வெண்முத்தை நிகர்த்த, அழகான பல்வரிசையும் இளநகையும் அமைந்த தேவயானை தேவியின் தலைவனே, சக்திவேல் ஆயுதத்தை ஏந்தும் சரவணபவக் கடவுளே, மோக்ஷ வீட்டுக்கு ஒப்பற்ற ஒரு விதையாக விளங்கும் ஞான குருவே, என்று துதிக்கும் முக்கண்ணர் பரமசிவனார்க்கு வேதங்களுக்கு முதன்மையான ஓம் என்னும் மந்திரத்தை உபதேசித்து, (மும்மூர்த்திகளில் எஞ்சியுள்ள) பிரம்மா, திருமால் ஆகிய இருவரும், முப்பத்து முக்கோடி தேவர்களும் அடி பணிய நின்றவனே, ராவணனுடைய பத்துத் தலைகளும் சிதறி விழுமாறு அம்பை விட்டு, ஒப்பற்ற மந்தர மலையான மத்தைக் கொண்டு பாற்கடலைக் கடைந்து, ஒரு பகற் பொழுதை வட்டமான சக்ராயுதத்தால் இரவு ஆக்கி, நண்பனாகிய அர்ச்சுனனுக்கு, தேர்ப்பாகனாக வந்து தேரினைச் செலுத்திய பசுமையான நீலமேகவண்ணன் திருமால் பாராட்டும் பரம்பொருளே, பரிவோடு என்னைக் காத்தருளும் நாள் ஒன்றும் உண்டோ? (இப்பாடலின் பிற்பகுதி முருகன் அசுரர்களுடன் செய்த போரினை விரிவாக வருணிக்கிறது). தித்தித்தெய என்ற தாளத்துக்கு ஒத்து, சிலம்புகள் அணிந்த நாட்டியப் பாதங்களை வைத்து காளிதேவி திசைகளில் எல்லாம் சுழன்று தாண்டவம் செய்யவும், கழுகுகளோடு பேய்கள் சேர்ந்து ஆடவும், எட்டுத் திக்குகளிலும் உலகங்களைத் தாங்குகின்ற அஷ்ட பைரவர்கள் இந்த அழகிய கூத்துக்கு ஏற்ப தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக என்ற தாள ஓசையைக் கூறவும், கூட்டமாகப் பற்பல பறை வாத்தியங்களை அதே தாளத்தில் முழக்கவும், போர்க்களத்தில் கிழக் கோட்டான்கள் குக்குக்குகு குக்குக் குகுகுகு என்ற ஓசையோடு குத்திப் புதை, புகுந்து பிடி என்றெல்லாம் குழறி வட்டமாகச் சுழன்று மேலே எழவும், சினேக எண்ணம் தவிர்த்து விரோத மனப்பான்மையே கொண்ட அசுரர்களை கொன்று பலி கொடுத்து, அசுரர் குல மலை கிரெளஞ்சகிரி தூளாக, தர்ம மார்க்கத்துக்குப் பொருந்த, போர் செய்யவல்ல பெருமாளே.
This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thiruppugazh song sequence no 6 thalam %E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88 thiru name %E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81