சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  

ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம்

பாகம் 1 - பால் | பாகம் 2 - தயிர் | பாகம் 3 - நெய் | பாகம் 4 - சர்க்கரை | பாகம் 5 - தேன்

பாகம் 1 - பால்
சுப்பிரமணிய பெருமான் சூரபத்மனுடன் போரிடும் மகிமை. முருகனின் போர் வெற்றி குறித்து ஜெயகோஷம். பிணிபோக்க விண்ணப்பம்.
1 - 1
இலங்கு நன்கலை விரிஞ்சனோடு
அனந்தனும் சத மகன்சதா
வியன்கொள் தம்பியர்களும் பொனாடு
உறைந்த புங்கவர்களும் கெடாது
என்றும் கொன்றை அணிந்தோனார்
தந் தண் திண் திரளும் சேயாம்
என்றன் சொந்தமினும் தீதேது
என்று அங்கங்கு அணி கண்டு ஓயாது
ஏந்து வன்படைவேல் வலி சேர்ந்த திண்புயமே
ஏய்ந்த கண்டகர்கால் தொடை மூஞ்சி கந்தரமோடு
எலும்புறும் தலைகளும் துணிந்திட
அடர்ந்த சண்டைகள் தொடர்ந்துபேய்
எனும் குணுங்குகள் நிணங்கள் உண்டு அரன்
மகன் புறஞ்சயம் எனும்சொலே . . . . . . களமிசையெழுமாறே

1 - 2
துலங்குமஞ்சிறை அலங்கவே
விளங்க வந்தவொர் சிகண்டியே
துணிந்திருந்து உயர்கரங்கண் மா
வரங்கள் மிஞ்சிய விரும்புகூர்
துன்றும் தண்டமொடு அம்பு ஈர்வாள்
கொண்டு அண்டங்களில் நின்றூடே
சுண்டும் புங்கம் அழிந்து ஏலாது
அஞ்சும் பண்டசுரன் சூதே
சூழ்ந்தெழும்பொழுதே கரம் வாங்கி ஒண் திணிவேல்
தூண்டி நின்றவனே கிளையோங்க நின்றுளமா
துவந்துவம் பட வகிர்ந்து வென்று அதி
பலம்பொருந்திய நிரஞ்சனா
சுகம்கொளும் தவர் வணங்கும் இங்கிதம்
உகந்த சுந்தர அலங்க்ருதா . . . . . . அரிபிரமருமேயோ

1 - 3
அலைந்து சந்ததம் அறிந்திடாது
எழுந்த செந்தழல் உடம்பினார்
அடங்கி அங்கமும் இறைஞ்சியே
புகழ்ந்து அன்றுமெய் மொழிந்தவா
அங்கிங் கென்பது அறுந்தேவா
எங்கும் துன்றி நிறைந்தோனே
அண்டும் தொண்டர் வருந்தாமே
இன்பம் தந்தருளும் தாளா
ஆம்பி தந்திடுமா மணி பூண்ட அந்தளையா
ஆண்டவன் குமரா எனை ஆண்ட செஞ்சரணா
அலர்ந்த இந்துள அலங்கலும் கடி
செறிந்த சந்தன சுகந்தமே
அணிந்து குன்றவர் நலம் பொருந்திட
வளர்ந்த பந்தணை எனும் பெணாள் . . . . . . தனை அணை மணவாளா

1 - 4
குலுங்கிரண்டு முகையும்களார்
இருண்ட கொந்தள ஒழுங்கும்வேல்
குரங்கும் அம்பகம் அதும் செவாய்
அதும் சமைந்துள மடந்தைமார்
கொஞ்சும் புன்தொழிலும் கால் ஓரும்
சண்டன் செயலும் சூடே
கொண்டு அங்கம் படரும் சீழ்நோய்
அண்டம் தந்தம் விழும்பாழ் நோய்
கூன்செயும் பிணிகால் கரம் வீங்கழுங்கலும் வாய்
கூம்பணங்கு கணோய் துயர் சார்ந்த புன்கணுமே
குயின்கொளும் கடல் வளைந்த இங்கெனை
அடைந்திடும்படி இனும்செயேல்
குவிந்து நெஞ்சமுளணைந்து நின்பதம்
நினைந்து உய்யும்படி மனம்செயே . . . . . . திருவருள் முருகோனே
Back to Top

பாகம் 2 - தயிர்
முப்பெரும் தேவிகளான மலைமகள், அலைமகள், கலைமகள், மற்றும் தெய்வயானையின் சிறப்பியல்புகள்.
மேலும் வள்ளியை நாடிச் சென்று அவளுக்குத் தன்னைத் தந்து கடிமணம் புரிந்து கொண்டது.
2 - 1
கடித்துணர் ஒன்றிய முகிற்குழலும் குளிர்
கலைப்பிறை என்றிடு நுதல் திலகம் திகழ்
காசு உமையாள் இளம் மாமகனே
களங்க இந்துவை முனிந்து நன்கு அது
கடந்து விஞ்சிய முகம் சிறந்தொளி
கால் அயிலார் விழிமா மருகா . . . . . . விரைசெறிஅணிமார்பா

2 - 2
கனத்துயர் குன்றையும் இணைத்துள கும்ப
கலசத்தையும் விஞ்சிய தனத்திசை மங்கைகொள்
காதலன் நான்முக னாடமுதே
கமழ்ந்த குங்கும நரந்தமும் திமிர்
கரும்பெனும் சொலை இயம்பு குஞ்சரி
காவலனே குகனே பரனே . . . . . . அமரர்கள் தொழுபாதா

2 - 3
உடுக்கிடையின் பணி அடுக்குடையுங்கன
உரைப்பு உயர் மஞ்சுறு பதக்கமொடு அம்பத
ஓவிய நூபுர மோதிரமேர்
உயர்ந்த தண்தொடைகளும் கரங்களில்
உறும் பசுந்தொடிகளும் குயங்களில்
ஊர் எழில்வாரொடு நாசியிலே . . . . . . மினும்அணி நகையோடே

2 - 4
உலப்பறு இலம்பக மினுக்கிய செந்திரு
உருப்பணி யும்பல தரித்து அடர் பைந்தினை
ஓவலிலா அரணே செயுமாறு
ஒழுங்குறும் புனமிருந்து மஞ்சுலம்
உறைந்த கிஞ்சுக நறும் சொல் என்றிட
ஓலமதே இடுகானவர் மா . . . . . . மகளெனும் ஒருமானாம்

2 - 5
மடக்கொடிமுன் தலை விருப்புடன் வந்து அதி
வனத்துறை குன்றவர் உறுப்பொடு நின்றிள
மானினியே கனியே இனிநீ
வருந்தும் என்றனை அணைந்து சந்ததம்
மனம் குளிர்ந்திட இணங்கி வந்தருளாய்
மயிலே குயிலே எழிலே . . . . . . மட வனநினதேர் ஆர்

2 - 6
மடிக்கொரு வந்தனம் அடிக்கொரு வந்தனம்
வளைக்கொரு வந்தனம் விழிக்கொரு வந்தனம்
வாஎனும் ஓர் மொழியே சொலுநீ
மணங் கிளர்ந்த நல் உடம்பு இலங்கிடு
மதங்கி யின்றுளம் மகிழ்ந் திடும்படி
மான்மகளே எனைஆள் நிதியே . . . . . . எனும் மொழி பலநூறே

2 - 7
படித்தவள் தன்கைகள் பிடித்துமுனம் சொன
படிக்கு மணந்துஅருள் அளித்த அனந்த
கிருபாகரனே வரனே அரனே
படர்ந்த செந்தமிழ் தினம் சொல் இன்பொடு
பதம் குரங்குநர் உளம் தெளிந்து அருள்
பாவகியே சிகியூர் இறையே . . . . . . திருமலிசமர் ஊரா

2 - 8
பவக்கடல் என்பது கடக்கவுநின் துணை
பலித்திடவும் பிழை செறுத்திடவும் கவி
பாடவும்நீ நடமாடவுமே
படர்ந்து தண்டயை நிதம் செயும்படி
பணிந்த என்றனை நினைந்து வந்தருள்
பாலனனே எனையாள் சிவனே . . . . . . வளர் அயில் முருகோனே.
Back to Top

பாகம் 3 - நெய்
வஞ்சகரின் கூட்டு இல்லாமலும், தொண்டர்களின் அணிமையும், சிவ - சக்தியரின் தாண்டவக் கோலமும், கந்தபிரானின் காட்சிக்காக ஏங்கும் தன்மையும் காண்மின்.


3 - 1
வஞ்சம் சூதொன்றும் பேர் துன்பம் சங்கடம் மண்டும் பேர்
மங்கும்பேய் நம்பும்பேர் துஞ்சும் புன்சொல் வழங்கும் பேர்
மான் கணார் பெணார் தமாலினான்
மதியதுகெட்டுத் திரிபவர்தித்திப்பு
என மது துய்த்துச் சுழல்பவர் இச்சித்தே
மனமுயிர் உட்கச் சிதைத்துமே
நுகர்த்தின துக்கக் குணத்தினோர்
வசையுறு துட்டச் சினத்தினோர்
மடிசொல மெத்தச் சுறுக்குளோர்
வலிஏறிய கூரமுளோர் உதவார்
நடு ஏதுமிலார் இழிவார் களவோர்
மணமலர் அடியிணை விடுபவர் தமையினும்
நணுகிட எனைவிடுவது சரி இலையே . . . . . . தொண்டர்கள் பதிசேராய்


3 - 2
விஞ்சும்கார் நஞ்சம் தான் உண்டுந் திங்கள் அணிந்தும்கால்
வெம்பும்போதொண்செந்தாள் கொண்டஞ்சு அஞ்சஉதைந்தும் பூ
மீன் பதா கையோன் மெய்வீயு மா
விழியை விழித்துக் கடுக எரித்துக்
கரியை உரித்துத் தனுமிசை சுற்றிக்கோள்
விழைவறு சுத்தச் சிறப்பினார்
பிணைமழு சத்திக் கரத்தினார்
விஜய உடுக்கைப் பிடித்துளார்
புரமது எரிக்கச் சிரித்துளார்
விதி மாதவனார் அறியா வடிவோர்
ஒருபாதி பெணாய் ஒளிர்வோர் சுசிநீள்
விடைதனில் இவர்பவர் பணபணம் அணிபவர்
கனைகழல் ஒலிதர நடமிடுபவர்சேய் . . . . . . என்றுள குருநாதா
3 - 3
தஞ்சம் சேர் சொந்தம் சால் அம்செம்பங்கய மஞ்சுங்கால்
தந்தந்தா தந்தந்தா தந்தந் தந்தன தந்தந்தா
தாம் ததீ ததீ ததீ ததீ
ததிமிதி தத்தித் தரிகிட தத்தத்
திரிகிட தத்தத் தெயென நடிக்கச்சூழ்
தனி நடனக்ருத்தியத்தினாள்
மகிடனை வெட்டிச் சிதைத்துளாள்
தடமிகு முக்கட் கயத்தினாள்
சுரதன் உவக்கப் பகுத்துளாள்
சமிகூ விளமோடு அறுகார் அணிவாள்
ஒருகோ டுடையோன் அனையாய் வருவாள்
சதுமறை களும்வழி படவளர் பவண்மலை
மகளென வொருபெயருடையவள் சுதனே . . . . . . அண்டர்கள் தொழுதேவா

3 - 4
பிஞ்சம்சூழ் மஞ்சொண் சேயும் சந்தங்கொள் பதங்கங்கூர்
பிம்பம்போல் அங்கம் சார் உங்கண் கண்கள்இலங்கும் சீர்
ஓங்கவே உலாவு கால் விணோர்
பிரமனொடு எட்டுக் குலகிரி திக்குக்
கரியொடு துத்திப் படவர உட்கப்பார்
பிளிற நடத்திக் களித்தவா
கிரிகெட எக்கித் துளைத்தவா
பிரியக மெத்தத் தரித்தவா
தமியனை நச்சிச் சுளித்தவா
பிணமா முனமே அருள்வாய் அருள்வாய்
துனியாவையு நீ கடியாய் கடியாய்
பிசியொடு பலபிழை பொறுபொறு பொறுபொறு
சததமு மறைவறு திருவடி தரவா . . . . . . என்களி முருகோனே.
Back to Top

பாகம் 4 - சர்க்கரை
நாளும் கோளும் நன்மக்களுக்கு நன்மையே செய்யுமாம்.
அவன் குடியிருக்கும் அறுபடைவீடு அவன் திருவடியின் தியானச் சிறப்புகூறக் கேண்மின்.
4 - 1
மாதமும் தின வாரமும் திதி
யோகமும் பல நாள்களும் படர்
மாதிரம் திரி கோள்களும் கழல்
பேணும் அன்பர்கள் பால் நலம் தர
வற்சலம் அதுசெயும் அருட்குணா
சிறந்த விற்பனர் அகக்கணா
மற்புய அசுரரை ஒழித்தவா
அனந்த சித்துரு எடுத்தவா
மால் அயன் சுரர்கோனும் உம்பர்
எலாரும் வந்தனமே புரிந்திடு
வானவன் சுடர் வேலவன் குரு
ஞான கந்தபிரான் எனும்படி
மத்தக மிசைமுடி தரித்தவா
குளிர்ந்த கத்திகை பரித்தவா
மட்டறும் இகல் அயில் பிடித்தவா
சிவந்த அக்கினி நுதற்கணா . . . . . . சிவகுரு எனும் நாதா.

4 - 2
நாத இங்கித வேதமும் பல்
புராணமும் கலைஆகமங்களும்
நாத உன் தனி வாயில் வந்தனவே
எனுந்துணிபே அறிந்தபின்
நச்சுவது இவண்எது கணித்தையோ
செறிந்த ஷட்பகை கெடுத்துமே
நட்புடை அருளமிழ்து உணில் சதா
சிறந்த துத்தியை அளிக்குமே
நாளும் இன்புஉயர் தேனினும் சுவை
ஈயும் விண்டலமே வரும் சுரர்
நாடியுண்டிடு போஜனம் தனி
லேயும் விஞ்சிடுமே கரும்பொடு
நட்டம் இன் முப்பழ முவர்க்குமே
விளைந்த சர்க்கரை கசக்குமே
நற்சுசி முற்றிய பயத்தொடே
கலந்த புத்தமு தினிக்குமோ . . . . . . அதை இனி அருளாயோ.

4 - 3
பூதலம் தனிலேயு (ம்) நன்கு உடை
மீதலம் தனி லேயும் வண்டு அறு
பூ மலர்ந்தவு னாத வம்பத
நேயம் என்பதுவே தினம் திகழ்
பொற்புறும் அழகது கொடுக்குமே
உயர்ந்த மெய்ப்பெயர் புணர்த்துமே
பொய்த்திட வினைகளை அறுக்குமே
மிகுந்த சித்திகள் பெருக்குமே
பூரணம் தருமே நிரம்பு எழில்
ஆதனம் தருமேஅணிந்திடு
பூடணம் தருமே இகந்தனில்
வாழ்வதும் தருமே உடம்பொடு
பொக்கறு புகழினை அளிக்குமே
பிறந்து செத்திடல் தொலைக்குமே
புத்தியில் அறிவினை விளக்குமே
நிறைந்த முத்தியும் இசைக்குமே . . . . . . இதைநிதம் உதவாயோ.

4 - 4
சீதளம் சொரி கோதில் பங்கயமே
மலர்ந்திடு வாவி தங்கிய
சீர் அடர்ந்தவிர் ஆவினன்குடி
ஏரகம் பரபூத ரம்சிவ
சித்தரும் முனிவரும் வசித்த
சோலையும் திரைக்கடல் அடிக்கும்வாய்
செற்கணம் உலவிடு பொருப்பெலாம்
இருந்து அளித்தருள் அயில் கையா
தேன் உறைந்திடு கான கந்தனில்
மானிளம் சுதையால் இரும் சரை
சேர் உடம்பு தளாட வந்த
சன்யாச சுந்தரரூப அம்பர
சிற்பர வெளிதனில் நடிக்குமா
அகண்ட தத்துவ பரத்துவா
செப்பரும் ரகசிய நிலைக்குளே
விளங்கு தற்பர திரித்துவா . . . . . . திருவளர் முருகோனே.
Back to Top

பாகம் 5 - தேன்
கந்தன் ஆடி வரும் வண்ணத்தைக் கண்டு, அண்ட சராசரமும் அதில் உள்ள அத்தனை பேர்களும் இன்பமுடன் ஆடும் அழகைக் காண்மின்.
5 - 1
சூலதரனார் ஆட ஓதிமகளாட நனி
தொழுபூத கணமாட அரி ஆட அயனோடு
தூயகலை மாது ஆட மா நளினி யாட உயர்
சுரரோடு சுரலோக பதியாட எலியேறு
சூகைமுகனார் ஆட மூரிமுகன் ஆட ஓரு
தொடர்ஞாளி மிசைஊரு மழவாட வசுவீர
சூலிபதி தானாட நீலநம னாடநிறை
சுசிநார இறையாட வலிசால் நிருதியாட . . . . . . அரிகரமகனோடே


5 - 2
காலிலியு மேயாட வாழ்நிதிய னாடமிகு
கனஞால மகளாட வரவேணி சசிதேவி
காமமத வேளாட மாமைரதி யாட அவிர்
கதிராட மதியாட மணிநாக அரசு ஓகை
காணும் முனிவோராட மாணறமினாட இரு
கழலாட அழகாய தளையாட மணிமாசு இல்
கானமயில் தானாட ஞான அயிலாட ஒளிர்
கரவாள மதுவாட எறிசூல மழுவாட . . . . . . வயிரமல் எறுழோடே

5 - 3
கோல அரை ஞாணாட நூன்மருமமாட நிரை
கொளுநீப அணியாட உடையாட அடல்நீடு
கோழி அயராது ஆட வாகுவணி யாடமிளிர்
குழையாட வளையாட உபயாறு கரமேசில்
கோகநத மாறாறொடாறு விழியாட மலர்
குழகாய இதழாட ஒளிராறு சிரமோடு
கூறுகலை நாவாட மூரல் ஒளியாட அலர்
குவடேறு புயமாட மிடறாட மடியாட . . . . . . அகன்முதுகுரமோடே

5 - 4
நாலுமறை யேயாட மேல் நுதல்களாட வியன்
நலியாத எழிலாட அழியாத குணமாட
நாகரிகமே மேவு வேடர்மகளாட அருள்
நயவானை மகளாட முசுவான முகனாட
நாரதமகான் ஆட ஓசைமுனி ஆட விற
னவவீரர் புதராட ஒரு காவடியன் ஆட
ஞான அடியாராட மாணவர்கள் ஆட இதை
நவில் தாசன் உடனாட இதுவேளை எணிவாகொள் . . . . . . அருள்மலி முருகோனே.
Back to Top
This page was last modified on Sat, 20 Jul 2024 00:11:38 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

panchamirtha varnam lang tamil