வேதியன், விண்ணவர் ஏத்த நின்றான், விளங்கும் மறை
ஓதிய ஒண்பொருள் ஆகி நின்றான், ஒளி ஆர் கிளி
கோதிய தண்பொழில் சூழ்ந்து அழகு ஆர் திருக்கோட்டாற்றுள்
ஆதியையே நினைந்து ஏத்த வல்லார்க்கு அல்லல் இல்லையே.
|
1
|
ஏல மலர்க் குழல் மங்கை நல்லாள், இமவான்மகள்
பால் அமரும் திருமேனி எங்கள் பரமேட்டியும்
கோல மலர்ப்பொழில் சூழ்ந்து, எழில் ஆர் திருக்கோட்டாற்றுள்
ஆல நிழல் கீழ் இருந்து, அறம் சொன்ன அழகனே.
|
2
|
இலை மல்கு சூலம் ஒன்று ஏந்தினானும், இமையோர் தொழ
மலை மல்கு மங்கை ஓர்பங்கன் ஆய(ம்) மணிகண்டனும்
குலை மல்கு தண்பொழில் சூழ்ந்து, அழகு ஆர் திருக்கோட்டாற்றுள்
அலை மல்கு வார்சடை ஏற்று உகந்த அழகன் அன்றே!
|
3
|
ஊன் அமரும்(ம்) உடலுள் இருந்த(வ்) உமைபங்கனும்
வான் அமரும் மதி சென்னி வைத்த மறை ஓதியும்,
தேன் அமரும் மலர்ச்சோலை சூழ்ந்த திருக்கோட்டாற்றுள்
தான் அமரும் விடையானும், எங்கள் தலைவன் அன்றே!
|
4
|
வம்பு அலரும் மலர்க்கோதை பாகம் மகிழ் மைந்தனும்,
செம்பவளத்திருமேனி வெண்நீறு அணி செல்வனும்
கொம்பு அமரும் மலர் வண்டு கெண்டும் திருக்கோட்டாற்றுள்
நம்பன் எனப் பணிவார்க்கு அருள்செய் எங்கள் நாதனே.
|
5
|
Go to top |
பந்து அமரும் விரல் மங்கை நல்லாள் ஒருபாகமா,
வெந்து அமரும் பொடிப் பூச வல்ல விகிர்தன், மிகும்
கொந்து அமரும் மலர்ச்சோலை சூழ்ந்த திருக்கோட்டாற்றுள்
அந்தணனை, நினைந்து ஏத்த வல்லார்க்கு இல்லை, அல்லலே.
|
6
|
துண்டு அமரும் பிறை சூடி நீடு சுடர்வண்ணனும்,
வண்டு அமரும் குழல் மங்கை நல்லாள் ஒருபங்கனும்
தெண்திரை நீர் வயல் சூழ்ந்து அழகு ஆர் திருக்கோட்டாற்றுள்
அண்டமும் எண் திசை ஆகி நின்ற அழகன் அன்றே!
|
7
|
இரவு அமரும் நிறம் பெற்று உடைய இலங்கைக்கு இறை,
கரவு அமரக் கயிலை எடுத்தான், வலி செற்றவன்-
குரவு அமரும் மலர்ச்சோலை சூழ்ந்த திருக்கோட்டாற்றுள்
அரவு அமரும் சடையான்; அடியார்க்கு அருள்செய்யுமே.
|
8
|
ஓங்கிய நாரணன் நான்முகனும் உணரா வகை,
நீங்கிய தீ உரு ஆகி நின்ற நிமலன்-நிழல்
கோங்கு அமரும் பொழில் சூழ்ந்து, எழில் ஆர் திருக்கோட்டாற்றுள்
ஆங்கு அமரும் பெருமான்; அமரர்க்கு அமரன் அன்றே!
|
9
|
கடுக் கொடுத்த துவர் ஆடையர், காட்சி இல்லாதது ஓர்
தடுக்கு இடுக்கிச் சமணே திரிவார்கட்கு, தன் அருள்
கொடுக்ககிலாக் குழகன் அமரும் திருக்கோட்டாற்றுள்
இடுக்கண் இன்றித் தொழுவார் அமரர்க்கு இறை ஆவரே.
|
10
|
Go to top |
கொடி உயர் மால்விடை ஊர்தியினான் திருக்கோட்டாற்றுள்
அடி கழல் ஆர்க்க நின்று ஆட வல்ல அருளாளனை,
கடி கமழும் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் சொல்-
படி, இவை பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை, பாவமே.
|
11
|