விரை மருவு மலர் அணிந்த கரிய புரி குழல் சரிந்து விழ வதன மதி விளங்க
அதிமோக விழி புரள முலை குலுங்க மொழி குழற அணை புகுந்து
விரக மயல் புரியும் இன்ப மடவார் பால் இரவு பகல் அணுகி நெஞ்சம் அறிவு அழிய உருகும் அந்த இருள் அகல
உனது தண்டை அணி பாதம் எனது தலை மிசை அணிந்து அழுது அழுது அருள் விரும்பி
இனிய புகழ் தனை விளம்ப அருள் தாராய்
அரவில் விழி துயில் முகுந்தன் அலர் கமல மலர் மடந்தை அழகினொடு தழுவு கொண்டல் மருகோனே
அடல் அசுரர் உடல் பிளந்து நிணம் அதனில் முழுகி அண்ட அமரர் சிறை விடு ப்ரசண்ட வடிவேலா
பரவை வரு விடம் அருந்து மிடறுடைய கடவுள் கங்கை படர் சடையர் விடையர்
அன்பர் உ(ள்)ள மேவும் பரமர் அருளிய கடம்ப முருக அறுமுகவ கந்த
பழநி மலை தனில் அமர்ந்த பெருமாளே.
மணம் கமழும் பூக்களை அணிந்த, கரிய சுருண்ட கூந்தல் சரிந்து விழ, சந்திரனைப் போன்று முகம் விளங்க, அதிக காம மயக்கம் தர வல்ல கண்கள் புரள, மார்பகங்கள் குலுங்க, பேச்சு குழற, படுக்கையில் புகுந்து காம மோகச் செயல்களைச் செய்யும் இன்ப வேசையரிடத்து இரவும் பகலும் நெருங்கிச் சென்று, மனமும் அறிவும் அழிந்து, உருகும் அந்த அஞ்ஞானம் நீங்க, உனது தண்டைகள் அணிந்த திருவடியை எனது தலை மீது தரித்து, நான் மேலும் மேலும் அழுது உன் திருவருளையே விரும்பி, இனிமையான உனது திருப்புகழைச் சொல்ல அருள் வாக்கு தந்து அருளுக. பாம்பின் மீது கண் துயிலும் முகுந்தன், மலர்ந்த தாமரை மலரில் வீற்றிருக்கும் அழகிய லக்ஷ்மியோடு தழுவும் கருமேக நிறத்தினராகிய திருமாலின் மருகனே, வலிமையான அசுரர்களின் உடல்களைப் பிளந்து, அவ்வுடல்களின் ரத்தக் கொழுப்பில் முழுகி, விண்ணுலகத்துத் தேவர்களின் சிறையை ஒழித்த வீரப்ரதாபம் வாய்ந்த கூரிய வேலனே. பாற்கடலில் தோன்றிய விஷத்தை உண்ட (நீல) கண்டத்தை உடைய கடவுள், கங்கை படர்ந்த சடையை உடையவர், ரிஷப வாகனத்தர், அன்பர்கள் உள்ளத்தில் வீற்றிருக்கும் பரம சிவனார் அருளிய கடம்பனே, முருகனே, ஆறு திருமுகங்களை உடையவனே, கந்தனே, பழனி மலையில் அமர்ந்தருளும் பெருமாளே.
விரை மருவு மலர் அணிந்த கரிய புரி குழல் சரிந்து விழ வதன மதி விளங்க ... மணம் கமழும் பூக்களை அணிந்த, கரிய சுருண்ட கூந்தல் சரிந்து விழ, சந்திரனைப் போன்று முகம் விளங்க, அதிமோக விழி புரள முலை குலுங்க மொழி குழற அணை புகுந்து ... அதிக காம மயக்கம் தர வல்ல கண்கள் புரள, மார்பகங்கள் குலுங்க, பேச்சு குழற, படுக்கையில் புகுந்து விரக மயல் புரியும் இன்ப மடவார் பால் இரவு பகல் அணுகி நெஞ்சம் அறிவு அழிய உருகும் அந்த இருள் அகல ... காம மோகச் செயல்களைச் செய்யும் இன்ப வேசையரிடத்து இரவும் பகலும் நெருங்கிச் சென்று, மனமும் அறிவும் அழிந்து, உருகும் அந்த அஞ்ஞானம் நீங்க, உனது தண்டை அணி பாதம் எனது தலை மிசை அணிந்து அழுது அழுது அருள் விரும்பி ... உனது தண்டைகள் அணிந்த திருவடியை எனது தலை மீது தரித்து, நான் மேலும் மேலும் அழுது உன் திருவருளையே விரும்பி, இனிய புகழ் தனை விளம்ப அருள் தாராய் ... இனிமையான உனது திருப்புகழைச் சொல்ல அருள் வாக்கு தந்து அருளுக. அரவில் விழி துயில் முகுந்தன் அலர் கமல மலர் மடந்தை அழகினொடு தழுவு கொண்டல் மருகோனே ... பாம்பின் மீது கண் துயிலும் முகுந்தன், மலர்ந்த தாமரை மலரில் வீற்றிருக்கும் அழகிய லக்ஷ்மியோடு தழுவும் கருமேக நிறத்தினராகிய திருமாலின் மருகனே, அடல் அசுரர் உடல் பிளந்து நிணம் அதனில் முழுகி அண்ட அமரர் சிறை விடு ப்ரசண்ட வடிவேலா ... வலிமையான அசுரர்களின் உடல்களைப் பிளந்து, அவ்வுடல்களின் ரத்தக் கொழுப்பில் முழுகி, விண்ணுலகத்துத் தேவர்களின் சிறையை ஒழித்த வீரப்ரதாபம் வாய்ந்த கூரிய வேலனே. பரவை வரு விடம் அருந்து மிடறுடைய கடவுள் கங்கை படர் சடையர் விடையர் ... பாற்கடலில் தோன்றிய விஷத்தை உண்ட (நீல) கண்டத்தை உடைய கடவுள், கங்கை படர்ந்த சடையை உடையவர், ரிஷப வாகனத்தர், அன்பர் உ(ள்)ள மேவும் பரமர் அருளிய கடம்ப முருக அறுமுகவ கந்த ... அன்பர்கள் உள்ளத்தில் வீற்றிருக்கும் பரம சிவனார் அருளிய கடம்பனே, முருகனே, ஆறு திருமுகங்களை உடையவனே, கந்தனே, பழநி மலை தனில் அமர்ந்த பெருமாளே. ... பழனி மலையில் அமர்ந்தருளும் பெருமாளே.