மூல மந்திரம் ஓதல் இங்கிலை
ஈவது இங்கிலை நேயம் இங்கிலை
மோனம் இங்கிலை ஞானம் இங்கிலை மடவார்கள்
மோகம் உண்டு அதி தாகம் உண்டு
அபசாரம் உண்டு அப ராதம் உண்டு இடு
மூகன் என்றொரு பேரும் உண்டு அருள் பயிலாத
கோலமும் குண வீன துன்பர்கள்
வார்மையும் பல வாகி வெந்தெழு
கோர கும்பியிலே விழுந்திட நினைவாகி
கூடு கொண்(டு) உழல்வேனை அன்பொடு
ஞான நெஞ்சினர்பால் இணங்கிடு
கூர்மை தந்தினி யாள வந்தருள் புரிவாயே
பீலி வெந்(து) உயர் ஆலி வெந்து அவ்
அசோகு வெந்து அமண் மூகர் நெஞ்சிடை
பீதி கொண்டிட வாது கொண்டு அருள் எழுது ஏடு
பேணி அங்கு எதிர் ஆறு சென்றிட
மாறனும்பிணி தீர வஞ்சகர்
பீறு வெங்கழு வேற வென்றிடு முருகோனே
ஆல முண்டவர் சோதி யங்கணர்
பாக மொன்றிய வாலை அந்தரி
ஆதி யந்தமுமான சங்கரி குமரேசா
ஆரணம்பயில் ஞான புங்கவ
சேவலங்கொடியான பைங்கர
ஆவினன்குடி வாழ்வு கொண்டருள் பெருமாளே.
மூல மந்திரமாகிய ஆறெழுத்தை (சரவணபவ) ஓதுவது என்பது என்னிடத்தில் கிடையாது. கொடுத்தல் என்பதும் அன்பு என்பதும் என்னிடம் கிடையாது. மெளனநிலை என்பதோ ஞானம் என்பதோ இங்கே கிடையாது. பெண்களின் மேல் மோகம் என்பது உண்டு. அந்த மோகத்தில் அதிக வேட்கை உண்டு. அவ்வேட்கையினால் செய்த குற்றங்கள் உண்டு. அக்குற்றங்களுக்காக நான் படவேண்டிய தண்டனையும் உண்டு. எல்லோரும் எனக்கு இட்ட மூகன் (கீழ்மகன்) என்ற பெயரும் உண்டு. அருளில் பயிற்சி இல்லாத விளையாட்டுக்கோலமும், குணக்கேடான துன்புறுத்துவோரின் கெட்ட ஒழுக்கமும் வெகுவாகப் பெருகி, வெந்து எழுகின்ற கோரமான கும்பி என்ற நரகத்தில் விழுவதற்கான நினைவு கொண்டு, இந்தக் கூடாகிய உடலைச் சுமந்து திரிகின்ற என்னை அன்புடன் ஞான உள்ளம் படைத்த பெரியோருடன் சேரும் புத்தி கூர்மையைத் தந்து இனி என்னை ஆண்டருள்வாயாக. மயிற் பீலி வெந்து, உயர்ந்துள்ள கமண்டல நீரும் கொதித்து (நோயைக் குறைக்க வீசிய) அசோகக் கொழுந்தும் வெந்து, (அந்த அவமானத்தால்) ஊமைகள் போல் வாய் அடைத்த சமணர்கள் நெஞ்சிலே பயம் அடையுமாறு அவர்களோடு வாது செய்து (அந்தணர் வாழ்க என்று) அருள்வாக்கு எழுதப்பட்ட ஏடு யாவரும் போற்ற அங்கு எதிர் ஏறி வைகை ஆற்றில் செல்லவும், பாண்டிய மன்னனும் (திருநீற்றின் மகிமையால்) நோய் தீர்ந்து நலம் பெறவும், வஞ்சகச் சமணரும் உடல்கிழிய கழுமரத்தில் ஏறவும், வெற்றி கொண்ட திருஞானசம்பந்தராக அவதரித்த முருகப் பெருமானே, நஞ்சை உண்டவரும், முச்சுடர்களை அழகிய முக்கண்களில் ஏற்றவரும், ஆகிய சிவபெருமானின் பாகத்தில் பொருந்திய குமரி, பராகாச வடிவி, முதலும் முடிவுமாக நிற்கும் சங்கரியின் புதல்வனான குமரக் கடவுளே, வேதங்கள் போற்றிப் பயில்கின்ற ஞான குருவே, அழகிய சேவற்கொடியை ஏந்திய திருக்கரத்தனே, திரு ஆவினன்குடியில் வாழ்வு கொண்டருளும் பெருமாளே.
மூல மந்திரம் ஓதல் இங்கிலை ... மூல மந்திரமாகிய ஆறெழுத்தை (சரவணபவ) ஓதுவது என்பது என்னிடத்தில் கிடையாது. ஈவது இங்கிலை நேயம் இங்கிலை ... கொடுத்தல் என்பதும் அன்பு என்பதும் என்னிடம் கிடையாது. மோனம் இங்கிலை ஞானம் இங்கிலை ... மெளனநிலை என்பதோ ஞானம் என்பதோ இங்கே கிடையாது. மடவார்கள் மோகம் உண்டு ... பெண்களின் மேல் மோகம் என்பது உண்டு. அதி தாகம் உண்டு ... அந்த மோகத்தில் அதிக வேட்கை உண்டு. அபசாரம் உண்டு ... அவ்வேட்கையினால் செய்த குற்றங்கள் உண்டு. அப ராதம் உண்டு ... அக்குற்றங்களுக்காக நான் படவேண்டிய தண்டனையும் உண்டு. இடு மூகன் என்றொரு பேரும் உண்டு ... எல்லோரும் எனக்கு இட்ட மூகன் (கீழ்மகன்) என்ற பெயரும் உண்டு. அருள் பயிலாத கோலமும் ... அருளில் பயிற்சி இல்லாத விளையாட்டுக்கோலமும், குண வீன துன்பர்கள் வார்மையும் ... குணக்கேடான துன்புறுத்துவோரின் கெட்ட ஒழுக்கமும் பல வாகி ... வெகுவாகப் பெருகி, வெந்தெழு கோர கும்பியிலே விழுந்திட நினைவாகி ... வெந்து எழுகின்ற கோரமான கும்பி என்ற நரகத்தில் விழுவதற்கான நினைவு கொண்டு, கூடு கொண்(டு) உழல்வேனை ... இந்தக் கூடாகிய உடலைச் சுமந்து திரிகின்ற என்னை அன்பொடு ஞான நெஞ்சினர்பால் இணங்கிடு ... அன்புடன் ஞான உள்ளம் படைத்த பெரியோருடன் சேரும் கூர்மை தந்தினி யாள வந்தருள் புரிவாயே ... புத்தி கூர்மையைத் தந்து இனி என்னை ஆண்டருள்வாயாக. பீலி வெந்(து) உயர் ஆலி வெந்து ... மயிற் பீலி வெந்து, உயர்ந்துள்ள கமண்டல நீரும் கொதித்து அவ் அசோகு வெந்து ... (நோயைக் குறைக்க வீசிய) அசோகக் கொழுந்தும் வெந்து, அமண் மூகர் நெஞ்சிடை பீதி கொண்டிட ... (அந்த அவமானத்தால்) ஊமைகள் போல் வாய் அடைத்த சமணர்கள் நெஞ்சிலே பயம் அடையுமாறு வாது கொண்டு அருள் எழுது ஏடு ... அவர்களோடு வாது செய்து (அந்தணர் வாழ்க என்று) அருள்வாக்கு எழுதப்பட்ட ஏடு பேணி அங்கு எதிர் ஆறு சென்றிட ... யாவரும் போற்ற அங்கு எதிர் ஏறி வைகை ஆற்றில் செல்லவும், மாறனும்பிணி தீர ... பாண்டிய மன்னனும் (திருநீற்றின் மகிமையால்) நோய் தீர்ந்து நலம் பெறவும், வஞ்சகர் பீறு வெங்கழு வேற ... வஞ்சகச் சமணரும் உடல்கிழிய கழுமரத்தில் ஏறவும், வென்றிடு முருகோனே ... வெற்றி கொண்ட திருஞானசம்பந்தராக அவதரித்த முருகப் பெருமானே, ஆல முண்டவர் சோதி யங்கணர் ... நஞ்சை உண்டவரும், முச்சுடர்களை அழகிய முக்கண்களில் ஏற்றவரும், பாக மொன்றிய வாலை ... ஆகிய சிவபெருமானின் பாகத்தில் பொருந்திய குமரி, அந்தரி ஆதி யந்தமுமான சங்கரி ... பராகாச வடிவி, முதலும் முடிவுமாக நிற்கும் சங்கரியின் குமரேசா ... புதல்வனான குமரக் கடவுளே, ஆரணம்பயில் ஞான புங்கவ ... வேதங்கள் போற்றிப் பயில்கின்ற ஞான குருவே, சேவலங்கொடியான பைங்கர ... அழகிய சேவற்கொடியை ஏந்திய திருக்கரத்தனே, ஆவினன்குடி வாழ்வு கொண்டருள் பெருமாளே. ... திரு ஆவினன்குடியில் வாழ்வு கொண்டருளும் பெருமாளே.