நீர்த்திரளை நீள் சடைமேல் நிறைவித்தானை, நிலம் மருவி நீர் ஓடக் கண்டான் தன்னை, பால்-திரளைப் பயின்று ஆட வல்லான் தன்னை, பகைத்து எழுந்த வெங் கூற்றைப் பாய்ந்தான் தன்னை, கால்-திரள் ஆய் மேகத்தினுள்ளே நின்று கடுங் குரல் ஆய் இடிப்பானை, கண் ஓர் நெற்றித் தீத்திரளை, -தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.
வானம், இது, எல்லாம் உடையான் தன்னை; வரி அரவக் கச்சானை; வன்பேய் சூழக் கானம் அதில் நடம் ஆட வல்லான் தன்னை, கடைக் கண்ணால் மங்கையையும் நோக்கா; என்மேல் ஊனம் அது எல்லாம் ஒழித்தான் தன்னை; உணர்வு ஆகி அடியேனது உள்ளே நின்ற தேன் அமுதை;-தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.
வாயானை, மனத்தானை, மனத்துள் நின்ற கருத்தானை, கருத்து அறிந்து முடிப்பான் தன்னை, தூயானை, தூ வெள்ளை ஏற்றான் தன்னை, சுடர்த் திங்கள் சடையானை, தொடர்ந்து நின்ற என் தாயானை, தவம் ஆய தன்மையானை, தலை ஆய தேவாதி தேவர்க்கு என்றும் சேயானை, -தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.
மலையானை, மா மேரு மன்னினானை, வளர்புன் சடையானை, வானோர் தங்கள் தலையானை, என் தலையின் உச்சி என்றும் தாபித்து இருந்தானை, தானே எங்கும் துலை ஆக ஒருவரையும் இல்லாதானை, தோன்றாதார் மதில் மூன்றும் துவள எய்த சிலையானை, -தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.
தூர்த்தனைத் தோள் முடிபத்து இறுத்தான் தன்னை, தொல்-நரம்பின் இன் இசை கேட்டு அருள் செய்தானை, பார்த்தனைப் பணி கண்டு பரிந்தான் தன்னை, பரிந்து அவற்குப் பாசுபதம் ஈந்தான் தன்னை, ஆத்தனை, அடியேனுக்கு அன்பன் தன்னை, அளவு இலாப் பல் ஊழி கண்டு நின்ற தீர்த்தனை,-தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.