பொன் சித்ரப் பச்சைப் பட்டுக் கச்சு இட்டுக் கட்டிப் பத்மப் புட்பத்துக்கு ஒப்பக் கற்பித்து.....இளைஞோர்கள் புள் பட்டு செப்பத்துப் பல் கொத்த பொன் தித்தத் திட்பப் பொற்பில் பெற்று உக்ரச் சக்ரத்.....தனம் மானார் கல் சித்தச் சுத்தப் பொய்ப் பித்து அத்தில் புக்கு இட்டப்பட்டுக் கைக் குத்திட்டு இட்டிச் சுற்றித்.....திரியாமல் கற்று உற்றுச் சித்திக் கைக்குச் சித்திப்பப் பக்ஷத்தில் சொல் கற்பித்து ஒப்பித்துக் கொற்றக்.....கழல் தாராய் குற்சித்துக் கொட்டுக் கொட்டுத் துக்க அச்சத்துக்குக் குக்குக் குக்குக்குக் குக்குக் குக்குக்.....என மாறா குட்சிக்குப் பக்ஷிக் கைக்குக் கக்ஷத்தில் பட்சத்து அத்தக் கொட்டி சுட்டிக் கொக்ரிக்.....குக்குட தாரி சத் சித்துத் தொல் புத்திப் பட்ச அத்தர்க்கு ஒப்பித்து அட்ச(ர)த்துச் சத்தத்தைத் சத்திக் கொச்சைப்.....பதி வாழ்வே தக்ஷ (சம்) பற்றுக் கெர்ப்பத்தில் செல் பற்றைச் செற்றிட்ட உச்சச் சற்பப் பொற்றைக்குள் சொக்கப்.....பெருமாளே.
அழகிய விசித்திரமான பச்சைப் பட்டாலாகிய ரவிக்கையை அணிவித்து இறுக்கிக் கட்டி, தாமரைப் பூவுக்கு (மார்பகம்) ஒப்பாகும் என்று கற்பனை செய்து, வலையில் சிக்கிய பறவை போல் விலைமாதர் வலையில் வாலிபர்கள் நன்றாகச் சிக்கி, (அந்த வேசியர்களின்) வரிசையான பற்களால் கடிபட்டு, பொன்னை வலுவில் அடைவதற்காக, அதனைத் தெளிவான வகையில் பக்குவமாகப் பேசிப் பெறுகின்ற, கொடிய சக்கரம் போன்று வட்ட வடிவமாக உள்ள மார்பகங்களை உடைய மாதர்களின் கல்லைப் போன்ற கடினமான மனம் என்ற சுத்தப் பொய்யான பித்துச் சூழலுக்குள் புகுந்து, அதில் அதிக விருப்பம் வைத்து, (தன்னைப் போல் அங்கே வரும் பிற காமுகர்களுடன்) கைக்குத்துச் சண்டையும் போட்டு சுற்றித் திரியாமல், உன்னை ஓதுதலைக் கொண்டு, நல்ல சித்தி கைகூடுதற்கு, கருணையோடு, (உன்னைத் துதிக்கும் சொற்கள்) தோன்றுமாறும், அந்தச் சொற்களை நான் ஒப்பிக்குமாறும் உனது வீரத் திருவடிகளைத் தருவாயாக. இரை கிடைக்காத வெறுப்பில் கொட்டுக் கொட்டென்னும் பசியால் வருத்தமும் திகிலும் கொண்டு, குக்குக் குக்குக்குக் குக்குக் குக்குக் என்று ஓயாமல் வயிற்றின் இரைக்காக தனது விலாப்புறத்து பக்கங்களில் சிறகை அடித்துக் கொட்டி, குறிப்புடன் கொக்கரிக்கின்ற சேவலைக் கொடியாகக் கொண்டவனே, என்றும் உள்ளவராய், அறிவே உருவானவராய், பழையவராய், ஞானியாய், அன்பு வாய்ந்த தந்தையாக நின்ற சிவபெருமானுக்கு ஓதி, எழுத்துகளின் இறை ஒலியை (தேவாரப் பாடல்களைப்) பாடிய வல்லமை வாய்ந்த சீகாழித் தலத்துத் திருஞான சம்பந்தப் பெருமானே, உடனே பற்றிக் கொள்வதும், கருவிலேயே ஊடுருவிச் செல்வதுமான பற்றை (பெண், மண், பொன் என்ற மூவாசைகளை) தடுத்து ஒழித்த மேலானதான நாக மலை என்னும் திருச்செங்கோட்டில் உறையும் அழகிய பெருமாளே.
பொன் சித்ரப் பச்சைப் பட்டுக் கச்சு இட்டுக் கட்டிப் பத்மப் புட்பத்துக்கு ஒப்பக் கற்பித்து ... அழகிய விசித்திரமான பச்சைப் பட்டாலாகிய ரவிக்கையை அணிவித்து இறுக்கிக் கட்டி, தாமரைப் பூவுக்கு (மார்பகம்) ஒப்பாகும் என்று கற்பனை செய்து, இளைஞோர்கள் புள் பட்டு செப்பத்துப் பல் கொத்த ... வலையில் சிக்கிய பறவை போல் விலைமாதர் வலையில் வாலிபர்கள் நன்றாகச் சிக்கி, (அந்த வேசியர்களின்) வரிசையான பற்களால் கடிபட்டு, பொன் தித்தத் திட்பப் பொற்பில் பெற்று உக்ரச் சக்ரத் தனம் மானார் ... பொன்னை வலுவில் அடைவதற்காக, அதனைத் தெளிவான வகையில் பக்குவமாகப் பேசிப் பெறுகின்ற, கொடிய சக்கரம் போன்று வட்ட வடிவமாக உள்ள மார்பகங்களை உடைய மாதர்களின் கல் சித்தச் சுத்தப் பொய்ப் பித்து அத்தில் புக்கு இட்டப்பட்டுக் கைக் குத்திட்டு இட்டிச் சுற்றித் திரியாமல் ... கல்லைப் போன்ற கடினமான மனம் என்ற சுத்தப் பொய்யான பித்துச் சூழலுக்குள் புகுந்து, அதில் அதிக விருப்பம் வைத்து, (தன்னைப் போல் அங்கே வரும் பிற காமுகர்களுடன்) கைக்குத்துச் சண்டையும் போட்டு சுற்றித் திரியாமல், கற்று உற்றுச் சித்திக்கைக்குச் சித்திப்பப் பக்ஷத்தில் சொல் கற்பித்து ஒப்பித்துக் கொற்றக் கழல் தாராய் ... உன்னை ஓதுதலைக் கொண்டு, நல்ல சித்தி கைகூடுதற்கு, கருணையோடு, (உன்னைத் துதிக்கும் சொற்கள்) தோன்றுமாறும், அந்தச் சொற்களை நான் ஒப்பிக்குமாறும் உனது வீரத் திருவடிகளைத் தருவாயாக. குற்சித்துக் கொட்டுக் கொட்டுத் துக்க அச்சத்துக்குக் ... இரை கிடைக்காத வெறுப்பில் கொட்டுக் கொட்டென்னும் பசியால் வருத்தமும் திகிலும் கொண்டு, குக்குக் குக்குக்குக் குக்குக் குக்குக் என மாறா குட்சிக்குப் பக்ஷிக்கைக்குக் கக்ஷத்தில் பட்சத்து அத்தக் கொட்டி ... குக்குக் குக்குக்குக் குக்குக் குக்குக் என்று ஓயாமல் வயிற்றின் இரைக்காக தனது விலாப்புறத்து பக்கங்களில் சிறகை அடித்துக் கொட்டி, சுட்டிக் கொக்ரிக் குக்குட தாரி ... குறிப்புடன் கொக்கரிக்கின்ற சேவலைக் கொடியாகக் கொண்டவனே, சத் சித்துத் தொல் புத்திப் பட்ச அத்தர்க்கு ஒப்பித்து ... என்றும் உள்ளவராய், அறிவே உருவானவராய், பழையவராய், ஞானியாய், அன்பு வாய்ந்த தந்தையாக நின்ற சிவபெருமானுக்கு ஓதி, அட்ச(ர)த்துச் சத்தத்தைத் சத்திக் கொச்சைப் பதி வாழ்வே ... எழுத்துகளின் இறை ஒலியை (தேவாரப் பாடல்களைப்) பாடிய வல்லமை வாய்ந்த சீகாழித் தலத்துத் திருஞான சம்பந்தப் பெருமானே, தக்ஷ (சம்) பற்றுக் கெர்ப்பத்தில் செல் பற்றைச் செற்றிட்ட ... உடனே பற்றிக் கொள்வதும், கருவிலேயே ஊடுருவிச் செல்வதுமான பற்றை (பெண், மண், பொன் என்ற மூவாசைகளை) தடுத்து ஒழித்த உச்சச் சற்பப் பொற்றைக்குள் சொக்கப் பெருமாளே. ... மேலானதான நாக மலை என்னும் திருச்செங்கோட்டில் உறையும் அழகிய பெருமாளே.