வானோர் வழுத்து உனது பாதார பத்ம மலர் மீதே பணிக்கும் வகை அறியாதே
மானார் வலைக் கண் அதிலே தூளி மெத்தையினில் ஊடே அணைத்து உதவும் அதனாலே
தேனோ கருப்பில் எழு பாகோ இதற்கு இணைகள் ஏதோ எனக் கலவி பல கோடி தீரா மயக்கினொடு நாகா படத்தில் எழு சேறு ஆடல் பெற்ற துயர் ஒழியேனோ
மேல்நாடு பெற்று வளர் சூர அதிபற்கு எதிரின் ஊடு ஏகி நிற்கும் இரு கழலோனே
மேகார உக்ர பரி தான் ஏறி வெற்றி புனை வீரா குறச் சிறுமி மணவாளா
ஞானா பரற்கு இனிய வேத ஆகமப் பொருளை நாணாது உரைக்கும் ஒரு பெரியோனே
நாராயணற்கு மருகா வீறு பெற்று இலகு ராமேசுரத்தில் உறை பெருமாளே.
தேவர்கள் போற்றுகின்ற உன்னுடைய திருவடித் தாமரைகள் மீது பணி செய்யும் வகையை உணராமல், மான் விழியரான விலைமாதர்களின் கடைக் கண்ணில் பட்டு, பூந்தாதுக்கள் நிறைந்த மெத்தையில் அணைத்துப் பெறும் அந்த நிகழ்ச்சியால், தேன் தானோ, கரும்பிலிருந்து வரும் சர்க்கரைக் கட்டியோ, இதற்குச் சமமான இன்பம் ஏதேனும் உள்ளதோ, என்று கூறி பல கோடிக் கணக்கான புணர்ச்சிகளை அடங்காத மோகத்தோடு பாம்பின் படம் போன்ற பெண்குறியாகிய சேற்றில் விளையாடுதலால் நான் அடைந்துள்ள துயரத்தை விலக்க மாட்டேனோ? மேல் நாடாகிய விண்ணுலகத்தையும் போரில் வென்று அடைந்து மேம்பட்ட அசுரர்கள் தலைவனான சூரனின் எதிரே போரில் புகுந்து நின்ற இரண்டு திருவடிகளை உடையவனே, மயில் என்னும் உக்கிரமான வாகனத்தில் ஏறி அமர்ந்து வெற்றி பெற்ற வீரனே, குறப் பெண் வள்ளியின் கணவனே, ஞானப் பரம் பொருளாகிய சிவபெருமானுக்கு வேதாகமங்களின் பொருளைத் தயங்காமல் உபதேசித்த ஒப்பற்ற பெரியோனே, திருமாலுக்கு மருகனே, சிறப்பு பெற்று விளங்கும் ராமேசுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
வானோர் வழுத்து உனது பாதார பத்ம மலர் மீதே பணிக்கும் வகை அறியாதே ... தேவர்கள் போற்றுகின்ற உன்னுடைய திருவடித் தாமரைகள் மீது பணி செய்யும் வகையை உணராமல், மானார் வலைக் கண் அதிலே தூளி மெத்தையினில் ஊடே அணைத்து உதவும் அதனாலே ... மான் விழியரான விலைமாதர்களின் கடைக் கண்ணில் பட்டு, பூந்தாதுக்கள் நிறைந்த மெத்தையில் அணைத்துப் பெறும் அந்த நிகழ்ச்சியால், தேனோ கருப்பில் எழு பாகோ இதற்கு இணைகள் ஏதோ எனக் கலவி பல கோடி தீரா மயக்கினொடு நாகா படத்தில் எழு சேறு ஆடல் பெற்ற துயர் ஒழியேனோ ... தேன் தானோ, கரும்பிலிருந்து வரும் சர்க்கரைக் கட்டியோ, இதற்குச் சமமான இன்பம் ஏதேனும் உள்ளதோ, என்று கூறி பல கோடிக் கணக்கான புணர்ச்சிகளை அடங்காத மோகத்தோடு பாம்பின் படம் போன்ற பெண்குறியாகிய சேற்றில் விளையாடுதலால் நான் அடைந்துள்ள துயரத்தை விலக்க மாட்டேனோ? மேல்நாடு பெற்று வளர் சூர அதிபற்கு எதிரின் ஊடு ஏகி நிற்கும் இரு கழலோனே ... மேல் நாடாகிய விண்ணுலகத்தையும் போரில் வென்று அடைந்து மேம்பட்ட அசுரர்கள் தலைவனான சூரனின் எதிரே போரில் புகுந்து நின்ற இரண்டு திருவடிகளை உடையவனே, மேகார உக்ர பரி தான் ஏறி வெற்றி புனை வீரா குறச் சிறுமி மணவாளா ... மயில் என்னும் உக்கிரமான வாகனத்தில் ஏறி அமர்ந்து வெற்றி பெற்ற வீரனே, குறப் பெண் வள்ளியின் கணவனே, ஞானா பரற்கு இனிய வேத ஆகமப் பொருளை நாணாது உரைக்கும் ஒரு பெரியோனே ... ஞானப் பரம் பொருளாகிய சிவபெருமானுக்கு வேதாகமங்களின் பொருளைத் தயங்காமல் உபதேசித்த ஒப்பற்ற பெரியோனே, நாராயணற்கு மருகா வீறு பெற்று இலகு ராமேசுரத்தில் உறை பெருமாளே. ... திருமாலுக்கு மருகனே, சிறப்பு பெற்று விளங்கும் ராமேசுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.