![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
6.094
திருநாவுக்கரசர்
தேவாரம்
இரு நிலன் ஆய், தீ பண் - புறநீர்மை (நின்றத் திருத்தாண்டகம் ) Audio: https://www.youtube.com/watch?v=9kNln4y0aWI |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6.094  
இரு நிலன் ஆய், தீ
பண் - புறநீர்மை (திருத்தலம் நின்றத் திருத்தாண்டகம் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
இரு நிலன் ஆய், தீ ஆகி, நீரும் மாகி, இயமானனாய், எறியும் காற்றும் மாகி, அரு நிலைய திங்கள் ஆய், ஞாயிறு ஆகி, ஆகாசம் ஆய், அட்ட மூர்த்தி யாகி, பெரு நலமும் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறர் உருவும் தம் உருவும் தாமே யாகி, நெருநலை ஆய், இன்று ஆகி, நாளை யாகி, நிமிர் புன்சடை அடிகள் நின்ற வாறே!. | [1] |
மண் ஆகி, விண் ஆகி, மலையும் மாகி, வயிரமும் ஆய், மாணிக்கம் தானே யாகி, கண் ஆகி, கண்ணுக்கு ஓர் மணியும் மாகி, கலை ஆகி, கலை ஞானம் தானே யாகி, பெண் ஆகி, பெண்ணுக்கு ஓர் ஆணும் மாகி, பிரளயத்துக்கு அப்பால் ஓர் அண்டம் மாகி, எண் ஆகி எண்ணுக்கு ஓர் எழுத்தும் மாகி, எழும் சுடர் ஆய் எம் அடிகள் நின்ற வாறே!. | [2] |
கல் ஆகி, களறு ஆகி, கானும் மாகி, காவிரி ஆய், கால் ஆறு ஆய், கழியும் மாகி, புல் ஆகி, புதல் ஆகி, பூடும் மாகி, புரம் ஆகி, புரம் மூன்றும் கெடுத்தான் ஆகி, சொல் ஆகி, சொல்லுக்கு ஓர் பொருளும் மாகி, சுலாவு ஆகி, சுலாவுக்கு ஓர் சூழல் ஆகி, நெல் ஆகி, நிலன் ஆகி, நீரும் மாகி, நெடுஞ்சுடர் ஆய் நிமிர்ந்து, அடிகள் நின்ற வாறே!. | [3] |
காற்று ஆகி, கார் முகில் ஆய், காலம் மூன்று ஆய், கனவு ஆகி, நனவு ஆகி, கங்குல் ஆகி, கூற்று ஆகி, கூற்று உதைத்த கொல் களிறும் மாகி, குரை கடல் ஆய், குரை கடற்கு ஓர் கோமானு மாய், நீற்றானாய், நீறு ஏற்ற மேனி யாகி, நீள் விசும்பு ஆய், நீள் விசும்பின் உச்சி யாகி, ஏற்றானாய், ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி, எழும் சுடர் ஆய், எம் அடிகள் நின்ற வாறே. | [4] |
தீ ஆகி, நீர் ஆகி, திண்மை ஆகி, திசை யாகி, அத் திசைக்கு ஓர் தெய்வம் மாகி, தாய் ஆகி, தந்தையாய், சார்வும் ஆகி, தாரகையும் ஞாயிறும் தண் மதியும் மாகி, காய் ஆகி, பழம் மாகி, பழத்தில் நின்ற இரதங்கள் நுகர்வானும் தானே யாகி, நீ ஆகி, நான் ஆகி, நேர்மை யாகி, நெடுஞ்சுடர் ஆய், நிமிர்ந்து அடிகள் நின்ற வாறே. | [5] |
அங்கம் ஆய், ஆதி ஆய், வேதம் மாகி, அருமறையோடு ஐம்பூதம் தானே யாகி, பங்கம் ஆய், பல சொல்லும் தானே யாகி, பால் மதியோடு ஆதி ஆய், பான்மை யாகி, கங்கை ஆய், காவிரி ஆய், கன்னி ஆகி, கடல் ஆகி, மலை யாகி, கழியும் மாகி, எங்கும் ஆய், ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி, எழும் சுடர் ஆய், எம் அடிகள் நின்ற வாறே. | [6] |
மாதா பிதா ஆகி, மக்கள் ஆகி, மறி கடலும் மால் விசும்பும் தானே யாகி, கோதாவிரி ஆய், குமரி ஆகி, கொல் புலித் தோல் ஆடைக் குழகன் ஆகி, போது ஆய் மலர் கொண்டு போற்றி நின்று புனைவார் பிறப்பு அறுக்கும் புனிதன் ஆகி, ஆதானும் என நினைந்தார்க்கு எளிதே யாகி, அழல் வண்ண வண்ணர் தாம் நின்ற வாறே!. | [7] |
ஆ ஆகி, ஆவினில் ஐந்தும் ஆகி, அறிவு ஆகி, அழல் ஆகி, அவியும் மாகி, நா ஆகி, நாவுக்கு ஓர் உரையும் மாகி, நாதனாய், வேதத்தின் உள்ளோன் ஆகி, பூ ஆகி, பூவுக்கு ஓர் நாற்றம் மாகி, பூக்குளால் வாசம் ஆய் நின்றான் ஆகி, தே ஆகி, தேவர் முதலும் ஆகி, செழுஞ்சுடர் ஆய், சென்று அடிகள் நின்ற வாறே!. | [8] |
நீர் ஆகி, நீள் அகலம் தானே யாகி, நிழல் ஆகி, நீள் விசும்பின் உச்சி யாகி, பேர் ஆகி, பேருக்கு ஓர் பெருமை யாகி, பெரு மதில்கள் மூன்றினையும் எய்தான் ஆகி, ஆரேனும் தன் அடைந்தார் தம்மை எல்லாம் ஆட்கொள்ள வல்ல எம் ஈசனார் தாம் பார் ஆகி, பண் ஆகி, பாடல் ஆகி, பரஞ்சுடர் ஆய், சென்று அடிகள் நின்ற வாறே!. | [9] |
மால் ஆகி, நான்முகனாய், மா பூதம்(ம்) ஆய், மருக்கம் ஆய், அருக்கம் ஆய், மகிழ்வும் மாகி, பால் ஆகி, எண்திசைக்கும் எல்லை யாகி, பரப்பு ஆகி, பரலோகம் தானே யாகி, பூலோக புவலோக சுவலோகம்(ம்) ஆய், பூதங்கள் ஆய், புராணன் தானே யாகி, ஏலாதன எலாம் ஏல்விப்பானாய், எழும் சுடர் ஆய், எம் அடிகள் நின்ற வாறே!. | [10] |