பனியின் விந்(து) துளி போலவே கருவின் உறு அளவில்
அங்கு ஒரு சூசம் ஆய் மிளகு துவர்
பனை தெ(ன்)னங் கனி போலவே பல கனியின் வயிறு ஆகி
பருவமும் தலை கீழதாய் நழுவி நிலம் மருவி
ஒன்பது வாசல் சேர் உருவம் உள பதுமையின் செயல் போலவே வளி கயிறின் உடன் ஆடி ம(ன்)ன
விதம் தெரியாமலே மல சலமொடு உடல் நகர்ந்து அழுது ஆறியே
அ(ன்)னை முலையின் மயம் அயின்று ஒரு பாலனாய் இகம் உடைய செயல் மேவி
வடிவம் முன் செய்த தீமையால் எயும் உனையும் அற மறந்து அகம் மீது போய்
தின(ம்) தினமும் மனம் அழிந்து உடல் நாறினேன் இனி உனது கழல் தாராய்
தனன தந்தன தானனா தனதனன தினன திந்தன தீததோ திகுததிகு தகுத குந்ததி தாகுதோ என
முழவு வளை பேரி தவில் கணம் பறை காளமோடு இமிலை தொனி இனம் முழங்க
எழு வேலை போல் அதிர
பொரு சமர் முகங்களின் மேவியே விருது சொலும் அவுணோர்கள் சினம் அழிந்திட
தேர்கள் தோல் அரி பரிகள் குருதி எண் திசை மூடவே
அலகை நரி சிறை இனம் களி கூரவே நகை அருளி விடும் வேலா
சிவன் மகிழ்ந்து அருள் ஆனை முகன் மருவி மனம் மகிழ்ந்து அருள் கூர
ஓர் கயிலை மகிழ் திகழ் குறிஞ்சியின் மாது மால் மருவு புகழ் பெருமாளே.
பனித்துளி அளவுக்கு உள்ள சுக்கிலம் கருவில் சேர்ந்த அளவில், அவ்விடத்தில் ஒரு அறிகுறியாய், (பின்பு) மிளகு அளவாய், (அதன் பின்) பாக்கு அளவாய், பிறகு பனை, முற்றிய தேங்காய் போல் ஆகி, (பின்னர்) பலாப் பழ அளவுக்கு வயிறு பெரிதாகி, (பூமிக்கு வரவேண்டிய) பருவ காலம் வந்தவுடன், தலை கீழாக நழுவி இந்தப் பூமியை அடைந்து, ஒன்பது துவாரங்களைக் கொண்ட உருவம் உள்ள ஒரு பொம்மையின் செயலைப் போல, பிராண வாயு என்னும் கயிற்றின் உதவியால் ஆடி இயங்கி இருக்கும்போது, இவ்வாறு போகின்றது என்னும் உணர்ச்சி இல்லாமல் மல சலம் கழியும் உடலுடன் தவழ்ந்தும், அழுதும், பிறகு அழுகை ஓய்ந்தும், தாயின் முலைமயமான பாலை நன்கு உண்டு, ஒரு குழந்தையாய் இப்பிறப்பில் செய்யும்படி விதிக்கப்பட்ட செயல்களைச் செய்து, உருவமானது முன்பு செய்த தீவினை காரணமாக எவ்வாறோ அமைந்து, உன்னையும் அடியோடு மறந்து, பாவம் மேலும் மேலும் வளர, நாள்தோறும் மனம் உடைந்து, உருக் குலைந்து கெடுகின்றேன். இனி உனது திருவடிகளைத் தந்து அருள்வாயாக. (இந்த தாளத்துக்கு ஏற்ப), முரசு, சங்கு, பேரிகை, மேள வகை, அதமக் கருவியான புற முழவு, எக்காளம் முதலிய வாத்தியங்கள் ஒலிக்கும் ஒலி வகைகள் முழக்கம் செய்து, ஏழு கடல்களைப் போலப் பெரும் சப்தத்தைக் கிளப்ப, சண்டை நடக்கும் போர் முனைகளில் நின்று தமது வீரச் செயல்களைச் சொல்லும் அசுரர்களின் கோபம் குலைந்து அழிபட, தேர்கள் அழிபட, யானை, வலிமை உள்ள குதிரைகள் ஆகியவைகளின் ரத்தம் எட்டுத் திசைகளையும் மூட, பேய்கள், நரிகள், (கோட்டான் போன்ற) பறவைகள் மகிழ்ச்சி கொள்ள, சிரித்து அருளிச் செலுத்திய வேலாயுதனே. சிவ பெருமான் மகிழ்ந்தருளிய யானையின் அழகிய முகத்தைக் கொண்ட கணபதி கூட இருந்து மனம் மகிழ்ந்து அருள் புரிய, ஒப்பற்ற கயிலை மலையில் மகிழ்கின்ற, விளங்கும் வள்ளிமலை மாதாகிய வள்ளி காதல் கொண்டு அருகில் இருக்கும், புகழ் வாய்ந்த பெருமாளே.
பனியின் விந்(து) துளி போலவே கருவின் உறு அளவில் ... பனித்துளி அளவுக்கு உள்ள சுக்கிலம் கருவில் சேர்ந்த அளவில், அங்கு ஒரு சூசம் ஆய் மிளகு துவர் ... அவ்விடத்தில் ஒரு அறிகுறியாய், (பின்பு) மிளகு அளவாய், (அதன் பின்) பாக்கு அளவாய், பனை தெ(ன்)னங் கனி போலவே பல கனியின் வயிறு ஆகி ... பிறகு பனை, முற்றிய தேங்காய் போல் ஆகி, (பின்னர்) பலாப் பழ அளவுக்கு வயிறு பெரிதாகி, பருவமும் தலை கீழதாய் நழுவி நிலம் மருவி ... (பூமிக்கு வரவேண்டிய) பருவ காலம் வந்தவுடன், தலை கீழாக நழுவி இந்தப் பூமியை அடைந்து, ஒன்பது வாசல் சேர் உருவம் உள பதுமையின் செயல் போலவே வளி கயிறின் உடன் ஆடி ம(ன்)ன ... ஒன்பது துவாரங்களைக் கொண்ட உருவம் உள்ள ஒரு பொம்மையின் செயலைப் போல, பிராண வாயு என்னும் கயிற்றின் உதவியால் ஆடி இயங்கி இருக்கும்போது, விதம் தெரியாமலே மல சலமொடு உடல் நகர்ந்து அழுது ஆறியே ... இவ்வாறு போகின்றது என்னும் உணர்ச்சி இல்லாமல் மல சலம் கழியும் உடலுடன் தவழ்ந்தும், அழுதும், பிறகு அழுகை ஓய்ந்தும், அ(ன்)னை முலையின் மயம் அயின்று ஒரு பாலனாய் இகம் உடைய செயல் மேவி ... தாயின் முலைமயமான பாலை நன்கு உண்டு, ஒரு குழந்தையாய் இப்பிறப்பில் செய்யும்படி விதிக்கப்பட்ட செயல்களைச் செய்து, வடிவம் முன் செய்த தீமையால் எயும் உனையும் அற மறந்து அகம் மீது போய் ... உருவமானது முன்பு செய்த தீவினை காரணமாக எவ்வாறோ அமைந்து, உன்னையும் அடியோடு மறந்து, பாவம் மேலும் மேலும் வளர, தின(ம்) தினமும் மனம் அழிந்து உடல் நாறினேன் இனி உனது கழல் தாராய் ... நாள்தோறும் மனம் உடைந்து, உருக் குலைந்து கெடுகின்றேன். இனி உனது திருவடிகளைத் தந்து அருள்வாயாக. தனன தந்தன தானனா தனதனன தினன திந்தன தீததோ திகுததிகு தகுத குந்ததி தாகுதோ என ... (இந்த தாளத்துக்கு ஏற்ப), முழவு வளை பேரி தவில் கணம் பறை காளமோடு இமிலை தொனி இனம் முழங்க ... முரசு, சங்கு, பேரிகை, மேள வகை, அதமக் கருவியான புற முழவு, எக்காளம் முதலிய வாத்தியங்கள் ஒலிக்கும் ஒலி வகைகள் முழக்கம் செய்து, எழு வேலை போல் அதிர ... ஏழு கடல்களைப் போலப் பெரும் சப்தத்தைக் கிளப்ப, பொரு சமர் முகங்களின் மேவியே விருது சொலும் அவுணோர்கள் சினம் அழிந்திட ... சண்டை நடக்கும் போர் முனைகளில் நின்று தமது வீரச் செயல்களைச் சொல்லும் அசுரர்களின் கோபம் குலைந்து அழிபட, தேர்கள் தோல் அரி பரிகள் குருதி எண் திசை மூடவே ... தேர்கள் அழிபட, யானை, வலிமை உள்ள குதிரைகள் ஆகியவைகளின் ரத்தம் எட்டுத் திசைகளையும் மூட, அலகை நரி சிறை இனம் களி கூரவே நகை அருளி விடும் வேலா ... பேய்கள், நரிகள், (கோட்டான் போன்ற) பறவைகள் மகிழ்ச்சி கொள்ள, சிரித்து அருளிச் செலுத்திய வேலாயுதனே. சிவன் மகிழ்ந்து அருள் ஆனை முகன் மருவி மனம் மகிழ்ந்து அருள் கூர ... சிவ பெருமான் மகிழ்ந்தருளிய யானையின் அழகிய முகத்தைக் கொண்ட கணபதி கூட இருந்து மனம் மகிழ்ந்து அருள் புரிய, ஓர் கயிலை மகிழ் திகழ் குறிஞ்சியின் மாது மால் மருவு புகழ் பெருமாளே. ... ஒப்பற்ற கயிலை மலையில் மகிழ்கின்ற, விளங்கும் வள்ளிமலை மாதாகிய வள்ளி காதல் கொண்டு அருகில் இருக்கும், புகழ் வாய்ந்த பெருமாளே.