சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian   Marati  
சேக்கிழார்  
அப்பூதி அடிகள் நாயனார்  

12 -ஆம் திருமுறை   12.250  
திருநின்ற சருக்கம்
 
ஐந்தொழிலையும் இயற்றுதற்குரிய திருக்கூத்தினை இயற்றுதலில் வல்லவரான சிவபெருமானுக்கு அன்புடையவர். பொருந்திய புகழினை உடையவர். அளவில்லாத தவத்தினில் மிக்கவர். சிவபெருமானால் ஆட்கொள்ளப்பெற்ற சீர்மை மிகுந்த திருநாவுக்கரசு நாயனாரின் திருவடிகளையே பெரும் பற்றாக அடைந்து, அவர்தம்மைக் கண்ணால் கண்டு அறியாததற்கு முன்ன மேயே, தாம் அவர்பால் மிகச் சிறந்த காதல் கொண்டு உளங்கலந்த அன்பினராய் உள்ளவர்.
*** தாண்டவம் - திருக்கூத்து. உயிர்களை ஆட்கொள் ளுதற் கென்றே செய்யும் கூத்து. காண்டகுகாதல் - விரும்பத்தகும் அன்பு.

பிறர் பொருளை உள்ளத்தால் விரும்புதலும், அவர் அறியாதவாறு எடுத்தலும், பொய் கூறுதலும், அளவற்ற இன்ப உணர்வு கொள்ளுதலும், பிறரைச் சினத்தலும் முதலாய எவ்வகைக் குற்றங்களினின்றும் இயல்பாகவே நீங்கியவர். வளம் பொருந்திய இல்வாழ்க்கையின் நெறி நின்றவர். வீட்டிலுள்ள முகத்தல், நீட்டல் முதலிய அளத்தல் கருவிகளுக்கும், துலாக்கோல் முதலிய எடுத்தலளவைக் கருவிகளுக்கும், மக்கள், பசுக்கள், எருமைகள் மற்றும் உள்ள எல்லாப் பொருள்களுக்கும் திருநாவுக்கரசு எனும் திருப்பெயரைச் சூட்டி அழைக்கும் நெறிப்பாடுடையார்.

குறிப்புரை: மேதி - எருமை. அளவைகள் அனைத்தும் உயிரற்றன. மக்கள், ஆன், எருமைகள் அனைத்தும் உயிருடையன. எனவே, உயிர்ப் பொருள், உயிரற்ற பொருள் ஆகிய, அனைத்திற்கும் நாவர சரின் திருப்பெயரையே இட்டு வழங்கியது, அப்பூதியாருக்கு நாவர சர் மீது இருந்த மீதூர்ந்த பத்திமையைக் காட்டுகின்றது. முதலாம் இராசராசன் தன் காலத்தில் நிறுத்தலளவைக் கருவிகளுக்குத் தட்சிண மேரு விடங்கன், ஆடவல்லான் என்றும் ஆடல்வல்லான் மரக்கால் என்றும் பெயரிட்டு வழங்கினமை ஈண்டு நினைவு கூர்தற்குரியது. (முதலாம் இராசராச சோழன் - அளவைகள் என்ற தலைப்பு, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவன வெளியீடு )

நாவரசரின் திருவடிவினைக் காணாதவராயினும், நிலைபெற்ற சிறப்பினை உடைய அப்பெருந்தகையாரின் திருத் தொண்டின் திறத்தினையும், இறைவன் அவருக்கு வழங்கிய இனிய அருளையும் கேட்டு, அவர்தம் திருப்பெயரால் திருமடங்களும், தண்ணீர்ப் பந்தலும் முதலாக உள்ள எல்லையற்ற அறங்களைச் செய்து, அம்முறைமையில் வாழும் நாளில்.
குறிப்புரை: மடங்கள் - அடியவர், துறவியர் முதலாயினோர் உண் ணவும், இருக்கவும் அமைந்த இடங்கள். திங்களூரில் மட்டு மன்றித் திருப்பராய்த்துறை, திருவீழிமிழலை, திருவான்மியூர் முதலான இடங்களிலும் திருநாவுக்கரசர் பெயரால் திருமடங்கள் இருந்தன. திருவதிகையில் வாகீசர் மடம் இருந்தது.
நாவரசரின் வடிவினைப் பார்த்தறியார் எனினும், அவர்தம் பத்திமையும் தொண்டும் அறிந்தவாற்றான் அப்பூதியடிகளார் அவர் மீது அன்பு கொண்டார். 'காண் தகைமை யின்றியும் முன் கலந்த பெருங்கேண்மையினார்' என்றார் முன்னும். 'புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்புஆம் கிழமை தரும்' (குறள், 785) என்பர் திருவள்ளுவர். இக்கேண்மைக்கு எடுத்துக்காட்டாகக் கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையாரும் கொண்டிருந்த அன்புடைமையைக் காட்டுவர் பரிமேலழகர் (குறள்- 785 உரை). அவ் வரலாற்றையடுத்து அத்தகைய கேண்மைக்கு எடுத்துக் காட்டாகும் வரலாறு இதுவாகும்.
கேட்டல் மாத்திரை யல்ல தியாவதும்
காண்டல் இல்லாது யாண்டுபல கழிய
வழுவின்று பழகிய கிழமைய ராகினும்
அரிதே தோன்றல் அதற்பட ஒழுகல் என்று
ஐயங் கொள்ளன்மின் ஆரறி வாளீர்!
இகழ்விலன் இனியன் யாத்த நண்பினன்
புகழ்கெட வரூஉம் பொய்வேண் டலனே
தன்பெயர் கிளக்குங் காலை என்பெயர்
பேதைச் சோழன் என்னும் சிறந்த
காதற் கிழமையும் உடையன் அதன்றலை
இன்னதோர் காலை நில்லலன்
இன்னே வருகுவன் ஒழிக்க அவற்கு இடமே. -புறநானூறு, 216
எனவரும் கோப்பெருஞ் சோழனாரின் அன்புடைமையைக் காண்க.

மலையரசனின் மகளாராய இளைய பெண்யானை யைப் போன்ற உமையம்மையாருடன் ஒருங்கிருந்து அருளும் சிவக் களிற்றினது திருப்பழனத்தைப் பணிந்து, திருத்தொண்டு செய்துவரும் திருநாவுக்கரசர், ஒரு நெறிய மனங்கொண்ட பேரன்பினால் பிறபிற திருப்பதிகளையும் வணங்கும் விருப்போடு திங்களூர் என்னும் திருப்பதியின் அருகுவருவாராய்,

குறிப்புரை: பொருப்பரையன் - இமவான். அம்மையாரைப்பிடி என்றதற் கேற்ப இறைவனைச் சிவக்களிறு என்றார்.

எண்ணற்ற மக்கள் போந்தும் புகுந்தும் இருத்தலை நீங்காத நல்ல பெருவழியின் கரையில், அருள் நிறைந்த பெரியவர் களின் திருவுள்ளத்தைப் போலக் குளிர்ந்த கருணைத் தன்மை உடையதாய்ப் பொருந்திய வேனில் வெம்மையின் துன்பத்தை எல்லாம் போக்கிக் குளமும், நிறைந்த நீரினை உடைய தடமும் போலக் குளிர்ச்சி நீங்காது விளங்கும் பரப்பினை உடையதாய், வளமிக்க நிழலைத் தரும் தண்ணீர்ப் பந்தரை வந்தணைந்தார்.
குறிப்புரை: ஜனம் - சனமாயிற்று. வழிக்கரை - திருநல்லூரிலிருந்து திருப்பழனம் வழியாக வரும் பாதையின்கரை. அப்பந்தரின் குளிர்ச் சிக்கு அருளுடையாரின் திருவுள்ளத்தை உவமை கூறியது உணர்ந்து இன்புறத்தக்கதாம். குளம் - இயற்கை அமைப்புக்களை யுடைய பெரு நீர்நிலை என்றும், தடம் - அவ்வப்பொழுது நீர் நிறைக்கப்படும் சிறு நீர்நிலை என்றும், இவற்றுள் முன்னையது பயிர்களுக்கும், பின் னையது ஏனைய மக்கள் முதலிய உயிர்களுக்கும் பயன்படுவன என் றும் விளக்கம் கொள்வர். இம்மூன்று பாடல்களும் ஒரு முடிபுடையன.

அவ்விடத்துக்கு வந்து அடைந்த திருநாவுக்கரசர் குளிர்ச்சியும், மென்மையும் உடைய இளந் தென்றல் காற்று வீசும் குளிர்ந்த அப்பந்தருடன் அமுதமாகிய தண்ணீரும் இருப்பதைக் கண்டு, தம் திருமனத்தில் வியப்புப் பொருந்த வருவார். 'திருநாவுக் கரசர்' என்னும் பெயர் எப்பக்கத்திலும் புகழ்பொருந்த எழுதியிருப் பதைக் கண்டார்.

குறிப்புரை: மந்தமாருதம் - மென்மையாக வீசும் தென்றல் காற்று. சந்தமுற - புகழ்பொருந்த; அஃதாவது வண்ணமும் சீர்மையும் பொருந்த.

இப்பந்தரை இப்பெயர் இட்டு இங்கு அமைத்தவர் யாவர்? என்று கேட்ட நாவரசருக்கு, அப்பந்தரின் வரலாற்றினை அறிந்த அங்கு இருந்தவர்கள், இறைவனால் ஆட்கொள்ளப்பெற்ற திருநாவுக்கரசு எனும் பெயரினால், சொலற்கரிய சிறப்புப் பொருந்திய அப்பூதியடிகளார் என்பார் இப்பந்தரைச் செய்தமைத்தனர். இவ்வாறே தவறுதலின்றி அவர்க்கென இருக்கும் சாலை, குளம், சோலை ஆகிய வற்றிற்கும் அவ்வரிய பெயரை இட்டு அழைப்பார் என்றார்.
குறிப்புரை: தப்பின்றி - தவறுதலின்றி; அஃதாவது தமக்கென உள வாகும் உயிர்ப்பொருள், உடைமைப் பொருள் ஆகிய அனைத்திற்கும் தவறாது திருநாவுக்கரசு எனும் பெயரையே இட்டு,

என்று அங்கு உள்ளவர்கள் கூற, அதைக் கேட்ட நாவரசர் இப்பெயரிட்டு அழைத்தற்கு என்ன காரணம் என எண்ணிய வராய், அங்கு நின்றவர்களை நோக்கி, அவர் எவ்விடத்து உள்ளார்? என்று கேட்க, நெருங்கிய பூணும் நூல் பொருந்திய மார்பினை உடைய அவரும் இப்பதியினரே ஆவர்; இப்பொழுதுதான் தம் மனைக்குச் சென்றனர்; அம்மனையும் தொலைவில் உள்ளதன்று; மிக அணிமையில் உள்ளது என்றார்கள்.


குறிப்புரை: 'அப்பந்தர், அறிந்தார்கள்' எனச் சென்ற பாடலிலும் 'நின்றவரை நோக்கி' என இப்பாடலிலும் பொது வகையால் குறித்தார் எனினும், அவர்கள் அப்பூதியாரின் ஆணை வழிநின்று வருவாரை வரவேற்றும், அவர்க்குத் தண்ணீர் வழங்கியும் வந்த ஏவலாளர்களே ஆவர் என்பது உய்த்துணரத் தக்கதாம். அவர் எவ்விடத்தார்? எனக் கேட்ட நாவரசருக்கு, அவர் இல்லத்திலுள்ளார் எனக் கூறும் பணி யாளர்கள், அவர் அவ்வில்லத்திற்குச் சென்ற காலத்தின் அணிமை யையும், அவ்வில்லத்தின் இட அணிமையையும் ஒருங்கு கூறியது, அவர்கள் தம் தலைவர்பால் கொண்டிருக்கும் அடிமைத் திறத்தையும், தண்ணீர்ப் பந்தருக்கு வருவாரிடத்து நடந்துகொள்ளும் அறிவோடு கூடிய அன்புடைமையையும் ஒருங்கு காட்டுகின்றன.

அவ்விடத்தினின்றும் நீங்கிய முனிவராகிய நாவரசரும் சென்று, அப்பூதியடிகளார் வாழும் இல்லத்தின் முன் சென் றாராக, உள்ளிருந்த திங்களூரிலுள்ள மறையவர்களின் தலைவராகிய அப்பூதியாரும், வளமுடைய தம்மனைமுன் நம் சிவபெருமானின் அடியவர் ஒருவர் வந்துள்ளார் என்று சொல்லக் கேட்டு, அம் மனையின் முன் வந்து சேர்ந்தார்.

குறிப்புரை: வேண்டுதலும் வேண்டாமையும் அற்ற திருவுள்ளம் உடையராதல் பற்றி நாவரசரை முனிவர் என்றார். கடைத்தலை - முன்றில்: வீட்டின் முன். செழுங்கடை - வளம் பொருந்திய திருமனை யின் முன்பு. செழுங்கடை என்றார், அவ்வீட்டு வாயிலின்முன், நாளும் அடியவர்களும் முனிவர்களும் வந்து உணவும் உபசரிப்பும் பெற்று வாழ்தலின்.

மனையின் முன் அடியார் ஒருவர் வந்துள்ளார் என்பதைக் கேட்ட அளவிலேயே, விரைந்து வந்து மனையின் திருமுன்பு வந்த அப்பூதியாரும் நாவரசரின் திருவடிகளை வணங்க, அவர்தம் திருவடிகளில் வணங்குதற்கு முன்னமே தாமும் வணங்கு கின்ற திருநாவுக்கரசர் முன்பு, அந்தணராகிய அப்பூதியார் 'திருமுகத் தில் கருணைபொழிகின்ற திருவடிவினை உடைய பெரியீரே! என் மனையில் வந்து அருளுதற்கு அடியேன் முன் முடிவில்லாத தவத்தைச் செய்திருந்தேன் போலும்' என்று வியந்த வண்ணம் கூறினார்.

குறிப்புரை: 'பத்தியின் பாலராகிப் பரமனுக்கு ஆளாம் அன்பர் தத்தமில்' (தி. 12 சரு. 1-2 பா. 22) வணங்குமா போல், என முன் நெற் பயிர்களின் வளத்தை ஆசிரியர் காட்டுதற்குக் காரணம், இவ்வகையில் அடியார்கள் தத்தமக்குள் வணங்கி மகிழ்ந்த திறன் கண்டேயாம். கொல் - ஐயப் பொருளில் வந்த இடைச்சொல்.

ஒப்பற்ற மாமேரு மலையை வில்லாக வளைத்த சிவபெருமானைத் 'திருப்பழனம்' என்னும் திருப்பதியில் வணங்கிய பின், இங்கு வருகின்றோம். வரும் வழியில் நீர் வைத்திருக்கும் வள மார்ந்த நிழல் தரும் தண்ணீர்ப் பந்தரைக் கண்டும், அத்தன்மையால் மேலும் செய்து வருகின்ற வேறு பிற அறங்களைக் கேட்டும் இத்திருமனைக்கு வந்தணைந்தோம் எனக் கூறுபவர்.

குறிப்புரை: வழிக்கரையில் - வழியின் ஓரத்தில், 'அளவில் சனம் செலவொழியா வழிக்கரையில்' என்றார் முன்னும்.

கங்கை தாங்கிய திருச்சடையை உடைய சிவ பெருமானின் அடியவர்களுக்கு நீர் வைத்திருக்கும் அளவற்ற பெருமையுடைய தண்ணீர்ப் பந்தலில், நும் பெயரை எழுதாமல் வேறொரு பெயரை முகப்பிலெல்லாம் எழுத வேண்டிய காரணம் என்னவோ? என்று குற்றமற்ற மொழி வேந்தராகிய நாவரசர் அவரிடத்துக் கேட்டனர்.

குறிப்புரை: முன்னெழுதல் - முகப்புக்கள் தோறும் எழுதுதல்: வீடு, பந்தர், தொழுவம் முதலியவற்றின் முகப்பில். கோது - குற்றம். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

நின்ற அப்பூதி அடிகளார், அம்மொழியைக் கேட்ட அளவில் மனம் அழிந்தவராகி, நீர் நன்மையான மொழிகளை அருளிச் செய்திலீர்! நாணம் இல்லாத சமணர்களாய கொடியவர்களுடன் சேர்ந்து பல்லவன் செய்த சூழ்ச்சிகளை எல்லாம், தாம் இறைவரின் திருத்தொண்டில் அழுந்தி நின்றமையையே துணையாகக் கொண்டு வென்ற, அப்பெருந்தகையாரின் திருப்பெயரோ வேறொருபேர்? என வெகுண்டவராய்,

குறிப்புரை: மனம் அழிந்த நிலையிலும் 'தீங்கு அருளினீர்' என்னாது 'நன்று அருளிச் செய்திலீர்' என்றார், அடியவர் மாட்டு அவர் கொண்டிருந்த பத்திமையும், தீய சொற்களை மறந்தும் கூறாத அவர் பெற்றிமையும் தோன்ற. பதகர் - கொடியவர். சூழ்ச்சி - கொலை சூழ்ந்த செயல்கள். திருத்தொண்டின் உறைப்பு - இறைவரிடத்தும் அடியவரிடத்தும் செய்துவரும் தொண்டில் அழுந்திநிற்கும் நிலை. அரசன் ஆணை வழித் தம்மை அழைக்க வந்தோரிடத்து, 'நாமார்க்கும் குடியல்லோம்' (தி. 6 ப. 98 பா. 1)என மறுமாற்றம் மொழிந்தமையும், அவர் மீண்டும் பணிந்து வேண்ட, 'ஈண்டு வரும் தீவினைகளுக்கு எம்பிரான் உளன்'(தி. 12 பு. 21 பா. 94) என்று கருதி அவர்களுடன் சென்றமையும், அவர்கள் ஒன்றன் பின் ஒன்றாகச் செய்த தீங்குகளுக் கெல்லாம் இறைவனின் திருவடியிலேயே மனம் வைத்தவராய், அவர்களை ஒறுத்தலின்றி அச்செயல்களை ஏற்றமையும் காண்க.

'நம்மை அடிமையாகக் கொண்டிருக்கும் இறைவ னின் திருவடிகளின் கீழ் விரும்பிச் செய்யும் திருத்தொண்டினால், இம்மையிலும் நாம் உய்திபெறுவோம் என்பதை என்போன்றவர் களும் தெளியுமாறு, சிவமாம் தன்மைப் பெருவாழ்விலேயே அழுந்தி நிற்கும் திருநாவுக்கரசரின் திருப்பெயரினை அடியேன் யாண்டும் எவர்க்கும் பெயராகக் கொண்டு நிற்ப, நீர் கொடுமை யானதொரு சொல்லை யான் கேட்கக் கூறினீர்! என்று சொல்லி,

குறிப்புரை: செம்மை - சிவபரம் பொருளிடத்திலேயே அழுந்தி நிற்றல். புரிதல் - அத்தன்மையை இடைவிடாது மேற்கொண்டிருத்தல். 'திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக்கரையன்' (தி. 7 ப. 39 பா. 4), 'செம்மையுள் நிற்பராகில்' (தி. 4 ப. 76 பா. 2) என்பன வாகிய திருவாக்குகளும் காண்க.

அலைகள் மிக்கெழும் கடலில் கல்லையே தெப்பமாகக் கொண்டு கரை ஏறிய அப்பெருந்தகையின் பெருமை யினைச் சிவபெருமானால் தோற்றுவிக்கப் பெற்ற இந்நில உலகில் அறியாதவர்கள் எவரும் உளரோ? மங்கலம் பொருந்திய சைவ மெய்த் திருவேடத்துடன் நின்றும், இவ்வகையாகக் கூறினீர்! நீர் எவ்விடத்தில் உள்ளீர்? நீர் தாம்யார்? சொல்வீராக என்று கூறினார்.
குறிப்புரை: கல்மிதப்பு - கல்லாகிய தெப்பம். இம்மூன்று பாடல் களும் ஒரு முடிபுடையன.

சிவப் பொலிவுடைய மறையவராகிய அப்பூதி அடிகளார் அவ்வாறு கூறக்கேட்ட திருநாவுக்கரசர், அவர்தம் பெரு மையை அறிந்து விடை கூறுவாராய்ப், புறச் சமயத்துறையினின்றும் ஏறும் பொருட்டு அருள் பெறுவதற்கு ஏதுவாய சூலை நோயால் ஆட்கொள்ளப் பெற்றுப் பெருமானாரை மீண்டும் அடைந்து உய்தி பெற்ற தெளிந்த உணர்வில்லாத சிறுமையுடையேன் யானே என்றார்.

குறிப்புரை: திரு - சைவமாம் பொலிவு. பிறதுறை எனப் பொது வகையால் கூறினரேனும் அவர் இருந்து வந்த சமயம் சமணமேயாம். 'இச்சித்த தெய்வம் போற்றி', 'யாதொரு தெய்வம் கொண்டீர் . . . . . வருவர்' (சிவஞா. சித்தி. இரண்டாம் 24, 25) எனவரும் மெய்ந்நூற் கூற்றுகளுக் கிணங்க, அச்சமயத்தையும் 'துறை' என்றார். இறைவன் அருளிய சூலையே, மீளச் சைவசமயம் சார்தற்கு ஏதுவாயினமையின், அச் சூலைதானும் 'அருளு பெருஞ்சூலையா யிற்று. ' இது போன்றே ஆளுடைய நம்பிகளால் முன்னர்க் கிழித்தெறி யப்பட்ட ஆவணமும் அற்புதப் பழ ஆவணம் ஆயிற்று. வரவரக் கண்டு ஆராய் மனமே' (சிவபோக சாரம், 132) எனவரும் தருமைக் குரு மூர்த்திகளின் அருள் மொழி எட்டுணையும் மறக்கப் போமோ!
தம் பெருமையை மனம் மொழி மெய் ஆகிய முக்கருவிகளா லும் ஏற்றுப் போற்றியும், அயராத பத்திமை பூண்டும் நிற்கும் அப்பூதி யடிகளாரின் உரையைக் கேட்ட நாவரசர், ஒரு சிறிதும் தம்மை வியத்தலின்றித் தம் சிறுமை குறித்த பணி மொழிகளையே கூறிய ருளிய திறம் எஞ்ஞான்றும் நினைவு கொளற்குரியதாம். 'தம் புகழ் கேட்டார் போல் தலைசாய்த்து மரம் துஞ்u2970?' (கலித்தொகை, நெய். 2) எனவரும் சங்கச் சான்றோரின் கூற்றிற்கு இஃது அரணாக நிற்கும் அருமைப் பாடும் காண்க.

இவ்வாறு நாவரசர், தம்மை அப்பூதியடிகளார் அறிய உரைத்தருளிச் செய்யவே, உண்மையுணர்ந்த அப்பூதியடிக ளார் கைமலர்கள் தாமே தலையின் மீது குவியவும், கண்களினின்றும் வரும் நீர் அருவிபோலப் பாய்ந்து வழியவும், மொழிதடுமாறி, உடல் முழுதும் மயிர்க்கூச் செறிந்து விளங்கவும், நிலத்தின்மீது உடல் பொருந்த விழுந்து, அவருடைய திருவடித் தாமரைகளைத் தலைமிசை பொருந்தப் பூண்டனர்.

குறிப்புரை: அறிய - அப்பூதியடிகளார் அறிய. நாவரசர் என அறிந்த அளவிலேயே அவர்மீதிருந்த அன்பின் மீதூர்வால் அப்பூதி அடிகளார்க்கு நிகழ்ந்த மெய்ப்பாடுகள் ஐந்தாம். அவை: 1. கைகள் தாமே தலைமீது குவிதல். 2. கண்களில் அருவியென நீர் பெருகுதல். 3. சொல் தடுமாறல். 4. உடல் மயிர்க்கூச் செறிதல். 5. தரைமிசை வீழ்தல். பல்காலும் தாம் எண்ணியும் வழிபட்டும் போற்றி வந்த நாவரசர் பெருமானாரை, எதிர்பாராமல் காணக்கிடைத்த பேறும் அப்பேற்றால் விளைந்த விளைவும் இவையாம். இம்மெய்ப்பாடுகள் நாவரசர் பெருமான் தில்லைப் பெருமானை வழிபட்ட பொழுது நிகழ்ந்த மெய்ப்பாடுகளோடு ஒப்பிட்டு மகிழ்தற்குரியன 'கையும் தலைமிசை புனை அஞ்சலியன' (தி. 12 பு. 21 பா. 167) எனவரும் திருப்பாடலை நினைவு கூர்க.

அங்ஙனம் வீழ்ந்து திருவடிகளைப் பூண்டு கிடக்கும் அப்பூதியடிகளாரைத் திருநாவுக்கரசர், தாமும் எதிர் வணங்கி அவரை எடுத்தருளவே, அரிய மறையவராகிய அப்பூதியடிகளாரும் வறியவர்கள் பெரும் பொருளைப் பெற்றது போல, மனம் மகிழ்ச்சி மீதூர அவர் முன்பு நின்று ஆனந்தக் கூத்தாடியும் பெருவிருப்புடன் அவரைச் சூழ்ந்தும் ஓடினார், பாடினார்.

குறிப்புரை: களிகூர - மகிழ்ச்சி மிக. 'ஆசையொடும் அரனடியார் அடியாரை அடைந்திட்டு . . . கும்பிட்டுத் தட்டமிட்டுக் கூத்தாடித் திரியே' (சிவஞா. சித்தி, பன்னிரண். -2) எனவரும் மெய்ந்நூற் கூற்று அப்பூதியடிகளாருக்கு அநுபவமாயிற்று.

நேர்ந்த பெருமகிழ்ச்சியால் முன்னர் செய்யத் தகுவது இது என்பதும் அறியாதவராகி, வீட்டிற்குள் விரைந்துசென்று, மனைவியாருக்கும், மக்களுக்கும், மற்றுமுள்ள சுற்றத்தாருக்கும், தம்மை ஆட்கொண்டருளும் நாவரசர் எழுந்தருளியிருக்கும் மகிழ்ச் சிச் செய்தியைச் சொல்லி, அன்பு மிக, மகிழ்ச்சி மிக்க சுற்றத்தார் அனை வரையும் உடன் அழைத்துக் கொண்டு வெளியில் வந்தார்.

குறிப்புரை: ஈண்ட - விரைந்து. ஈண்ட எய்தி எனக் கூட்டுக. ஓகை - மகிழ்ச்சி. பூண்ட - அன்புமிகுந்த.

மனைவியாருடன் மக்களும் மற்றுமுள்ள சுற்றத் தார்களும் முதலாக உள்ள அனைவரையும் கொண்டு வந்து வணங்கச் செய்து, தணியாத ஆசையுடன் தலைவராகிய நாவரசரை மனைக்குள் எழுந்தருளுவித்து, அவருடைய திருவடிகளை முற்பட நீர் கொண்டு விளக்கி, மலர் நிறைந்த அப்புனித நீரைத் தங்கள் மீது தெளித்துக் கொண்டு அதனை உள்ளும் பருகினார்.

குறிப்புரை: அடியவர்களை மனையகத்துள் எழுந்தருளுவித்த வுடன், முற்படச் செயத்தக்கது இதுவாம். 'கொண்டு வந்து மனைப் புகுந்து குலாவு பாதம் விளக்கியே' (தி. 12 பு. 4 பா. 4) என முன்னர்க் கூறியுள்ளமையும் நினைவு கூரத் தக்கது. 'மலர்புனை நீர்' என மாறுக; மலர்களிட்ட நீர் என்பது கருத்து. இவ்விருபாடல்களும் ஒருமுடிபின.

தக்கதொரு பலகையிட்டு அதன்கண் எழுந்தருளு வித்துச் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகளை மிகு விருப்போடு விரும்பிச் செய்து, மணம் நிரம்பிய திருநீற்று மடலை அவர் திருமுன் ஏந்தியவராய், மனமகிழ்ச்சி மீதூர, உலகம் உய்யத் தோன்றிய நாவரசரைத் திருவமுது செய்தருளுமாறு அன்பு பெருக அவரிடத்து விண்ணப்பம் செய்ய, அரசரும் அதற்கு இசைந்தருளினார்.
குறிப்புரை: திருநீற்று மடலை ஏந்துதல் அவருக்குச் செய்யும் உபசாரமாகும். திருநீற்றுக் காப்பு - திருநீறாகிய காப்பு: அணிந்தாரைக் காத்தல் பற்றி இங்ஙனம் கூறினார். இதுபற்றியே வடநூலாரும் இதனை 'ரட்ைu2970?' என்றழைப்பர். பூசனைகள் - நறுமணப் புகை காட்டுதலும், நல்விளக்குக் காட்டுதலும், போற்றி உரை செய்தலும் முதலாயினவாம். விரும்பி நல் விளக்குத் தூபம் விதியினால் இடுதல் இறைவற்கன்றி, அடியவர்க்குமாகும். இதனை மாகேசுவரபூசை என்பர்.

தவத்தில் சிறந்த நாவரசர் திருவமுது செய்ய இசைந்தருளிய பொழுது, அப்பூதியடிகளார் தம் மனைவியாரைப் பார்த்து, நமக்குக் கிடைத்த பேறுதான் என்னே! எனக் கூறி, பின்னும் கருணை பொருந்திய திருக்கழுத்தினையுடைய சிவபெருமானின் திருவருளால், அப்பேறு நமக்கு வாய்த்தது என்று கூறி 'நாம் இதனால் உய்தி பெறுவோம்' என்று மகிழ்ந்தவாறு உணவு அமைக்கத் தொடங் கினார்கள்.

குறிப்புரை: நாவரசரைத் தம் திருமனையின் கண் ஏற்றுப் போற்றும் பேறு திருவருளால் வாய்த்தது என்றார், உயிர்கட்குக் கிட்டும் பேறெல்லாம் அப்பெருமானால் வாய்த்தல் பற்றி. 'வகுத்தான் வகுத்த வகையல்லால் . . . அரிது' (குறள், 377), 'பால்வரை தெய்வம்' (தொல். கிளவி. 58), 'செய்வினையின் பயனைச் சேர்ப்பான் ஒருவன் உளன்' (திருவருட். 53) என்றற் றொடக்கத்தனவாகிய கூற்றுக்களை நினைவு கூர்க.

தூய்மையான நல்ல பல கறிவகைகளை ஆறு சுவைகளும் பொருந்தச் சமைத்து, இனிமையான திருவமுதையும் அமைத்து, உணவு கொள்ளுதற்காகத் தம் மக்களுள் மூத்த திருநாவுக் கரசை நோக்கி வாழைக் குருத்தினுள் தக்கதொரு குருத்தை அரிந்து கொண்டுவா என விரைவுபடுத்தி அனுப்பினர்.

குறிப்புரை: தூய நற்கறிகள் - தூய நிலத்தில் தோற்றுவிக்கப் பட்டனவும், உடற்கு நன்மை பயப்பனவுமாய கறிவகைகள். கறிகளையும் உணவையும் ஆக்குதல் மனைவியார் செயலாக அமை யினும் அன்பினாலும் பத்திமையினாலும் தாமும் உடனிருந்தமை பற்றி அச்செயற்குத் தாமும் உடந்தை ஆயினார்.

'நல்ல தாயும் தந்தையுமாகிய இருவரும் கட்டளையிட, அதனை ஏற்றுச் செய்யும் இப்பேற்றைப் பெற்றேன்' என்று மூத்த திருநாவுக்கரசும் உள் மகிழ்ந்து விரைந்து சென்று, வாழைத் தோட்டத்துள் புகுந்து, பெரியதும் வளப்பமானதுமான அழகிய குருத்தினை அரியும் பொழுது, ஒளியுடைய பாம்பு ஒன்று அத் திருமகன் துன்புற்று மயங்கிச் சோர்வடைய அவனது உள்ளங்கையில் தீண்டியது.

குறிப்புரை: வாழைக் குருத்தை அரிந்து வரும் பணியைத் தம் இளவல்களில் ஒருவருக்குப் பணிக்காது, தனக்குப் பணித்தமையை நினைந்து அப்பெருமகன் தானும் 'நல்ல தாய் தந்தை ஏவ' என்றான். வீட்டில் தாய் தந்தையர் ஏவும் பணியை உளம் மகிழ ஏற்றுச் செய்யும் மக்களே நன்மக்களாவர். அவர்கள் பணிகொள்வதற்கு ஏற்ப அம் மக்கள் பெரிதும் வீட்டிலேயே இருத்தலும் வேண்டும். அதுகருதியே 'தனையரும் மனையில் தப்பார்' (தி. 12 சரு. 1-2 பா. 34) என்றார் முன்னும். இளைஞர் சமுதாயம் இவ்வகையில் வாழ இறையருள் முன்னின்று அருளுமாக. அகம் + கை = அங்கை என்றாயிற்று: உள்ளங்கை.

கையில் தீண்டி, அக்கையையே சுற்றிக் கொண்டு கண்களில் நெருப்பை வீசுகின்ற நச்சுப்பையை உடைய அந்தப் பாம்பை, கையை உதறி வீழ்த்தி விட்டு, மனப்பதைப்புடனே 'பாம்பு தீண்டியதால் உளதாய கொடிய விட வேகத்தால் தான் விழுவதற்கு முன்னே, மிக விரைவாகச் சென்று அரிந்த இவ்வாழைக் குருத்தைச் சென்று கொடுப்பேன்' என எண்ணி ஓடி வந்தவன்.

குறிப்புரை: பைஅரா - நச்சுப்பையினையுடைய பாம்பு. பாந்தள் - பாம்பு. தன் உயிரினும், தாய் தந்தையர் ஏவிய பணியை முட்டின்றிச் செய்தலில், அத்திருமகனாருக்கு இருந்த ஆர்வத்தையும், வந்திருந்த அடியவர் மீது அவருக்கு இருந்த பத்திமையையும் நினைவு கூர்க.

தன்னிடத்துப் பொருந்தியவிடத்தின் வேகத்தினும், தான் விரைந்து செல்லும் செலவு பெருக, வருத்தத்துடன் மனை யிடத்துச் சேரும் பொழுது, பாம்பு தீண்டியதை நாவரசர் உணவு அருந்துவதற்கு இடையூறாகுமாறு தாய் தந்தையர் உள்ளிட்டவர்க்குச் சொல்ல மாட்டேன் என மனத்தில் எண்ணி, அவ்வுறுதிப்பாட்டுடன் வளமிக்க வீட்டிற்குள் புகுந்தவனாய்.

குறிப்புரை: திருந்திய கருத்து - தம் இருமுது குரவர்களானும் போற்றி வணங்கி வரும் நாவரசர், உணவு அருந்துவதற்கு இடையூறு வாராதவாறு, தன் கொடுந்துன்பத்தை எவரிடமும் சொல்லாதிருத்தல் வேண்டும் எனும் கருத்து. தன் இறப்பினும், அடியவர் உணவு அருந்தக்காலம் தாழ்த் தலும், அதுபற்றித் தன் இருமுதுகுரவரும் கொள்ளும் பெருந்துன்ப முமே இன்னாது எனக் கருதும் உள்ளம் எத்துணை மேம்பட்ட உள்ளமாகும்? 'சாதலின் இன்னாதது இல்லை இனிதுஅதூஉம் ஈதல் இயையாக் கடை' (குறள், 230) எனவரும் திருக்குறளை நினைவு கூருமாறு அமைந்தது மூத்த திருநாவுக்கரசின் திருவுள்ளம்.

அழிக்கும் நஞ்சானது முறையாக மேல் ஏறித் தலைக் கொண்ட ஏழாம் வேகத்தை அடைந்த நிலையினை, வெளித் தோற்றத்திலும் அறியுமாறு பற்களும் கண்களும் உடலும் கருகித் தீய்ந்து விளங்க, உரைக்கும் சொற்களும் தடுமாறி உயிர்விடும் நிலை வரவும் அதை விடாமல் தாங்கிக் கொண்டு, மயங்கி வீழ்கின்ற அவன், உணவு உண்ணுதற்கான அவ்வாழைக் குருத்தைத் தாயாரிடம் வைத்து நிலத்தில் வீழ்ந்தனன்.

குறிப்புரை: தலைக் கொண்ட - உச்ச நிலையினையடைந்த. ஏழாம் வேகம் - இரத்த ஓட்டம் இருதயத்தில் தூய்மை செய்யப்பட்டு உடலில் பல உறுப்புக்களினும் சென்று பரவி மீளவும் தூய்மைபெற அங்குச் சேர்தல் ஒரு ஓட்டம் ஆகும். இவ்வாறு ஓடுதலை வேகம் என்றும் கூறுவர். இவ்வாறு ஓடிச் செல்லும் குருதியில் நஞ்சு பொருந்த அதனால் அது பரவப்பட்ட நிலையில் ஒருதாது அழியும், இவ்வகையில் ஏழாம் முறை பரவும் பொழுது ஏழு தாதுக்களும் அழிந்து உயிர் நீங்கும் என்பர். இம்மூன்று பாடல்களும் ஒரு முடிபின.

இந்நிலையில் தளர்ந்து வீழும் மகனைக் கண்ட தாயாரும் தந்தையாரும் உள்ளம் பதைபதைத்து, அவன் வீழ்தற்கான காரணத்தையும் உற்றுநோக்கி, குருதி வடிந்த நிலையையும் உடம்பில் விளங்கும் வேறு அடையாளங்களையும் கண்டு, இவன் கொடிய தோர் விடத்தால் உயிர் துறந்தான் எனத் துணிந்து, உளம் தடுமாற்றம் இன்றி, அடியவர் அமுது செய்வதற்கு வேண்டிய விளைவை ஆய்பவராய்.

குறிப்புரை: துளங்குதல் - மனம் தடுமாறுதல். மகன் இறந்த வருத்தத் தினும், அடியவர் அமுது செய்யக் காலம் தாழ்க்கின்றமையே இருவர் உள்ளத்தும் இடம் பெற வருத்திற்று. இமயத்தினும் இவ்வுள்ளங்கள் உயர்ந்தன.

பெறுதற்கரிய மைந்தனைப் பாயுள் வைத்து மூடி, மனையின் வெளிப் புறத்திலுள்ள முற்றத்தின் ஒரு புறத்தில் எவரும் காணா வண்ணம் மறைத்து வைத்து, 'இச்செயல் முழுமையாக யாவரும் அறியாதவாறு இவ்வடியவர்க்கு நாம் அமுது செய்விப் போம்' எனக் கருதியவராய், ஆற்றல் பொருந்திய திருநாவுக்கரசர் இடத்து மிகுவிருப்பொடு விரைந்து வந்தனர்.

குறிப்புரை: அற - சிறிதும். விறல் - ஆற்றல்: திருத்தொண்டின் உறைப் பாலே எதனையும் வெல்லும் ஆற்றல். 'பொய்மாயப் பெருங்கடலில்' (தி. 6 ப. 27) எனவரும் திருப்பதிகமும் காண்க. விடம் தீண்டியமையை அப்பூதி அடிகளாரும் அவர்தம் மனைவியாரும் மறைத்த பொழுதும், ஐயப்படாது அவர்தம் அகத்தது உணரும் விதமும், சிவபெருமானின் திருவருளால் இறந்த உயிரை மீட்கும் விதமும் காண்க என்பர் சிவக் கவிமணியார் (பெரிய. பு. உரை). இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

விரைந்து வந்து, உணவு உண்ணக்காலம் தாழ்க்கின்றமையை எண்ணியவராய், உணவும் கறிகளும் முதலாயின வற்றையெல்லாம் அழகுற அருகே வைத்து, அதன் பின்பு ஒப்பற்ற சிறப்பையுடைய தொண்டராகிய நாவரசர் முன் விழுந்து வணங்கி, எழுந்து நின்று, அமுது செய்யும் வாயிலாக எம் குடிமுழுதும் உய்யு மாறு அருளல் வேண்டும் என்று கூற, நாவரசரும் அதனைக் கேட்டு,

குறிப்புரை: படி - ஒப்பு.

அரிய தவத்தினரான நாவரசர் பெருமான், செம்மையான தம் அடிகளை விளக்கிக் கொண்டு, வேறொரு திருந்திய இருக்கையில் அமர்ந்து, அவர்கள் உண்ணும் இலையைத் திருத்தி முறைப்படி அமைப்பதற்கு முன்னர், திருநீற்றினையணிந்து கொண்டு, அடிமைத் திறத்தில் பிழையாது நிற்கும் அப்பூதியடிகளாருக்கும் அவர்தம் மனைவியாருக்கும் பொருந்திய திருநீற்றை அளித்து, அவர்களின் மைந்தர்களுக்கும் திருநீற்றை அளிக்க முற்பட்டபோது,

குறிப்புரை: உணவு அருந்துமுன் கைகால் தூய்மை செய்து கொள்ளுதல் இன்றியமையாததாகும். அதன்பின் திருநீறு அணிந்து கொள்ளல் வேண்டும். அருளாளர்களும் சான்றோர்களுமாயிருப் பின் பிறருக்கும் திருநீற்றை வழங்க வேண்டும். இம்முறையிலேயே நாவரசரும் நின்று ஒழுகுகின்றார். இயல்புடைய இருவர் - அடிமைத் திறத்தில் பிறழாது நிற்கும் இயல்பினரான அப்பூதியடிகளாரும் அவர்தம் மனைவியாரும். இயல் என்னும் பொதுச் சொல் அவ்வவ் இடத்திற்கு ஏற்ற இயல்பைக் குறித்து நிற்கும். 'இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன்' (குறள், 47) 'இயல்புடைய மூவர்க்கும்' (குறள், 41) என வருமாற்றை நினைவுகூர்க. பொருந்திய நீறு - அடியவர்கள் என்பார்க்குப் பொருந்திய நீறு. 'பொருத்தமதாவது நீறு' (தி. 2 ப. 66 பா. 6) என்றலும் காண்க.

பழமையான நான் மறைகளிலும் நூல்களிலும் பயின்ற வாய்மை ஒழுக்கமுடைய அப்பூதியடிகளாரை நோக்கி, அன்பால் இம்மக்களுள் மூத்த பிள்ளையையும் முன்னே மேன்மை மிக்க வெண்ணீறணிதற்குக் காட்டுக என்றுரைக்க, நிகழ்ந்த செய்தியை உரைக்க மாட்டாதவராய், 'இப்போது இங்கு அவன் உதவான்' என்றார்.
குறிப்புரை: நீறு பெறுதற்கு அடிகளாரின் மக்கள் அனைவரும் முன்னிற்ப அவர்களுள் வயது முறைமையில் நீறு வழங்க வேண்டும் எனத் திருவுள்ளம் பற்றிய நாவரசர், மூத்த சேயையையும் முன்னே காட்டுக என்றனர். இம்மூன்று பாடல்களும் ஒரு முடிபின.

அத்தகைய சொல்லைக் கேட்ட அளவிலேயே அழகிய கருணை பொருந்திய பெருமானின் திருவருளால் அப்பூதி அடிகளாரின் நேரிய திருவுள்ளத்தில் ஒரு தடுமாற்றம் நேரக் கண்டு, 'இவ்வுரை என்னுள்ளத்தில் பொறுக்கலாற்றாது; அவன் என்செய் தனன்? ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்க வேண்டும்; அம்மெய்ம்மையை விரித்து உரைப்பீராக' என்று அரசர் கூறுதலும், உடல் நடுங்கிப் பயந்து.

குறிப்புரை:

பெருமை மிக்கவரான நாவரசர் உணவு கொள்ளும் பெரும் பேறு உடன்கிட்டாது இவ்வாறு நேருவதும் என்னோ? என்று எண்ணி உண்மையை உரைக்க முற்படாராயினும், உண்மையை உள்ளவாறு உரைப்பதே தகுதி எனக் கொண்ட சீலத்தால், மனம் உடைந்து வருந்தி, வணங்கித் தம் மூத்த பிள்ளைக்கு நேர்ந் ததைச் சொன்னார்.
குறிப்புரை: அன்று, ஏ என்பன அசைநிலைகள். அன்று - அப் பொழுதே என உரை காண்பர் சிவக்கவிமணியார் (பெரிய. பு. உரை). இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

அவ்வாறு அவர் கூறியதைக் கேட்ட நாவரசர் 'நீவிர் கூறியது மிக நன்றாய் இருந்தது. இவ்வாறு செய்தார் உலகில் யாவர் உளர்?' என்று உரைத்தவாறே, முன்னாக எழுந்து சென்று, உயிர் நீங்கிய அம்மைந்தனின் உடலை நோக்கிய வண்ணம், இறைவன் அருள வேண்டி இசைபொருந்திய பாவகையில் திருப் பதிகத்தைப் பாடிப் பாம்பின் நஞ்சை நீக்கி அருளினார்.

குறிப்புரை: கேளா - கேட்டு. அப்பூதியடிகளார் தம் மூத்த பிள்ளைக்கு நேர்ந்ததைக் கூறியதோடு, அது திருவருள் வயத்தால் ஆகியது, அதுபற்றித் திருவுள்ளம் பற்றாது அமுது செய்ய வேண்டும் என்றும் வேண்டிக் கொள்ள, அதனை நினைந்தே நாவரசரும் 'நன்று நீர் புரிந்தவண்ணம் யாவர் இத்தன்மை செய்தார்' என்று உரைக்க லாயினர். இச்செய்தி உய்த்துணர நின்றது. பாவிசைப் பதிகம் - 'ஒன்று கொலாம்' (தி. 4 ப. 18) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணில் அமைந்த திருப்பதிகம்.
முன்னர் நாவரசர் வரலாற்றில், மறைத்து வைத்திருந்த மூத்த திருநாவுக்கரசரின் உடலைத் திருக்கோயிலின் முன் கொணர்வித்துப் பதிகம் பாடி நஞ்சை நீக்கி அப்பெருமகனை உய்வித்தார் என விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அதனையே சுருங்க 'ஆவிதீர் சவத்தை நோக்கி, அண்ணலார் அருளும் வண்ணம் பாடினார்'(தி. 12 பு. 21 பா. 207-209) எனக் கூறுகின்றார். முன்னர் விரித்த ஒன்றைச் சுருக் கியும் சுருக்கிய ஒன்றை விரித்தும் கூறல் ஆசிரியர் திருவுள்ளம் ஆதலின், ஈண்டும் அதனை விரித்துக் கூறாராயினர். மூத்த திருநாவுக்கரசின் உயிர் நீங்கிய உடல் புறமனைப் பக்கத்தே வைக்கப்பட்டிருந்தமை 1810ஆம் பாடலானும், நாவரசரை உணவு ஏற்க வேண்ட அவரும் வந்து திருநீறு அளிக்குங்கால் இச்செயல் அவருக்குத் தெரிய வந்தமை அப்பாடலைத் தொடர்ந்து வரும் வரலாற்றானும் அறிய முடிகிறது. பின்வரும் 1819ஆம் பாடலில் சொல்லரசர் 'கூட ஓங்கிய மனையில் எய்தி' எனக் கூறப்படுகின்றது. ஆத லின் இடையில் அவ்வுடலைத் திருக்கோயிலின் முன் வருவித்துப் பதிகம் பாடி உய்வித்தருளியவர், பின் மனைக்கு வந்தமையை இத னால் அறிய முடிகிறது. 'ஓங்கிய மனையில் எய்தி' எனவரும் தொட ரால் ஆசிரியர் இதனை நுட்பமாக அறிவித்தமை நோக்கத் தக்கது.

அப்பதிகம் பாடிய அளவில் தீய நச்சுத் தன்மை நீங்கப் பிழைத்த அவ்வப்பூதியடிகளாரின் திருமகனாரான திருநாவுக் கரசும், பொருந்திய உறக்கத்திலிருந்தும் நீங்கி விரைவாய் எழுபவ னைப் போன்று எழுந்து, ஆனேற்றின் மீது இவர்ந்தருளும் பெருமா னால் ஆட்கொள்ளப் பெற்ற திருநாவுக்கரசரின் செவ்விய மலரனைய திருவடிகளை வணங்கக் கண்டு, புனிதமான திருநீற்றை வழங்கியரு ளுவாராயினர்.

குறிப்புரை: உறக்கத்தினின்றும் நீங்கி எழுவானைப் போன்று, இறந்த அப்பிள்ளையும் எழுந்தான் என்றது 'உறங்குவதுபோலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு' (குறள், 339) எனவரும் திருக்குறளை நினைவு கூரவைக்கும். சே - ஆனேறு.

பிரிந்த உயிரைத் திரும்பவும் பெற்ற பிள்ளையைக் காண்பவர் எல்லாம், தெய்வத் திருத்தொண்டின் செந்நெறிச் சிறப் பினைப் போற்றி இறைவரின் திருவருளைப் பெற்றனர். அங்குநின்ற அப்பெற்றோர்கள் அரிதற்கரிய பெருமையுடைய அன்பர் திருவமுது செய்வதற்கு இவன் சிறிது இடையூறு செய்தான் என்று மனம் நொந்தனர்.

குறிப்புரை: வாழ்ந்தார் - இறைவன் திருவருள் பெற்றார். பயந் தார்- பெற்றோர். பெற்றோர்க்குப் பிள்ளை எழுந்தது மகிழ்ச்சி தரவில்லை; ஆனால் பெரியவர் அமுது செய்யப் பெறாமையே பெருந்துன்பம் தந்தது. இங்கும் அப்பூதிஅடிகளார்க்கும் அவர்தம் இல்லத்தரசியாருக்கும் அமைந்திருந்த திருவுள்ளம் அறியத்தக்கது.

அங்ஙனம் அவர்களின் மனவாட்டத்தை அறிந்த நாவரசர், அவர்களுடன் சிறந்த இல்லத்தை அடைந்து, அமுதுசெய் தற்குத் திருவுள்ளம் கொள்ளும் நிலையினில் இருப்ப, முந்நூல் அணிந்த மார்பினராய அப்பூதி அடிகளாரும் மீதூர்ந்த மகிழ்ச்சி யோடும் செய்யத்தகுவனவற்றையெல்லாம் செய்வாராய்,

குறிப்புரை: ஓங்கிய மனை - செல்வத்தாலும் சீலத்தாலும் பத்திமைத் திறத்தாலும் செழித்திருக்கும் வீடு.

சான்றோர் பலராலும் புகழப்பெற்ற ஆவின் சாணம் கலந்த நீரால், நிலத்தை விளக்கமுற மெழுகி, விளங்கும் வெண் பொடிகளைக் கொண்டு கோலமிட்டு, சிறப்பான திருவிளக்கை ஏற்றி, இவ்வரலாற்று நிகழ்ச்சிக்கு இடனாக இருந்த, அவ்வாழையின் நீண்ட குருத்தை விரித்து அதனை நீரில் கழுவி, அரிந்த பக்கம் வலப்பக்கமாக அமைய அதனை இட்டனர்.

குறிப்புரை: ஆவின் சாணத்தொடு அதன் நீரையும் கலந்து மெழுகுதல் வழக்கமாக இருந்தது. அது பின் மாறி, நீர்மட்டும் கொண்டு மெழுகுதல் வழக்கமாயிற்று. இதுபொழுது அதுவும் அரிதாகி வருகிறது. 'மெழு கும் ஆப்பி கண்கலுழ் நீரானே' (புறநா. 249) எனவரும் சங்கச் செய்யு ளால், ஆவின் சாணங்கொண்டு மெழுகுதல் பண்டைய மரபாதல் தெரியலாம். கோமயம் - பசுவின் சாணம். வான்சுதை - அழகிய பொடி. 'வான்சுதை வண்ணம் கொளல்' (குறள், 714) என வரும் திருக்குற ளும் காண்க. நிகழ்ந்த அக்கதலி - இவ்வரலாற்றிற்கு அடிப்படையாக நேர்ந்த வாழை இலை. ஈர்வாய் - அரிந்த வாய். குருத்தை அரிந்த இடத்தை வலப்புறமாக வைத்து இலையை இடுதல் வேண்டும் என்பது குறிப்பு. இம்முறைமைகளை முன்னர், 1810, 1811ஆம் பாடல்களில் கூறாது ஈண்டுக் கூறினார், ஆண்டு நாவரசரை உணவு கொள்ள அழைக்க நேர்ந்ததன்றி, நாவரசர் உணவு கொள்ள நேராமையின். கோமயம் கிருமிகளை ஒழிக்க நல்லதோர் மருந்தும் ஆகும்.

செவ்விய மணமுடைய நல்ல நீரைக் கொடுக்க அதனைக் கொண்டு திருக்கரத்தைக் கழுவிய பெருந்தவமுனிவராகிய நாவரசரும், அப்பூதியடிகளாரையும் அவர்தம் பிள்ளைகளையும் ஒருங்கு நோக்கி 'நும் அரும்புதல்வர்களும் நீரும் எம்முடன் உண்பீ ராக' என்றுகூற, அவர்களும் மிகு விருப்போடு மேலவராய அரசர் பெருமகனாரின் ஏவல் வழி நின்றார்கள்.

குறிப்புரை: திருந்திய நன்னீர் - மணமும் தூய்மையும் உடையநீர். இத்திருத்தகுநிலை, நிலத்தானும் சுற்றுப் புறச் சூழலானும் அமைவ தாகும்.

மறையவராகிய அப்பூதியடிகள், தாமும் தம் மக்களுமாக நாவரசரின் அருகிலிருந்து உணவு உண்ண, மகிழ்வும் நிறைவும் கொண்ட இல்லத்தரசியார் திருவமுது எடுத்துப்படைக்க, கொத்தாக மலர்ந்த கொன்றை மலரை அணிந்த சிவபெருமானின் அடியார்களோடும், அழகிய தமிழைப் பாமாலையாக எடுத்துச் சமைப்பதில் வல்லவரான நாவரசரும் அவ்விடத்து உணவு கொண் டருளினார்.
குறிப்புரை: கொந்து - கொத்து. அம்தமிழ் ஆளி - அழகிய தமிழைப் பொலிவுற எடுத்தாளுபவர். ஆதலால் தான் நாவரசர் எனும் பெயர் பெற்றார். ஆளி - சிங்கமெனக் கொண்டு தமிழை ஆள்வதில் சிங்கமாக இருப்பவர் என்றலும் ஒன்று.

மாதவம் செய்த மறையவரான அப்பூதி அடிகளாரின் செல்வம் பொருந்திய இல்லத்தில், இவ்வாறு திருவமுது செய்தருளி, அன்பு பெருகிய நட்பின் பயனை வழங்கி அருளிப் பலநாள்கள் மனம் கலந்த ஒருமையோடு உடன் இருந்த பின்னர், மேதகவமைந்த நாவுக்கரசர், புகழ் மிக்க திருப்பழனம் என்னும் பழமையான ஊரில் எழுந்தருளியிருக்கும் இறைவரின் திருவடி களைச் சார்ந்து நலம் கமழும் தமிழ்ப் பதிகத்தை அருளிச் செய்வாராய்.

குறிப்புரை: நண்பு அளித்து - நட்பின் பயனை வழங்கி; அஃதாவது தாம் உடன் இருந்ததனாலாய பயனை வழங்கி. அப்பயன் சிவசிந் தனையும், சிவத்தொண்டும் ஆம்.

அப்பூதி அடிகளாருடைய திருத்தொண்டின் பெருமையினைச் சிறப்பித்துப், பெருமை பொருந்திய திருமேனியில் திருநீற்றை அணிந்த சிவபெருமானை விரும்பும் சொல் மாலையி னைத் தொடுத்துச் சாத்திய இப்பெரும் செல்வத்தைப் பெறும் பேறு பெற்ற நல்லவராகிய அவ்வப்பூதி அடிகளார், திருநாவுக்கரசரின் திருவடிகளே தாம் பெறத்தகும் ஊதியம் என்று உறுதி கொண்டு, எல்லையில்லாத அன்பினால் எப்போதும் அவர் பெயரைச் சொல்லி வழிபட்டு வரும் ஒழுகலாற்றை உடையவராயினார்.

குறிப்புரை: பூதி - திருநீறு, சொல்மாலை - சொற்களால் ஆகிய மாலை. இப்பதிகம் 'சொல்மாலை பயில்கின்ற' (தி. 4 ப. 12) எனத் தொடங் குவது ஆகும். அம்முதற்குறிப்பை இத்தொடர் நினைவுபடுத் துவதாகவும் அமைந்துள்ளது. இப்பூதி - இத்தகைய செல்வம். இச் சொல்மாலை பெறுதலான செல்வம். இப்பதிகத்தில், 'அஞ்சிப் போய்க் கலி மெலிய அழல் ஓம்பும் அப்பூதி குஞ்சிப்பூவாய் நின்ற சேவடியாய்க் கோடு இயையே' (தி. 4 ப. 12 பா. 10) எனவரும் பகுதியே இவரைப் பற்றி வரும் குறிப்பு ஆகும். இதனால் நாளும் அழல் ஓம்பி (வேள்வி செய்து) வழிபடும் திறனும், தம் திருமுடிக்கு அணியாய்ப் பெருமானின் திருவடி மலர்களைக் கொண்டிருக்கும் பத்திமைச் சிறப்பும் விளங்குகின்றன. வேள்வி நற்பயன் வீழ்புனலாகும். இதனால் அவர் ஆற்றும் சமுதாயத் தொண்டும் புலனாகும். செப்பு ஊதியம் - நாவுக்கரசரின் திருப்பெய ரைத் தாம் இதுவரையிலும் சொல்லிவந்ததன் பயனாகப் பெற்ற ஊதியம். அது அவர்தம் திருவடிகளாம்.

இவ்வகையாக அவர் திருநாவுக்கரசரின் திருப்பெயரையே போற்றியும், அவ்வரிய தவத்தினையுடைய அரச ரின் திருவடிகளையே அடைவதற்குரிய பொருள் எனக் கொண்டு ஒழுகியும் வந்த அந்நெறியே செந்நெறியாகக் கொண்டு, திருத்தில்லை யுள் என்றும் ஆடிக் கொண்டிருக்கும் உமையம்மையை ஒரு கூற்றில் கொண்டிருக்கும் கூத்தப் பெருமானின் திருவடிமலர்களை அடைந்தார்.

குறிப்புரை: நவ்வியங் கண்ணாள் - மான் போன்ற அழகிய கண் களை உடையவள்: உமையம்மையார்.

மான் கன்றைக் கையில் கொண்ட சிவபெரு மானின் திருவடிகளை, திருநாவுக்கரசரைத் தம் குரு முதல்வராகக் கொண்டமையால் பெற்ற மேன்மை பொருந்திய அப்பூதி அடிகளா ராம் மறையவரின் திருவடிகளைப் போற்றி, காடு போலப் பூத்திருக்கும் தாமரை மலர்களையுடைய குளங்களும் வயல்களும் சூழ்ந்த திருச் சாத்தமங்கையில் தோன்றியருளிய நான்மறையில் வல்ல திருநீலநக் கரின் திருத்தொண்டினை இனிச் சொல்லத் தொடங்குகின்றேன்.

குறிப்புரை: மான்மறி- மான் கன்று. கான் - காடு.


This page was last modified on Thu, 09 May 2024 01:33:07 -0400
 
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

naayanmaar history