சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Marati  Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  

முதல் ஆயிரம்   பெரியாழ்வார்  
பெரியாழ்வார் திருமொழி  

Songs from 13.0 to 473.0   ( திருவில்லிபுத்தூர் )
Pages:    1    2  3  4  5  6  7  8  9  10  Next  Next 10
அதிர் முகம் உடைய வலம்புரி குமிழ்த்தி
      அழல் உமிழ் ஆழிகொண்டு எறிந்து அங்கு
எதிர் முக அசுரர் தலைகளை இடறும்
      எம் புருடோத்தமன் இருக்கை
சதுமுகன் கையிற் சதுப்புயன் தாளிற்
      சங்கரன் சடையினிற் தங்கிக்
கதிர் முகம் மணிகொண்டு இழி புனற் கங்கைக்
      கண்டம் என்னும் கடிநகரே



[393.0]
இமையவர் இறுமாந்து இருந்து அரசாள
      ஏற்று வந்து எதிர் பொரு சேனை
நமபுரம் நணுக நாந்தகம் விசிறும்
      நம் புருடோத்தமன் நகர்தான்
இமவந்தம் தொடங்கி இருங்கடல் அளவும்
      இரு கரை உலகு இரைத்து ஆடக்
கமை உடைப் பெருமைக் கங்கையின் கரைமேல்
      கண்டம் என்னும் கடிநகரே



[394.0]
உழுவது ஓர் படையும் உலக்கையும் வில்லும்
      ஒண் சுடர் ஆழியும் சங்கும்
மழுவொடு வாளும் படைக்கலம் உடைய
      மால் புருடோத்தமன் வாழ்வு
எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப்
      பொழுது அளவினில் எல்லாம்
கழுவிடும் பெருமைக் கங்கையின் கரைமேல்
      கண்டம் என்னும் கடிநகரே



[395.0]
Back to Top
தலைபெய்து குமுறிச் சலம் பொதி மேகம்
      சலசல பொழிந்திடக் கண்டு
மலைப் பெரும் குடையால் மறைத்தவன் மதுரை
      மால் புருடோத்தமன் வாழ்வு
அலைப்பு உடைத் திரைவாய் அருந்தவ முனிவர்
      அவபிரதம் குடைந்து ஆடக்
கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரைமேல்
      கண்டம் என்னும் கடிநகரே



[396.0]
விற் பிடித்து இறுத்து வேழத்தை முறுக்கி
      மேல் இருந்தவன் தலை சாடி
மற் பொருது எழப் பாய்ந்து அரையனை உதைத்த
      மால் புருடோத்தமன் வாழ்வு
அற்புதம் உடைய ஐராவத மதமும்
      அவர் இளம்படியர் ஒண் சாந்தும்
கற்பக மலரும் கலந்து இழி கங்கைக்
      கண்டம் என்னும் கடிநகரே



[397.0]
திரை பொரு கடல் சூழ் திண்மதிற் துவரை
      வேந்து தன் மைத்துனன்மார்க்காய்
அரசினை அவிய அரசினை அருளும்
      அரி புருடோத்தமன் அமர்வு
நிரை நிரையாக நெடியன யூபம்
      நிரந்தரம் ஒழுக்குவிட்டு இரண்டு
கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கைக்
      கண்டம் என்னும் கடிநகரே



[398.0]
வட திசை மதுரை சாளக்கிராமம்
      வைகுந்தம் துவரை அயோத்தி
இடம் உடை வதரி இடவகை உடைய
      எம் புருடோத்தமன் இருக்கை
தடவரை அதிரத் தரணி விண்டு இடியத்
      தலைப்பற்றிக் கரை மரம் சாடிக்
கடலினைக் கலங்கக் கடுத்து இழி கங்கைக்
      கண்டம் என்னும் கடிநகரே



[399.0]
மூன்று எழுத்து அதனை மூன்று எழுத்து அதனால்
      மூன்று எழுத்து ஆக்கி மூன்று எழுத்தை
ஏன்று கொண்டு இருப்பார்க்கு இரக்கம் நன்கு உடைய
      எம் புருடோத்தமன் இருக்கை
மூன்று அடி நிமிர்த்து மூன்றினிற் தோன்றி
      மூன்றினில் மூன்று உரு ஆனான்
கான் தடம்பொழில் சூழ் கங்கையின் கரைமேல்
      கண்டம் என்னும் கடிநகரே



[400.0]
Back to Top
பொங்கு ஒலி கங்கைக் கரை மலி கண்டத்து
      உறை புருடோத்தமன் அடிமேல்
வெங்கலி நலியா வில்லிபுத்தூர்க் கோன்
      விட்டுசித்தன் விருப்பு உற்றுத்
தங்கிய அன்பால் செய் தமிழ்- மாலை
      தங்கிய நா உடையார்க்குக்
கங்கையிற் திருமால் கழலிணைக் கீழே
      குளித்திருந்த கணக்கு ஆமே



[401.0]
மா தவத்தோன் புத்திரன் போய்
      மறிகடல்வாய் மாண்டானை
ஓதுவித்த தக்கணையா
      உருவுருவே கொடுத்தான் ஊர்
தோதவத்தித் தூய் மறையோர்
      துறைபடியத் துளும்பி எங்கும்
போதில் வைத்த தேன் சொரியும்
      புனல் அரங்கம் என்பதுவே



[402.0]
பிறப்பு அகத்தே மாண்டு ஒழிந்த
      பிள்ளைகளை நால்வரையும்
இறைப் பொழுதில் கொணர்ந்து கொடுத்து
      ஒருப்படுத்த உறைப்பன் ஊர்
மறைப் பெருந் தீ வளர்த்திருப்பார்
      வருவிருந்தை அளித்திருப்பார்
சிறப்பு உடைய மறையவர் வாழ்
      திருவரங்கம் என்பதுவே



[403.0]
மருமகன் தன் சந்ததியை
      உயிர்மீட்டு மைத்துனன்மார்
உருமகத்தே வீழாமே
      குருமுகமாய்க் காத்தான் ஊர்
திருமுகமாய்ச் செங்கமலம்
      திருநிறமாய்க் கருங்குவளை
பொரு முகமாய் நின்று அலரும்
      புனல் அரங்கம் என்பதுவே



[404.0]
கூன் தொழுத்தை சிதகு உரைப்பக்
      கொடியவள் வாய்க் கடியசொற்கேட்டு
ஈன்று எடுத்த தாயரையும்
      இராச்சியமும் ஆங்கு ஒழிய
கான் தொடுத்த நெறி போகிக்
      கண்டகரைக் களைந்தான் ஊர்
தேன்தொடுத்த மலர்ச் சோலைத்
      திருவரங்கம் என்பதுவே



[405.0]
Back to Top
பெருவரங்கள் அவைபற்றிப்
      பிழக்கு உடைய இராவணனை
உரு அரங்கப் பொருது அழித்து இவ்
      உலகினைக் கண்பெறுத்தான் ஊர்
குரவு அரும்பக் கோங்கு அலரக்
      குயில் கூவும் குளிர் பொழில் சூழ்
திருவரங்கம் என்பதுவே
      என் திருமால் சேர்விடமே



[406.0]
கீழ் உலகில் அசுரர்களைக்
      கிழங்கிருந்து கிளராமே
ஆழி விடுத்து அவருடைய
      கரு அழித்த அழிப்பன் ஊர்
தாழை- மடல் ஊடு உரிஞ்சித்
      தவள வண்ணப் பொடி அணிந்து
யாழின் இசை வண்டினங்கள்
      ஆளம் வைக்கும் அரங்கமே



[407.0]
கொழுப்பு உடைய செழுங்குருதி
      கொழித்து இழிந்து குமிழ்த்து எறியப்
பிழக்கு உடைய அசுரர்களைப்
      பிணம் படுத்த பெருமான் ஊர்
தழுப்பு அரிய சந்தனங்கள்
      தடவரைவாய் ஈர்த்துக்கொண்டு
தெழிப்பு உடைய காவிரி வந்து
      அடிதொழும் சீர் அரங்கமே



[408.0]
வல் எயிற்றுக் கேழலுமாய்
      வாள்எயிற்றுச் சீயமுமாய்
எல்லை இல்லாத் தரணியையும்
      அவுணனையும் இடந்தான் ஊர்
எல்லியம் போது இருஞ்சிறை வண்டு
      எம்பெருமான் குணம் பாடி
மல்லிகை வெண்சங்கு ஊதும்
      மதில் அரங்கம் என்பதுவே



[409.0]
குன்று ஆடு கொழு முகில் போல்
      குவளைகள் போல் குரைகடல் போல்
நின்று ஆடு கணமயில் போல்
      நிறம் உடைய நெடுமால் ஊர்
குன்று ஊடு பொழில் நுழைந்து
      கொடி இடையார் முலை அணவி
மன்று ஊடு தென்றல் உலாம்
      மதில் அரங்கம் என்பதுவே



[410.0]
Back to Top
பரு வரங்கள் அவைபற்றிப் படை ஆலித்து எழுந்தானைச்
செரு அரங்கப் பொருது அழித்த திருவாளன் திருப்பதிமேல்
திருவரங்கத் தமிழ்-மாலை விட்டுசித்தன் விரித்தன கொண்டு
இருவர் அங்கம் எரித்தானை ஏத்த வல்லார் அடியோமே



[411.0]
மரவடியைத் தம்பிக்கு வான்பணையம் வைத்துப்போய்
      வானோர் வாழச்
செரு உடைய திசைக்கருமம் திருத்திவந்து உலகாண்ட
      திருமால் கோயில்
திருவடிதன் திருஉருவும் திருமங்கை மலர்க்கண்ணும்
      காட்டி நின்று
உரு உடைய மலர்நீலம் காற்று ஆட்ட ஒலிசலிக்கும்
      ஒளி அரங்கமே



[412.0]


Other Prabandhams:
    திருப்பல்லாண்டு     திருப்பாவை     பெரியாழ்வார் திருமொழி     நாச்சியார் திருமொழி         திருவாய் மொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்த விருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலன் ஆதிபிரான்     கண்ணி நுண் சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந் தாண்டகம்     திரு நெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     நம்மாழ்வார்     திரு எழு கூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி     கண்ணிநுண்சிறுத்தாம்பு     அமலனாதிபிரான்     திருச்சந்தவிருத்தம்    
This page was last modified on Fri, 10 May 2024 00:23:06 +0000
 
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham song