12.580 பத்தாராய்ப் பணிவார் புராணம் ( ) |
Back to Top
சேக்கிழார் பத்தராய்ப் பணிவார் சருக்கம்
12.580  
பத்தாராய்ப் பணிவார் புராணம்
பண் - (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
ஈசருக்கே அன்பானார்
யாவரையுந் தாங்கண்டால்
கூசிமிகக் குதுகுதுத்துக்
கொண்டாடி மனமகிழ்வுற்
றாசையினால் ஆவின்பின்
கன்றணைந்தாற் போலணைந்து
பேசுவன பணிந்தமொழி
இனியனவே பேசுவார்.
| [1] |
தாவரிய அன்பினால்
சம்புவினை எவ்விடத்தும்
யாவர்களும் அர்ச்சிக்கும்
படிகண்டால் இனிதுவந்து
பாவனையால் நோக்கினால்
பலர்காணப் பயன்பெறுவார்
மேவரிய அன்பினால்
மேலவர்க்கும் மேலானார்.
| [2] |
அங்கணனை அடியாரை
ஆராத காதலினால்
பொங்கிவரும் உவகையுடன்
தாம்விரும்பிப் பூசிப்பார்
பங்கயமா மலர்மேலான்
பாம்பணையான் என்றிவர்கள்
தங்களுக்கும் சார்வரிய
சரண்சாருந் தவமுடையார்.
| [3] |
யாதானும் இவ்வுடம்பால்
செய்வினைகள் ஏறுயர்த்தார்
பாதார விந்தத்தின்
பாலாக எனும்பரிவால்
காதார்வெண் குழையவர்க்காம்
பணிசெய்வார் கருக்குழியில்
போதார்கள் அவர்புகழ்க்குப்
புவனமெலாம் போதாவால்.
| [4] |
சங்கரனைச் சார்ந்தகதை
தான்கேட்குந் தன்மையராய்
அங்கணனை மிகவிரும்பி
அயலறியா அன்பினால்
கங்கைநதி மதியிதழி
காதலிக்குந் திருமுடியார்
செங்கமல மலர்ப்பாதஞ்
சேர்வதனுக் குரியார்கள்.
| [5] |
ஈசனையே பணிந்துருகி
இன்பமிகக் களிப்பெய்திப்
பேசினவாய் தழுதழுப்பக்
கண்ணீரின் பெருந்தாரை
மாசிலா நீறழித்தங்
கருவிதர மயிர்சிலிர்ப்பக்
கூசியே யுடல்கம்பித்
திடுவார்மெய்க் குணமிக்கார்.
| [6] |
நின்றாலும் இருந்தாலும்
கிடந்தாலும் நடந்தாலும்
மென்றாலும் துயின்றாலும்
விழித்தாலும் இமைத்தாலும்
மன்றாடும் மலர்ப்பாதம்
ஒருகாலும் மறவாமை
குன்றாத வுணர்வுடையார்
தொண்டராம் குணமிக்கார்.
| [7] |
சங்கரனுக் காளான
தவங்காட்டித் தாமதனால்
பங்கமறப் பயன்துய்ப்பார்
படிவிளக்கும் பெருமையினார்
அங்கணனைத் திருவாரூர்
ஆள்வானை அடிவணங்கிப்
பொங்கிஎழுஞ் சித்தமுடன்
பத்தராய்ப் போற்றுவார். ]" 59
| [8] |
தென்றமிழும் வடகலையும் தேசிகமும் பேசுவன
மன்றினிடை நடம்புரியும் வள்ளலையே பொருளாக
ஒன்றியமெய் யுணர்வோடும் உள்ளுருகிப் பாடுவார்
பன்றியுடன் புட்காணாப் பரமனையே பாடுவார்.
]" 60
| [9] |
Back to Top
சேக்கிழார் பத்தராய்ப் பணிவார் சருக்கம்
12.590  
பரமனையே பாடுவார் புராணம்
பண் - (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
புரமூன்றும் செற்றானைப்
பூணாகம் அணிந்தானை
உரனில்வரும் ஒருபொருளை
உலகனைத்தும் ஆனானைக்
கரணங்கள் காணாமல்
கண்ணார்ந்து நின்றானைப்
பரமனையே பாடுவார்
தம்பெருமை பாடுவாம்.
| [1] |
தென்றமிழும் வடகலையும்
தேசிகமும் பேசுவன
மன்றினிடை நடம்புரியும்
வள்ளலையே பொருளாக
ஒன்றியமெய் யுணர்வோடும்
உள்ளுருகிப் பாடுவார்
பன்றியுடன் புட்காணாப்
பரமனையே பாடுவார்.
| [2] |
Back to Top
சேக்கிழார் பத்தராய்ப் பணிவார் சருக்கம்
12.600  
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்
பண் - (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
காரணபங் கயம்ஐந்தின்
கடவுளர்தம் பதங்கடந்து
பூரணமெய்ப் பரஞ்சோதி
பொலிந்திலங்கு நாதாந்தத்
தாரணையால் சிவத்தடைந்த
சித்தத்தார் தனிமன்றுள்
ஆரணகா ரணக்கூத்தர்
அடித்தொண்டின் வழியடைந்தார்.
| [1] |
Back to Top
சேக்கிழார் பத்தராய்ப் பணிவார் சருக்கம்
12.610  
திருவாரூர் பிறந்தார் புராணம்
பண் - (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
அருவாகி உருவாகி
அனைத்துமாய் நின்றபிரான்
மருவாரும் குழலுமையாள்
மணவாளன் மகிழ்ந்தருளும்
திருவாரூர்ப் பிறந்தார்கள்
திருத்தொண்டு தெரிந்துரைக்க
ஒருவாயால் சிறியேனால்
உரைக்கலாந் தகைமையதோ.
| [1] |
திருக்கயிலை வீற்றிருந்த
சிவபெருமான் திருக்கணத்தார்
பெருக்கியசீர்த் திருவாரூர்ப்
பிறந்தார்கள் ஆதலினால்
தருக்கியஐம் பொறியடக்கி
மற்றவர்தந் தாள் வணங்கி
ஒருக்கியநெஞ் சுடையவர்க்கே
அணித்தாகும் உயர்நெறியே.
| [2] |
Back to Top
சேக்கிழார் பத்தராய்ப் பணிவார் சருக்கம்
12.620  
முப்போதும் திருமேனி தீண்டுவார்
பண் - (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
எப்போதும் இனியபிரான்
இன்னருளால் அதிகரித்து
மெய்ப்போத நெறிவந்த
விதிமுறைமை வழுவாமே
அப்போதைக் கப்போதும்
ஆர்வமிகும் அன்பினராய்
முப்போதும் அர்ச்சிப்பார்
முதற்சைவ ராமுனிவர்.
| [1] |
தெரிந்துணரின் முப்போதும்
செல்காலம் நிகழ்காலம்
வருங்கால மானவற்றின்
வழிவழியே திருத்தொண்டின்
விரும்பிஅர்ச் சனைகள்சிவ
வேதியர்க்கே யுரியனஅப்
பெருந்தகையார் குலப்பெருமை
யாம்புகழும் பெற்றியதோ.
| [2] |
நாரணற்கும் நான்முகற்கும் அறிய வொண்ணா
நாதனைஎம் பெருமானை ஞான மான
ஆரணத்தின் உட்பொருள்கள் அனைத்தும் மாகும்
அண்ணலைஎண் ணியகாலம் மூன்றும் அன்பின்
காரணத்தால் அர்ச்சிக்கும் மறையோர் தங்கள்
கமலமலர்க் கழல்வணங்கிக் கசிந்து சிந்தைப்
பூரணத்தான் முழுநீறுபூசி வாழும்
புனிதர்செயல் அறிந்தவா புகல லுற்றேன்.
| [3] |
Back to Top
சேக்கிழார் பத்தராய்ப் பணிவார் சருக்கம்
12.630  
முழுநீறு பூசிய முனிவர்
பண் - (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
சாதியினில் தலையான தரும சீலர்
தத்துவத்தின் நெறியுணர்ந்தோர் தங்கள் கொள்கை
நீதியினில் பிழையாது நெறியில் நிற்போர்
நித்தநிய மத்துநிகழ்அங்கி தன்னில்
பூதியினைப் புதியபா சனத்துக் கொண்டு
புலியதளின் உடையானைப் போற்றி நீற்றை
ஆதிவரும் மும்மலமும் அறுத்த வாய்மை
அருமுனிவர் முழுவதும்மெய் யணிவா ரன்றே.
| [1] |
Back to Top
சேக்கிழார் பத்தராய்ப் பணிவார் சருக்கம்
12.640  
அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம்
பண் - (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
மூவேந்தர் தமிழ்வழங்கும் நாட்டுக்கு அப்பால்
முதல்வனார் அடிச்சார்ந்த முறைமை யோரும்
நாவேய்ந்த திருத்தொண்டத் தொகையில் கூறும்
நற்றொண்டர் காலத்து முன்னும் பின்னும்
பூவேய்ந்த நெடுஞ்சடைமேல் அடம்பு தும்பை
புதியமதி நதியிதழி பொருந்த வைத்த
சேவேந்து வெல்கொடியான் அடிச்சார்ந் தாரும்
செப்பியஅப் பாலும்அடிச் சார்ந்தார் தாமே.
| [1] |
செற்றார்தம் புரம்எரித்த சிலையார் செல்வத்
திருமுருகன் பூண்டியினில் செல்லும் போதில்
சுற்றாரும் சிலை வேடர் கவர்ந்து கொண்ட
தொகு நிதியின் பரப்பெல்லாம் சுமந்து கொண்டு
முற்றாத முலைஉமையாள் பாகன் பூத
முதற் கணமேயுடன் செல்ல முடியாப் பேறு
பெற்றார்தங் கழல்பரவ அடியேன் முன்னைப்
பிறவியினிற் செய்ததவம் பெரிய வாமே.
| [2] |