12.650 பூசலார் நாயனார் புராணம் ( ) |
Back to Top
சேக்கிழார் மன்னிய சீர்ச் சருக்கம்
12.650  
பூசலார் நாயனார் புராணம்
பண் - (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
அன்றினார் புரம் எரித்தார்க்
காலயம் எடுக்க எண்ணி
ஒன்றுமங் குதவா தாக
உணர்வினால் எடுக்கும் தன்மை
நன்றென மனத்தி னாலே
நல்லஆ லயந்தான் செய்த
நின்றவூர்ப் பூசலார்தம் நினை
வினை யுரைக்க லுற்றாம்.
| [1] |
உலகினில் ஒழுக்கம் என்றும்
உயர்பெருந் தொண்டை நாட்டு
நலமிகு சிறப்பின் மிக்க
நான்மறை விளங்கும் மூதூர்
குலமுதற் சீலமென்றுங் குறை
விலா மறையோர் கொள்கை
நிலவிய செல்வம் மல்கி
நிகழ்திரு நின்ற வூராம்.
| [2] |
அருமறை மரபு வாழ
அப்பதி வந்து சிந்தை
தரும்உணர் வான வெல்லாந்
தம்பிரான் கழல்மேற் சார
வருநெறி மாறா அன்பு
வளர்ந்து எழ வாய்மைப்
பொருள்பெறு வேத நீதிக்
கலையுணர் பொலிவின் மிக்கார்.
| [3] |
அடுப்பது சிவன்பால் அன்பர்க்
காம்பணி செய்தல் என்றே
கொடுப்பதெவ் வகையுந் தேடி
அவர்கொளக் கொடுத்துக் கங்கை
மடுப்பொதி வேணி ஐயர்
மகிழ்ந்துறை வதற்கோர் கோயில்
எடுப்பது மனத்துக் கொண்டார்
இருநிதி இன்மை யெண்ணார்.
| [4] |
மனத்தினால் கருதி எங்கும்
மாநிதி வருந்தித் தேடி
எனைத்துமோர் பொருட்பே றின்றி
என்செய்கேன் என்று நைவார்
நினைப்பினால் எடுக்க நேர்ந்து
நிகழ்வுறு நிதிய மெல்லாம்
தினைத்துணை முதலாத் தேடிச்
சிந்தையால் திரட்டிக் கொண்டார்.
| [5] |
சாதனத் தோடு தச்சர்
தம்மையும் மனத்தால் தேடி
நாதனுக் கால யஞ்செய்
நலம்பெறும் நன்னாள் கொண்டே
ஆதரித்து ஆக மத்தால்
அடிநிலை பாரித் தன்பால்
காதலில் கங்குற் போதுங்
கண்படா தெடுக்க லுற்றார்.
| [6] |
அடிமுதல் உபான மாதி
யாகிய படைக ளெல்லாம்
வடிவுறுந் தொழில்கள் முற்ற
மனத்தினால் வகுத்து மான
முடிவுறு சிகரந் தானும்
முன்னிய முழத்திற் கொண்டு
நெடிதுநாள் கூடக் கோயில்
நிரம்பிட நினைவால் செய்தார்.
| [7] |
தூபியும் நட்டு மிக்க
சுதையும்நல் வினையுஞ் செய்து
கூவலும் அமைத்து மாடு
கோயில்சூழ் மதிலும் போக்கி
வாவியுந் தொட்டு மற்றும்
வேண்டுவ வகுத்து மன்னும்
தாபனம் சிவனுக் கேற்க
விதித்தநாள் சாரும் நாளில்.
| [8] |
காடவர் கோமான் கச்சிக்
கற்றளி எடுத்து முற்ற
மாடெலாஞ் சிவனுக் காகப்
பெருஞ்செல்வம் வகுத்தல் செய்வான்
நாடமால் அறியா தாரைத்
தாபிக்கும் அந்நாள் முன்னால்
ஏடலர் கொன்றை வேய்ந்தார்
இரவிடைக் கனவில் எய்தி.
| [9] |
நின்றவூர்ப் பூசல் அன்பன்
நெடிதுநாள் நினைந்து செய்த
நன்றுநீ டால யத்து
நாளைநாம் புகுவோம் நீயிங்கு
ஒன்றிய செயலை நாளை
ஒழிந்துபின் கொள்வாய் என்று
கொன்றைவார் சடையார் தொண்டர்
கோயில் கொண்டருளப் போந்தார்.
| [10] |
தொண்டரை விளக்கத் தூயோன்
அருள்செயத் துயிலை நீங்கித்
திண்டிறல் மன்னன் அந்தத்
திருப்பணி செய்தார் தம்மைக்
கண்டுதான் வணங்க வேண்டும்
என்றெழுங் காத லோடும்
தண்டலைச் சூழல் சூழ்ந்த
நின்றவூர் வந்து சார்ந்தான்.
| [11] |
அப்பதி யணைந்து பூசல்
அன்பரிங் கமைத்த கோயில்
எப்புடை யதுஎன் றுஅங்கண்
எய்தினார் தம்மைக் கேட்கச்
செப்பிய பூசல் கோயில்
செய்ததொன் றில்லை யென்றார்
மெய்ப்பெரு மறையோர் எல்லாம்
வருகஎன் றுரைத்தான் வேந்தன்.
| [12] |
பூசுர ரெல்லாம் வந்து
புரவலன் தன்னைக் காண
மாசிலாப் பூச லார்தாம்
ஆரென மறையோ ரெல்லாம்
ஆசில்வே தியன்இவ் வூரான்
என்றவ ரழைக்க வொட்டா
தீசனார் அன்பர் தம்பால்
எய்தினான் வெய்ய வேலான்.
| [13] |
தொண்டரைச் சென்று கண்ட
மன்னவன் தொழுது நீர்இங்கு
எண்திசை யோரும் ஏத்த
எடுத்தஆ லயந்தான் யாதிங்கு
அண்டர்நா யகரைத் தாபித்
தருளும்நாள் இன்றென்று உம்மைக்
கண்டடி பணிய வந்தேன்
கண்ணுதல் அருள்பெற் றென்றான்.
| [14] |
மன்னவன் உரைப்பக் கேட்ட
அன்பர்தாம் மருண்டு நோக்கி
என்னையோர் பொருளாக் கொண்டே
எம்பிரான் அருள்செய் தாரேல்
முன்வரு நிதியி லாமை
மனத்தினால் முயன்று கோயில்
இன்னதாம் என்று சிந்தித்
தெடுத்தவா றெடுத்துச் சொன்னார்.
| [15] |
அரசனும் அதனைக் கேட்டங்
கதிசய மெய்தி என்னே
புரையறு சிந்தை யன்பர்
பெருமையென் றவரைப் போற்றி
விரைசெறி மாலை தாழ
நிலமிசை வீழ்ந்து தாழ்ந்து
முரசெறி தானை யோடு
மீண்டுதன் மூதூர் புக்கான்.
| [16] |
அன்பரும் அமைத்த சிந்தை
ஆலயத் தரனார் தம்மை
நன்பெரும் பொழுது சாரத்
தாபித்து நலத்தி னோடும்
பின்புபூ சனைக ளெல்லாம்
பெருமையிற் பலநாள் பேணிப்
பொன்புனை மன்று ளாடும்
பொற்கழல் நீழல் புக்கார்.
| [17] |
நீண்டசெஞ் சடையி னார்க்கு
நினைப்பினாற் கோயி லாக்கிப்
பூண்டஅன்பு இடைய றாத
பூசலார் பொற்றாள் போற்றி
ஆண்டகை வளவர் கோமான்
உலகுய்ய அளித்த செல்வப்
பாண்டிமா தேவி யார்தம்
பாதங்கள் பரவ லுற்றேன்.
| [18] |
Back to Top
சேக்கிழார் மன்னிய சீர்ச் சருக்கம்
12.660  
மங்கையர்க்கரசியார் புராணம்
பண் - (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
மங்கையர்க்குத் தனியரசி எங்கள் தெய்வம்
வளவர்திருக் குலக்கொழுந்து வளைக்கை மானி
செங்கமலத் திருமடந்தை கன்னி நாடாள்
தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை
எங்கள்பிரான் சண்பையர்கோன் அருளி னாலே
இருந்தமிழ்நாடு உற்றஇடர் நீக்கித் தங்கள்
பொங்கொளிவெண் திருநீறு பரப்பி னாரைப்
போற்றுவார் கழலெம்மாற் போற்ற லாமே.
| [1] |
பூசுரர்சூ ளாமணியாம் புகலி வேந்தர்
போனகஞா னம்பொழிந்த புனித வாக்கால்
தேசுடைய பாடல்பெறும் தவத்தி னாரைச்
செப்புவதியாம் என்னறிந்து தென்னர் கோமான்
மாசில்புகழ் நெடுமாறன் தனக்குச் சைவ
வழித்துணையாய் நெடுங்காலம் மன்னிப் பின்னை
| [2] |
வருநாளென் றும்பிழையாத் தெய்வப் பொன்னி
வளம்பெருக்க வளவர்குலம் பெருக்கும் தங்கள்
திருநாடு போற்செழியர் தென்னாடு விளக்கும்
சீர்விளக்கின் செய்யசீ றடிகள் போற்றி
ஒருநாளுந் தன்செயலில் வழுவாது அன்பர்க்கு
உடைகீளுங்கோவணமும் நெய்து நல்கும்
பெருநாமச் சாலியர்தங் குலத்தில் வந்த
பெருந்தகையார் நேசர்திறம் பேச லுற்றாம்.
| [3] |
Back to Top
சேக்கிழார் மன்னிய சீர்ச் சருக்கம்
12.670  
நேச நாயனார் புராணம்
பண் - (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
சீர்வளர் சிறப்பின் மிக்க
செயல்முறை ஒழுக்கம் குன்றா
நார்வளர் சிந்தை வாய்மை
நன்மையார் மன்னி வாழும்
பார்வளர் புகழின் மிக்க
பழம்பதி மதிதோய் நெற்றிக்
கார்வளர் சிகர மாடக்
காம்பீலி என்ப தாகும்.
| [1] |
அந்நக ரதனில் வாழ்வார்
அறுவையர் குலத்து வந்தார்
மன்னிய தொழிலில் தங்கள்
மரபின் மேம்பாடு பெற்றார்
பன்னாகா பரணற் கன்பர்
பணிதலைக் கொண்டு பாதம்
சென்னியிற் கொண்டு போற்றுந்
| [2] |
ஆங்கவர் மனத்தின் செய்கை
யரனடிப் போதுக் காக்கி
ஓங்கிய வாக்கின் செய்கை
யுயர்ந்தஅஞ் செழுத்துக் காக்கித்
தாங்குகைத் தொழிலின் செய்கை
தம்பிரான் அடியார்க் காகப்
பாங்குடை யுடையுங் கீளும்
பழுதில்கோ வணமும் நெய்வார்.
| [3] |
உடையொடு நல்ல கீளும்
ஒப்பில்கோ வணமும் நெய்து
விடையவர் அடியார் வந்து
வேண்டுமாறு ஈயு மாற்றால்
இடையறா தளித்து நாளும்
அவர்கழல் இறைஞ்சி யேத்தி
அடைவுறு நலத்த ராகி
அரனடி நீழல் சேர்ந்தார்.
| [4] |
கற்றை வேணி முடியார்தங்
கழல்சேர் வதற்குக் கலந்தவினை
செற்ற நேசர் கழல்வணங்கிச்
சிறப்பால் முன்னைப் பிறப்புணர்ந்து
பெற்றம் உயர்த்தார்க் காலயங்கள்
பெருக அமைத்து மண்ணாண்ட
கொற்ற வேந்தர் கோச்செங்கட்
சோழர் பெருமை கூறுவாம்.
| [5] |
Back to Top
சேக்கிழார் மன்னிய சீர்ச் சருக்கம்
12.680  
கோச்செங்கட் சோழ நாயனார்
பண் - (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
துலையிற் புறவின் நிறையளித்த
சோழர் உரிமைச் சோணாட்டில்
அலையில் தரளம் அகிலொடுசந்
தணிநீர்ப் பொன்னி மணிகொழிக்கும்
குலையில் பெருகுஞ் சந்திரதீர்த்
தத்தின் மருங்கு குளிர்சோலை
நிலையில் பெருகுந் தருமிடைந்த
நெடுந்தண் கானம் ஒன்றுளதால்.
| [1] |
அப்பூங் கானில் வெண்ணாவல்
அதன்கீழ் முன்னாள் அரிதேடும்
மெய்ப்பூங் கழலார் வெளிப்படலும்
மிக்க தவத்தோர் வெள்ளானை
கைப்பூம் புனலு முகந்தாட்டிக்
கமழ்பூங் கொத்தும் அணிந்திறைஞ்சி
மைப்பூங் குவளைக் களத்தாரை
நாளும் வழிபட் டொழுகுமால்.
| [2] |
ஆன செயலால் திருவானைக்
காவென்று அதற்குப் பெயராக
ஞான முடைய ஒருசிலந்தி
நம்பர் செம்பொன் திருமுடிமேல்
கானல் விரவும் சருகுஉதிரா
வண்ணங் கலந்த வாய்நூலால்
மேல்நல் திருமேற் கட்டியென
விரிந்து செறியப் புரிந்துளதால்.
| [3] |
நன்றும் இழைத்த சிலம்பிவலைப்
பரப்பை நாதன் அடிவணங்கச்
சென்ற யானை அநுசிதம்என்
றதனைச் சிதைக்கச் சிலம்பிதான்
இன்று களிற்றின் கரஞ்சுலவிற்
றென்று மீள இழைத்துஅதனை
அன்று கழித்த பிற்றைநாள்
அடல்வெள் ளானை அழித்ததால்.
| [4] |
எம்பி ரான்தன் மேனியின்மேல்
சருகு விழாமை யானவருந்தி
உம்பர் இழைத்த நூல்வலயம்
அழிப்ப தேஎன்று உருத்தெழுந்து
வெம்பிச் சிலம்பி துதிக்கையினில்
புக்குக் கடிப்ப வேகத்தால்
கும்ப யானை கைநிலத்தின்
மோதிக் குலைந்து வீழ்ந்ததால்.
| [5] |
தரையிற் புடைப்பக் கைப்புக்க
சிலம்பி தானும் உயிர்நீங்க
மறையிற் பொருளுந் தருமாற்றான்
மதயா னைக்கும் வரங்கொடுத்து
முறையில் சிலம்பி தனைச்சோழர்
குலத்து வந்து முன்னுதித்து
நிறையிற் புவனங் காத்தளிக்க
அருள்செய் தருள நிலத்தின்கண்.
| [6] |
தொன்மைதரு சோழர்குலத்
தரசனாம் சுபதேவன்
தன்னுடைய பெருந்தேவி
கமலவதி யுடன்சார்ந்து
மன்னுபுகழ்த் திருத்தில்லை
மன்றாடு மலர்ப்பாதம்
சென்னியுறப் பணிந்தேத்தித்
திருப்படிக்கீழ் வழிபடுநாள்.
| [7] |
மக்கட்பே றின்மையினால்
மாதேவி வரம்வேண்டச்
செக்கர்நெடுஞ் சடைக்கூத்தர்
திருவுள்ளஞ் செய்தலினால்
மிக்கதிருப் பணிசெய்த
சிலம்பிகுல வேந்துமகிழ்
அக்கமல வதிவயிற்றின்
அணிமகவாய் வந்தடைய.
| [8] |
கழையார் தோளி கமலவதி
தன்பால் கருப்ப நாள்நிரம்பி
விழையார் மகவு பெறஅடுத்த
வேலை யதனில் காலம்உணர்
பழையார் ஒருநா ழிகைகழித்துப்
பிறக்கு மேல்இப் பசுங்குழவி
உழையார் புவனம் ஒருமூன்றும்
அளிக்கும் என்ன ஒள்ளிழையார்.
| [9] |
பிறவா தொருநா ழிகைகழித்துஎன்
பிள்ளை பிறக்கும் பரிசென்கால்
உறவார்த் தெடுத்துத் தூக்கும்என
வுற்ற செயன்மற் றதுமுற்றி
அறவா ணர்கள்சொல் லியகாலம்
அணையப் பிணிவிட்டு அருமணியை
இறவா தொழிவாள் பெற்றெடுத்துஎன்
கோச்செங் கண்ணா னோஎன்றாள்.
| [10] |
தேவி புதல்வன் பெற்றிறக்கச்
செங்கோல் சோழன் சுபதேவன்
ஆவி அனைய அரும்புதல்வன்
தன்னை வளர்த்தங் கணிமகுடம்
மேவும் உரிமை முடிகவித்துத்
தானும் விரும்பு பெருந்தவத்தின்
தாவில் நெறியைச் சென்றடைந்து
தலைவர் சிவலோ கஞ்சார்ந்தான்.
| [11] |
கோதை வேலார் கோச்செங்கட்
சோழர் தாம்இக் குவலயத்தில்
ஆதி மூர்த்தி அருளால்முன்
அறிந்து பிறந்து மண்ணாள்வார்
பூத நாதன் தான்மகிழ்ந்து
பொருந்தும் பெருந்தண் சிவாலயங்கள்
காத லோடும் பலவெடுக்குந்
தொண்டு புரியுங் கடன்பூண்டார்.
| [12] |
ஆனைக் காவில் தாம்முன்னம்
அருள்பெற் றதனை யறிந்தங்கு
மானைத் தரித்த திருக்கரத்தார்
மகிழுங் கோயில் செய்கின்றார்
ஞானச் சார்வாம் வெண்ணாவ
லுடனே கூட நலஞ்சிறக்கப்
பானற் களத்துத் தம்பெருமான்
அமருங் கோயிற் பணிசமைத்தார்.
| [13] |
மந்திரிகள் தமைஏவி
வள்ளல்கொடை அநபாயன்
முந்தைவருங் குலமுதலோ
ராயமுதற் செங்கணார்
அந்தமில்சீர்ச் சோணாட்டில்
அகல்நாடு தொறுமணியார்
சந்திரசே கரன்அமருந்
தானங்கள் பலசமைத்தார்.
| [14] |
அக்கோயில் தொறுஞ்சிவனுக்
கமுதுபடி முதலான
மிக்கபெருஞ் செல்வங்கள்
விருப்பினால் மிகஅமைத்துத்
திக்கனைத்துந் தனிச்செங்கோல்
முறைநிறுத்தித் தேர்வேந்தர்
முக்கண்முதல் நடமாடும்
முதல்தில்லை முன்னினார்.
| [15] |
திருவார்ந்த செம்பொன்னின்
அம்பலத்தே நடஞ்செய்யும்
பெருமானை அடிவணங்கிப்
பேரன்பு தலைசிறப்ப
உருகாநின் றுளங்களிப்பத்
தொழுதேத்தி உறையும் நாள்
வருவாய்மை மறையவர்க்கு
மாளிகைகள் பலசமைத்தார்.
| [16] |
தேவர்பிரான் திருத்தொண்டில்
கோச்செங்கட் செம்பியர்கோன்
பூவலயம் பொதுநீக்கி
யாண்டருளிப் புவனியின்மேல்
ஏவியநல் தொண்டுபுரிந்
திமையவர்கள் அடிபோற்ற
மேவினார் திருத்தில்லை
வேந்தர்திரு வடிநிழற்கீழ்.
| [17] |
கருநீல மிடற்றார் செய்ய
கழலடி நீழல் சேர
வருநீர்மை யுடைய செங்கட்
சோழர்தம் மலர்த்தாள் வாழ்த்தித்
தருநீர்மை இசைகொள் யாழின்
தலைவராய் உலகம் ஏத்தும்
திருநீல கண்டப் பாணர்
திறம்இனிச் செப்ப லுற்றேன்.
| [18] |
Back to Top
சேக்கிழார் மன்னிய சீர்ச் சருக்கம்
12.690  
திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்
பண் - (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
எருக்கத்தம் புலியூர் மன்னி
வாழ்பவர் இறைவன் தன்சீர்
திருத்தகும் யாழி லிட்டுப்
பரவுவார் செழுஞ்சோ ணாட்டில்
விருப்புறு தானம் எல்லாம்
பணிந்துபோய் விளங்கு கூடல்
பருப்பதச் சிலையார் மன்னும்
ஆலவாய் பணியச் சென்றார்.
| [1] |
ஆலவாய் அமர்ந்தார் கோயில்
வாயிலை அடைந்து நின்று
பாலையீ ரேழு கோத்த
பண்ணினிற் கருவி வீக்கிக்
காலம் ஆதரித்த பண்ணில்
கைபல முறையும் ஆராய்ந்
தேலவார் குழலாள் பாகர்
பாணிகள் யாழில் இட்டார்.
| [2] |
மற்றவர் கருவிப் பாடல்
மதுரைநீ டால வாயில்
கொற்றவன் திருவுள் ளத்துக்
கொண்டுதன் தொண்டர்க் கெல்லாம்
அற்றைநாள் கனவில் ஏவ
அருட்பெரும் பாண னாரைத்
தெற்றினார் புரங்கள் செற்றார்
திருமுன்பு கொண்டு புக்கார்.
| [3] |
அன்பர்கள் கொண்டு புக்க
பொழுதினில் அரிவை பாகன்
மன்பெரும் பாண னாரும்
மாமறை பாட வல்லார்
தன்பெரும் பணியாம் என்று
தமக்குமெய் யுணர்த லாலே
முன்பிருந் தியாழிற் கூடல்
முதல்வரைப் பாடு கின்றார்.
| [4] |
திரிபுரம் எரித்த வாறும்
தேர்மிசை நின்ற வாறும்
கரியினை யுரித்த வாறும்
காமனைக் காய்ந்த வாறும்
அரிஅயற் கரிய வாறும்
அடியவர்க் கெளிய வாறும்
பரிவினாற் பாடக் கேட்டுப்
பரமனார் அருளி னாலே.
| [5] |
அந்தரத் தெழுந்த ஓசை
அன்பினிற் பாணர் பாடும்
சந்தயாழ் தரையிற் சீதந்
தாக்கில்வீக் கழியும் என்று
சுந்தரப் பலகை முன்நீர்
இடுமெனத் தொண்ட ரிட்டார்
செந்தமிழ்ப் பாண னாருந்
திருவருள் பெற்றுச் சேர்ந்தார்.
| [6] |
தமனியப் பலகை ஏறித்
தந்திரிக் கருவி வாசித்
துமையொரு பாகர் வண்மை
உலகெலாம் அறிய ஏத்தி
இமையவர் போற்ற ஏகி
எண்ணில்தா னங்கள் கும்பிட்
டமரர்நா டாளாது ஆரூர்
ஆண்டவர் ஆரூர் சேர்ந்தார்.
| [7] |
கோயில் வாயில் முன்னடைந்து
கூற்றன் செற்ற பெருந்திறலும்
தாயின் நல்ல பெருங்கருணை
அடியார்க் களிக்குந் தண்ணளியும்
ஏயுங் கருவி யில்தொடுத்தங்
கிட்டுப் பாடக் கேட்டுஅங்கண்
வாயில் வேறு வடதிசையில்
வகுப்பப் புகுந்து வணங்கினார்.
| [8] |
மூலத் தானத் தெழுந்தருளி
இருந்த முதல்வன் தனைவணங்கிச்
சாலக் காலம் அங்கிருந்து
தம்பி ரான்தன் திருவருளால்
சீலத் தார்கள் பிரியாத
திருவா ரூரி னின்றும்போய்
ஆலத் தார்ந்த கண்டத்தார்
அமருந் தானம் பலவணங்கி.
| [9] |
ஆழி சூழுந் திருத்தோணி
யமர்ந்த அம்மான் அருளாலே
யாழின் மொழியாள் உமைஞானம்
ஊட்ட உண்ட எம்பெருமான்
காழி நாடன் கவுணியர்கோன்
கமல பாதம் வணங்குதற்கு
வாழி மறையோர் புகலியினில்
வந்தார் சந்த இசைப்பாணர்.
| [10] |
ஞானம் உண்டார் கேட்டருளி
நல்ல இசையாழ்ப் பெரும்பாணர்க்
கான படியால் சிறப்பருளி
அமரு நாளில் அவர்பாடும்
மேன்மைப் பதிகத் திசையாழில்
இடப்பெற் றுடனே மேவியபின்
பானற் களத்தார் பெருமணத்தில்
உடனே பரமர் தாளடைந்தார்.
| [11] |
வரும்பான் மையினில் பெரும்பாணர்
மலர்த்தாள் வணங்கி வயற்சாலிக்
கரும்பார் கழனித் திருநாவ
லூரில் சைவக் கலைமறையோர்
அரும்பா நின்ற வணிநிலவும்
பணியும் அணிந்தா ரருள்பெற்ற
சுரும்பார் தொங்கல் சடையனார்
பெருமை சொல்ல லுறுகின்றாம்.
| [12] |
Back to Top
சேக்கிழார் மன்னிய சீர்ச் சருக்கம்
12.700  
சடைய நாயனார் புராணம்
பண் - (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
தம்பி ரானைத் தோழமைகொண்
டருளித் தமது தடம்புயஞ்சேர்
கொம்ப னார்பால் ஒருதூது
செல்ல யேவிக் கொண்டருளும்
எம்பி ரானைச் சேரமான்
பெருமாள் இணையில் துணைவராம்
நம்பி யாரூ ரரைப்பயந்தார்
ஞாலம் எல்லாம் குடிவாழ
| [1] |
Back to Top
சேக்கிழார் மன்னிய சீர்ச் சருக்கம்
12.710  
இசை ஞானியார் புராணம்
பண் - (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
ஒழியாப் பெருமைச் சடையனார்
உரிமைச் செல்வத் திருமனையார்
அழியாப் புரங்கள் எய்தழித்தார்
ஆண்ட நம்பி தனைப்பயந்தார்
இழியாக் குலத்தின் இசைஞானிப்
பிராட்டி யாரை என்சிறுபுன்
மொழியால் புகழ முடியுமோ
முடியா தெவர்க்கும் முடியாதால்.
| [1] |