குரவங்கமழ் நறுமென்குழல் அரிவையவள் வெருவப்
பொருவெங்கரி படவென்றதன் உரிவையுட லணிவோன்
அரவும்மலை புனலும்மிள மதியும்நகு தலையும்
விரவுஞ்சடை யடிகட்கிடம் விரிநீர்விய லூரே. |
1
|
ஏறார்தரு மொருவன்பல வுருவன்னிலை யானான்
ஆறார்தரு சடையன்அனல் உருவன்புரி வுடையான்
மாறார்புர மெரியச்சிலை வளைவித்தவன் மடவாள்
வீறார்தர நின்றானிடம் விரிநீர்விய லூரே. |
2
|
செம்மென்சடை யவைதாழ்வுற மடவார்மனை தோறும்
பெய்ம்மின்பலி யெனநின்றிசை பகர்வாரவ ரிடமாம்
உம்மென்றெழு மருவித்திரள் வரைபற்றிட வுரைமேல்
விம்மும்பொழில் கெழுவும்வயல் விரிநீர்விய லூரே. |
3
|
அடைவாகிய வடியார்தொழ வலரோன்றலை யதனில்
மடவாரிடு பலிவந்துண லுடையானவ னிடமாம்
கடையார்தர வகிலார்கழை முத்தம்நிரை சிந்தி
மிடையார்பொழில் புடைசூழ்தரு விரிநீர்விய லூரே. |
4
|
எண்ணார்தரு பயனாயய னவனாய்மிகு கலையாய்ப்
பண்ணார்தரு மறையாயுயர் பொருளாயிறை யவனாய்க்
கண்ணார்தரு முருவாகிய கடவுள்ளிட மெனலாம்
விண்ணோரொடு மண்ணோர்தொழும் விரிநீர்விய லூரே. |
5
|
| Go to top |
வசைவிற்கொடு வருவேடுவ னவனாய்நிலை யறிவான்
திசையுற்றவர் காணச்செரு மலைவானிலை யவனை
அசையப்பொரு தசையாவண மவனுக்குயர் படைகள்
விசையற்கருள் செய்தானிடம் விரிநீர்விய லூரே. |
6
|
மானார்அர வுடையானிர வுடையான்பகல் நட்டம்
ஊனார்தரு முயிரானுயர் விசையான்விளை பொருள்கள்
தானாகிய தலைவன்னென நினைவாரவ ரிடமாம்
மேனாடிய விண்ணோர்தொழும் விரிநீர்விய லூரே. |
7
|
பொருவாரெனக் கெதிராரெனப் பொருப்பையெடுத் தான்றன்
கருமால்வரை கரந்தோளுரங் கதிர்நீண்முடி நெரிந்து
சிரமாயின கதறச்செறி கழல்சேர்திரு வடியின்
விரலாலடர் வித்தானிடம் விரிநீர்விய லூரே. |
8
|
வளம்பட்டலர் மலர்மேலயன் மாலும்மொரு வகையால்
அளம்பட்டறி வொண்ணாவகை யழலாகிய வண்ணல்
உளம்பட்டெழு தழற்றூணதன் நடுவேயொரு வுருவம்
விளம்பட்டருள் செய்தானிடம் விரிநீர்விய லூரே. |
9
|
தடுக்காலுடன் மறைப்பாரவர் தவர்சீவர மூடிப்
பிடக்கேயுரை செய்வாரொடு பேணார்நமர் பெரியோர்
கடல்சேர்தரு விடமுண்டமு தமரர்க்கருள் செய்த
விடைசேர்தரு கொடியானிடம் விரிநீர்விய லூரே. |
10
|
| Go to top |
விளங்கும்பிறை சடைமேலுடை விகிர்தன்விய லூரைத்
தளங்கொண்டதொர் புகலித்தகு தமிழ்ஞானசம் பந்தன்
துளங்கில்தமிழ் பரவித்தொழு மடியாரவ ரென்றும்
விளங்கும்புக ழதனோடுயர் விண்ணும்முடை யாரே. |
11
|