சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

3.038   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருக்கண்டியூர் - கொல்லி கனகாங்கி நவரோசு கனகாம்பரி ராகத்தில் திருமுறை அருள்தரு மங்களநாயகியம்மை உடனுறை அருள்மிகு திருக்கண்டீஸ்வரர் திருவடிகள் போற்றி
+ Show Meaning  https://www.youtube.com/watch?v=dVdbjNbpawc   Add audio link Add Audio

வினவினேனறி யாமையில்லுரை செய்ம்மினீரருள் வேண்டுவீர்
கனைவிலார்புனற் காவிரிக்கரை மேயகண்டியூர் வீரட்டன்
தனமுனேதனக் கின்மையோதம ராயினாரண்ட மாளத்தான்
வனனில்வாழ்க்கைகொண் டாடிப்பாடியிவ் வையமாப்பலி தேர்ந்ததே.

1

உள்ளவாறெனக் குரைசெய்மின்னுயர் வாயமாதவம் பேணுவீர்
கள்ளவிழ்பொழில் சூழுங்கண்டியூர் வீரட்டத்துறை காதலான்
பிள்ளைவான்பிறை செஞ்சடைம்மிசை வைத்ததும்பெரு நீரொலி
வெள்ளந்தாங்கிய தென்கொலோமிகு மங்கையா ளுடனாகவே.

2

அடியராயினீர் சொல்லுமின்அறி கின்றிலேன்அரன் செய்கையைப்
படியெலாந்தொழு தேத்துகண்டியூர் வீரட்டத்துறை பான்மையான்
முடிவுமாய்முத லாய்இவ்வைய முழுதுமாய்அழ காயதோர்
பொடியதார்திரு மார்பினிற்புரி நூலும்பூண்டெழு பொற்பதே.

3

பழையதொண்டர்கள் பகருமின்பல வாயவேதியன் பான்மையைக்
கழையுலாம்புனல் மல்குகாவிரி மன்னுகண்டியூர் வீரட்டன்
குழையொர்காதினிற் பெய்துகந்தொரு குன்றின்மங்கை வெருவுறப்
புழைநெடுங்கைநன் மாவுரித்தது போர்த்துகந்த பொலிவதே.

4

விரவிலாதுமைக் கேட்கின்றேன்அடி விரும்பியாட்செய்வீர் விளம்புமின்
கரையெலாந்திரை மண்டுகாவிரிக் கண்டியூருறை வீரட்டன்
முரவமொந்தை முழாவொலிக்க முழங்குபேயொடுங் கூடிப்போய்ப்
பரவுவானவர்க் காகவார்கடல் நஞ்சமுண்ட பரிசதே.

5
Go to top

இயலுமாறெனக் கியம்புமின்னிறை வன்னுமாய்நிறை செய்கையைக்
கயனெடுங்கண்ணி னார்கள்தாம்பொலி கண்டியூருறை வீரட்டன்
புயல்பொழிந்திழி வானுளோர்களுக் காகஅன்றயன் பொய்ச்சிரம்
அயனகவ்வ தரிந்துமற்றதில் ஊணுகந்த வருத்தியே.

6

திருந்துதொண்டர்கள் செப்புமின்மிகச் செல்வன்றன்னது திறமெலாம்
கருந்தடங்கண்ணி னார்கடாந்தொழு கண்டியூருறை வீரட்டன்
இருந்துநால்வரொ டானிழல்லற முரைத்ததும்மிகு வெம்மையார்
வருந்தவன்சிலை யாலம்மாமதின் மூன்றுமாட்டிய வண்ணமே.

7

நாவிரித்தரன் றொல்புகழ்பல பேணுவீரிறை நல்குமின்
காவிரித்தடம் புனல்செய்கண்டியூர் வீரட்டத்துறை கண்ணுதல்
கோவிரிப்பய னானஞ்சாடிய கொள்கையுங்கொடி வரைபெற
மாவரைத்தலத் தாலரக்கனை வலியைவாட்டிய மாண்பதே.

8

பெருமையேசர ணாகவாழ்வுறு மாந்தர்காளிறை பேசுமின்
கருமையார்பொழில் சூழுந்தண்வயற் கண்டியூருறை வீரட்டன்
ஒருமையாலுயர் மாலுமற்றை மலரவன்உணர்ந் தேத்தவே
அருமையாலவ ருக்குயர்ந்தெரி யாகிநின்றவத் தன்மையே.

9

நமரெழுபிறப் பறுக்குமாந்தர்காள் நவிலுமின்உமைக் கேட்கின்றேன்
கமரழிவயல் சூழுந்தண்புனற் கண்டியூருறை வீரட்டன்
தமரழிந்தெழு சாக்கியச்சமண் ஆதரோது மதுகொளா
தமரரானவ ரேத்தவந்தகன் தன்னைச்சூலத்தில் ஆய்ந்ததே.

10
Go to top

கருத்தனைப்பொழில் சூழுங்கண்டியூர் வீரட்டத்துறை கள்வனை
அருத்தனைத்திறம் அடியர்பால்மிகக் கேட்டுகந்த வினாவுரை
திருத்தமாந்திகழ் காழிஞானசம் பந்தன்செப்பிய செந்தமிழ்
ஒருத்தராகிலும் பலர்களாகிலும் உரைசெய்வார் உயர்ந்தார்களே.

11

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கண்டியூர்
3.038   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வினவினேன், அறியாமையில்(ல்); உரைசெய்ம்மின், நீர்!
Tune - கொல்லி   (திருக்கண்டியூர் திருக்கண்டீஸ்வரர் மங்களநாயகியம்மை)
4.093   திருநாவுக்கரசர்   தேவாரம்   வானவர் தானவர் வைகல் மலர்
Tune - திருவிருத்தம்   (திருக்கண்டியூர் திருக்கண்டீஸ்வரர் மங்களநாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sat, 04 Apr 2026 04:53:34 +0000