சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

2.038   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருச்சாய்க்காடு (சாயாவனம்) - இந்தளம் அருள்தரு குயிலுநன்மொழியம்மை உடனுறை அருள்மிகு சாயாவனேசுவரர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=ag1F6pra03Q  
நித்தலும் நியமம் செய்து, நீர்மலர் தூவி,
சித்தம் ஒன்ற வல்லார்க்கு அருளும் சிவன் கோயில்
மத்தயானையின் கோடும் வண் பீலியும் வாரி,
தத்து நீர்ப் பொன்னி, சாகரம் மேவு சாய்க்காடே.


[ 1]


பண் தலைக்கொண்டு பூதங்கள் பாட நின்று ஆடும்,
வெண்தலைக் கருங்காடு உறை, வேதியன் கோயில்
கொண்டலைத் திகழ் பேரி முழங்க, குலாவித்
தண்டலைத்தடம் மா மயில் ஆடு சாய்க்காடே.


[ 2]


நாறு கூவிளம், நாகுஇளவெண்மதியத்தோடு
ஆறு, சூடும் அமரர்பிரான் உறை கோயில்
ஊறு தேங்கனி மாங்கனி ஓங்கிய சோலை,
தாறு தண் கதலிப் புதல், மேவு சாய்க்காடே.


[ 3]


வரங்கள் வண்புகழ் மன்னிய எந்தை, மருவார்
புரங்கள்மூன்றும் பொடிபட எய்தவன், கோயில்
இரங்கல் ஓசையும் ஈட்டிய சரக்கொடும் ஈண்டி,
தரங்கம் நீள்கழித் தண் கரை வைகு சாய்க்காடே.


[ 4]


ஏழைமார் கடைதோறும், இடு பலிக்கு என்று,
கூழைவாள்_அரவு ஆட்டும் பிரான் உறை கோயில்
மாழை_ஒண்கண் வளைக்கை நுளைச்சியர், வண் பூந்
தாழை வெண்மடல் கொய்து, கொண்டாடு சாய்க்காடே.


[ 5]


Go to top
துங்க வானவர் சூழ் கடல் தாம் கடைபோதில்,
அங்கு ஒர் நீழல் அளித்த எம்மான் உறை கோயில்
வங்கம் அங்கு ஒளிர் இப்பியும் முத்தும் மணியும்
சங்கும் வாரி, தடங்கடல் உந்து சாய்க்காடே.


[ 6]


வேத நாவினர், வெண்பளிங்கின் குழைக் காதர்,
ஓத_நஞ்சு அணி கண்டர், உகந்து உறை கோயில்
மாதர் வண்டு, தன் காதல்வண்டு ஆடிய புன்னைத்
தாது கண்டு, பொழில் மறைந்து, ஊடு சாய்க்காடே.


[ 7]


இருக்கும் நீள்வரை பற்றி அடர்த்து, அன்று எடுத்த
அரக்கன் ஆகம் நெரித்து, அருள்செய்தவன் கோயில்
மருக் குலாவிய மல்லிகை, சண்பகம் வண் பூந்
தரு, குலாவிய தண்பொழில் நீடு சாய்க்காடே.


[ 8]


மாலினோடு அயன் காண்டற்கு அரியவர், வாய்ந்த
வேலை ஆர் விடம் உண்டவர், மேவிய கோயில்
சேலின் நேர் விழியார் மயில்_ஆல, செருந்தி
காலையே கனகம்மலர்கின்ற சாய்க்காடே.


[ 9]


ஊத்தைவாய்ச் சமண்கையர்கள் சாக்கியர்க்கு என்றும்
ஆத்தம்_ஆக அறிவு அரிது_ஆயவன் கோயில்
வாய்த்த மாளிகை சூழ்தரு வண் புகார் மாடே,
பூத்த வாவிகள் சூழ்ந்து, பொலிந்த சாய்க்காடே.


[ 10]


Go to top
ஏனையோர் புகழ்ந்து ஏத்திய எந்தை சாய்க்காட்டை,
ஞானசம்பந்தன் காழியர்கோன் நவில் பத்தும்
ஊனம் இன்றி உரைசெய வல்லவர்தாம், போய்,
வானநாடு இனிது ஆள்வர், இம் மாநிலத்தோரே.


[ 11]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருச்சாய்க்காடு (சாயாவனம்)
2.038   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நித்தலும் நியமம் செய்து, நீர்மலர்
Tune - இந்தளம்   (திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயாவனேசுவரர் குயிலுநன்மொழியம்மை)
2.041   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மண் புகார், வான்புகுவர்; மனம்
Tune - சீகாமரம்   (திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயாவனேசுவரர் குயிலுநன்மொழியம்மை)
4.065   திருநாவுக்கரசர்   தேவாரம்   தோடு உலாம் மலர்கள் தூவித்
Tune - திருநேரிசை   (திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயவனேசுவரர் குயிலின்நன்மொழியம்மை)
6.082   திருநாவுக்கரசர்   தேவாரம்   வானத்து இளமதியும் பாம்பும் தன்னில்
Tune - திருத்தாண்டகம்   (திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயவனேசுவரர் குயிலின்நன்மொழியம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song