சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Marati  Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  

இரண்டாம் ஆயிரம்   திருமங்கை ஆழ்வார்  
பெரிய திருமொழி  

Songs from 948.0 to 2031.0   ( )
Pages:    1    2  3  4  5  6  7  8  9  10  Next  Next 10
வாள் ஆய கண் பனிப்ப மென் முலைகள் பொன் அரும்ப
நாள் நாளும் நின் நினைந்து நைவேற்கு ஓ மண் அளந்த
தாளாளா தண் குடந்தை நகராளா வரை எடுத்த     
தோளாளா என்-தனக்கு ஓர் துணையாளன் ஆகாயே   



[1202.0]
தார் ஆய தன் துளவம் வண்டு உழுதவரை மார்பன்
போர் ஆனைக் கொம்பு ஒசித்த புள் பாகன் என் அம்மான்
தேர் ஆரும் நெடு வீதித் திருவாலி நகர் ஆளும்
கார் ஆயன் என்னுடைய கன வளையும் கவர்வானோ?



[1203.0]
கொண்டு அரவத் திரை உலவு குரை கடல்மேல் குலவரைபோல்
பண்டு அரவின் அணைக் கிடந்து பார் அளந்த பண்பாளா
வண்டு அமரும் வளர் பொழில் சூழ் வயல் ஆலி மைந்தா என்
கண் துயில் நீ கொண்டாய்க்கு என் கன வளையும் கடவேனோ?



[1204.0]
குயில் ஆலும் வளர் பொழில் சூழ் தண் குடந்தைக் குடம் ஆடி
துயிலாத கண்_இணையேன் நின் நினைந்து துயர்வேனோ?
முயல் ஆலும் இள மதிக்கே வளை இழந்தேற்கு இது நடுவே
வயல் ஆலி மணவாளா கொள்வாயோ மணி நிறமே?



[1205.0]
Back to Top
நிலை ஆளா நின் வணங்க வேண்டாயே ஆகிலும் என்
முலை ஆள ஒருநாள் உன் அகலத்தால் ஆளாயே
சிலையாளா மரம் எய்த திறல் ஆளா திருமெய்ய
மலையாளா நீ ஆள வளை ஆள மாட்டோமே



[1206.0]
மை இலங்கு கருங் குவளை மருங்கு அலரும் வயல் ஆலி
நெய் இலங்கு சுடர் ஆழிப் படையானை நெடுமாலை   
கை இலங்கு வேல் கலியன் கண்டு உரைத்த தமிழ்-மாலை
ஐ இரண்டும் இவை வல்லார்க்கு அரு வினைகள் அடையாவே



[1207.0]
கள்வன்கொல்? யான் அறியேன்-கரியான் ஒரு காளை வந்து
வள்ளி மருங்குல் என்-தன் மட மானினைப் போத என்று
வெள்ளி வளைக் கைப் பற்ற பெற்ற தாயரை விட்டு அகன்று
அள்ளல் அம் பூங் கழனி அணி ஆலி புகுவர்கொலோ?



[1208.0]
பண்டு இவன் ஆயன் நங்காய் படிறன் புகுந்து என் மகள்-தன்
தொண்டை அம் செங் கனி வாய் நுகர்ந்தானை உகந்து அவன்பின்
கெண்டை ஒண் கண் மிளிர கிளிபோல் மிழற்றி நடந்து
வண்டு அமர் கானல் மல்கும் வயல் ஆலி புகுவர்கொலோ?



[1209.0]
அஞ்சுவன் வெம் சொல் நங்காய் அரக்கர் குலப் பாவை-தன்னை
வெம் சின மூக்கு அரிந்த விறலோன் திறம் கேட்கில் மெய்யே
பஞ்சிய மெல் அடி எம் பணைத் தோளி பரக்கழிந்து
வஞ்சி அம் தண் பணை சூழ் வயல் ஆலி புகுவர்கொலோ?



[1210.0]
Back to Top
ஏது அவன் தொல் பிறப்பு? இளையவன் வளை ஊதி மன்னர்
தூதுவன் ஆயவன் ஊர் சொல்வீர்கள் சொலீர் அறியேன்
மாதவன் தன் துணையா நடந்தாள் தடம் சூழ் புறவில்
போது வண்டு ஆடு செம்மல் புனல் ஆலி புகுவர்கொலோ?



[1211.0]
தாய் எனை என்று இரங்காள் தடந் தோளி தனக்கு அமைந்த
மாயனை மாதவனை மதித்து என்னை அகன்ற இவள்
வேய் அன தோள் விசிறி பெடை அன்னம் என நடந்து
போயின பூங் கொடியாள் புனல் ஆலி புகுவர்கொலோ?



[1212.0]
என் துணை என்று எடுத்தேற்கு இறையேனும் இரங்கிற்றிலள்
தன் துணை ஆய என்-தன் தனிமைக்கும் இரங்கிற்றிலள்
வன் துணை வானவர்க்கு ஆய் வரம் செற்று அரங்கத்து உறையும்
இன் துணைவனொடும் போய் எழில் ஆலி புகுவர்கொலோ?



[1213.0]
அன்னையும் அத்தனும் என்று அடியோமுக்கு இரங்கிற்றிலள்
பின்னை-தன் காதலன்-தன் பெருந் தோள் நலம் பேணினளால்
மின்னையும் வஞ்சியையும் வென்று இலங்கும் இடையாள் நடந்து
புன்னையும் அன்னமும் சூழ் புனல் ஆலி புகுவர்கொலோ?



[1214.0]
முற்றிலும் பைங் கிளியும் பந்தும் ஊசலும் பேசுகின்ற   
சிற்றில் மென் பூவையும் விட்டு அகன்ற செழுங் கோதை-தன்னைப்
பெற்றிலேன் முற்று இழையை பிறப்பிலி பின்னே நடந்து
மற்று எல்லாம் கைதொழப் போய் வயல் ஆலி புகுவர்கொலோ?



[1215.0]
Back to Top
காவி அம் கண்ணி எண்ணில் கடி மா மலர்ப் பாவை ஒப்பாள்
பாவியேன் பெற்றமையால் பணைத் தோளி பரக்கழிந்து   
தூவி சேர் அன்னம் அன்ன நடையாள் நெடுமாலொடும் போய்
வாவி அம் தண் பணை சூழ் வயல் ஆலி புகுவர்கொலோ?



[1216.0]
தாய் மனம் நின்று இரங்க தனியே நெடுமால் துணையா
போயின பூங் கொடியாள் புனல் ஆலி புகுவர் என்று
காய் சின வேல் கலியன் ஒலிசெய் தமிழ்-மாலை பத்தும்
மேவிய நெஞ்சு உடையார் தஞ்சம் ஆவது விண் உலகே



[1217.0]
நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய்
      நர நாரணனே கரு மா முகில்போல்
எந்தாய் எமக்கே அருளாய் என நின்று
      இமையோர் பரவும் இடம்-எத் திசையும்
கந்தாரம் அம் தேன் இசை பாட மாடே
      களி வண்டு மிழற்ற நிழல் துதைந்து
மந்தாரம் நின்று மணம் மல்கும் நாங்கூர்
      மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே



[1218.0]
முதலைத் தனி மா முரண் தீர அன்று
      முது நீர்த் தடச் செங் கண் வேழம் உய்ய
விதலைத்தலைச் சென்று அதற்கே உதவி
      வினை தீர்த்த அம்மான் இடம்-விண் அணவும்
பதலைக் கபோதத்து ஒளி மாட நெற்றிப்
      பவளக் கொழுங் கால பைங் கால் புறவம்
மதலைத் தலை மென் பெடை கூடும் நாங்கூர்
      மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே



[1219.0]
கொலைப் புண் தலைக் குன்றம் ஒன்று உய்ய அன்று
      கொடு மா முதலைக்கு இடர்செய்து கொங்கு ஆர்
இலை புண்டரீகத்தவள் இன்பம் அன்போடு
      அணைந்திட்ட அம்மான் இடம்-ஆள் அரியால்
அலைப்புண்ட யானை மருப்பும் அகிலும்
      அணி முத்தும் வெண் சாமரையோடு பொன்னி
மலைப் பண்டம் அண்ட திரை உந்தும் நாங்கூர்
      மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே



[1220.0]
Back to Top
சிறை ஆர் உவணப் புள் ஒன்று ஏறி அன்று
      திசை நான்கும் நான்கும் இரிய செருவில்
கறை ஆர் நெடு வேல் அரக்கர் மடிய
      கடல் சூழ் இலங்கை கடந்தான் இடம்-தான்-
முறையால் வளர்க்கின்ற முத் தீயர் நால் வேதர்
      ஐ வேள்வி ஆறு அங்கர் ஏழின் இசையோர்
மறையோர் வணங்கப் புகழ் எய்தும் நாங்கூர்
      மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே



[1221.0]


Other Prabandhams:
    திருப்பல்லாண்டு     திருப்பாவை     பெரியாழ்வார் திருமொழி     நாச்சியார் திருமொழி         திருவாய் மொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்த விருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலன் ஆதிபிரான்     கண்ணி நுண் சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந் தாண்டகம்     திரு நெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     நம்மாழ்வார்     திரு எழு கூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி     கண்ணிநுண்சிறுத்தாம்பு     அமலனாதிபிரான்     திருச்சந்தவிருத்தம்    
This page was last modified on Fri, 10 May 2024 00:23:06 +0000
 
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham song