இந்தப் புவியில் பல தீய வழிகளில் ஈடுபடும் மூடனான என்னை, குடிவெறி கொண்ட பித்தனை, நற்குணமும், பொறுமையும் இருக்கவேண்டும் என்ற விருப்பம் இல்லாத, செருக்கு மிகுந்த அறிவற்றவனை, ஒருவித பெருமையும் இல்லாத தாழ்நிலையில் இருக்கும் வீணனை, நிரம்பின கேள்வி, தவ வழி இவற்றை விட்டுத் தாண்டி கண்ட வழியில் திரிகின்ற கெட்டவனை, பயனற்ற புத்தியால் கேடுகளும் தீமைகளும் செய்யும் குணம்கெட்டவனை, வேண்டுமென்றே இனநீக்கம் செய்யப்பட்ட கதியற்றவனை, நறுமணம் கமழும் கூந்தலை உடையவர், பிடிவாதம் உள்ள பெண்கள், சந்திரனை ஒத்த முகத்தை உடைய மாதர், விருப்பத்தைத் தூண்டும் காம மயக்கியர், கண் என்னும் வலையை வீசும் மகளிர் - இத்தகையோருடன் அவ்வப்போது கூடிய தொழிலை உடையவனாகிய என்னை, நிரம்ப மலர்கள் கொண்டு விரும்பிப் பூஜித்தாகிலும், ஒரு பூவோ ஓர் இலையோ கொண்டாகிலும் நான் உன்னை நினைத்து, நல்ல வகையில் அன்போடு கீழே விழுந்து உனது திருவடிகளைத் தொழுமாறு அருள்வாயாக. பத்துத் தலைகளோடு போர் செய்ய வந்த ராவணனுடைய இருபது தோள்களும், ஏந்திய வாள் ஆயுதமும் ஒரே பாணத்தால் அற்று விழும்படி அம்பு செலுத்திய ராமனாம் மாயத் திருமாலின் மருகனே, உன்னுடைய அடியார்களின் புகழை ஆராய்ந்த நூல் வல்லவர்களும், தேவர்களும், முநிவர்களும், கொடைகள் செய்து பாலிப்பவர்களும், உயர்ந்த நற்கதியைப் பெற, அருள் விளங்கும் அழகிய மயிலில் அமர்ந்திருப்பவனே, ஒலிக்கின்ற தண்டையணிந்த உன்னடியைத் தாழ்மையோடு கும்பிடாமல், போர்க்களத்தில் தர்ம நெறியைக் கைவிட்ட அசுரர்களின் குல முழுமையும் யாவருமாக மாண்டு போய்ப் பொடியாகும்படிக் கோபித்தவனே, ஆலகால விஷத்தைக் கொடு என்று கூறி வாங்கியே, அழகிய கழுத்திலேயே இரு என்று அதை கண்டத்தில் தாங்கும் சிவபிரானுக்கு சிவ பெருமானின் குருமூர்த்தியாக வந்தவனே, கூந்தலூர் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
தரையினில் வெகுவழி சார்ந்த மூடனை ... இந்தப் புவியில் பல தீய வழிகளில் ஈடுபடும் மூடனான என்னை, வெறியனை ... குடிவெறி கொண்ட பித்தனை, நிறைபொறை வேண்டிடா மத சடலனை ... நற்குணமும், பொறுமையும் இருக்கவேண்டும் என்ற விருப்பம் இல்லாத, செருக்கு மிகுந்த அறிவற்றவனை, மகிமைகள் தாழ்ந்த வீணணை ... ஒருவித பெருமையும் இல்லாத தாழ்நிலையில் இருக்கும் வீணனை, மிகுகேள்வி தவநெறி தனைவிடு தாண்டு காலியை ... நிரம்பின கேள்வி, தவ வழி இவற்றை விட்டுத் தாண்டி கண்ட வழியில் திரிகின்ற கெட்டவனை, அவமதி யதனில் பொலாங்கு தீமைசெய் சமடனை ... பயனற்ற புத்தியால் கேடுகளும் தீமைகளும் செய்யும் குணம்கெட்டவனை, வலிய அசாங்கமாகிய தமியேனை ... வேண்டுமென்றே இனநீக்கம் செய்யப்பட்ட கதியற்றவனை, விரைசெறி குழலியர் வீம்பு நாரியர் ... நறுமணம் கமழும் கூந்தலை உடையவர், பிடிவாதம் உள்ள பெண்கள், மதிமுக வனிதையர் வாஞ்சை மோகியர் ... சந்திரனை ஒத்த முகத்தை உடைய மாதர், விருப்பத்தைத் தூண்டும் காம மயக்கியர், விழிவலை மகளிரொடு ஆங்கு கூடிய வினையேனை ... கண் என்னும் வலையை வீசும் மகளிர் - இத்தகையோருடன் அவ்வப்போது கூடிய தொழிலை உடையவனாகிய என்னை, வெகுமல ரதுகொடு வேண்டி யாகிலும் ... நிரம்ப மலர்கள் கொண்டு விரும்பிப் பூஜித்தாகிலும், ஒருமலர் இலைகொடும் ஓர்ந்து யானுனை ... ஒரு பூவோ ஓர் இலையோ கொண்டாகிலும் நான் உன்னை நினைத்து, விதமுறு பரிவொடு வீழ்ந்து தாழ் தொழ அருள்வாயே ... நல்ல வகையில் அன்போடு கீழே விழுந்து உனது திருவடிகளைத் தொழுமாறு அருள்வாயாக. ஒருபது சிரமிசை போந்த ராவணன் ... பத்துத் தலைகளோடு போர் செய்ய வந்த ராவணனுடைய இருபது புயமுடன் ஏந்தும் ஏதியும் ... இருபது தோள்களும், ஏந்திய வாள் ஆயுதமும் ஒருகணை தனில் அற வாங்கு மாயவன் மருகோனே ... ஒரே பாணத்தால் அற்று விழும்படி அம்பு செலுத்திய ராமனாம் மாயத் திருமாலின் மருகனே, உனதடியவர்புகழ் ஆய்ந்த நூலினர் ... உன்னுடைய அடியார்களின் புகழை ஆராய்ந்த நூல் வல்லவர்களும், அமரர்கள் முனிவர்கள் ஈந்த பாலகர் ... தேவர்களும், முநிவர்களும், கொடைகள் செய்து பாலிப்பவர்களும், உயர்கதி பெறஅருளோங்கு மாமயில் உறைவோனே ... உயர்ந்த நற்கதியைப் பெற, அருள் விளங்கும் அழகிய மயிலில் அமர்ந்திருப்பவனே, குரைகழல் பணிவொடு கூம்பிடார் ... ஒலிக்கின்ற தண்டையணிந்த உன்னடியைத் தாழ்மையோடு கும்பிடாமல், பொரு களமிசை யறமது தீர்ந்த சூரர்கள் ... போர்க்களத்தில் தர்ம நெறியைக் கைவிட்ட அசுரர்களின் குலமுழுது அனைவரு மாய்ந்து தூளெழ முனிவோனே ... குல முழுமையும் யாவருமாக மாண்டு போய்ப் பொடியாகும்படிக் கோபித்தவனே, கொடுவிட மதுதனை வாங்கியே ... ஆலகால விஷத்தைக் கொடு என்று கூறி வாங்கியே, திரு மிடறினில் இருவென ஏந்தும் ... அழகிய கழுத்திலேயே இரு என்று அதை கண்டத்தில் தாங்கும் சிவபிரானுக்கு ஈசுரர் குருபரன் எனவரு ... சிவ பெருமானின் குருமூர்த்தியாக வந்தவனே, கூந்தலூர் உறை பெருமாளே. ... கூந்தலூர் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.