சகடத்தில் குழை இட்டு எற்றிக் குழலுக்குச் சரம் வைத்து எற்றி
புளகித்துக் குவளைக் கண் பொன் கணை ஒத்திட்டு உழலச் சுத்தித் தரளப் பல் பவளத்து ஒட்ட
களப அப்(பி) ஒட்டுதல் இட்ட அத்திக் குவடு ஆன தன துத்திப் படிகம் பொற்பு இட்டு அசைய
பெள் பசளைத் துப்புக் கொடி ஒத்திட்டு இடையில் பட்டைத் தகையில் தொட்டு உகளப் பச்சைச் சரணத்துக்கு இயலச் சுற்றிச் சுழல் இட்டு
கடனைப் பற்றிக் கொளு மாதர் சுகம் உற்றுக் கவலைப் பட்டுப் பொருள் கெட்டுக் கடை கெட்டுச் சொல் குளறிட்டுத் தடி தொட்டு எற்றி
பிணி உற்றுக் கசதிப் பட்டுச் சுக துக்கத்து இடர் கெட்டு உற்றுத் தளர் பட்டுக் கிடை பட்டு உப்பிக் கிடை நாளில்
சுழலர்ச் சக்கிரியைச் சுற்றிட்டு இறுகக் கட்டி உயிரைப் பற்றிக் கொள் உகப் பற்பலரைக் கட்டிக் கரம் வைத்துத் தலையில் குத்திச் சுடு கட்டைச் சுடலைக் கட்டைக்கு இரை இட்டுப் பொடி பட்டு உட்கிச் சடம் ஆமோ
திகுடத்திக் குகுடட் டுட்டுட் டமடட்டட் டமடட் டிக்குட் டிமிடிட்டிட் டிமிடிட் டிக்குத் தொகுதொக்குத் தொகுதத் தொக்குச் செகணக்கச் செகணச் செக்குத் தகுடத்தத் தகுடத் தட்டுட்டு இடிபேரி
திமிலைக் கைத்துடி தட்டு எக்கைப் பகடு இட்டுப் பறை ஒத்த கண் திகை எட்டுக் கடல் வற்றித் தித்தர உக்கக் கிரி எட்டுத் தைத்தியருக்குச் சிரம் இற்று உட்கச் சுரர் பொன் பூச் சொரியக் கைத் தொட்டிடும் வேலா
பகலைப் பல் சொரியத் தக்கன் பதி புக்கு அட்டு அழல் இட்டுத் திண் புரம் மட்கிக் கழை வில் புட்பச் சரனைச் சுட்டு அயனைக் கொத்திப் பவுரிக் கொள் பரமர்க்குச் சற்குரு ஒத்துப் பொருளைக் கற்பித்து அருள்வோனே
பவளப் பொன் கிரி துத்திப் பொன் தன கொச்சைக் கிளி சொல் பற்றிப் பரிவு உற்றுக் கமலப் புட்பத்து இதழ் பற்றிப் புணர்ச் சித்ரப் பொன் படிகத்துப் பவளப் பச்சைப் பத முத்துப் பழநிச் சொக்கப் பெருமாளே.
சக்கரம் போல வட்டமான தோடுகளைப் பூண்டு கண்டோர் மனதைத் தாக்கியும், கூந்தலில் பூமாலை வைத்துத் தாக்கியும், புளகாங்கிதம் கொண்டு குவளை மலர் போன்ற கண்கள் அழகிய அம்புக்கு நிகராகச் சுழல, தூய முத்துப் போன்ற பற்கள் பவளத்தை ஒத்த இதழுக்கு அருகிலே விளங்க, சந்தனக் கலவை அப்பப்பட்ட யானை போன்றது, மலை போன்றது, என்னும்படி மார்பகங்கள் தேமலுடன் படிகத்தின் அழகைப் பூண்டு அசைய, விரும்பத் தக்க பசளைக் கொடியையும் பவளக் கொடியையும் நிகர்க்கும் இடையில் பட்டாடையைத் தக்கபடி தொடும்படி இரண்டு பச்சை நிறமான பாதம் வரை தொங்குமாறு பொருந்தச் சுற்றி வளைய உடுத்தி, (தாங்கள் பெற வேண்டிய பொருளைக்) கைப்பற்றிக் கொள்ளும் விலைமாதர்களின் சுகத்தைப் பெற்று (பின்னர்) கவலைப் பட்டு பொருள் எல்லாம் அழிந்து, முழுவதும் கெட்டு, மொழியும் குளறி, ஊன்று கோல் பிடித்து நடக்க வேண்டி வந்து, நோய் உற்று வேதனைப் பட்டு சுக துக்கமாகிய சஞ்சலங்களை அடைந்துத் துன்புற்று சோர்வடைந்து, படுக்கையில் கிடந்து உடல் வீங்கிக் கிடக்கும் நாட்களில், சுழன்று வரும் யம தூதர்கள் பாசக் கயிற்றால் சுற்றிட்டு அழுத்தமாகக் கட்டி (என்) உயிரைப் பற்றிக் கொண்டு போகும் போது, பற்பல உற்றார் உறவினர் என் உடலைக் கட்டி, கைகளால் தலையில் அடித்துக் கொண்டு, சுடுதற்குரிய என் உடம்பாகிய கட்டையை மயானத்தில் உள்ள விறகுக் கட்டைகளுக்கு இரையாக ஆக்கி பொடி பட்டுச் சாம்பலாகி ஒழிந்து போகும் இந்த உடல் விரும்பத் தக்கது ஆகுமோ? திகுடத்திக் குகுடட் டுட்டுட் டமடட்டட் டமடட் டிக்குட் டிமிடிட்டிட் டிமிடிட் டிக்குத் தொகுதொக்குத் தொகுதத் தொக்குச் செகணக்கச் செகணச் செக்குத் தகுடத்தத் தகுடத் தட்டுட்டு என்று மிகுந்த சத்தத்துடன் இடி போல் முழங்கும் பேரிகை, திமிலை என்னும் ஒரு வகையான பேரிகை, சிறிய உடுக்கை, தட்டி எழுகின்ற ஒலி வன்மை கொண்ட பறை ஆகிய இவை எல்லாம் பேரொலி செய்து முழங்க, இடம் அகன்ற, எட்டு திசைகளிலும் உள்ள, கடல் வறண்டு தீயைக் கக்கவும், தளர்ந்து எண் கிரிகளும் நிலைகுலைய, அசுரர்கள் தலை முறிந்து ஒழியவும், தேவர்கள் பொன் மாரியைச் சொரிய திருக் கரத்தில் எடுத்த வேலாயுதனே, சூரியனின் பற்களைத் தகர்த்தும், தக்ஷன் தலை நகரில் சென்று அங்கே அவன் தலையில் நெருப்பு இட்டு கொன்றும், வலிய திரி புரங்களை அழித்தும், கரும்பு வில்லும் மலர்க் கணையும் உடைய மன்மதனைச் சுட்டு எரித்தும், பிரமனுடைய தலையை அரிந்தும் திருநடனம் புரிகின்ற பரமசிவனுக்கு சற்குருவாய் அமைந்து பிரணவப் பொருளை உபதேசித்து அருளியவனே, பவளப் பொன் மலை போல, தேமலுடன் கூடிய, அழகிய மார்பகத்தை உடையவளும், மழலையான கிளி போன்ற மொழியை உடையவளுமான வள்ளியின் சொற்களில் ஆசை வைத்து அன்பு பூண்டு, தாமரைப் பூ போன்ற இதழைப் பற்றி சேர்ந்து களித்தவனே, அழகிய பொன்னும், பளிங்கும், பவளமும் மரகதமும், இன்ப முத்தும் போல் மனம் இனிக்கும் பழநியில் வீற்றிருக்கும் சொக்கப் பெருமாளே.
சகடத்தில் குழை இட்டு எற்றிக் குழலுக்குச் சரம் வைத்து எற்றி ... சக்கரம் போல வட்டமான தோடுகளைப் பூண்டு கண்டோர் மனதைத் தாக்கியும், கூந்தலில் பூமாலை வைத்துத் தாக்கியும், புளகித்துக் குவளைக் கண் பொன் கணை ஒத்திட்டு உழலச் சுத்தித் தரளப் பல் பவளத்து ஒட்ட ... புளகாங்கிதம் கொண்டு குவளை மலர் போன்ற கண்கள் அழகிய அம்புக்கு நிகராகச் சுழல, தூய முத்துப் போன்ற பற்கள் பவளத்தை ஒத்த இதழுக்கு அருகிலே விளங்க, களப அப்(பி) ஒட்டுதல் இட்ட அத்திக் குவடு ஆன தன துத்திப் படிகம் பொற்பு இட்டு அசைய ... சந்தனக் கலவை அப்பப்பட்ட யானை போன்றது, மலை போன்றது, என்னும்படி மார்பகங்கள் தேமலுடன் படிகத்தின் அழகைப் பூண்டு அசைய, பெள் பசளைத் துப்புக் கொடி ஒத்திட்டு இடையில் பட்டைத் தகையில் தொட்டு உகளப் பச்சைச் சரணத்துக்கு இயலச் சுற்றிச் சுழல் இட்டு ... விரும்பத் தக்க பசளைக் கொடியையும் பவளக் கொடியையும் நிகர்க்கும் இடையில் பட்டாடையைத் தக்கபடி தொடும்படி இரண்டு பச்சை நிறமான பாதம் வரை தொங்குமாறு பொருந்தச் சுற்றி வளைய உடுத்தி, கடனைப் பற்றிக் கொளு மாதர் சுகம் உற்றுக் கவலைப் பட்டுப் பொருள் கெட்டுக் கடை கெட்டுச் சொல் குளறிட்டுத் தடி தொட்டு எற்றி ... (தாங்கள் பெற வேண்டிய பொருளைக்) கைப்பற்றிக் கொள்ளும் விலைமாதர்களின் சுகத்தைப் பெற்று (பின்னர்) கவலைப் பட்டு பொருள் எல்லாம் அழிந்து, முழுவதும் கெட்டு, மொழியும் குளறி, ஊன்று கோல் பிடித்து நடக்க வேண்டி வந்து, பிணி உற்றுக் கசதிப் பட்டுச் சுக துக்கத்து இடர் கெட்டு உற்றுத் தளர் பட்டுக் கிடை பட்டு உப்பிக் கிடை நாளில் ... நோய் உற்று வேதனைப் பட்டு சுக துக்கமாகிய சஞ்சலங்களை அடைந்துத் துன்புற்று சோர்வடைந்து, படுக்கையில் கிடந்து உடல் வீங்கிக் கிடக்கும் நாட்களில், சுழலர்ச் சக்கிரியைச் சுற்றிட்டு இறுகக் கட்டி உயிரைப் பற்றிக் கொள் உகப் பற்பலரைக் கட்டிக் கரம் வைத்துத் தலையில் குத்திச் சுடு கட்டைச் சுடலைக் கட்டைக்கு இரை இட்டுப் பொடி பட்டு உட்கிச் சடம் ஆமோ ... சுழன்று வரும் யம தூதர்கள் பாசக் கயிற்றால் சுற்றிட்டு அழுத்தமாகக் கட்டி (என்) உயிரைப் பற்றிக் கொண்டு போகும் போது, பற்பல உற்றார் உறவினர் என் உடலைக் கட்டி, கைகளால் தலையில் அடித்துக் கொண்டு, சுடுதற்குரிய என் உடம்பாகிய கட்டையை மயானத்தில் உள்ள விறகுக் கட்டைகளுக்கு இரையாக ஆக்கி பொடி பட்டுச் சாம்பலாகி ஒழிந்து போகும் இந்த உடல் விரும்பத் தக்கது ஆகுமோ? திகுடத்திக் குகுடட் டுட்டுட் டமடட்டட் டமடட் டிக்குட் டிமிடிட்டிட் டிமிடிட் டிக்குத் தொகுதொக்குத் தொகுதத் தொக்குச் செகணக்கச் செகணச் செக்குத் தகுடத்தத் தகுடத் தட்டுட்டு இடிபேரி ... திகுடத்திக் குகுடட் டுட்டுட் டமடட்டட் டமடட் டிக்குட் டிமிடிட்டிட் டிமிடிட் டிக்குத் தொகுதொக்குத் தொகுதத் தொக்குச் செகணக்கச் செகணச் செக்குத் தகுடத்தத் தகுடத் தட்டுட்டு என்று மிகுந்த சத்தத்துடன் இடி போல் முழங்கும் பேரிகை, திமிலைக் கைத்துடி தட்டு எக்கைப் பகடு இட்டுப் பறை ஒத்த கண் திகை எட்டுக் கடல் வற்றித் தித்தர உக்கக் கிரி எட்டுத் தைத்தியருக்குச் சிரம் இற்று உட்கச் சுரர் பொன் பூச் சொரியக் கைத் தொட்டிடும் வேலா ... திமிலை என்னும் ஒரு வகையான பேரிகை, சிறிய உடுக்கை, தட்டி எழுகின்ற ஒலி வன்மை கொண்ட பறை ஆகிய இவை எல்லாம் பேரொலி செய்து முழங்க, இடம் அகன்ற, எட்டு திசைகளிலும் உள்ள, கடல் வறண்டு தீயைக் கக்கவும், தளர்ந்து எண் கிரிகளும் நிலைகுலைய, அசுரர்கள் தலை முறிந்து ஒழியவும், தேவர்கள் பொன் மாரியைச் சொரிய திருக் கரத்தில் எடுத்த வேலாயுதனே, பகலைப் பல் சொரியத் தக்கன் பதி புக்கு அட்டு அழல் இட்டுத் திண் புரம் மட்கிக் கழை வில் புட்பச் சரனைச் சுட்டு அயனைக் கொத்திப் பவுரிக் கொள் பரமர்க்குச் சற்குரு ஒத்துப் பொருளைக் கற்பித்து அருள்வோனே ... சூரியனின் பற்களைத் தகர்த்தும், தக்ஷன் தலை நகரில் சென்று அங்கே அவன் தலையில் நெருப்பு இட்டு கொன்றும், வலிய திரி புரங்களை அழித்தும், கரும்பு வில்லும் மலர்க் கணையும் உடைய மன்மதனைச் சுட்டு எரித்தும், பிரமனுடைய தலையை அரிந்தும் திருநடனம் புரிகின்ற பரமசிவனுக்கு சற்குருவாய் அமைந்து பிரணவப் பொருளை உபதேசித்து அருளியவனே, பவளப் பொன் கிரி துத்திப் பொன் தன கொச்சைக் கிளி சொல் பற்றிப் பரிவு உற்றுக் கமலப் புட்பத்து இதழ் பற்றிப் புணர்ச் சித்ரப் பொன் படிகத்துப் பவளப் பச்சைப் பத முத்துப் பழநிச் சொக்கப் பெருமாளே. ... பவளப் பொன் மலை போல, தேமலுடன் கூடிய, அழகிய மார்பகத்தை உடையவளும், மழலையான கிளி போன்ற மொழியை உடையவளுமான வள்ளியின் சொற்களில் ஆசை வைத்து அன்பு பூண்டு, தாமரைப் பூ போன்ற இதழைப் பற்றி சேர்ந்து களித்தவனே, அழகிய பொன்னும், பளிங்கும், பவளமும் மரகதமும், இன்ப முத்தும் போல் மனம் இனிக்கும் பழநியில் வீற்றிருக்கும் சொக்கப் பெருமாளே.