தலைவலி, வசிய மருந்தால் வரும் நோய், மஞ்சட்காமாலை, ரத்தசோகை, ஜுரம், கண்வலி, வறள் என்ற வயிற்றுவலி, காசநோய், மூச்சுப்பிடிப்பு, நீரிழிவு, கொடிய விஷ நோய்கள், உலகமாயையால் வரும் விகாரமான பிணிகள் முதலியவை என்னை அணுகாதவண்ணம், பூமியில் அந்த நோய்கள் நீங்குவதற்காக சில வைத்தியர்களிடம் சொல்லி, இது நீங்குவதற்குப் பரிகாரம் யாதெனக் கேட்டால், காது கேளாததுபோலச் செல்பவர் சிலர், சாகப்போகும் வயதாகிவிட்டதே உமக்கு, எவ்வளவு பணம் தருவீரெனக் கேட்பவர் சிலர் என்று பிறர் கூறும்படியான விதியை என் தலையில் எழுதாமல், ஊக்கக்குறைவு இன்றி, விருப்பமுடன் பெரிய பூந்தோட்டத்தில் பூத்த மணமுள்ள மலர்களை, விதவிதமாகப் பறித்துத் தொடுத்து மாலை வகைகளில் ஆபரணங்கள் போல் அமைத்து உன்னடியில் சூட்டுதற்கு விரும்பும் சிறந்த தவசிரேஷ்டர்களின் இரு பாதங்களையும் மனத்தினில் தரித்தே, ஆய்ந்த அறிவுடன் பாடி, உன்னருளால் உன்னை வழிபடுவதற்கு, என்மீது அன்பு கூர்ந்து, உன் திருவடிகளைத் தந்துதவ பாம்பைத் தூக்கி எறிந்து ஆடும் மயிலின் மீது வந்தருள வேண்டும். அலைகடலை அணையிட்டு அடைத்து, மகா கோரமான ராவவணனுடைய மணிமுடிகளை அறுத்துத்தள்ளி, உயிருக்கு ஒப்பான சீதாதேவியை தன் தோள்வலியால் அழைத்துக்கொண்ட மாயவனான திருமாலை மாமன் என்று அழைக்கும் மருகனே, அறுகம்புல்லை சடையில் முடித்தவனும், உயிர்கட்கெல்லாம் ஆதாரமானவனும், மழு, மான் இவைகளை ஏந்தியவனும், மகா காளி வெட்கும்படியாக முன்னர் சபைதனிலே நடனம் ஆடியவனான சிவபிரானை, சிறந்த தந்தையே என்றழைக்கவும் வந்தவனே, பல கலைகளைப் படித்து ஓதும் கவிஞர்களின் நாவிலே வாசம் செய்கின்ற இரு திருவடிகளை உடைய வித்தகனே, வேலாயுதனே, உயரத்தில் கட்டப்பட்ட பரணின் மீது இருந்த குறப்பெண் வள்ளியின் தோள்களைத் தழுவ மிக்க ஆசை கொண்ட மணவாளனே, தாமரை மலர்கின்ற வயலிலும், பாக்கு மரங்களின் மீதும், வரால் மீன்கள் உறங்கும்படி வரும் நீர்ப்பெருக்கை உடைய ஆறாகிய காவேரி சூழ விளங்கும் பழநியில் எழுந்தருளிய, பச்சைக் கற்பூர மணம் கமழும் அலங்கார ஆடம்பரனே, தேவர்களின் பெருமாளே.