திருவருள் புரிந்தாள் ஆண்டுகொண் டிங்ஙன் சிறியனுக்(கு) இனியது காட்டிப் பெரிதருள் புரிந்தா னந்தமே தரும்நின் பெருமையிற் பெரியதொன் றுளதே மருதர சிருங்கோங்கு அகில்மரம் சாடி வரைவளங் கவர்ந்திழி வைகைப் பொருதிரை மருங்கோங்(கு) ஆவண வீதிப் பூவணங் கோயில்கொண் டாயே. |
1
|
பாம்பணைத் துயின்றோன் அயன்முதல் தேவர் பன்னெடுங் காலம்நிற் காண்பான் ஏம்பலித் திருக்க என்னுளம் புகுந்த எளிமையை என்றும் நான் மறக்கேன் தேம்புனற் பொய்கை வாளைவாய் மடுப்பத் தெளிதரு தேறல்பாய்ந் தொழுகும் பூம்பணைச் சோலை ஆவண வீதிப் பூவணங் கோயில்கொண் டாயே. |
2
|
கரைகடல் ஒலியில் தமருகத்(து) அரையில் கையினிற் கட்டிய கயிற்றால் இருதலை ஒருநா இயங்கவந்(து) ஒருநாள் இருந்திடாய் எங்கள்கண் முகப்பே; விரிதிகழ் விழவின் பின்செல்வோர் பாடல் வேட்கையின் வீழ்ந்தபோது அவிழ்ந்த புரிசடை துகுக்கும் ஆவண வீதிப் பூவணங் கோயில்கொண் டாயே. |
3
|
கண்ணியல் மணியின் சூழல்புக்(கு) அங்கே கலந்துபுக்(கு) ஒடுங்கினேற்(கு) அங்ஙன் நுண்ணியை எனினும் நம்பநின் பெருமை நுண்ணிமை இறந்தமை அறிவன் மண்ணியன் மரபில் தங்கிருள் மொழுப்பின் வண்டினம் பாடநின் றாடும் புண்ணிய மகளிர் ஆவண வீதிப் பூவணங் கோயில்கொண் டாயே. |
4
|
கடுவினைப் பாசக் கடல்கடந்து ஐவர் கள்ளரை மெள்ளவே துரந்துன் அடியினை இரண்டும் அடையுமா(று) அடைந்தேன் அருள் செய்வாய் அருள்செயா தொழிவாய் நெடுநிலை மாடத்(து) இரவிருள் கிழிக்க நிலைவிளக்(கு) அலகில்சா லேகம் புடைகிடந்(து) இலங்கும் ஆவண வீதிப் பூவணங் கோயில் கொண் டாயே. |
5
|
| Go to top |
செம்மனக் கிழவோர் அன்புதா என்றுன் சேவடி பார்த்திருந்(து) அலச எம்மனம் குடிகொண் டிருப்பதற்(கு) யானார் என்னுடை அடிமைதான் யாதே அம்மனம் குளிர்நாட் பலிக்கெழுந் தருள அரிவையர் அவிழ்குழல் கரும்பு பொம்மென முரலும் ஆவண வீதிப் பூவணங் கோயில்கொண் டாயே. |
6
|
சொன்னவில் முறைநான்(கு) ஆரணம் உணராச் சூழல்புக்(கு) ஒளித்தநீ இன்று கன்னவில் மனத்தென் கண்வலைப் படும்இக் கருணையிற் பெரியதொன் றுளதே மின்னவில் கனக மாளிகை வாய்தல் விளங்கிளம் பிறைதவழ் மாடம் பொன்னவில் புரிசை ஆவண வீதிப் பூவணங் கோயில்கொண் டாயே. |
7
|
இப்பாடல் கிடைக்கவில்லை. |
8
|
இப்பாடல் கிடைக்கவில்லை. |
9
|
பூவணங் கோயில் கொண்டெனை ஆண்ட புனிதனை வனிதைபா கனை வெண் கோவணங் கொண்டு வெண்டலை ஏந்தும் குழகனை அழகெலாம் நிறைந்த தீவணன் தன்னைச் செழுமறை தெரியும் திகழ்கரு வூரனேன் உரைத்த பாவணத் தமிழ்கள் பத்தும்வல் லார்கள் பரமனது உருவமா குவரே. |
10
|
| Go to top |