திருப்பிரமபுரம் (சீர்காழி) - சாதாரி பவப்ரியா பந்துவராளி காஞ்சனாவதி ராகத்தில் திருமுறை அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி நான்காவது தலயாத்திரையை முடித்துக் கொண்டு சீர்காழி திரும்பிய திருஞானசம்பந்தர் அந்த நகரத்தில் பல நாட்கள் தங்கி பல வகையான பதிகங்கள் பாடினார். இந்த பதிகம் பன்னிரண்டு பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலிலும் சீர்காழி நகரின் ஒரு பெயர் வந்த வரலாற்றினை கூறுவதால், வழிமொழிப் பதிகம் என பெயர் வந்தது. பாடல்களிலும் முன்பகுதியில் இறைவனது சிறப்பும் பின்பகுதியில் அந்த பெயர் வந்ததற்கான விரிவான தலபுராண வரலாறும் கொடுக்கப்பட்டுள்ளன. தலத்தின் பன்னிரண்டு பெயர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இயற்றப்பட்ட பாடல் எனினும், வழக்கமாக தான் குறிப்பிடும் இராவணின் கயிலை நிகழ்ச்சி, அண்ணாமலை சம்பவம், சமணர்களை பற்றிய குறிப்பு மற்றும் பதிகத்தை ஓதுவதால் கிடைக்கும் பலங்கள் ஆகியவையும் இந்த பதிகத்தில் குறிப்பிடப் படுகின்றன. வேகமான சந்தமுடைய பாடல்கள் என்பதால் முடுகு விராகம் என்று இந்த பதிகம் அழைக்கப் படுகின்றது. சீர்காழியின் இந்த பன்னிரண்டு பெயர்களும் மந்திரம் என்பதால் இந்த பெயர்களை இந்த பதிகத்தில் கொடுத்துள்ள வரிசைப் படியே சொல்ல வேண்டும்.
சுரர் உலகு, நரர்கள் பயில் தரணிதலம், முரண் அழிய, அரண மதில் முப்-
புரம் எரிய, விரவு வகை சர விசை கொள் கரம் உடைய பரமன் இடம் ஆம்
வரம் அருள வரல் முறையின் நிரல் நிறை கொள்வரு சுருதிசிர உரையினால்,
பிரமன் உயர் அரன் எழில் கொள் சரண இணை பரவ, வளர் பிரமபுரமே.
தாணு மிகு ஆண் இசைகொடு, ஆணு வியர் பேணுமது காணும் அளவில்,
கோணும் நுதல் நீள் நயனி கோண் இல் பிடி மாணி, மது நாணும் வகையே
ஏணு கரி பூண் அழிய, ஆண் இயல் கொள் மாணி பதி-சேண் அமரர்கோன்
வேணுவினை ஏணி, நகர் காணில், திவி காண, நடு வேணுபுரமே.
பகல் ஒளிசெய் நக மணியை, முகை மலரை, நிகழ் சரணஅகவு முனிவர்க்கு
அகலம் மலி சகல கலை மிக உரைசெய் முகம் உடைய பகவன் இடம் ஆம்
பகை களையும் வகையில் அறுமுக இறையை மிக அருள, நிகர் இல் இமையோர்
புக, உலகு புகழ, எழில் திகழ, நிகழ் அலர் பெருகு புகலிநகரே.
அம் கண் மதி, கங்கை நதி, வெங்கண் அரவங்கள், எழில் தங்கும் இதழித்
துங்க மலர், தங்கு சடை அங்கி நிகர் எங்கள் இறை தங்கும் இடம் ஆம்
வெங்கதிர் விளங்கு உலகம் எங்கும் எதிர் பொங்கு எரி புலன்கள் களைவோர்
வெங் குரு விளங்கி உமைபங்கர் சரணங்கள் பணி வெங்குரு அதே.
ஆண் இயல்பு காண, வனவாண இயல் பேணி, எதிர் பாணமழை சேர்
தூணி அற, நாணி அற, வேணு சிலை பேணி அற, நாணி விசயன்
பாணி அமர் பூண, அருள் மாணு பிரமாணி இடம் ஏணி முறையில்
பாணி உலகு ஆள, மிக ஆணின் மலி தோணி நிகர் தோணிபுரமே.
அறம் அழிவு பெற உலகு தெறு புயவன் விறல் அழிய, நிறுவி விரல், மா-
மறையின் ஒலி முறை முரல்செய் பிறை எயிறன் உற, அருளும் இறைவன் இடம் ஆம்
குறைவு இல் மிக நிறைதை உழி, மறை அமரர் நிறை அருள, முறையொடு வரும்
புறவன் எதிர் நிறை நிலவு பொறையன் உடல் பெற, அருளு புறவம் அதுவே.
விண் பயில, மண் பகிரி, வண் பிரமன் எண் பெரிய பண் படை கொள் மால்,
கண் பரியும் ஒண்பு ஒழிய, நுண்பொருள்கள் தண் புகழ் கொள் கண்டன் இடம் ஆம்
மண் பரியும் ஒண்பு ஒழிய, நுண்பு சகர் புண் பயில விண் படர, அச்
சண்பை மொழி பண்ப முனி கண் பழி செய் பண்பு களை சண்பை நகரே.
பாழி உறை வேழம் நிகர் பாழ் அமணர், சூழும் உடலாளர், உணரா
ஏழின் இசை யாழின் மொழி ஏழை அவள் வாழும் இறை தாழும் இடம் ஆம்
கீழ், இசை கொள் மேல் உலகில், வாழ் அரசு சூழ் அரசு வாழ, அரனுக்கு
ஆழிய சில்காழி செய, ஏழ் உலகில் ஊழி வளர் காழி நகரே.
நச்சு அரவு கச்சு என அசைச்சு, மதி உச்சியின் மிலைச்சு, ஒரு கையால்
மெய்ச் சிரம் அணைச்சு, உலகில் நிச்சம் இடு பிச்சை அமர் பிச்சன் இடம் ஆம்
மச்சம் மதம் நச்சி மதமச் சிறுமியைச் செய் தவ அச்ச விரதக்
கொச்சை முரவு அச்சர் பணிய, சுரர்கள் நச்சி மிடை கொச்சைநகரே.
ஒழுகல் அரிது அழி கலியில், உழி உலகு பழி பெருகு வழியை நினையா,
முழுது உடலில் எழும் மயிர்கள் தழுவும் முனிகுழுவினொடு, கெழுவு சிவனைத்
தொழுது, உலகில் இழுகும் மலம் அழியும் வகை கழுவும் உரை கழுமல நகர்
பழுது இல் இறை எழுதும் மொழி தமிழ் விரகன் வழி மொழிகள் மொழி தகையவே.
2.065
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கறை அணி வேல் இலர்போலும்;
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.073
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விளங்கிய சீர்ப் பிரமன் ஊர்,
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.074
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூமகன் ஊர், புத்தேளுக்கு இறைவன்
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)