சுருதி முடி மோனம் சொல் சித் பரம
ஞான சிவ சமய வடிவாய் வந்த அத்துவிதமான பர
சுடர் ஒளியதாய் நின்ற நிட்கள சொரூப
முதல் ஒரு வாழ்வே
துரிய நிலையே கண்ட முத்தர் இதய கமலம் அதனில்
விளையா நின்ற அற்புத சுபோத சுக
சுய படிகமாய் இன்ப பத்ம பதமே அடைய உணராதே
கருவில் உருவே தங்கு சுக்கில நிதான வளி
பொரும அதிலே கொண்ட முக்குண விபாக நிலை
கருத அரியா வஞ்சகக் கபடம் மூடி
உடல் வினை தானே கலகம் இடவே
பொங்கு குப்பை மல வாழ்வு நிஜம் என உழலும்
மாயம் செனித்த குகையே உறுதி கருது அசுழம் ஆம்
இந்த மட்டை தனை ஆள உனது அருள் தாராய்
ஒரு நியமமே விண்ட சட் சமய வேத
அடி முடி நடுவுமாய் அண்ட முட்டை வெளி ஆகி
உயிர் உடல் உணர்வு அது ஆய்
எங்கும் உற்பனமது ஆக அமர் உளவோனே
உத தரிசமாம் இன்பப் புது அமிர்த போக சுகம் உதவும்
அமல ஆனந்த சத்தி கர
மேவு உணர் அ உரு பிரணவா மந்த்ர கர்த்தவியம் ஆக வரு குரு நாதா
பருதி கதிரே கொஞ்சு நல் சரண நூபுரம் அது அசைய
நிறை பேர் அண்டம் ஒக்க நடமாடும்
கன பத கெருவிதா துங்க வெற்றி மயில் ஏறும் ஒரு திறலோனே
பணியும் அடியார் சிந்தை மெய் பொருள் அது ஆக நவில்
சரவணபவா ஒன்றும் வல் கரமும் ஆகி வளர்
பழநி மலை மேல் நின்ற சுப்ரமணியா அமரர் பெருமாளே.
வேதங்களின் முடிவில் விளங்கும் மெளன நிலையை உபதேசித்து அருளும் முற்றறிவுடைய பெரிய பொருளே, அறிவுடன் கூடிய சைவ சமயத் திருமேனி தாங்கி எழுந்தருளி வந்த, இரண்டறக் கலந்திருக்கின்ற பரம் பொருளே, ஒளிக்குள் ஒளியாய் நிற்கின்ற உருவம் இல்லாதவனே, அருள் வடிவம் உடையவனே, முதற் பொருளே, ஒப்பற்ற சிவானந்தப் பெரு வாழ்வே, துரிய நிலையில் தன் மயமாய் நிற்கும் உண்மைப் பொருளைக் கண்ட ஜீவன்முக்தர்களுடைய இதயத் தாமரையில், விளைகின்றதும், ஆச்சரியத்தை விளைவிப்பதும், மேலான ஞானத்தைத் தருவதும், சுகத்தைத் தருவதும், சுயமான படிகம் போன்ற தூய இன்பத்தை உண்டாக்குவதும், தாமரைக்கு நிகரானதுமான உன் திருவடிகளை அடைந்துய்யும் நெறியை அடியேன் உணராமல், (தாயின்) கர்ப்பத்தில் உருவாகித் தங்கிய (தந்தையின்) சுக்கிலத்தோடு பிராண வாயு வந்து பூரிக்க, அவ்வுருவத்தில் பொருந்திய சத்துவ, இராஜச, தாமசம் என்னும் மூன்று குணங்களின் வேறு பாடுடைய அளவான நிலையை, நினைப்பதற்கு முடியாத வஞ்சனையுடன் கூடிய கபட குணத்தால் (அவ்வுருவம்) மூடப்பட்டு, உடலினால் வந்த தீ வினைகள் கலகங்களைச் செய்ய, மிகுந்த குப்பையான மும்மலத் தொடர்பால் வந்த (அநித்திய) வாழ்வையே நிலைத்தது என்று திரிபவனும், மாயா குணங்கட்குப் பிறப்பிடமான இவ்வுடலையே அழிவற்றது எனக் கருதும் நாய்க்குச் சமமானவனுமாகிய, மூடனாகிய இவ்வடியேனை ஆட்கொள்ள நீ அருள் புரிவாயாக. ஒரு விதியையே கூறுகின்ற ஆறு சமயங்களைத் தன்னகத்தே கொண்ட வேதத்தின் முதலும் முடிவும் நடுவுமாகி, உருண்டை வடிவமாக உள்ள அண்டங்களாகவும் அதற்கப்பாலுள்ள பெரு வெளியாகவுமாகி, ஆன்மாக்களின் உயிருக்கு உயிராகவும் உடலாகவும் அறிவுமாகி, யாண்டும் நீக்கமற நிறைந்து தோன்றுபவனுமாகி உள்ள நித்தியப் பொருளே, தண்ணீர் ஊற்றெடுப்பது போல மாறாத இன்பத்தை நல்கும் புதிய அமிர்தத்தை ஒத்த சிவலோகப் பேரின்ப நலத்தை வழங்குகின்ற மலமில்லாத இன்ப வடிவான எம் பெருமானே, சக்திவேற் படையைக் கையில் ஏந்தி இருப்பவனே, பொருந்திய அறிவுருவமாகிய அந்தப் பிரணவ மந்திரத்திற்கு முதன்மைப் பொருளாக எழுந்தருளி வருகின்ற குருநாதனே, சூரியப் பிரகாசத்தை இனிது வெளிப்படுத்தும், நன்மையைத் தரும் உனது திருவடிகளின் தண்டைகள் அசைந்து இனிது ஒலி செய்ய, நிறைந்த பெரிய அண்டங்களில் எல்லாம் ஒருங்கு அசைய நடனம் செய்கின்ற பெருமை பொருந்திய அடிகளை உடைமையால் செருக்குள்ளதும், பரிசுத்தமும் வெற்றியும் கொண்டுள்ளதுமான மயில்மீது ஏறும் ஒப்பற்ற ஆற்றல் உடையவனே, உன்னை வணங்கும் அடியவர்களுடைய உள்ளம் இதுவே உண்மைப் பொருள் என்று சொல்லுகின்ற சரவணபவா என்னும் ஆறெழுத்துக்கள் பொருந்திய (அஞ்ஞான இருளை நீக்கும்) வலியுடைய பேரொளியாகி வளர்கின்ற பழநி மலை மேல் வீற்றிருக்கின்ற சுப்பிரமணியனே, தேவர்கள் பெருமாளே.
சுருதி முடி மோனம் சொல் சித் பரம ... வேதங்களின் முடிவில் விளங்கும் மெளன நிலையை உபதேசித்து அருளும் முற்றறிவுடைய பெரிய பொருளே, ஞான சிவ சமய வடிவாய் வந்த அத்துவிதமான பர ... அறிவுடன் கூடிய சைவ சமயத் திருமேனி தாங்கி எழுந்தருளி வந்த, இரண்டறக் கலந்திருக்கின்ற பரம் பொருளே, சுடர் ஒளியதாய் நின்ற நிட்கள சொரூப ... ஒளிக்குள் ஒளியாய் நிற்கின்ற உருவம் இல்லாதவனே, அருள் வடிவம் உடையவனே, முதல் ஒரு வாழ்வே ... முதற் பொருளே, ஒப்பற்ற சிவானந்தப் பெரு வாழ்வே, துரிய நிலையே கண்ட முத்தர் இதய கமலம் அதனில் ... துரிய நிலையில் தன் மயமாய் நிற்கும் உண்மைப் பொருளைக் கண்ட ஜீவன்முக்தர்களுடைய இதயத் தாமரையில், விளையா நின்ற அற்புத சுபோத சுக ... விளைகின்றதும், ஆச்சரியத்தை விளைவிப்பதும், மேலான ஞானத்தைத் தருவதும், சுகத்தைத் தருவதும், சுய படிகமாய் இன்ப பத்ம பதமே அடைய உணராதே ... சுயமான படிகம் போன்ற தூய இன்பத்தை உண்டாக்குவதும், தாமரைக்கு நிகரானதுமான உன் திருவடிகளை அடைந்துய்யும் நெறியை அடியேன் உணராமல், கருவில் உருவே தங்கு சுக்கில நிதான வளி ... (தாயின்) கர்ப்பத்தில் உருவாகித் தங்கிய (தந்தையின்) சுக்கிலத்தோடு பிராண வாயு வந்து பூரிக்க, பொரும அதிலே கொண்ட முக்குண விபாக நிலை ... அவ்வுருவத்தில் பொருந்திய சத்துவ, இராஜச, தாமசம் என்னும் மூன்று குணங்களின் வேறு பாடுடைய அளவான நிலையை, கருத அரியா வஞ்சகக் கபடம் மூடி ... நினைப்பதற்கு முடியாத வஞ்சனையுடன் கூடிய கபட குணத்தால் (அவ்வுருவம்) மூடப்பட்டு, உடல் வினை தானே கலகம் இடவே ... உடலினால் வந்த தீ வினைகள் கலகங்களைச் செய்ய, பொங்கு குப்பை மல வாழ்வு நிஜம் என உழலும் ... மிகுந்த குப்பையான மும்மலத் தொடர்பால் வந்த (அநித்திய) வாழ்வையே நிலைத்தது என்று திரிபவனும், மாயம் செனித்த குகையே உறுதி கருது அசுழம் ஆம் ... மாயா குணங்கட்குப் பிறப்பிடமான இவ்வுடலையே அழிவற்றது எனக் கருதும் நாய்க்குச் சமமானவனுமாகிய, இந்த மட்டை தனை ஆள உனது அருள் தாராய் ... மூடனாகிய இவ்வடியேனை ஆட்கொள்ள நீ அருள் புரிவாயாக. ஒரு நியமமே விண்ட சட் சமய வேத ... ஒரு விதியையே கூறுகின்ற ஆறு சமயங்களைத் தன்னகத்தே கொண்ட வேதத்தின் அடி முடி நடுவுமாய் அண்ட முட்டை வெளி ஆகி ... முதலும் முடிவும் நடுவுமாகி, உருண்டை வடிவமாக உள்ள அண்டங்களாகவும் அதற்கப்பாலுள்ள பெரு வெளியாகவுமாகி, உயிர் உடல் உணர்வு அது ஆய் ... ஆன்மாக்களின் உயிருக்கு உயிராகவும் உடலாகவும் அறிவுமாகி, எங்கும் உற்பனமது ஆக அமர் உளவோனே ... யாண்டும் நீக்கமற நிறைந்து தோன்றுபவனுமாகி உள்ள நித்தியப் பொருளே, உத தரிசமாம் இன்பப் புது அமிர்த போக சுகம் உதவும் ... தண்ணீர் ஊற்றெடுப்பது போல மாறாத இன்பத்தை நல்கும் புதிய அமிர்தத்தை ஒத்த சிவலோகப் பேரின்ப நலத்தை வழங்குகின்ற அமல ஆனந்த சத்தி கர ... மலமில்லாத இன்ப வடிவான எம் பெருமானே, சக்திவேற் படையைக் கையில் ஏந்தி இருப்பவனே, மேவு உணர் அ உரு பிரணவா மந்த்ர கர்த்தவியம் ஆக வரு குரு நாதா ... பொருந்திய அறிவுருவமாகிய அந்தப் பிரணவ மந்திரத்திற்கு முதன்மைப் பொருளாக எழுந்தருளி வருகின்ற குருநாதனே, பருதி கதிரே கொஞ்சு நல் சரண நூபுரம் அது அசைய ... சூரியப் பிரகாசத்தை இனிது வெளிப்படுத்தும், நன்மையைத் தரும் உனது திருவடிகளின் தண்டைகள் அசைந்து இனிது ஒலி செய்ய, நிறை பேர் அண்டம் ஒக்க நடமாடும் ... நிறைந்த பெரிய அண்டங்களில் எல்லாம் ஒருங்கு அசைய நடனம் செய்கின்ற கன பத கெருவிதா துங்க வெற்றி மயில் ஏறும் ஒரு திறலோனே ... பெருமை பொருந்திய அடிகளை உடைமையால் செருக்குள்ளதும், பரிசுத்தமும் வெற்றியும் கொண்டுள்ளதுமான மயில்மீது ஏறும் ஒப்பற்ற ஆற்றல் உடையவனே, பணியும் அடியார் சிந்தை மெய் பொருள் அது ஆக நவில் ... உன்னை வணங்கும் அடியவர்களுடைய உள்ளம் இதுவே உண்மைப் பொருள் என்று சொல்லுகின்ற சரவணபவா ஒன்றும் வல் கரமும் ஆகி வளர் ... சரவணபவா என்னும் ஆறெழுத்துக்கள் பொருந்திய (அஞ்ஞான இருளை நீக்கும்) வலியுடைய பேரொளியாகி வளர்கின்ற பழநி மலை மேல் நின்ற சுப்ரமணியா அமரர் பெருமாளே. ... பழநி மலை மேல் வீற்றிருக்கின்ற சுப்பிரமணியனே, தேவர்கள் பெருமாளே.