வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்தது ஒரு மா கடல் விடம்
தான் அமுது செய்து, அருள்புரிந்த சிவன் மேவும் மலை தன்னை வினவில்
ஏனம் இனமானினொடு கிள்ளை தினை கொள்ள, எழில் ஆர் கவணினால்,
கானவர் தம் மா மகளிர் கனகம் மணி விலகு காளத்திமலையே.
|
1
|
முது சின வில் அவுணர் புரம் மூன்றும் ஒரு நொடி வரையின் மூள எரி செய்
சதுரர், மதி பொதி சடையர், சங்கரர், விரும்பும் மலைதன்னை வினவில்
எதிர் எதிர வெதிர் பிணைய, எழு பொறிகள் சிதற, எழில் ஏனம் உழுத
கதிர் மணியின் வளர் ஒளிகள், இருள் அகல நிலவு காளத்திமலையே.
|
2
|
வல்லை வரு காளியை வகுத்து, வலி ஆகி மிகு தாருகனை நீ
கொல்! என விடுத்து, அருள் புரிந்த சிவன் மேவும் மலை கூறி வினவில்
பல்பல இருங் கனி பருங்கி மிக உண்டவை நெருங்கி இனம் ஆய்,
கல் அதிர நின்று, கரு மந்தி விளையாடு காளத்திமலையே.
|
3
|
வேய் அனைய தோள் உமை ஒர்பாகம் அது ஆக விடை ஏறி, சடைமேல்
தூய மதி சூடி, சுடுகாடில் நடம் ஆடி, மலை தன்னை வினவில்
வாய் கலசம் ஆக வழிபாடு செயும் வேடன் மலர் ஆகும் நயனம்
காய் கணையினால் இடந்து, ஈசன் அடி கூடு காளத்திமலையே.
|
4
|
மலையின் மிசை தனில் முகில் போல் வருவது ஒரு மதகரியை மழை போல் அலறக்
கொலை செய்து, உமை அஞ்ச, உரி போர்த்த சிவன் மேவும் மலை கூறி வினவில்
அலை கொள் புனல் அருவி பலசுனைகள் வழி இழிய, அயல் நிலவு முது வேய்
கலகலென ஒளி கொள் கதிர் முத்தம் அவை சிந்து காளத்திமலையே.
|
5
|
Go to top |
பார் அகம் விளங்கிய பகீரதன் அருந்தவம் முயன்ற பணி கண்டு
ஆர் அருள் புரிந்து, அலை கொள் கங்கை சடை ஏற்ற அரன் மலையை வினவில்
வார் அதர் இருங் குறவர் சேவலில் மடுத்து, அவர் எரித்த விறகில்
கார் அகில் இரும் புகை விசும்பு கமழ்கின்ற காளத்திமலையே.
|
6
|
ஆரும் எதிராத வலி ஆகிய சலந்தரனை ஆழி அதனால்
ஈரும் வகை செய்து, அருள்புரிந்தவன் இருந்த மலைதன்னை வினவில்
ஊரும் அரவம்(ம்) ஒளி கொள் மா மணி உமிழ்ந்தவை உலாவி வரலால்,
கார் இருள் கடிந்து, கனகம்(ம்) என விளங்கு காளத்திமலையே.
|
7
|
எரி அனைய சுரிமயிர் இராவணனை ஈடு அழிய, எழில் கொள் விரலால்,
பெரிய வரை ஊன்றி அருள் செய்த சிவன் மேவும் மலை பெற்றி வினவில்
வரிய சிலை வேடுவர்கள் ஆடவர்கள் நீடு வரை ஊடு வரலால்,
கரியினொடு வரி உழுவை அரி இனமும் வெருவு காளத்திமலையே.
|
8
|
இனது அளவில், இவனது அடி இணையும், முடி, அறிதும் என இகலும் இருவர்
தனது உருவம் அறிவு அரிய சகல சிவன் மேவும் மலைதன்னை வினவில்
புனவர் புனமயில் அனைய மாதரொடு மைந்தரும் மணம் புணரும் நாள
கனகம் என மலர்கள் அணி வேங்கைகள் நிலாவு காளத்திமலையே.
|
9
|
நின்று கவளம் பல கொள் கையரொடு, மெய்யில் இடு போர்வையவரும்,
நன்றி அறியாத வகை நின்ற சிவன் மேவும் மலை நாடி வினவில்
குன்றில் மலி துன்று பொழில் நின்ற குளிர் சந்தின் முறி தின்று குலவி,
கன்றினொடு சென்று பிடி நின்று விளையாடு காளத்திமலையே.
|
10
|
Go to top |
காடு அது இடம் ஆக நடம் ஆடு சிவன் மேவு காளத்திமலையை,
மாடமொடு மாளிகைகள் நீடு வளர் கொச்சைவயம் மன்னு தலைவன்-
நாடு பல நீடு புகழ் ஞானசம்பந்தன்-உரை நல்ல தமிழின்
பாடலொடு பாடும் இசை வல்லவர்கள் நல்லர்; பரலோகம் எளிதே.
|
11
|