சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Marati  Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  

இரண்டாம் ஆயிரம்   திருமங்கை ஆழ்வார்  
பெரிய திருமொழி  

Songs from 948.0 to 2031.0   ( )
Pages:    1    2  3  4  5  6  7  8  9  10  Next  Next 10
அரக்கர் ஆவி மாள அன்று
      ஆழ் கடல் சூழ் இலங்கை செற்ற
குரக்கரசன் என்றும் கோல
      வில்லி என்றும் மா மதியை
நெருக்கும் மாடம் நீடு நாங்கை
      நின்மலன்-தான் என்று என்று ஓதி
பரக்கழிந்தாள் என் மடந்தை
      பார்த்தன்பள்ளி பாடுவாளே



[1322.0]
ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த
      நாதன் என்றும் நானிலம் சூழ்
வேலை அன்ன கோல மேனி
      வண்ணன் என்றும் மேல் எழுந்து
சேல் உகளும் வயல் கொள் நாங்கைத்
      தேவ-தேவன் என்று என்று ஓதி
பாலின் நல்ல மென்-மொழியாள்
      பார்த்தன்பள்ளி பாடுவாளே



[1323.0]
நாடி என்-தன் உள்ளம் கொண்ட
      நாதன் என்றும் நான்மறைகள்
தேடி என்றும் காண மாட்டாச்
      செல்வன் என்றும் சிறை கொள் வண்டு
சேடு உலவு பொழில் கொள்
      நாங்கைத் தேவ-தேவன் என்று என்று ஓதி
பாடகம் சேர் மெல்-அடியாள்
      பார்த்தன்பள்ளி பாடுவாளே



[1324.0]
உலகம் ஏத்தும் ஒருவன் என்றும்
      ஒண் சுடரோடு உம்பர் எய்தா
நிலவும் ஆழிப் படையன் என்றும்
      நேசன் என்றும் தென் திசைக்குத்
திலதம் அன்ன மறையோர் நாங்கைத்
      தேவ-தேவன் என்று என்று ஓதி
பலரும் ஏச என் மடந்தை
      பார்த்தன்பள்ளி பாடுவாளே



[1325.0]
Back to Top
கண்ணன் என்றும் வானவர்கள்
      காதலித்து மலர்கள் தூவும்
எண்ணன் என்றும் இன்பன் என்றும்
      ஏழ் உலகுக்கு ஆதி என்றும்
திண்ண மாடம் நீடு நாங்கைத்
      தேவ-தேவன் என்று என்று ஓதி
பண்ணின் அன்ன மென்-மொழியாள்
      பார்த்தன்பள்ளி பாடுவாளே



[1326.0]
பாருள் நல்ல மறையோர் நாங்கைப்
      பார்த்தன்பள்ளிச் செங் கண் மாலை
வார் கொள் நல்ல முலை மடவாள்
      பாடலைத் தாய் மொழிந்த மாற்றம்
கூர் கொள் நல்ல வேல் கலியன்
      கூறு தமிழ்ப் பத்தும் வல்லார்
ஏர் கொள் நல்ல வைகுந்தத்துள்
      இன்பம் நாளும் எய்துவாரே



[1327.0]
நும்மைத் தொழுதோம் நும்-தம் பணிசெய்து இருக்கும் நும் அடியோம்
இம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் இந்தளூரீரே
எம்மைக் கடிதாக் கருமம் அருளி ஆ ஆ என்று இரங்கி
நம்மை ஒருகால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே?



[1328.0]
சிந்தை-தன்னுள் நீங்காது இருந்த திருவே மருவினிய
மைந்தா அம் தண் ஆலி மாலே சோலை மழ களிறே
நந்தா விளக்கின் சுடரே நறையூர் நின்ற நம்பீ என்
எந்தாய் இந்தளூராய் அடியேற்கு இறையும் இரங்காயே



[1329.0]
பேசுகின்றது இதுவே-வையம் ஈர் அடியால் அளந்த   
மூசி வண்டு முரலும் கண்ணி முடியீர்!-உம்மைக் காணும்   
ஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் அயலாரும்
ஏசுகின்றது இதுவே காணும் இந்தளூரீரே



[1330.0]
Back to Top
ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காய்த்து அடியோர்க்கு
தேசம் அறிய உமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்கு
காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர் எம் பெருமான்
வாசி வல்லீர் இந்தளூரீர்!-வாழ்ந்தே போம் நீரே



[1331.0]
தீ எம் பெருமான் நீர் எம் பெருமான் திசையும் இரு நிலனும்
ஆய் எம் பெருமான் ஆகி நின்றால் அடியோம் காணோமால்
தாய் எம் பெருமான் தந்தை தந்தை ஆவீர் அடியோமுக்-
கே எம் பெருமான் அல்லீரோ நீர்?-இந்தளூரீரே



[1332.0]
சொல்லாது ஒழியகில்லேன் அறிந்த சொல்லில் நும் அடியார்
எல்லாரோடும் ஒக்க எண்ணியிருந்தீர் அடியேனை
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கு-இவ் உலகத்தில்
எல்லாம் அறிவீர்-ஈதே அறியீர் இந்தளூரீரே



[1333.0]
மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள எம்மைப் பணி அறியா
வீட்டீர் இதனை வேறே சொன்னோம் இந்தளூரீரே   
காட்டீர் ஆனீர் நும்-தம் அடிக்கள் காட்டில் உமக்கு இந்த
நாட்டே வந்து தொண்டர் ஆன நாங்கள் உய்யோமே?



[1334.0]
முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலைநின்ற
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணுங்கால்-
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி
இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே



[1335.0]
Back to Top
எந்தை தந்தை தம்மான் என்று என்று எமர் ஏழ் அளவும்
வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால்
சிந்தை-தன்னுள் முந்தி நிற்றிர் சிறிதும் திருமேனி
இந்த வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே



[1336.0]
ஏர் ஆர் பொழில் சூழ் இந்தளூரில் எந்தை பெருமானைக்
கார் ஆர் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலிசெய்த
சீர் ஆர் இன் சொல் மாலை கற்றுத் திரிவார் உலகத்தில்
ஆர் ஆர் அவரே அமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே



[1337.0]
ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒருகால்
      ஆல் இலை வளர்ந்த எம் பெருமான்
பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்து
      பெரு நிலம் அளந்தவன் கோயில்-
காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும்
      எங்கும் ஆம் பொழில்களின் நடுவே
வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென்பால்-
      திருவெள்ளியங்குடி-அதுவே



[1338.0]
ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு
      அரக்கர்-தம் சிரங்களை உருட்டி
கார் நிறை மேகம் கலந்தது ஓர் உருவக்
      கண்ணனார் கருதிய கோயில்-
பூ நிரைச் செருந்தி புன்னை முத்து அரும்பி
      பொதும்பிடை வரி வண்டு மிண்டி
தேன் இரைத்து உண்டு அங்கு இன் இசை முரலும்-
      திருவெள்ளியங்குடி-அதுவே



[1339.0]
கடு விடம் உடைய காளியன் தடத்தைக்
      கலக்கி முன் அலக்கழித்து அவன்-தன்
படம் இறப் பாய்ந்து பல் மணி சிந்தப்
      பல் நடம் பயின்றவன் கோயில்-
பட அரவு அல்குல் பாவை நல்லார்கள்
      பயிற்றிய நாடகத்து ஒலி போய்
அடை புடை தழுவி அண்டம் நின்று அதிரும்-
      திருவெள்ளியங்குடி-அதுவே



[1340.0]
Back to Top
கறவை முன் காத்து கஞ்சனைக் காய்ந்த
      காளமேகத் திரு உருவன்
பறவை முன் உயர்த்து பாற்கடல் துயின்ற
      பரமனார் பள்ளிகொள் கோயில்-
துறைதுறைதோறும் பொன் மணி சிதறும்
      தொகு திரை மண்ணியின் தென்பால்
செறி மணி மாடக் கொடி கதிர் அணவும்-
      திருவெள்ளியங்குடி-அதுவே



[1341.0]


Other Prabandhams:
    திருப்பல்லாண்டு     திருப்பாவை     பெரியாழ்வார் திருமொழி     நாச்சியார் திருமொழி         திருவாய் மொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்த விருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலன் ஆதிபிரான்     கண்ணி நுண் சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந் தாண்டகம்     திரு நெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     நம்மாழ்வார்     திரு எழு கூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி     கண்ணிநுண்சிறுத்தாம்பு     அமலனாதிபிரான்     திருச்சந்தவிருத்தம்    
This page was last modified on Fri, 10 May 2024 00:23:06 +0000
 
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham song