பெண்ணமர் மேனியி னாரும் பிறைபுல்கு செஞ்சடை யாருங்
கண்ணமர் நெற்றியி னாருங் காதம ருங்குழை யாரும்
எண்ணம ருங்குணத் தாரு மிமையவ ரேத்தநின் றாரும்
பண்ணமர் பாடலி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே. |
1
|
தனைக்கணி மாமலர் கொண்டு தாள்தொழு வாரவர் தங்கள்
வினைப்பகை யாயின தீர்க்கும் விண்ணவர் விஞ்சையர் நெஞ்சில்
நினைத்தெழு வார்துயர் தீர்ப்பார் நிரைவளை மங்கை நடுங்கப்
பனைக்கைப் பகட்டுரி போர்த்தார் பாண்டிக் கொடுமுடி யாரே. |
2
|
சடையமர் கொன்றையி னாருஞ் சாந்தவெண் ணீறணிந் தாரும்
புடையமர் பூதத்தி னாரும் பொறிகிளர் பாம்பசைத் தாரும்
விடையம ருங்கொடி யாரும் வெண்மழு மூவிலைச் சூலப்
படையமர் கொள்கையி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே. |
3
|
நறைவளர் கொன்றையி னாரு ஞாலமெல் லாந்தொழு தேத்தக்
கறைவளர் மாமிடற் றாருங் காடரங் காக்கன லேந்தி
மறைவளர் பாடலி னோடு மண்முழ வங்குழன் மொந்தை
பறைவளர் பாடலி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே. |
4
|
போகமு மின்பமு மாகிப் போற்றியென் பாரவர் தங்கள்
ஆகமு றைவிட மாக வமர்ந்தவர் கொன்றையி னோடும்
நாகமுந் திங்களுஞ் சூடி நன்னுதன் மங்கைதன் மேனிப்
பாகமு கந்தவர் தாமும் பாண்டிக் கொடுமுடி யாரே. |
5
|
| Go to top |
கடிபடு கூவிள மத்தங் கமழ்சடை மேலுடை யாரும்
பொடிபட முப்புரஞ் செற்ற பொருசிலை யொன்றுடை யாரும்
வடிவுடை மங்கைதன் னோடு மணம்படு கொள்கையி னாரும்
படிபடு கோலத்தி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே. |
6
|
ஊனமர் வெண்டலை யேந்தி யுண்பலிக் கென்றுழல் வாரும்
தேனம ரும்மொழி மாது சேர்திரு மேனியி னாரும்
கானமர் மஞ்ஞைக ளாலுங் காவிரிக் கோலக் கரைமேல்
பானல நீறணி வாரும் பாண்டிக் கொடுமுடி யாரே. |
7
|
புரந்தரன் றன்னொடு வானோர் போற்றியென் றேத்தநின் றாரும்
பெருந்திறல் வாளரக் கன்னைப் பேரிடர் செய்துகந் தாரும்
கருந்திரை மாமிடற் றாருங் காரகில் பன்மணி யுந்திப்
பரந்திழி காவிரிப் பாங்கர்ப் பாண்டிக் கொடுமுடி யாரே. |
8
|
திருமகள் காதலி னானுந் திகழ்தரு மாமலர் மேலைப்
பெருமக னும்மவர் காணாப் பேரழ லாகிய பெம்மான்
மருமலி மென்மலர்ச் சந்து வந்திழி காவிரி மாடே
பருமணி நீர்த்துறை யாரும் பாண்டிக் கொடுமுடி யாரே. |
9
|
புத்தரும் புந்தியி லாத சமணரும் பொய்ம்மொழி யல்லான்
மெய்த்தவம் பேசிட மாட்டார் வேடம் பலபல வற்றால்
சித்தருந் தேவருங் கூடிச் செழுமலர் நல்லன கொண்டு
பத்தர்கள் தாம்பணிந் தேத்தும் பாண்டிக் கொடுமுடி யாரே. |
10
|
| Go to top |
கலமல்கு தண்கடல் சூழ்ந்த காழியுண் ஞானசம் பந்தன்
பலமல்கு வெண்டலை யேந்தி பாண்டிக் கொடுமுடி தன்னைச்
சொலமல்கு பாடல்கள் பத்துஞ் சொல்லவல் லார்துயர் தீர்ந்து
நலமல்கு சிந்தைய ராகி நன்னெறி யெய்துவர் தாமே. |
11
|