சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  

ஸ்ரீ தேவராய சுவாமிகள் அருளிய ஆறு கந்தர் சஷ்டி கவசங்கள்

குறள் வெண்பா

துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம்,
நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்,
நிஷ்டையுங் கைகூடும்,
நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை.

காப்பு

அமரர் இடர்தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி.

1.திருப்பரங்குன்றம்    2.திருச்செந்தூர்    3.திருவாவினன்குடி    4.திருவேரகம்    5. திருத்தணி    6.பழமுதிர்சோலை

2 திருச்செந்தூர்த் தேவசேனாபதி கந்தர் சஷ்டி கவசம்

Audio

சஷ்ட்டியை நோக்க சரவணபவனார்
சிஷ்ட்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்
பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாட கிண்கிணி யாட
மையல் நடஞ்செய்யும் மயில்வாகனனார் -- 5

கையில் வேலால் எனைக் காக்கவென்று வந்து
வர வர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திர முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக -- 10

வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக -- 15

சரஹணபவனார் சடுதியில் வருக
ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரஹண வீரா நமோ நம
நிபவ சரஹண நிறநிற நிறென -- 20

வசர ஹணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண்டா யுதம் பாச அங்குசமும்
பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க -- 25

விரைந்து எனைக் காக்க வேலோன்வருக
ஐயும் கிலியும் அடைவுடன்செளவும்
உய்யொளி செளவும் உயிர் ஐயும் கிலியும்
கிலியும் செளவும் கிளரொளி ஐயும்
நிலை பெற் றென்முன் நித்தம் ஒளிரும் -- 30

சண்முகம் நீயும் தணியொளி யொவ்வும்
குண்டலி யாம் சிவ குகன்தினம் வருக
ஆறுமுகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும் -- 35

நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல் பூஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் -- 40

முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகுடைய திருவயிறு உந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீராவும்
இருதொடை அழகும் இணைமுழந்தாளும் -- 45

திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண -- 50

ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து -- 55

முந்து முந்து முருகவேள் முந்து
என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து தவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோதனென்று -- 60

உன்திரு வடியை உருதி யென்றெண்ணும்
என்தலை வைத்துன் இணையடி காக்க
என் உயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க -- 65

பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி யிரண்டும் வேலவர் காக்க
நாசிகளிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க -- 70

முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க
என்இளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை இரத்ன வடிவேல் காக்க -- 75

சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவேல் இருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க -- 80

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க
நாண் ஆம் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண்குறிகளை அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க -- 85

வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க
கைக ளிரண்டும் கருணைவேல் காக்க -- 90

முன்கையிரண்டும் முரண்வேல் காக்க
பின்கையிரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரசுவதி நற்றுணை ஆக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனை வேல் காக்க -- 95

எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனக வேல் காக்க
வரும் பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அறையிருள் தன்னில் அனையவேல் காக்க -- 100

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க -- 105

பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும் -- 110

கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட்சதரும்
அடியனைக் கண்டால் அலறிக்கலங்கிட
இரிசிக் காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லினும் இருட்டினும் எதிர்படும் அண்ணரும் -- 115

கனபூசை கொள்ளும் காளியோடனே வரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட
ஆனை அடியினில் அரும்பாவைகளும் -- 120

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகளுடனே பலகலசத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும் -- 125

காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
கால தூதாள் எனைக்கண்டாற் கலங்கிட -- 130

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட்டலறி மதிகெட்டோட
படியினில் முட்ட பாசக்க யிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கால்கை முறிய -- 135

கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்குச் சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால் -- 140

பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெருண்டது வோட
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித்தொடர்ந் தோட -- 145

தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம் -- 150

சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிருதி
பக்கப் பிளவை படர் தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத்து அரணை பருஅரை யாப்பும் -- 155

எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால்
நில்லா தோட நீ எனக் கருள்வாய்
ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணாள் அரசரும் மகிழ்ந்துற வாகவும் -- 160

உன்னைத் துதிக்க உன் திருநாமம்
சரஹண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே
பரிபுர பவனே பவம்ஒளி பவனே
அரிதிரு மருகா அமரா பதியைக் -- 165

காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வேலவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனே
இடும்பனை ஏற்ற இனியவேல் முருகா
தணிகா சலனே சங்கரன் புதல்வா -- 170

கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
பழநிப் பதிவாழ் பால குமாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே -- 175

காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யான் உனைப் பாட
எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவசமாக
ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை -- 180

நேச முடன்யான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னருளாக
அன்புடன் இரக்ஷி அன்னமுஞ் சொன்னமும்
மெத்த மெத் தாக வேலா யுதனார் -- 185

சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன் -- 190

வாழ்க வாழ்க வாரணத்துவசம்
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை யடியேன் எத்தனை செய்தால்
பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன் -- 195

பெற்றவள்குறமகள் பெற்றவளாமே
பிள்ளையென் றன்பாய் பிரிய மளித்து
மைந்தனென் மீது உன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள் செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய -- 200

பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி
நேச முடன்ஒரு நினைவது வாகி
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச் -- 205

சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்து நீறணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்னர் எண்மர் செயலது அருளுவர் -- 210

மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வர்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை -- 215

வழியாற் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிப் பொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்கா ரத்தடி -- 220

அறிந்தெனது உள்ளம் அஷ்டலட் சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத்மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க்கு உவந்தமு தளித்த
குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும் -- 225

சின்னக் குழந்தை சேவடி போற்றி
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவ போற்றி
தேவர்கள் சேனா பதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி -- 230

திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேளே போற்றி
உயர்கிரி கனக சபைக்கு ஓரரசே -- 235

மயில்நட மிடுவோய் மலர் அடி சரணம்
சரணம் சரணம் சரஹண பவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்.

ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம் முற்றிற்று.

Back to Top   1.திருப்பரங்குன்றம்    2.திருச்செந்தூர்    3.திருவாவினன்குடி    4.திருவேரகம்    5. திருத்தணி    6.பழமுதிர்சோலை

1.திருப்பரங்குன்றம் - ஸ்ரீ தேவராய சுவாமிகள் அருளிய கந்தர் சஷ்டி கவசம்

திருப்பரங்குன்றுரை தீரனே குகனே
மருப்பிலாப் பொருளே வள்ளி மனோகரா
குறுக்குத்துறை உறை குமரனே அரனே
இருக்கும் குருபரா ஏரகப்பொருளே 4

வையாபுரியில் மகிழ்ந்து வாழ்பவனே
ஒய்யார மயில் மீது உகந்தாய் நமோ நமோ
ஐயா குமரா அருளே நமோ நமோ
மெய்யாய் விளங்கும் வேலா நமோ நமோ 8

பழநியங்கிரிவாழ் பகவா நமோ நமோ
மழுவுடை முதல்வன் மதலாய் நமோ நமோ
விராலிமலை உறை விமலா நமோ நமோ
மராமரம் துளைத்தோன் மருகா நமோ நமோ 12

சூரசங் காரா துரையே நமோ நமோ
வீரவேல் ஏந்தும் வேளே நமோ நமோ
பன்னிரு கரமுடைப் பரமா நமோ நமோ
கண்கள் ஈராறுடை கந்தா நமோ நமோ 16

கோழிக்கொடியுடைக் கோவே நமோ நமோ
ஆழிசூழ் செந்தில் அமர்ந்தாய் நமோ நமோ
சசச சசச ஓம் ரீம்
ரரர ரரர ரீம்ரீம் 20

வவவ வவவ ஆம் ஹோம்
ணணண ணணண வாம்ஹோம்
பபப பபப சாம் சூம்
வவவ வவவ கெளம் ஓம் 24

லல லிலி லுலு நாட்டிய அட்சரம்
கக கக கக கந்தனே வருக
இக இக இக ஈசனே வருக
தக தக தக சற்குரு வருக 28

பக பக பக பரந்தாமா வருக
வருக வருக என் வள்ளலே வருக
வருக வருக நிஷ்களங்கனே வருக
தாயென நின்னிருதாள் பணிந்தேன் எனைச் 32

சேயெனக் காத்தருள் திவ்ய மாமுகனே
அல்லும் பகலும் அனுதினமும் என்னை
எல்லிலும் இருட்டிலும் எரிபகல் படுக்கை
வல்லவிடங்கள் வாராமல் தடுத்து 36

நல்ல மனத்துடன் ஞானகுரு உனை
வணங்கித் துதிக்க மகிழ்ந்து நீ வரங்கள்
இணங்கியே அருள்வாய் இறைவா எப்போதும்
கந்தா கடம்பா கார்த்திகேயா 40

நந்தன் மருகா நாரணி சேயே
என்ணிலாக் கிரியில் இருந்து வளர்ந்தனை
தண்ணளி அளிக்கும் சாமிநாதா
சிவகிரி கயிலை திருப்பதி வேளூர் 44

தவக்கதிர்காமம் சார் திருவேரகம்
கண்ணுள் மணிபோல் கருதிடும் வயலூர்
விண்ணவர் ஏத்தும் விராலிமலை முதல்
தன்னிகர் இல்லாத் தலங்களைக் கொண்டு 48

சன்னதியாய் வளர் சரவண பவனே
அகத்திய முனிவனுக் (கு) அன்புடன் தமிழைச்
செகத்தொர் அறியச் செப்பிய கோவே
சித்துகள் ஆடும் சிதம்பர சக்கரம் 52

நர்த்தனம் புரியும் நாற்பத்தெண் கோணம்
வித்தாய் நின்ற மெய்ப்பொருளோனே
உத்தம குணத்தாய் உம்பர்கள் ஏறே
வெற்றிக் கொடியுடை வேளே போற்றி 56

பக்திசெய் தேவர் பயனே போற்றி
சித்தம் மகிழ்ந்திடச் செய்தவா போற்றி
அத்தன் அரி அயன் அம்பிகை லட்சுமி
வாணி யுடனே வரைமாக் கலைகளும் 60

தானே நானென்று சண்முகமாகத்
தாரணி யுள்ளோர் சகலரும் போற்றப்
பூரண கிருபை புரிபவா போற்றி
பூதலத்துள்ள புண்ய தீர்த்தங்கள் 64

ஓதமார் கடல்சூழ் ஒளிர்புவி கிரிகளில்
எண்ணிலாத் தலங்கள் இனிதெழுந் தருள்வாய்
பண்ணும் நிஷ்டைகள் பலபல வெல்லாம்
கள்ளம் அபசாரம் கர்த்தனே எல்லாம் 68

எள்ளினுள் எண்ணெய் போல் எழிலுடை உன்னை
அல்லும் பகலும் ஆசாரத்துடன்
சல்லாப மாய் உனைத் தானுறச் செய்தால்
எல்லா வல்லமை இமைப்பினில் அருளி 72

பல்லாயிர நூல் பகர்ந்தருள்வாயே
செந்தில்நகர் உறை தெய்வானை வள்ளி
சந்ததம் மகிழும் தயாபர குகனே
சரணம் சரணம் சரஹணபவ ஓம் 76

அரன்மகிழ் புதல்வா ஆறுமுகா சரணம்
சரணம் சரணம் சரஹணபவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம் 79
Back to Top    1.திருப்பரங்குன்றம்    2.திருச்செந்தூர்    3.திருவாவினன்குடி    4.திருவேரகம்    5. திருத்தணி    6.பழமுதிர்சோலை

3 திருவாவினன்குடி தெண்டபாணி கந்தர் சஷ்டி கவசம்

திருவாவினன்குடி சிறக்கும் முருகா
குருபரா குமரா குழந்தை வேலாயுதா
சரவணை சண்முகா சதாசிவன் பாலா
இரவலர் தயாபரா ஏழை பங்காளா 4

பரமேஸ்வரிக்குப் பாலா தயாபரா
வரமெனக் (கு) அருள்வாய் வாமனன் மருகா
இரண்டாயிரம் வெள்ளம் யோகம் படைத்தவா
திரண்டாருக மனம் தீர்க்கம் படைத்தவா 8

இலட்சத்திருநான்கு நல் தம்பி மாருடன்
பட்சத்துடனே பராசக்தி வேலதாய்
வீர வாகு மிகுதள கர்த்தனாய்
சூர சங்காரா துஷ்ட நிஷ்டூரா 12

கயிலாய மேவும் கனக சிம்மாசனா
மயிலேறும் சேவகா வள்ளி மனோகரா
அகத்திய மாமுனிக் (கு) அருந்தமிழ் உரைத்தவா
சுகத் திருமுறுகாற் றுப்படை சொல்லிய 16

நக்கீரன் நற்றமிழ் நலமென வினவிக்
கைக்கீழ் வைக்கும் கனமிசைக் குதவா
திருவருணகிரி திருப்புகழ் பாட
இரும்புகழ் நாவில் எழுதிப் புகழ்ந்தவா 20

ஆயிரத்தெட்டாம் அருள்சிவ தலத்தில்
பாயிரம் தோத்திரம் பாடப் புகழ்ந்தவா
எண்ணாயிரம் சமண் எதிர்கழு வேற்றி
விண்ணோர் குமாரன் வியாதியைத் தீர்த்தவா 24

குருவாம் பிரமனைக் கொடும்சிறை வைத்தே
உருபொருள் வேதம் உரைத்தாய் சிவனுடன்
கருதிமெய் யோகம்சொல்லியது ஒருமுகம்
அருள்பெறு மயில்மீ (து) அமர்ந்த (து) ஒருமுகம் 28

வள்ளிதெய் வானையை மருவிய (து) ஒருமுகம்
தெள்ளு நான்முகன் போல் சிருட்டிப்ப (து) ஒருமுகம்
சூரனை வேலால் துணித்த (து) ஒருமுகம்
ஆரணம் ஓதும் அருமறை அடியார் 32

தானவர் வேண்டுவ தருவ (து) ஒருமுகம்
ஞானமுதல்வருக்கு நற்பிள்ளை பழநி
திருப்பரங் கிரிவாழ் தேவா நமோ நம
பொருட் செந்தில் அம்பதி புரப்பாய் நமோ நம 36

ஏரகம் தனில்வாழ் இறைவா நமோநம
கூரகம் ஆவினன்குடியாய் நமோநம
சர்வ சங்கரிக்குத் தனயா நமோநம
உறுசோலை மலைமேல் உகந்தாய் நமோநம 40

எல்லாக்கிரிக்கும் இறைவா நமோ நம
சல்லாபமாக சண்முகத்துடனே
எல்லாத் தலமும் இனிதெழுந்தருளி
உல்லாசத்துறும் ஓங்கார வடிவே 44

மூல வட்டத்தில் முளைத்தெழும் ஜோதியை
சாலமுக்கோணத் தந்த முச்சக்தியை
வேலாயுதமுடன் விளங்கும் குகனைச்
சீலமார் வயலூர்ச் சேந்தனைத் தேவனை 48

கைலாச மேருவாகாசத்தில் கண்டு
பைலாம் பூமியும் பங்கய பார்வதி
மேலும் பகலும் விண்ணுரு வேத்தி
நாற்கோணத்தில் நளினமாய் அர்ச்சனை 52

கங்கையீசன் கருதிய நீர்புரை
செங்கண்மால் திருவும் சேர்ந்துசெய் அர்ச்சனை
அக்கினி நடுவே அமர்ந்த ருத்திரன்
முக்கோண வட்டம் முதல்வாயு ருத்திரி 56

வாய் அறுகோணம் மகேசுவரன் மகேசுவரி
ஐயும் கருநெல்லி வெண்சாரைதன்மேல்
ஆகாச வட்டத் (து) அமர்ந்த சதாசிவன்
பாகமாம் வெண்மைப் பராசக்தி கங்கை 60

தந்திர அர்ச்சனை தலைமேல்கொண்டு
மந்திர மூலத்தில் வாசியைக்கட்டி
அக்கினி குதிரை ஆகாசத்தேவி
மிக்கமாய்க் கருநெல்லிவெண்சாரை உண்பவர் 64

பாகமாய் ரதமும் பகல்வழியாவர்
சாகாவகையும் தன்னை அறிந்து
ஐந்து ஜீவனுடன் ஐயஞ்சு கற்பமும்
விந்தை உமைசிவன் மேன்மையும் காட்டி 68

சந்திர சூரியர் தம்முடன் அக்கினி
அந்திரனைக்கண் (டு) அறிந்தே இடமாய்ச்
சிந்தையுள் ஏற்றுச் சிவசம்பு தன்னை
மந்திர அர்ச்சனை வாசிவ என்று 72

தேறுமுகம் சென்னி சிவகிரி மீதில்
ஆறுமுகமாய் அகத்துளே நின்று
வாசல் ஒன்பதையும் வளமுடன் வைத்து
யோசனை ஐங்கரன் உடன் விளையாடி 76

மேலைக் கருநெல்லி வெண்சாரை உண்டு
வாலைக்குழந்தை வடிவையும் காட்டி
நரைதிரை மாற்றி நாலையும் காட்டி
உரை சிவயோகம் உபதேசம் செப்பி 80

மனத்தில் பிரியா வங்கணமாக
நினைத்தபடிஎன் நெஞ்சத்திருந்து
அதிசயம் என்றுன் அடியார்க் (கு) இரங்கி
மதியருள் வேலும் மயிலுடன் வந்து 84

நானே நீயெனும் லட்சணத் துடனே
தேனே என்னுளம் சிவகிரி எனவே
ஆறா தாரத்து ஆறு முகமும்
மாறாதிருக்கும் வடிவையும் காட்டி 88

கனவிலும் நனவிலும் கண்டுனைத் துதிக்கத்
தனதென வந்து தயவுடன் இரங்கிச்
சங்கொடு சக்கரம் சண்முக தரிசனம்
எங்கு நினைத்தாலும் என்முன்னே வந்து 92

அஷ்டாவதானம் அறிந்துடன் சொல்லத்
தட்டாத வாக்கும் சர்வா பரணமும்
இலக்கணம் இலக்கியம் இசை அறிந்துரைக்கத்
துலக்கிய காவியம் சொற்பிரபந்தம் 96

எழுத்துச் சொற்பொருள் யாப்பலங்காரம்
வாழ்த்தும் என் நாவில்வந்தினி திருந்தே
அமுத வாக்குடன் அடியார்க்கு வாக்கும்
சமுசார சாரமும் தானே நிசமென 100

வச்சிர சரீரம் மந்திர வசீகரம்
அட்சரம் யாவும் அடியேனுக்கு உதவி
வல்லமை யோகம் வசீகர சக்தி
நல்ல உன் பாதமும் நாடியபொருளும் 104

சகலகலை ஞானமும் தான் எனக் கருளிச்
செகதல வசீகரம் திருவருள் செய்து
வந்த கலிபிணி வல்வினை மாற்றி
இந்திரன் தோகை எழில்மயில் ஏறிக் 108

கிட்டவே வந்து கிருபை பாலிக்க
அட்ட துட்டமுடன் அனேக மூர்க்கமாய்
துட்ட தேவதையும் துட்டப் பிசாசும்
வெட்டுண்ட பேயும் விரிசடை பூதமும் 112

வேதாளம் கூளிவிடும் பில்லி வஞ்சனை
பேதாளம் துன்பப் பிசாசுகள் நடுங்க
பதைபதைத்து அஞ்சிடப் பாசத்தால் கட்டி
உதைத்து மிதித் (து) அங்கு உருட்டி நொறுக்கிச் 116

சூலத்தால் குத்தித் தூளு தூளுருவி
வேலா யுதத்தால் வீசிப்பருகி
மழுவிட்டேவி வடவாக்கினி போல்
தழுவிஅக் கினியாய்த் தானே எரித்துச் 120

சிதம்பர சக்கரம் தேவி சக்கரம்
மதம்பெறும் காளி வல்ல சக்கரம்
மதியணி சம்பு சதாசிவ சக்கரம்
பதிகர்ம வீரபத்திரன் சக்கரம் 124

திருவைகுண்டம் திருமால் சக்கரம்
அருள் பெருந் திகிரி அக்கினி சக்கரம்
சண்முக சக்கரம் தண்டா யுதத்தால்
விம்ம அடிக்கும் எல்லாச் சக்கரமும் 128

ஏக ரூபமாய் என்முன்னே நின்று
வாகனத் துடன் என் மனத்தில் இருந்து
தம்பனம் மோகனம் தயவாம் வசீகரம்
இம்பமா கருடணம் மேவும் உச்சாடனம் 132

வம்பதாம் பேதானம் வலிதரு (ம்) மாரணம்
உம்பர்கள் ஏத்தும் உயிர்வித் வேடனம்
தந்திர மந்திரம் தருமணி அட்சரம்
உந்தன் விபூதி உடனே செபித்துக் 136

கந்தனின் தோத்திரம் கவசமாய்க் காக்க
எந்தன் மனத்துள் ஏது வேண்டியதும்
தந்து ரட்சித்தருள் தயாபரா சரணம்
சந்தம் எனக்கருள் சண்முகா சரணம் 140

சரணம் சரணம் சட்கோண இறைவா
சரணம் சரணம் சத்துரு சங்காரா
சரணம் சரணம் சரவணபவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம் 144

Back to Top    1.திருப்பரங்குன்றம்    2.திருச்செந்தூர்    3.திருவாவினன்குடி    4.திருவேரகம்    5. திருத்தணி    6.பழமுதிர்சோலை

4 திருவேரகம் சுவாமிமலைக் குருநாதன் கந்தர் சஷ்டி கவசம்

ஓமெனும் பிரணவம் உரைத்திடச் சிவனார்
காமுற உதித்த கனமறைப் பொருளே
ஓம் காரமாக உதயத்து எழுந்தே
ஆம் காரமான அரக்கர் குலத்தை 4

வேரறக் களைந்த வேலவா போற்றி
தேராச் சூரரைத் துண்ட துண்டங்களாய்
வேலா யுதத்தால் வீசி அறுத்த
பாலா போற்றி பழநியின் கோவே 8

நான்கு மறைகள் நாடியே தேடும்
மான் மருகோனே வள்ளி மணாளனே
நானெனும் ஆணவம் நண்ணிடா (து) என்னை
காணநீ வந்து காப்பது உன் கடனே 12

காளி கூளி கங்காளி ஓங்காரி
சூலி கபாலி துர்க்கை யேமாளி
போற்றும் புதல்வா புனித குமாரா
சித்தர்கள் போற்றும் தேசிகா போற்றி 16

ஏகாட்சரமாய் எங்கும் தானாகி
வாகாய் நின்ற மறைமுதல் பொருளே
துவி அட்சரத்தால் தொல் உலகெல்லாம்
அதிசயமாக அமைத்தவா போற்றி 20

திரிஅட்சரத்தால் சிவன் அயன் மாலும்
விரி பாருலகில் மேன்மையுற் றவனே
சதுர் அட்சரத்தால் சாற்றுநல் யோகம்
மதுரமாய் அளிக்கும் மயில் வாகனனே 24

பஞ்சாட்சரத்தால் பரமன் உருவதாய்த்
தஞ்ச மென்றோரைத் தழைத்திடச் செய்தென்
நெஞ்சகத் (து) இருக்கும் நித்தனே சரணம்
அஞ்சலி செய்த அமரரைக் காக்கும் 28

ஆறு கோணமாய் ஆறு எழுத் தாகி
ஆறு சிரமும் அழகிய முகமும்
ஆறிரு செவியும் அகன்ற மார்பும்
ஆறிரு கண்ணும் அற்புத வடிவும் 32

சரவணை வந்த சடாட்சரப் பொருளே
அரன் அயன் வாழ்த்தும் அப்பனே கந்தா
கரங்கள் பன்னிரண்டில் கதிரும் ஆயுதத்தால்
தரங் குலைந் (து) ஓடத் தாரகாசுரன் முதல் 36

வேர் அறச் சூர்க்குலம் முடித்து மகிழ்ந்தாய்
சீர்த் திருச்செந்தூர்த் தேவ சேனாபதி
அஷ்ட குலாசலம் யாவையும் ஆகி
இஷ்ட சித்திகள் அருள் ஈசன் புதல்வா 40

துட்ட சங் காரா சுப்பிரமண்யா
மட்டிலா வடிவே வையாபுரித் துரையே
எண் கோணத்துள் இயங்கிய நாரணன்
கண்கொளாக் காட்சி காட்டிய சடாட்சர 44

சைவம் வைணவம் சமரசமாகத்
தெய்வமாய் விளங்கும் சரவண பவனே
சரியை கிரியை சார்ந்த நல் யோகம்
இரவலர்க் (கு) அருளும் ஈசா போற்றி 48

ஏது செய்திடினும் என்பால் இரங்கிக்
கோதுகள் இல்லாக் குணமெனக் கருளித்
தரிசனம் கண்ட சாதுவோ (டு) உடன்யான்
அருச்சனை செய்ய அனுக்ரகம் செய்வாய் 52

பில்லி வல் வினையும் பீனிச மேகம்
வல்ல பூதங்கள் மாயமாய்ப் பறக்க
அல்லலைப் போக்கி நின் அன்பரொ (டு) என்னைச்
சல்லாப மாகச் சகலரும் போற்ற 56

கண்டு களிப்புறக் கருணை அருள்வாய்
அண்டர் நாயகனே அருமறைப் பொருளே
குட்டிச் சாத்தான் குணமிலா மாடன்
தட்டிலா இருளன் சண்டி வேதாளம் 60

சண்ட மாமுனியும் தக்க ராக்கதரும்
மண்டை வலியொடு வாதமும் குன்மமும்
சூலை காமாலை சொக்கலும் சயமும்
மூல ரோகங்கள் முடக்குள் வலிப்பு 64

திட்டு முறைகள் தெய்வத சாபம்
குட்டம் சோம்பல் கொடிய வாந்தியும்
கட்டிலாக் கண்ணோய் கண்ணேறு முதலா
வெட்டுக் காயம் வெவ்விடம் அனைத்தும் 68

உன்னுடை நாமம் ஓதியே நீறிடக்
கன்னல் ஒன்றதனில் களைந்திடக் கருணை
செய்வதுடன் கடனே செந்தில் நாயகனே
தெய்வநா யகனே தீரனே சரணம் 72

சரணம் சரணம் சரஹண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம் 74

Back to Top    1.திருப்பரங்குன்றம்    2.திருச்செந்தூர்    3.திருவாவினன்குடி    4.திருவேரகம்    5. திருத்தணி    6.பழமுதிர்சோலை

5 குன்றுதோறாடும் குமரன் கந்தர் சஷ்டி கவசம்

கணபதி துணைவா கங்காதரன் புதல்வா
குணவதி உமையாள் குமர குருபரா
வள்ளி தெய்வானை மருவிய நாயகா
துள்ளி மயிலேறும் சுப்பிரமணியா 4

அழகொளிப் பிரபை அருள் வடிவேலா
பழநி நகரில் பதி அனு கூலா
திரு ஆவினன்குடி சிறக்கும் முருகா
அருள் சேர் சிவகிரி ஆறு முகவா 8

சண்முகநதியும் சராபன்றி மலையும்
பன்முகம் நிறைந்த பழனிக்கு இறைவா
ஆறாறு நூற்று அட்ட மங்களமும்
வீர வையாபுரி விளங்கும் தயாபரா 12

ஈராறு பழநி எங்கும் தழைக்கப்
பாராறு சண்முகம் பகரும் முதல்வா
ஆறு சிரமும் ஆறு முகமும்
ஆறிரு புயமும் ஆறிரு காதும் 16

வடிவம் சிறந்த மகர குண்டலமும்
தடித்த பிரபைபோல் சார்ந்த சிந்தூரமும்
திருவெண்ண தீறணி திருநுதல் அழகும்
கருணை பொழியும் கண் நான்கு மூன்றும் 20

குனித்த புருவமும் கூரிய மூக்கும்
கனித்த மதுரித்த கனிவாய் இதழும்
வெண்ணிலாப் பிரபைபோல் விளங்கிய நகையும்
எண்ணிலா அழகாய் இலங்கு பல் வரிசையும் 24

காரிகை உமையாள் களித்தே இனிதெனச்
சீர்தரும் வள்ளி தெய்வ நாயகியாள்
பார்த்த அழ கென்னப் பரிந்த கபோலமும்
வார்த்த கனகம்போல் வடிவேல் ஒளியும் 28

முறுக்குமேல் மீசையும் மூர்க்கம் சிறக்க
மறுக்கும் சூரர்மேல் வாதுகள் ஆட
ஈஸ்வரன் பார்வதி எடுத்து முத்தாடி
ஈஸ்வரன் வடிவை மிகக் கண்ட அனுதினம் 32

கையால் எடுத்து கனமார் (பு) அணைத்தே
ஐயா குமரா அப்பனே என்று
மார்பினும் தோளினும் மடியினும் வைத்துக்
கார்த்திகேயா எனக் கருணையால் கொஞ்சி 36

முன்னே கொட்டி முருகா வருக வென் (று)
அந்நேரம் வட்டமிட்டாடி விளையாடித்
தேவியும் சிவனும் திருக்கண் களிகூரக்
கூவிய மயிலேறும் குருபரா வருக 40

தாவிய தகரேறும் சண்முகா வருக
ஏவியவே லேந்தும் இறைவா வருக
கூவிய சேவல் கொடியோய் வருக
பாவலர்க் கருள் சிவ பாலனே வருக 44

அன்பர்க் கருள்புரி ஆறுமுகா வருக
பொன்போல் சரவணைப் புண்ணியா வருக
அழகில் சிவனொளி அய்யனே வருக
கலபம் அணியுமென் கந்தனே வருக 48

மருமலர்க் கடம்பணி மார்பா வருக
மருவுவோர் மலரணி மணியே வருக
திரிபுர பவனெனும் தேவே வருக
பரிபுர பவனெனும் பவனே வருக 52

சிவகிரி வாழ் தெய்வ சிகாமணி வருக
காலில் தண்டை கலீர் கலீரென
சேலில் சதங்கை சிலம்பு கலீரென
இடும்பனை மிதித்ததோர் இலங்கிய பாதமும் 56

அடும்பல வினைகளை அகற்றிய பாதமும்
சிவகிரி மீதினில் திருநிறை கொலுவும்
நவகிரி அரைமேல் இரத்தினப் பிரபையும்
தங்கரை ஞாணும் சாதிரை மாமணி 60

பொங்கு மாந்தளிர் சேர் பொற் பீதாம்பரமும்
சந்திர காந்தச் சரிகைத் தொங்கலும்
மந்திரவாளும் வங்கிச் சரிகையும்
அருணோதயம் போல் அவிர்வன் கச்சையும் 64

ஒருகோடி சூரியன் உதித்த பிரபை போல்
கருணையால் அன்பரைக் காத்திடும் அழகும்
இருகோடி சந்திரன் எழில் ஒட்டியாணமும்
ஆயிரம் பணாமுடி அணியும் ஆபரணமும் 68

வாயில்நன் மொழியாய் வழங்கிய சொல்லும்
நாபிக் கமலமும் நவரோம பந்தியும்
மார்பில் சவ்வாது வாடை குபீரென
புனுகு பரிமளம் பொருந்திய புயமும் 72

ஒழுகிய சந்தனம் உயர் கஸ்தூரியும்
வலம்புரி சங்கொலி மணி அணி மிடறும்
நலம்சேர் உருத்திர அக்க மாலையும்
மாணிக்கம் முத்து மரகதம் நீலம் 76

ஆணி வைடூரியம் அணிவைரம் பச்சை
பவள கோமேதகம் பதித்த வச்ராங்கியும்
நவமணி பிரபைபோல் நாற்கோடி சூரியன்
அருணோதயமெனச் சிவந்த மேனியும் 80

கருணைபொழியும் கடாட்ச வீட் சணமும்
கவசம் தரித்தருள் காரண வடிவும்
நவவீரர் தம்முடன் நற்காட்சி யான
ஒருகை வேலாயுதம் ஒருகை சூலாயுதம் 84

ஒருகை நிறைசங்கு ஒருகை சக்ராயுதம்
ஒருகை நிறைவில்லு ஒருகை நிறையம்பு
ஒருகை மந்திரவாள் ஒருகை மாமழு
ஒருகை மேல்குடை ஒருகை தண்டாயுதம் 88

ஒருகை சந்திராயுதம் ஒருகை வல்லாயுதம்
அங்கையில் பிடித்த ஆயுதம் அளவிலாப்
பங்கயக் கமலப் பன்னிரு தோளும்
முருக்கம் சிறக்கும் முருகா சரவணை 92

இருக்கும் குருபரா ஏழைபங் காளா
வானவர் முனிவர் மகிழ்ந்து கொண்டாடத்
தானவர் அடியர் சகலரும் பணியப்
பத்திர காளி பரிவது செய்ய 96

சக்திகள் எல்லாம் தாண்டவ மாட
அஷ்ட பைரவர் ஆனந்தமாட
துஷ்டமிகுஞ் சூளிகள் சூழ்திசை காக்க
சத்த ரிஷிகள் சாந்தக மென்னச் 100

சித்தர்கள் நின்று சிவசிவா என்னத்
தும்புரு நாரதர் சூரிய சந்திரர்
கும்ப மாமுனியும் குளிர்ந்த தாரகையும்
அயன்மால் உருத்திரன் அஷ்ட கணங்கள் 104

நயமுடன் நின்று நாவால் துதிக்க
அஷ்ட லஷ்மி அம்பிகை பார்வதி
கட்டழகன் என்று கண்டுனை வாழ்த்த
இடும்பா யுதன் நின் இணையடி பணிய 108

ஆடும் தேவகன்னி ஆலத்தி எடுக்க
தேவ கணங்கள் ஜெயஜெய என்ன
ஏவல் கணங்கள் இந்திரர் போற்ற
கந்தர்வர் பாடிக் கவரிகள் வீசிச் 112

சார்ந்தனம் என்னச் சார்வரும் அநேக
பூதம் அடிபணிந்து ஏத்தவே தாளம்
பாதத்தில் வீழ்ந்து பணிந்து கொண் டாட
அரகர என்றடியார் ஆலவட்டம் பிடிக்க 116

குருபரன் என்றன்பர் கொண்டாடி நிற்க
குடையும் சேவலின் கொடியும் சூழ
இடை விடாமல் உன் ஏவலர் போற்றச்
சிவனடி யார்கள் திருப்பாதம் ஏந்த 120

நவமெனும் நால்வரை ஏற்ற சரமண்டலம்
உருத்திர வீணை நாதசுர மேளம்
தித்திமி என்று தேவர்கள் ஆடச்
சங்கீத மேளம் தாளம் துலங்க 124

மங்களமாக வைபவம் இலங்க
தேவ முரசடிக்கத் தின மேள வாத்தியம்
சேவல் கொடியும் சிறப்புடன் இலங்க
நந்திகே சுவரன்மீது ஏறிய நயமும் 128

வந்தனம் செய்ய வானவர் முனிவர்
எங்கள் பார்வதியும் ஈசனும் முன்வர
ஐங்கரன் முன்வர ஆறு மாமுகவன்
வீரமயிலேறி வெற்றிவேல் எடுத்துச் 132

சூரன்மேல் ஏவத் துடித்தவன் மடியச்
சிங்கமுகா அசுரன் சிரமது உருளத்
துங்கக் கயமுகன் சூரனும் மாள
அடலறக் குலத்தை அறுத்துச் சயித்து 136

விடுத்த வேலாயுதம் வீசிக் கொக்கரித்துத்
தம்ப மெனும் சயத் தம்பம் நாட்டி
அன்பர்கள் தம்மை அனுதினம் காத்துத்
திருப்பரங் குன்றம் சீர்பதி செந்தூர் 140

திருஆவிநன்குடி திருவே ரகமும்
துய்ய பழநி சுப்பிர மணியன்
மெய்யாய் விளங்கும் விராலிமலை முதல்
அண்ணா மலையும் அருள்மேவும் கயிலை 144

கண்ணிய மாவூற்றுக் கழுகு மாமலையும்
முன் இமையோர்கள் முனிவர் மனத்திலும்
நன்னயமாய்ப்பணி நண்பர் மனத்திலும்
கதிர்காமம் செங்கோடு கதிர்வேங் கடமும் 148

பதினாலு உலகத்திலும் பக்தர் மனத்திலும்
எங்கும் தானவ னாயிருந் (து) அடியர்தம்
பங்கிலிருந்து பாங்குடன் வாழ்க ...
கேட்ட வரமும் கிருபைப் படியே 152

தேட்ட முடன் அருள் சிவகிரி முருகா
நாட்டு சிவயோகம் நாடிய பொருளும்
தாட்டிக மாய்எனக் (கு) அருள்சண் முகனே 155

சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம் 157

Back to Top    1.திருப்பரங்குன்றம்    2.திருச்செந்தூர்    3.திருவாவினன்குடி    4.திருவேரகம்    5. திருத்தணி    6.பழமுதிர்சோலை

6 பழமுதிர்சோலை பரமகுரு கந்தர் சஷ்டி கவசம்

சங்கரன் மகனே சரவண பவனே
ஐங்கரன் துணைவனே அமரர்தம் கோனே
செங்கண்மால் மருகனே தெய்வானை கேள்வனே
பங்கயம் போன்ற பன்னிரு கண்ணனே 4

பழநி மாமலையுறும் பன்னிரு கரத்தனே
அழகுவேல் ஏந்தும் ஐயனே சரணம்
சரவணபவனே சட்கோணத் துள்ளுறை
அரனருள் சுதனே அய்யனே சரணம் 8

சயிலொளி பவனே சடாட்சரத் தோனே
மயில்வா கனனே வள்ளலே சரணம்
திரிபுர பவனே தேவசே னாபதி
குறமகள் மகிழும் குமரனே சரணம் 12

திகழொளி பவனே சேவல் கொடியாய்
நகமா யுதமுடை நாதனே சரணம்
பரிபுர பவனே பன்னிரு கையனே
தருணமிவ் வேளை தற்காத் தருளே 16

சவ்வும் ரவ்வுமாய்த் தானே யாகி
வவ்வும் ணவ்வுமாய் விளங்கிய குகனே
பவ்வும் வவ்வுமாய் பழமுதிர் சோலையில்
தவ்வியே ஆடும் சரவணபவனே 20

குஞ்சரி வள்ளியைக் குலாவி மகிழ்வோய்
தஞ்ச மென்று உன்னைச் சரணம் அடைந்தேன்
கொஞ்சிய உமையுடன் குழவியாய்ச் சென்றங் (கு)
அஞ்சலி செய்தவள் அமுதமும் உண்டு 24

கார்த்திகை மாதர் கனமார் (பு) அமுதமும்
பூர்த்தியாய் உண்ட புனிதனே குகனே
நவமைந்தர் சிவனால் நலமுடன் உதிக்கத்
தவமுடை வீரவாகுவோ (டு) ஒன்பான் 28

தம்பி மாராகத் தானையைக் கொண்ட
சம்பிரதாயா சண்முகா வேலா
நவவீரர் தம்முடன் நவகோடி வீரரும்
கவனமாய் உருத்திரன் அளித்தே களித்துப் 32

பேதம் இல்லாமல் பிரமனைக் குருவாய்
ஓதிடச் செய்ய உடன் அவ் வேதனை
ஓமெனும் பிரணவத்து உண்மை நீ கேட்க
தாமே யோசித்த சதுர்முகன் தன்னை 36

அமரர்கள் எல்லாம் அதிசயப் படவே
மமதைசேர் அயனை வன்சிறை இட்டாய்
விமலனும் கேட்டு வேக மதாக
உமையுடன் வந்தினிது வந்து பரிந்து 40

அயனைச் சிறைவிடென் (று) அன்பாய் உரைக்க
நயமுடன் விடுத்த ஞான பண்டிதனே ...
திருமால் அயன்சிவன் சேர்ந்து மூவரும்
கெளரி லட்சுமி கலை மகளுடனே 44

அறுவரோர் அம்சமாய் அரக்கரை வெல்ல
ஆறு முகத்துடன் அவதரித் தோனே
சிங்கமுகாசுரன் சேர்ந்த கயமுகன்
பங்கமே செய்யும் பானுகோபனும் 48

சூரனோடு ஒத்த துட்டர் களோடு
கோரமே செய்யும் கொடிய ராக்கதரை
வேருடன் கெல்லி விண்ணவர் துன்பம்
ஆறிடச் செய்த அவ்வமரர்கள் தமக்குச் 52

சேனா பதியாய்த் தெய்வீக பட்டமும்
தானாய்ப் பெற்ற தாட்டிகப் பெரும ...
திருப்பரங் குன்றம் செந்தூர் முதலாய்ச்
சிறப்புறு பழநி திருவேரக முதல் 56

எண்ணிலாத் தலங்களில் இருந்தாடும் குகனே
விண்ணவர் ஏத்தும் விநோத பாதனே
அன்பர்கள் துன்பம் அகற்றி ஆள்பவனே
தஞ்சமென் (று) ஓதினார் சமயம் அறிந்தங் (கு) 60

இன்பம் கொடுக்கும் ஏழை பங்காளா
கும்ப மாமுனிக்குக் குரு தேசிகனே
தேன்பொழில் பழனி தேவ குமாரா
கண்பார்த் (து) எனையாள் கார்த்திகேயா என் 64

கஷ்டநிஷ்டூரம் கவலைகள் மாற்றி
அஷ்ட லட்சுமிவாழ் அருள் எனக் குதவி
இட்டமாய் என்முன் இருந்து விளையாடத்
திட்டமாய் எனக்கருள் செய்வாய் குகனே 68

அருணகிரி தனக் (கு) அருளிய தமிழ்போல்
கருணையால் எனக்கு கடாட்சித்து அருள்வாய்
தேவராயன் செப்பிய கவசம்
பூவலயத்தோர் புகழ்ந்து கொண்டாட 72

சஷ்டி கவசம் தான் செபிப் போரைச்
சிஷ்டராய்க் காத்தருள் சிவகிரி வேலா
வந்தென் நாவில் மகிழ்வுடன் இருந்து
சந்தத் தமிழ்த் திறம் தந்தருள் வோனே 76

சரணம் சரணம் சரஹண பவஓம்
சரணம் சரணம் தமிழ் தரும் அரசே
சரணம் சரணம் சங்கரன் சுதனே
சரணம் சரணம் சண்முகா சரணம். 80

ஸ்ரீ கந்தர் கவசங்கள் ஆறு முற்றிற்று.
Back to Top    1.திருப்பரங்குன்றம்    2.திருச்செந்தூர்    3.திருவாவினன்குடி    4.திருவேரகம்    5. திருத்தணி    6.பழமுதிர்சோலை
This page was last modified on Tue, 28 Oct 2025 03:47:51 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

kandhar sasti kavasam