சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

5.041   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருப்பைஞ்ஞீலி - திருக்குறுந்தொகை அருள்தரு விசாலாட்சியம்மை உடனுறை அருள்மிகு நீலகண்டேசுவரர் திருவடிகள் போற்றி
திருநாவுக்கரசர் அங்குநின்றும் நீங்கி, ஆனைக்கா, எறும்பியூர், கற்குடி, திருச்சிராப்பள்ளி, திருப்பராய்த்துறை முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு திருப்பைஞ்ஞீலியை அடைந்தார். பைஞ்ஞீலிக்குச்செல்லும் வழியில் நடையால் வருந்தி இளைத்தும் மனந் தளராமல் சென்றுகொண்டிருந்தார். தொண்டர் வருத்தம் தரியாத பெருமான் அவர் வரும் வழியில் சோலைகுளம் உண்டாக்கி அந்தணர் வடிவோடு பொதிசோறு சுமந்து வீற்றிருந்தார். திருநாவுக்கரசர் அருகில் வந்தவுடன் வழிநடை வருத்தத்தால் மிக இளைத்தீர். என்பால் பொதிசோறு இருக்கிறது. உண்டு இளைப்பாறிச் செல்க என்று கூற, அவ்வண்ணமே பொதிசோறு உண்டு இளைப்பு நீங்கிய நாவுக்கரசரும் தாங்கள் யார்? எங்கு செல்கின்றீர்கள் என்று கேட்க, அந்தணரும் நாம் திருப்பைஞ்ஞீலி செல்கின்றோம் என்று கூற, இருவரும் திருப்பைஞ்ஞீலிக்குப் புறப்பட்டனர். அந்தணர் பின்னே அப்பரும் சென்றார். திருப்பைஞ்ஞீலியை அடைந்ததும் இறைவன் மறைந்தான். அப்பர் இறைவனின் எளிவந்த தன்மையை வியந்து பாடித் துதித்தார்.
+ Show Meaning  https://www.youtube.com/watch?v=JaXkSXJzOX8   Add audio link Add Audio

உடையர் கோவண மொன்றுங் குறைவிலர்
படைகொள் பாரிடஞ் சூழ்ந்தபைஞ் ஞீலியார்
சடையிற் கங்கை தரித்த சதுரரை
அடைய வல்லவர்க் கில்லை அவலமே.

1

மத்த மாமலர் சூடிய மைந்தனார்
சித்த ராய்த்திரி வார்வினை தீர்ப்பரால்
பத்தர் தாந்தொழு தேத்துபைஞ் ஞீலியெம்
அத்த னைத்தொழ வல்லவர் நல்லரே.

2

விழுது சூலத்தன் வெண்மழு வாட்படைக்
கழுது துஞ்சிருள் காட்டகத் தாடலான்
பழுதொன் றின்றிப் பைஞ்ஞீலிப் பரமனைத்
தொழுது செல்பவர் தம்வினை தூளியே.

3

ஒன்றி மாலும் பிரமனுந் தம்மிலே
நின்ற சூழ லறிவரி யானிடம்
சென்று பாரிட மேத்துபைஞ் ஞீலியுள்
என்றும் மேவி யிருந்த அடிகளே.

4

வேழத் தின்னுரி போர்த்த விகிர்தனார்
தாழச் செஞ்சடை மேற்பிறை வைத்தவர்
தாழைத் தண்பொழில் சூழ்ந்தபைஞ் ஞீலியார்
யாழின் பாட்டை யுகந்த அடிகளே.

5
Go to top

குண்டு பட்டுக் குறியறி யாச்சமண்
மிண்ட ரோடு படுத்துய்யப் போந்துநான்
கண்டங் கார்வயல் சூழ்ந்தபைஞ் ஞீலியெம்
அண்ட வாண னடியடைந் துய்ந்தனே.

6

வரிப்பை யாடர வாட்டி மதகரி
உரிப்பை மூடிய வுத்தம னாருறை
திருப்பைஞ் ஞீலி திசைதொழு வார்கள்போய்
இருப்பர் வானவ ரோடினி தாகவே.

7

கோடல் கோங்கம் புறவணி முல்லைமேல்
பாடல் வண்டிசை கேட்கும்பைஞ் ஞீலியார்
பேடு மாணும் பிறரறி யாததோர்
ஆடு நாக மசைத்த அடிகளே.

8

காரு லாமலர்க் கொன்றையந் தாரினான்
வாரு லாமுலை மங்கையொர் பங்கினன்
தேரு லாம்பொழில் சூழ்ந்தபைஞ் ஞீலியெம்
ஆர்கி லாவமு தையடைந் துய்ம்மினே.

9

தருக்கிச் சென்று தடவரை பற்றலும்
நெருக்கி யூன்ற நினைந்து சிவனையே
அரக்கன் பாட அருளுமெம் மானிடம்
இருக்கை ஞீலியென் பார்க்கிட ரில்லையே.

10
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்பைஞ்ஞீலி
3.014   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஆரிடம் பாடலர், அடிகள், காடு
Tune - காந்தாரபஞ்சமம்   (திருப்பைஞ்ஞீலி நீலகண்டேசுவரர் விசாலாட்சியம்மை)
5.041   திருநாவுக்கரசர்   தேவாரம்   உடையர் கோவணம், ஒன்றும் குறைவு
Tune - திருக்குறுந்தொகை   (திருப்பைஞ்ஞீலி நீலகண்டேசுவரர் விசாலாட்சியம்மை)
7.036   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   கார் உலாவிய நஞ்சை உண்டு
Tune - கொல்லி   (திருப்பைஞ்ஞீலி மெய்ஞ்ஞான நீலகண்டேசுவரர் விசாலாட்சியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sat, 04 Apr 2026 04:53:34 +0000