வேய் இசைந்து எழு தோள்கள் தங்கிய
மாதர் கொங்கையிலே முயங்கிட
வீணிலும் சில பாதகம் செய அவமே தான்
வீறு கொண்டு உடனே வருந்தியுமே
உலைந்து அவமே திரிந்து உள்ளமே
கவன்று அறிவே கலங்கிட வெகு தூரம்
போய் அலைந்து உழலாகி நொந்து
பின் வாடி நைந்து எனது ஆவி வெம்பியே
பூதலம் தனிலே மயங்கிய மதி போக
போது கங்கையின் நீர் சொரிந்து
இருபாத பங்கயமே வணங்கியே
பூசையும் சிலவே புரிந்திட அருள்வாயே
தீ இசைந்து எழவே இலங்கையில்
ராவணன் சிரமே அரிந்து அவர்
சேனையும் செல மாள வென்றவன் மருகோனே
தேசம் எங்கணுமே புரந்திடு
சூர் மடிந்திட வேலின் வென்றவ
தேவர் தம் பதி ஆள அன்பு செய்திடுவோனே
ஆயி சுந்தரி நீலி பிங்கலை
போக அந்தரி சூலி குண்டலி
ஆதி அம்பிகை வேத தந்திரி இடமாகும்
ஆலம் உண்ட அரனார் இறைஞ்ச
ஓர் போதகம் தனையே உகந்து அருள்
ஆவினன்குடி மீது இலங்கிய பெருமாளே.
மூங்கிலுக்கு ஒத்ததாய் எழுந்துள்ள தோள்களைக் கொண்ட விலைமாதர்களின் மார்பகங்களைத் தழுவ வேண்டி, வீணாக சில பாதகச் செயல்களைச் செய்ய பயனொன்றும் இல்லாமல் செருக்கு அடைந்து மனம் வருந்தியும், நிலை குலைந்து, வீணாகத் திரிந்து நெஞ்சம் கவலை கொண்டும், அறிவு கலங்கி வெகு தூரம் போய் அலைந்து உழன்று நொந்தும், பின்னர் உடல் வாட்டமுற்று நிலை கெட்டு என் ஆவி கொதித்து வாடியும், இப் பூமியில் ஆசை மயக்கம் கொண்ட புத்தி என்னை விட்டு விலகிப் போகவும், மலரையும், கங்கை நீரையும் நிரம்பப் பெய்து உனது இரண்டு தாமரைத் திருவடிகளை வணங்கியே சில பூஜைகளையும் செய்ய அருள் புரிவாயாக. நெருப்புப் பற்றி எழும்படி இலங்கையில் இராவணனுடைய தலைகளை அரிந்து, அவனுடைய சேனைகள் தொலைந்து அழியும்படியாக வென்ற இராமனின் மருகோனே, எல்லா நாடுகளையும் ஆண்டு வந்த சூரன் இறந்து போகும்படியாக வேல் கொண்டு வென்றவனே, தேவர்கள் தம் ஊரை ஆளும்படி அருள் புரிந்தவனே, அனைவருக்கும் தாய், அழகி, பச்சை நிறமுடையவள், பொன்னிறமும் படைத்தவள், உயிர்களுக்குப் போகத்தை ஊட்டும் ஓளி வடிவினள், திரிசூலம் ஏந்தியவள், சுத்த மாயையாகிய சக்தி, ஆதி முதல்வி, அம்பிகை, வேதத் தலைவி (ஆகிய பார்வதி) இடப்பாகத்தில் அமரும், ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமான் வணங்கி வேண்ட, ஒப்பற்ற ஞான உபதேசத்தை மகிழ்ந்து அருளிய (பெருமாளே), திருவாவினன்குடி என்னும் தலத்தில் விளங்குகின்ற பெருமாளே.
வேய் இசைந்து எழு தோள்கள் தங்கிய ... மூங்கிலுக்கு ஒத்ததாய் எழுந்துள்ள தோள்களைக் கொண்ட மாதர் கொங்கையிலே முயங்கிட ... விலைமாதர்களின் மார்பகங்களைத் தழுவ வேண்டி, வீணிலும் சில பாதகம் செய அவமே தான் ... வீணாக சில பாதகச் செயல்களைச் செய்ய பயனொன்றும் இல்லாமல் வீறு கொண்டு உடனே வருந்தியுமே ... செருக்கு அடைந்து மனம் வருந்தியும், உலைந்து அவமே திரிந்து உள்ளமே கவன்று ... நிலை குலைந்து, வீணாகத் திரிந்து நெஞ்சம் கவலை கொண்டும், அறிவே கலங்கிட வெகு தூரம் போய் அலைந்து உழலாகி நொந்து ... அறிவு கலங்கி வெகு தூரம் போய் அலைந்து உழன்று நொந்தும், பின் வாடி நைந்து எனது ஆவி வெம்பியே ... பின்னர் உடல் வாட்டமுற்று நிலை கெட்டு என் ஆவி கொதித்து வாடியும், பூதலம் தனிலே மயங்கிய மதி போக ... இப் பூமியில் ஆசை மயக்கம் கொண்ட புத்தி என்னை விட்டு விலகிப் போகவும், போது கங்கையின் நீர் சொரிந்து ... மலரையும், கங்கை நீரையும் நிரம்பப் பெய்து இருபாத பங்கயமே வணங்கியே ... உனது இரண்டு தாமரைத் திருவடிகளை வணங்கியே பூசையும் சிலவே புரிந்திட அருள்வாயே ... சில பூஜைகளையும் செய்ய அருள் புரிவாயாக. தீ இசைந்து எழவே இலங்கையில் ... நெருப்புப் பற்றி எழும்படி இலங்கையில் ராவணன் சிரமே அரிந்து அவர் சேனையும் செல மாள ... இராவணனுடைய தலைகளை அரிந்து, அவனுடைய சேனைகள் தொலைந்து அழியும்படியாக வென்றவன் மருகோனே ... வென்ற இராமனின் மருகோனே, தேசம் எங்கணுமே புரந்திடு ... எல்லா நாடுகளையும் ஆண்டு வந்த சூர் மடிந்திட வேலின் வென்றவ ... சூரன் இறந்து போகும்படியாக வேல் கொண்டு வென்றவனே, தேவர் தம் பதி ஆள அன்பு செய்திடுவோனே ... தேவர்கள் தம் ஊரை ஆளும்படி அருள் புரிந்தவனே, ஆயி சுந்தரி நீலி பிங்கலை ... அனைவருக்கும் தாய், அழகி, பச்சை நிறமுடையவள், பொன்னிறமும் படைத்தவள், போக அந்தரி சூலி குண்டலி ... உயிர்களுக்குப் போகத்தை ஊட்டும் ஓளி வடிவினள், திரிசூலம் ஏந்தியவள், சுத்த மாயையாகிய சக்தி, ஆதி அம்பிகை வேத தந்திரி இடமாகும் ... ஆதி முதல்வி, அம்பிகை, வேதத் தலைவி (ஆகிய பார்வதி) இடப்பாகத்தில் அமரும், ஆலம் உண்ட அரனார் இறைஞ்ச ... ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமான் வணங்கி வேண்ட, ஓர் போதகம் தனையே உகந்து அருள் ... ஒப்பற்ற ஞான உபதேசத்தை மகிழ்ந்து அருளிய (பெருமாளே), ஆவினன்குடி மீது இலங்கிய பெருமாளே. ... திருவாவினன்குடி என்னும் தலத்தில் விளங்குகின்ற பெருமாளே.