திருப்பிரமபுரம் (சீர்காழி) - நட்டபாடை சலநாட்டை கம்பீரநாட்டை ராகத்தில் திருமுறை அருள்தரு திருநிலைநாயகி
உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி ஒரு நாள் காலையில் சிவபாத இருதயர் வேதவிதிப்படி நீராடுதற்குத் திருக்கோயி லுள்ளிருக்கும் பிரமதீர்த்தத்திற்குப் புறப்பட் டார். தந்தையார் வெளியில் செல்வதைக் கண்ட பிள்ளையார் தானும் உடன் வரவேண்டுமென்ற குறிப்போடு கால்களைக் கொட்டிக் கொண்டு அழுதார். தந்தையார் தன் மைந்தரைப் பார்த்து உன் செய்கை இதுவாயின் உடன் வருக எனக் கூறி அவரையும் உடனழைத்துக் கொண்டு சென்று பிரம தீர்த்தக் கரையில் பிள்ளையாரை இருத்திவிட்டு விரைந்து நீராடித் திரும்பும் எண்ணத்தோடு நீர்நிலையில் இறங்கினார். சில நிமிடங்கள் முழ்கியிருந்து செபித்தற்குரிய அகமர்ஷண மந்திரங் களைச் சொல்லிக் கொண்டு நீரில் மூழ்கினார். இந்நிலையில் கரையில் அமர்ந்திருந்த பிள்ளையார் தந்தை யாரைக் காணாமல் முற்பிறப்பின் நினைவு மேலிட்டவராய் திருத் தோணி மலைச் சிகரத்தைப் பார்த்துக் கண்மலர்கள் நீர் ததும்பக் கைமலர்களால் பிசைந்து வண்ணமலர்ச் செங்கனிவாய் மணியதரம் புடை துடிப்ப அம்மே அப்பா என அழைத்து அழுதருளினார். பிள்ளையின் அழுகுரல் கேட்ட நிலையில் தோணிபுரத்து இறைவர் இறைவியாருடன் விடைமீது அமர்ந்து குளக்கரைக்கு எழுந்தருளி னார். பெருமான் உமையம்மையை நோக்கி அழுகின்ற இப் பிள்ளைக்கு உன் முலைப்பாலைப் பொற்கிண்ணத்தில் கறந்து ஊட்டுக எனப்பணித்தார். அம்மையாரும் அவ்வாறே தன் திருமுலைப்பாலைப் பொற்கிண்ணத்தில் கறந்து சிவஞானமாகிய அமுதைக் குழைத்து அழுகின்ற குழந்தை கையில் கொடுத்து உண்ணச் செய்து அழுகை தீர்த்தருளினார். தேவர்க்கும் முனிவர்க்கும் கிடைக்காத பேரின்பம் பெற்ற நிலையில் பிள்ளையார் திருஞானசம்பந்தராய் அபரஞானம் பரஞானம் அனைத்தும் கைவரப் பெற்றார். அப்பொழுது நீரில் மூழ்கி நியமங்களை முடித்துக் கரை யேறிய சிவபாத இருதயர் சிவஞானத் திருவுருவாய்க் கரையில் நிற்கும் தம்மைந்தரைக் கண்டார். கடைவாய் வழியாகப் பால் வழிந் திருப்பதைக் கண்ட அவர், தன் மகனார்க்கு யாரோ பால் அளித்துச் சென்றுள்ளார்கள் என்று எண்ணியவராய் ஞான போனகரை நோக்கிப் பிள்ளாய் நீ யார் அளித்த பால் அடிசிலை உண்டாய்? எச்சில் கலக்குமாறு உனக்கு இதனை அளித்தவர் யார்? காட்டுக என்று வெகுண்டு தரையில் கிடந்த கோல் ஒன்றைக் கையில் எடுத்து ஓச்சியவ ராய் வினவினார். சிறிய பெருந்தகையார் தம் உள்ளத்துள் எழுந்த உயர் ஞானத் திருமொழியால் தமிழ் என்னும் மொழியின் முதல் எழுத்தாகிய தகர மெய்யில் பிரணவத்தை உயிராய் இணைத்துத் தனக்குப் பாலளித்த உமைஅம்மையின் தோடணிந்த திருச்செவியைச் சிறப்பிக்கும் முறையில் தோடுடைய செவியன் என்ற முதற்பெரும் பாடலால் தனக்குப் பாலளித்த கடவுளின் அடையாளங்களைச் சுட்டித் திருப் பதிகம் அருளிச்செய்தார். முன் பிறப்பு நல் வினை கை கூட, இறைவன் அருள் பெற
தோடு உடைய செவியன், விடை ஏறி, ஓர் தூ வெண்மதி சூடி, காடு உடைய சுடலைப் பொடி பூசி, என் உள்ளம் கவர் கள்வன்- ஏடு உடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த, அருள்செய்த, பீடுஉடைய பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!
நீர் பரந்த நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா வெண்மதி சூடி, ஏர் பரந்த இன வெள் வளை சோர, என் உள்ளம் கவர் கள்வன்- ஊர் பரந்த உலகின் முதல் ஆகிய ஓர் ஊர் இது என்னப் பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!
விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி, விளங்கு தலை ஓட்டில் உள் மகிழ்ந்து, பலி தேரிய வந்து, எனது உள்ளம் கவர் கள்வன்- மண் மகிழ்ந்த அரவம், மலர்க் கொன்றை, மலிந்த வரைமார்பில் பெண் மகிழ்ந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!
ஒருமை பெண்மை உடையன்! சடையன்! விடை ஊரும் இவன்! என்ன அருமை ஆக உரை செய்ய அமர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்- கருமை பெற்ற கடல் கொள்ள, மிதந்தது ஒர் காலம் இது என்னப் பெருமை பெற்ற பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!
மறை கலந்த ஒலிபாடலொடு ஆடலர் ஆகி, மழு ஏந்தி, இறை கலந்த இனவெள்வளை சோர, என் உள்ளம் கவர் கள்வன்- கறை கலந்த கடி ஆர் பொழில், நீடு உயர் சோலை, கதிர் சிந்தப் பிறை கலந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!
வியர் இலங்கு வரை உந்திய தோள்களை வீரம் விளைவித்த உயர் இலங்கை அரையன் வலி செற்று, எனது உள்ளம் கவர் கள்வன்- துயர் இலங்கும் உலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுது எல்லாம் பெயர் இலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!
தாள் நுதல் செய்து, இறை காணிய, மாலொடு தண்தாமரை யானும், நீணுதல் செய்து ஒழிய நிமிர்ந்தான், எனது உள்ளம் கவர் கள்வன்- வாள்நுதல் செய் மகளீர் முதல் ஆகிய வையத்தவர் ஏத்த, பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!
அருநெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய, பெரு நெறிய, பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் தன்னை, ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதுஆமே.
2.065
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கறை அணி வேல் இலர்போலும்;
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.073
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விளங்கிய சீர்ப் பிரமன் ஊர்,
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.074
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூமகன் ஊர், புத்தேளுக்கு இறைவன்
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.117
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
யாமாமா நீ யாமாமா யாழீகாமா
Tune - கௌசிகம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai song author %E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D paadal name %E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%2C+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88 pathigam no 1.001