![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
https://www.youtube.com/watch?v=28Azl8Dg42c Add audio link
3.125
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருநல்லூர்ப்பெருமணம் (ஆச்சாள்புரம்) - அந்தாளிக்குறிஞ்சி யாகப்பிரியா சாமா கலாவதி ராகத்தில் திருமுறை அருள்தரு நங்கையுமைநாயகியம்மை உடனுறை அருள்மிகு சிவலோகத்தியாகேசர் திருவடிகள் போற்றி
சிவபாத இருதயர் திருநல்லூரில் வாழும் நம்பாண்டார் என்பாரின் மகளை மணம் பேசி நிச்சயித்தார். நல்லூர் மணவிழா வினால் பொலிவு பெற்றது. ஞானசம்பந்தர் உரிய நாளில் தோணிபுரத் தில் பெரிய நாயகியாருடன் வீற்றிருந்தருளும் பெருமானை வணங்கிச் சிவிகைமீது அமர்ந்து அடியவர்கள் உறவினர்கள் உடன் வரத் திருநல்லூரை அடைந்தார். அங்கு விளங்கும் பெருமணம் என்னும் கோயிலை அடைந்து சிவபிரானைப் பணிந்து போற்றினார். உறவினர் கள் வேண்டக் கோயிலின் பக்கத்தே அமைந்த திருமடத்தில் திரு மஞ்சனமாடித் திருமணக் கோலம் பூண்டு திருமணச் சாலைக்கு எழுந்தருளினார். நம்பாண்டார் நம்பியும் அவரது துணைவியாரும் அவரைப் பொற்பீடத்தில் இருத்தித் திருவடிகளைத் தூய நீரால் விளக்கி அந்நன்னீரை உட்கொண்டு அனைவர் மேலும் தெளித்து, ஞான சம்பந்தரை நோக்கி யான் பெற்ற அருநிதிப் பாவையை ஆளுடைய பிள்ளையார்க்கு அளித்தேன் என உரைத்தார். மங்கல மகளிர் மணப் பெண்ணை அழைத்து வந்து ஞானசம்பந்தரின் வலப்பால் அமரச் செய்தனர். திருநீலநக்க நாயனார் வேத விதிப்படி திருமணச் சடங்குகளை நிகழ்த்தினார். ஞானசம்பந்தர் காதலியாரைக் கைப்பற்றித் தீவலம் வரும்போது விருப்புறும் அங்கியாவார் விடை உயர்த்தவரே என்னும் நினைவினராய் இருவினைக்கு வித்தாகிய இந்த இல்லறம் நம்மைச் சூழ்ந்து கொண்டதே இனி இவளோடும் அந்தமில் சிவன்தாளை அடைவோம் என உறுதி கொண்டு திருப்பெருமணக் கோயிலை அடைந்தார். இறைவன் திருமுன் நின்று கல்லூர்ப் பெருமணம் வேண்டா எனத் தொடங்கித் திருப்பதிகம் அருளிச் செய்தார்.
கல் ஊர்ப் பெரு மணம் வேண்டா கழுமலம்
பல் ஊர்ப் பெரு மணம் பாட்டு மெய் ஆய்த்தில?
சொல் ஊர்ப் பெரு மணம் சூடலரே! தொண்டர்
நல்லூர்ப்பெருமணம் மேய நம்பானே!
1
தரு மணல் ஓதம் சேர் தண்கடல் நித்திலம்
பரு மணலாக் கொண்டு, பாவை நல்லார்கள்,
வரும் மணம் கூட்டி, மணம் செயும் நல்லூர்ப்-
பெருமணத்தான் பெண் ஓர்பாகம் கொண்டானே!
2
அன்பு உறு சிந்தையராகி, அடியவர்
நன்பு உறு நல்லூர்ப்பெருமணம் மேவி நின்று,
இன்பு உறும் எந்தை இணை அடி ஏத்துவார்
துன்பு உறுவார் அல்லர்; தொண்டு செய்தாரே.
3
வல்லியந்தோல் உடை ஆர்ப்பது; போர்ப்பது
கொல் இயல் வேழத்து உரி; விரி கோவணம்
நல் இயலார் தொழு நல்லூர்ப்பெருமணம்
புல்கிய வாழ்க்கை எம் புண்ணியனார்க்கே.
4
ஏறு உகந்தீர்; இடுகாட்டு எரி ஆடி, வெண்-
நீறு உகந்தீர்; நிரை ஆர் விரி தேன் கொன்றை
நாறு உகந்தீர் திரு நல்லூர்ப்பெருமணம்
வேறு உகந்தீர்! உமை கூறு உகந்தீரே!
5
Go to top
சிட்டப்பட்டார்க்கு எளியான், செங்கண் வேட்டுவப்-
பட்டம் கட்டும் சென்னியான், பதி ஆவது
நட்டக்கொட்டு ஆட்டு அறா நல்லூர்ப்பெருமணத்து
இட்டப்பட்டால் ஒத்திரால் எம்பிரானீரே!
6
மேகத்த கண்டன், எண்தோளன், வெண் நீற்று உமை
பாகத்தன், பாய் புலித்தோலொடு பந்தித்த
நாகத்தன்-நல்லூர்ப்பெருமணத்தான்; நல்ல
போகத்தன், யோகத்தையே புரிந்தானே.
7
தக்கு இருந்தீர்! அன்று தாளால் அரக்கனை
உக்கு இருந்து ஒல்க உயர்வரைக்கீழ் இட்டு
நக்கு இருந்தீர்; இன்று நல்லூர்ப்பெருமணம்
புக்கு இருந்தீர்! எமைப் போக்கு அருளீரே!
8
ஏலும் தண் தாமரையானும் இயல்பு உடை
மாலும் தம் மாண்பு அறிகின்றிலர்; மாமறை-
நாலும் தம் பாட்டு என்பர்; நல்லூர்ப்பெருமணம்-
போலும், தம் கோயில் புரிசடையார்க்கே.
9
ஆதர் அமணொடு, சாக்கியர், தாம் சொல்லும்
பேதைமை கேட்டுப் பிணக்கு உறுவீர்! வம்மின்!
நாதனை, நல்லூர்ப்பெருமணம் மேவிய
வேதன, தாள் தொழ, வீடு எளிது ஆமே.
10
Go to top
நறும்பொழில் காழியுள் ஞானசம்பந்தன்,
பெறும் பத நல்லூர்ப்பெருமணத்தானை,
உறும் பொருளால் சொன்ன ஒண்தமிழ் வல்லார்க்கு
அறும், பழி பாவம்; அவலம் இலரே.
11
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருநல்லூர்ப்பெருமணம் (ஆச்சாள்புரம்)
3.125
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கல் ஊர்ப் பெரு மணம்
Tune - அந்தாளிக்குறிஞ்சி
(திருநல்லூர்ப்பெருமணம் (ஆச்சாள்புரம்) சிவலோகத்தியாகேசர் நங்கையுமைநாயகியம்மை)
This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000