பொருப்பள்ளி, வரை வில்லாப் புரம் மூன்று எய்து, புலந்து அழிய, சலந்தரனைப் பிளந்தான், பொன் சக்- கரப்பள்ளி, திருக்காட்டுப்பள்ளி, கள் ஆர் கமழ் கொல்லி அறைப்பள்ளி, கலவம் சாரல் சிரப்பள்ளி, சிவப்பள்ளி, செம்பொன்பள்ளி, செழு நனிபள்ளி, தவப்பள்ளி, சீர் ஆர் பரப்பள்ளி, என்று என்று பகர்வோர் எல்லாம் பரலோகத்து இனிது ஆகப் பாலிப்பாரே.
மலையார் தம் மகளொடு மாதேவன் சேரும் மறைக்காடு; வண்பொழில் சூழ் தலைச்சங்காடு; தலையாலங்காடு; தடங்கடல் சூழ் அம் தண் சாய்க்காடு; தெள்ளு புனல் கொள்ளிக்காடு; பலர் பாடும் பழையனூர் ஆலங்காடு; பனங்காடு; பாவையர்கள் பாவம் நீங்க, விலை ஆடும் வளை திளைக்க, குடையும் பொய்கை வெண்காடும்; அடைய வினை வேறு ஆம் அன்றே.
கடு வாயர் தமை நீக்கி என்னை ஆட்கொள் கண் நுதலோன் நண்ணும் இடம் அண்ணல் வாயில், நெடுவாயில், நிறை வயல் சூழ் நெய்தல் வாயில், நிகழ் முல்லை வாயிலொடு, ஞாழல் வாயில், மடு ஆர் தென் மதுரை நகர் ஆலவாயில், மறிகடல் சூழ் புனவாயில், மாடம் நீடு குடவாயில், குணவாயில், ஆன எல்லாம் புகுவாரைக் கொடுவினைகள் கூடா அன்றே.
நாடகம் ஆடி(இ)டம் நந்திகேச்சுரம், மா காளேச்சுரம், நாகேச்சுரம், நாகளேச்சுரம், நன்கு ஆன கோடீச்சுரம், கொண்டீச்சுரம், திண்டீச்சுரம், குக்குடேச்சுரம், அக்கீச்சுரம், கூறுங்கால் ஆடகேச்சுரம், அகத்தீச்சுரம், அயனீச்சுரம், அத்தீச்சுரம், சித்தீச்சுரம், அம் தண் கானல் ஈடு திரை இராமேச்சுரம், என்று என்று ஏத்தி இறைவன் உறை சுரம் பலவும் இயம்புவோமே.
கந்த மாதனம், கயிலைமலை, கேதாரம், காளத்தி, கழுக்குன்றம், கண் ஆர் அண்ணா, மந்தம் ஆம் பொழில் சாரல் வடபர்ப்பதம், மகேந்திர மா மலை நீலம், ஏமகூடம் விந்த மா மலை, வேதம், சையம், மிக்க வியன் பொதியில் மலை, மேரு, உதயம், அத்தம், இந்து சேகரன் உறையும் மலைகள் மற்றும் ஏத்துவோம், இடர் கெட நின்று ஏத்துவோமே.