வரைத்தலைப் பசும்பொனோ டருங்கலன்க ளுந்திவந்
திரைத்தலைச் சுமந்துகொண் டெறிந்திலங்கு காவிரிக்
கரைத்தலைத் துருத்திபுக் கிருப்பதே கருத்தினாய்
உரைத்தலைப் பொலிந்துனக் குணர்த்துமாறு வல்லமே. |
1
|
அடுத்தடுத்த கத்தியோடு வன்னிகொன்றை கூவிளம்
தொடுத்துடன் சடைப்பெய்தாய் துருத்தியாயோர் காலனைக்
கடுத்தடிப் புறத்தினா னிறத்துதைத்த காரணம்
எடுத்தெடுத் துரைக்குமாறு வல்லமாகில் நல்லமே. |
2
|
கங்குல்கொண்ட திங்களோடு கங்கைதங்கு செஞ்சடைச்
சங்கிலங்கு வெண்குழை சரிந்திலங்கு காதினாய்
பொங்கிலங்கு பூணநூ லுருத்திரா துருத்திபுக்
கெங்குநின் னிடங்களா அடங்கிவாழ்வ தென்கொலோ. |
3
|
கருத்தினாலொர் காணியில் விருத்தியில்லை தொண்டர்தம்
அருத்தியாற்றம் மல்லல்சொல்லி யையமேற்ப தன்றியும்
ஒருத்திபால் பொருத்திவைத் துடம்புவிட்டு யோகியாய்
இருத்திநீ துருத்திபுக் கிதென்னமாய மென்பதே. |
4
|
துறக்குமா சொலப்படாய் துருத்தியாய் திருந்தடி
மறக்குமா றிலாதவென்னை மையல்செய்திம் மண்ணின்மேல்
பிறக்குமாறு காட்டினாய் பிணிப்படு முடம்புவிட்
டிறக்குமாறு காட்டினாய்க் கிழுக்குகின்ற தென்னையே. |
5
|
| Go to top |
வெயிற்கெதிர்ந் திடங்கொடா தகங்குளிர்ந்த பைம்பொழில்
துயிற்கெதிர்ந்த புள்ளினங்கள் மல்குதண் துருத்தியாய்
மயிற்கெதிர்ந் தணங்குசாயன் மாதொர்பாக மாகமூ
வெயிற்கெதிர்ந் தொரம்பினால் எரித்தவில்லி யல்லையே. |
6
|
கணிச்சியம் படைச்செல்வா கழிந்தவர்க் கொழிந்தசீர்
துணிச்சிரக் கிரந்தையாய் கரந்தையாய் துருத்தியாய்
அணிப்படுந் தனிப்பிறைப் பனிக்கதிர்க் கவாவுநல்
மணிப்படும்பை நாகநீ மகிழ்ந்தவண்ண லல்லையே. |
7
|
சுடப்பொடிந் துடம்பிழந் தநங்கனாய மன்மதன்
இடர்ப்படக் கடந்திடந் துருத்தியாக வெண்ணினாய்
கடற்படை யுடையவக் கடலிலங்கை மன்னனை
அடற்பட வடுக்கலில் லடர்த்தவண்ண லல்லையே. |
8
|
களங்குளிர்ந் திலங்குபோது காதலானு மாலுமாய்
வளங்கிளம்பொ னங்கழல் வணங்கிவந்து காண்கிலார்
துளங்கிளம்பி றைச்செனித் துருத்தியாய் திருந்தடி
உளங்குளிர்ந்த போதெலா முகந்துகந் துரைப்பனே. |
9
|
புத்தர்தத் துவமிலாச் சமணுரைத்த பொய்தனை
உத்தம மெனக்கொளா துகந்தெழுந்து வண்டினம்
துத்தநின்று பண்செயுஞ் சூழ்பொழில் துருத்தியெம்
பித்தர்பித்த னைத்தொழப் பிறப்பறுத்தல் பெற்றியே. |
10
|
| Go to top |
கற்றுமுற்றி னார்தொழுங் கழுமலத் தருந்தமிழ்
சுற்றுமுற்று மாயினா னவன்பகர்ந்த சொற்களால்
பெற்றமொன் றுயர்த்தவன் பெருந்துருத்தி பேணவே
குற்றமுற்று மின்மையிற் குணங்கள்வந்து கூடுமே. |
11
|