| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
| Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
| Thirumurai |
|
1.052
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மறை உடையாய்! தோல் உடையாய்! பண் - பழந்தக்கராகம் (திருநெடுங்களம் நித்தியசுந்தரர் ஒப்பிலாநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=u5teN1hhIxI |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.052  
மறை உடையாய்! தோல் உடையாய்!
பண் - பழந்தக்கராகம் (திருத்தலம் திருநெடுங்களம் ; (திருத்தலம் அருள்தரு ஒப்பிலாநாயகியம்மை உடனுறை அருள்மிகு நித்தியசுந்தரர் திருவடிகள் போற்றி )
இடர் களையும் பதிகம்
அவமானங்கள், வீண்பழி காரியத்திலும் தடை ஆகியனவற்றைத் தடுப்பதற்கு ஓத வேண்டிய பதிகம்.
|
மறை உடையாய்! தோல் உடையாய்! வார்சடை மேல் வளரும் பிறை உடையாய்! பிஞ்ஞகனே! என்று உனைப் பேசின் அல்லால், குறை உடையார் குற்றம் ஓராய்! கொள்கையினால் உயர்ந்த நிறை உடையார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே! | [1] |
|
கனைத்து எழுந்த வெண்திரை சூழ் கடல் இடை நஞ்சு தன்னைத் தினைத்தனையா மிடற்றில் வைத்த திருந்திய தேவ! நின்னை மனத்து அகத்தோர் பாடல் ஆடல் பேணி, இராப்பகலும் நினைத்து எழுவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே! | [2] |
|
நின் அடியே வழிபடுவான், நிமலா! நினைக் கருத, என் அடியான் உயிரை வவ்வேல்! என்று அடல் கூற்று உதைத்த பொன் அடியே பரவி, நாளும் பூவொடு நீர் சுமக்கும் நின் அடியார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே! | [3] |
|
மலை புரிந்த மன்னவன்தன் மகளை ஓர்பால் மகிழ்ந்தாய்! அலை புரிந்த கங்கை தங்கும் அவிர் சடை ஆரூரா! தலை புரிந்த பலி மகிழ்வாய்! தலைவ! நின் தாள் நிழல் கீழ் நிலை புரிந்தார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே! | [4] |
|
பாங்கின் நல்லார், படிமம் செய்வார், பாரிடமும் பலி சேர் தூங்கி நல்லார் பாடலோடு தொழு கழலே வணங்கி, தாங்கி நில்லா அன்பினோடும் தலைவ! நின் தாள் நிழல் கீழ் நீங்கி நில்லார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே! | [5] |
|
விருத்தன் ஆகி, பாலன் ஆகி, வேதம் ஓர் நான்கு உணர்ந்து, கருத்தன் ஆகி, கங்கையாளைக் கமழ் சடைமேல் கரந்தாய்! அருத்தன் ஆய ஆதிதேவன் அடி இணையே பரவும் நிருத்தர் கீதர் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே! | [6] |
|
கூறு கொண்டாய்! மூன்றும் ஒன்றாக் கூட்டி ஓர் வெங்கணையால் மாறு கொண்டார் புரம் எரித்த மன்னவனே! கொடிமேல் ஏறு கொண்டாய்! சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த நீறு கொண்டார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே! | [7] |
|
குன்றின் உச்சிமேல் விளங்கும் கொடி மதில் சூழ் இலங்கை, அன்றி நின்ற, அரக்கர் கோனை அரு வரைக்கீழ் அடர்த்தாய்! என்று நல்ல வாய்மொழியால் ஏத்தி, இராப்பகலும், நின்று நைவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே! | [8] |
|
வேழ வெண்கொம்பு ஒசித்த மாலும், விளங்கிய நான்முகனும், சூழ எங்கும் நேட, ஆங்கு ஓர் சோதியுள் ஆகி நின்றாய்! கேழல் வெண் கொம்பு அணிந்த பெம்மான்! கேடு இலாப் பொன் அடியின் நீழல் வாழ்வார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே! | [9] |
|
வெஞ்சொல் தம் சொல் ஆக்கி நின்ற வேடம் இலாச் சமணும், தஞ்சம் இல்லாச் சாக்கியரும், தத்துவம் ஒன்று அறியார்; துஞ்சல் இல்லா வாய்மொழியால் தோத்திரம் நின் அடியே நெஞ்சில் வைப்பார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே! | [10] |
|
நீட வல்ல வார் சடையான் மேய நெடுங்களத்தைச் சேடர் வாழும் மா மறுகில் சிரபுரக் கோன் நலத்தால் நாட வல்ல பனுவல்மாலை, ஞானசம்பந்தன் சொன்ன பாடல் பத்தும், பாட வல்லார் பாவம் பறையுமே. | [11] |