அவனிதனிலே பிறந்து மதலை எனவே தவழ்ந்து
அழகு பெறவே நடந்து இளைஞோனாய்
அருமழலையே மிகுந்து குதலை மொழியே புகன்று
அதிவிதம் அதாய் வளர்ந்து பதினாறாய்
சிவகலைகள் ஆகமங்கள் மிகவுமறை ஓதும் அன்பர்
திருவடிகளே நினைந்து துதியாமல்
தெரிவையர்கள் ஆசை மிஞ்சி வெகுகவலை யாய்உழன்று
திரியும் அடியேனை உன்றன் அடிசேராய்
மவுன உபதேச சம்பு மதியறுகு வேணி தும்பை
மணிமுடியின் மீதணிந்த மகதேவர்
மனமகிழவே அணைந்து ஒருபுறமதாகவந்த
மலைமகள் குமார துங்க வடிவேலா
பவனி வரவே உகந்து மயிலின் மிசையே திகழ்ந்து
படி அதிரவே நடந்த கழல்வீரா
பரம பதமே செறிந்த முருகன் எனவே உகந்து
பழனிமலை மேல் அமர்ந்த பெருமாளே.
இந்த பூமியிலே பிறந்து குழந்தை எனத் தவழ்ந்து அழகு பெறும் வகையில் நடை பழகி இளைஞனாய் அரிய மழலைச் சொல்லே மிகுந்து வர குதலை மொழிகளே பேசி அதிக விதமாக வயதுக்கு ஒப்ப வளர்ந்து வயதும் பதினாறு ஆகி, சைவ நூல்கள், சிவ ஆகமங்கள், மிக்க வேதங்களை ஓதும் அன்பர்களுடைய திருவடிகளையே நினைந்து துதிக்காமல், மாதர்களின் மீது ஆசை மிகுந்து அதன் காரணமாக மிக்க கவலையுடன் அலைந்து திரிகின்ற அடியேனை, உனது திருவடிகளில் சேர்க்க மாட்டாயா? சும்மா இரு என்ற மெளன உபதேசம் செய்த சம்பு, பிறைச்சந்திரன், அறுகம்புல், கங்கை, தும்பைப்பூ தன் மணி முடியின் மேலணிந்த மகாதேவர், மனமகிழும்படி அவரை அணைத்துக்கொண்டு அவரது இடப்புறத்தில் வந்தமர்ந்த பார்வதியின் குமாரனே பரிசுத்தமும் கூர்மையும் உடைய வேலினை உடையவனே இவ்வுலகைச் சுற்றிவரவே ஆசை கொண்டு மயிலின் மேல் ஏறி விளங்கி பூமி அதிரவே வலம் வந்த வீரக் கழல் அணிந்த வீரனே மோட்ச வீட்டில் பொருந்தி நின்று முருகன் என விளங்கி பழனிமலையில் வீற்ற பெருமாளே.
அவனிதனிலே பிறந்து ... இந்த பூமியிலே பிறந்து மதலை எனவே தவழ்ந்து ... குழந்தை எனத் தவழ்ந்து அழகு பெறவே நடந்து ... அழகு பெறும் வகையில் நடை பழகி இளைஞோனாய் ... இளைஞனாய் அருமழலையே மிகுந்து ... அரிய மழலைச் சொல்லே மிகுந்து வர குதலை மொழியே புகன்று ... குதலை மொழிகளே பேசி அதிவிதம் அதாய் வளர்ந்து ... அதிக விதமாக வயதுக்கு ஒப்ப வளர்ந்து பதினாறாய் ... வயதும் பதினாறு ஆகி, சிவகலைகள் ஆகமங்கள் ... சைவ நூல்கள், சிவ ஆகமங்கள், மிகவுமறை ஓதும் அன்பர் ... மிக்க வேதங்களை ஓதும் அன்பர்களுடைய திருவடிகளே நினைந்து துதியாமல் ... திருவடிகளையே நினைந்து துதிக்காமல், தெரிவையர்கள் ஆசை மிஞ்சி ... மாதர்களின் மீது ஆசை மிகுந்து வெகுகவலை யாய்உழன்று ... அதன் காரணமாக மிக்க கவலையுடன் அலைந்து திரியும் அடியேனை ... திரிகின்ற அடியேனை, உன்றன் அடிசேராய் ... உனது திருவடிகளில் சேர்க்க மாட்டாயா? மவுன உபதேச சம்பு ... சும்மா இரு என்ற மெளன உபதேசம் செய்த சம்பு, மதியறுகு வேணி தும்பை ... பிறைச்சந்திரன், அறுகம்புல், கங்கை, தும்பைப்பூ மணிமுடியின் மீதணிந்த மகதேவர் ... தன் மணி முடியின் மேலணிந்த மகாதேவர், மனமகிழவே அணைந்து ... மனமகிழும்படி அவரை அணைத்துக்கொண்டு ஒருபுறமதாகவந்த ... அவரது இடப்புறத்தில் வந்தமர்ந்த மலைமகள் குமார ... பார்வதியின் குமாரனே துங்க வடிவேலா ... பரிசுத்தமும் கூர்மையும் உடைய வேலினை உடையவனே பவனி வரவே உகந்து ... இவ்வுலகைச் சுற்றிவரவே ஆசை கொண்டு மயிலின் மிசையே திகழ்ந்து ... மயிலின் மேல் ஏறி விளங்கி படி அதிரவே நடந்த ... பூமி அதிரவே வலம் வந்த கழல்வீரா ... வீரக் கழல் அணிந்த வீரனே பரம பதமே செறிந்த ... மோட்ச வீட்டில் பொருந்தி நின்று முருகன் எனவே உகந்து ... முருகன் என விளங்கி பழனிமலை மேல் அமர்ந்த பெருமாளே. ... பழனிமலையில் வீற்ற பெருமாளே.
This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thiruppugazh song sequence no 110 thalam %E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BF thiru name %E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87