர்ப்பறவைகள் உலவுகின்ற அழகிய கடல் சூழ்ந்துள்ள திருச்செந்தூரில் விளங்கும் குமரனே, தலைமை பெற்ற மலையாகிய இமயத்தில் பிறந்த பரதேவதையான பார்வதியின் குழந்தையே, மறையோர்களுக்கு உரியவனே, மெய்ப்பொருளைக் காணும் வடிவேலனே, குறவர் சீர் மகளைத் தேடி வாடிய குழையும் நீள் கர வைத்து ஓடியே அவர் குடியிலே மயிலைக் கோடு சோதிய உரவோனே ... வேடர்களுடைய அழகிய மகளைத் தேடி வாடிக் குழைந்தவனே, பெரிய களவு எண்ணத்துடன் ஓடிச் சென்று வேடர்கள் இருப்பிடத்தில் இருந்த மயில் போன்ற வள்ளியைக் கொண்டு சென்ற ஜோதி சொரூபமான திண்ணியனே, மருகு மா மதுரைக் கூடல் மால் வரை வளைவுள் ஆகிய நக்கீரர் ஓதிய வளகை சேர் தமிழுக்காக நீடிய கரவோனே ... வாழை, மாமரம் இவை நிரம்பிய கூடல் எனப்படும் மதுரைக்கு அருகில் உள்ள பெருமை வாய்ந்த திருப்பரங்குன்றம் என்னும் மலையில் வட்டமான குகையில் இருந்த நக்கீரர் எனும் புலவர் பாடிய வளமை வாய்ந்த தமிழைக் (திருமுருகாற்றுப்படையைக்) கேட்கும் பொருட்டு நெடு நாள் மறைந்திருந்து காத்திருந்தவனே, மதிய(ம்) மேவிய சுற்றாத வேணியர் மகிழ நீ நொடியற்றான போதினில் மயிலை நீடு உலகைச் சூழ ஏவிய பெருமாளே. ... சந்திரனைத் தரித்துள்ள சடையினர், விரிந்த சடையினர் ஆகிய சிவபெருமான் மகிழும்படி நீ ஒரு நொடிப் பொழுதுக்கும் குறைந்த நேரத்தில் உனது மயில் வாகனத்தை பெரிய உலகைச் சூழ்ந்து வரும்படி தூண்டிச் செலுத்திய பெருமாளே.