சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Marati  Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  

முதல் ஆயிரம்   பெரியாழ்வார்  
பெரியாழ்வார் திருமொழி  

Songs from 13.0 to 473.0   ( திருவில்லிபுத்தூர் )
Pages:    1    2  3  4  5  6  7  8  9  10  Next  Next 10
காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு அவன்
நீள்முடி ஐந்திலும் நின்று நடம்செய்து
மீள அவனுக்கு அருள்செய்த வித்தகன்
தோள்-வலி வீரமே பாடிப் பற
      தூ மணிவண்ணனைப் பாடிப் பற



[313.0]
தார்க்கு இளந்தம்பிக்கு அரசு ஈந்து தண்டகம்
நூற்றவள் சொற்கொண்டு போகி நுடங்கு- இடைச்
சூர்ப்பணகாவைச் செவியொடு மூக்கு அவள்
ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற
      அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற



[314.0]
மாயச் சகடம் உதைத்து மருது இறுத்து
ஆயர்களோடு போய் ஆநிரை காத்து அணி
வேயின் குழல் ஊதி வித்தகனாய் நின்ற
ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற
      ஆநிரை மேய்த்தானைப் பாடிப் பற



[315.0]
Back to Top
காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு
ஓராதான் பொன்முடி ஒன்பதோடு ஒன்றையும்
நேரா அவன்தம்பிக்கே நீள் அரசு ஈந்த
ஆராவமுதனைப் பாடிப் பற
      அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற



[316.0]
நந்தன் மதலையைக் காகுத்த னைநவின்று
உந்தி பறந்த ஒளியிழை யார்கள்சொல்
செந்தமிழ்த் தென்புது வைவிட்டு சித்தன்சொல்
ஐந்தினோடு ஐந்தும்வல் லார்க்குஅல்லல் இல்லையே



[317.0]
நெறிந்த கருங்குழல் மடவாய் நின் அடியேன் விண்ணப்பம்
செறிந்த மணி முடிச் சனகன் சிலை இறுத்து நினைக் கொணர்ந்தது
அறிந்து அரசு களைகட்ட அருந்தவத்தோன் இடை விலங்கச்
செறிந்த சிலைகொடு தவத்தைச் சிதைத்ததும் ஓர் அடையாளம்



[318.0]
அல்லியம்பூ மலர்க்கோதாய் அடிபணிந்தேன் விண்ணப்பம்
சொல்லுகேன் கேட்டருளாய் துணைமலர்க் கண் மடமானே
எல்லியம் போது இனிதிருத்தல் இருந்தது ஓர் இட வகையில்
மல்லிகை மா மாலைகொண்டு அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம்



[319.0]
கலக்கிய மா மனத்தனளாய்க் கைகேசி வரம் வேண்ட
மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மறாது ஒழியக்
குலக்குமரா காடு உறையப் போ என்று விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னொடும் அங்கு ஏகியது ஓர் அடையாளம்



[320.0]
Back to Top
வார் அணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம்
தேர் அணிந்த அயோத்தியர்கோன் பெருந்தேவீ கேட்டருளாய்
கூர் அணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கைதன்னிற்
சீர் அணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம்



[321.0]
மான் அமரும் மென்நோக்கி வைதேவீ விண்ணப்பம்
கான் அமரும் கல்-அதர் போய்க் காடு உறைந்த காலத்துத்
தேன் அமரும் பொழிற் சாரல் சித்திரகூடத்து இருப்பப்
பால்மொழியாய் பரதநம்பி பணிந்ததும் ஓர் அடையாளம்



[322.0]
சித்திரகூடத்து இருப்பச் சிறுகாக்கை முலை தீண்ட
அத்திரமே கொண்டு எறிய அனைத்து உலகும் திரிந்து ஓடி
வித்தகனே இராமாவோ நின் அபயம் என்று அழைப்ப
அத்திரமே அதன்கண்ணை அறுத்ததும் ஓர் அடையாளம்



[323.0]
மின் ஒத்த நுண்- இடையாய் மெய்- அடியேன் விண்ணப்பம்
பொன் ஒத்த மான் ஒன்று புகுந்து இனிது விளையாட
நின் அன்பின் வழிநின்று சிலை பிடித்து எம்பிரான் ஏகப்
பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம்



[324.0]
மைத் தகு மா மலர்க்குழலாய் வைதேவீ விண்ணப்பம்
ஒத்த புகழ் வானரக்கோன் உடன் இருந்து நினைத் தேட
அத்தகு சீர் அயோத்தியர்கோன் அடையாளம் இவை மொழிந்தான்
இத் தகையால் அடையாளம் ஈது அவன் கைம் மோதிரமே



[325.0]
Back to Top
திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள்
மிக்க பெரும் சபை நடுவே வில் இறுத்தான் மோதிரம் கண்டு
ஒக்குமால் அடையாளம் அனுமான் என்று உச்சிமேல்
வைத்துக்கொண்டு உகந்தனளால் மலர்க்குழலாள் சீதையுமே



[326.0]
வார் ஆரும் முலை மடவாள் வைதேவி தனைக் கண்டு
சீர் ஆரும் திறல் அனுமன் தெரிந்து உரைத்த அடையாளம்
பார் ஆரும் புகழ்ப் புதுவைப் பட்டர்பிரான் பாடல் வல்லார்
ஏர் ஆரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே



[327.0]
கதிர் ஆயிரம் இரவி கலந்து எறித்தால் ஒத்த நீள்முடியன்
எதிர் இல் பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல்
அதிரும் கழற் பொரு தோள் இரணியன் ஆகம் பிளந்து அரியாய்
உதிரம் அளைந்த கையோடு இருந்தானை உள்ளவா கண்டார் உளர்



[328.0]
நாந்தகம் சங்கு தண்டு நாண் ஒலிச் சார்ங்கம் திருச்சக்கரம்
ஏந்து பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல்
காந்தள் முகிழ் விரற் சீதைக்கு ஆகிக் கடுஞ்சிலை சென்று இறுக்க
வேந்தர் தலைவன் சனகராசன்தன் வேள்வியிற் கண்டார் உளர்



[329.0]
கொலையானைக் கொம்பு பறித்துக் கூடலர் சேனை பொருது அழியச்
சிலையால் மராமரம் எய்த தேவனைச் சிக்கென நாடுதிரேல்
தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று தடவரை கொண்டு அடைப்ப
அலை ஆர் கடற்கரை வீற்றிருந்தானை அங்குத்தைக் கண்டார் உளர்



[330.0]
Back to Top
தோயம் பரந்த நடுவு சூழலிற் தொல்லை வடிவு கொண்ட
மாயக் குழவி யதனை நாடுறில் வம்மின் சுவடு உரைக்கேன்
ஆயர் மடமகள் பின்னைக்கு ஆகி அடல் விடை ஏழினையும்
வீயப் பொருது வியர்த்து நின்றானை மெய்ம்மையே கண்டார் உளர்



[331.0]
நீர் ஏறு செஞ்சடை நீலகண்டனும் நான்முகனும் முறையால்
சீர் ஏறு வாசகஞ் செய்ய நின்ற திருமாலை நாடுதிரேல்
வார் ஏறு கொங்கை உருப்பிணியை வலியப் பிடித்துக்கொண்டு
தேர் ஏற்றிச் சேனை நடுவு போர் செய்யச் சிக்கெனக் கண்டார் உளர்



[332.0]


Other Prabandhams:
    திருப்பல்லாண்டு     திருப்பாவை     பெரியாழ்வார் திருமொழி     நாச்சியார் திருமொழி         திருவாய் மொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்த விருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலன் ஆதிபிரான்     கண்ணி நுண் சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந் தாண்டகம்     திரு நெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     நம்மாழ்வார்     திரு எழு கூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி     கண்ணிநுண்சிறுத்தாம்பு     அமலனாதிபிரான்     திருச்சந்தவிருத்தம்    
This page was last modified on Fri, 10 May 2024 00:23:06 +0000
 
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham song