சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.014   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை) - நட்டபாடை சலநாட்டை கம்பீரநாட்டை ராகத்தில் திருமுறை அருள்தரு அமுதவல்லியம்மை (எ) குயிலமுதநாயகி உடனுறை அருள்மிகு கொடுங்குன்றேசுவரர் (எ) கொடுங்குன்றீசர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=90vnAlHSZqM   Add audio link Add Audio

வானில் பொலிவு எய்தும் மழை மேகம் கிழித்து ஓடி,
கூனல் பிறை சேரும் குளிர் சாரல் கொடுங்குன்றம்
ஆனில் பொலி ஐந்தும் அமர்ந்து ஆடி, உலகு ஏத்த,
தேனின் பொலி மொழியாளொடும் மேயான் திரு நகரே.

1
வளைந்த பிறைமதி வானின்கண் விளங்கும் மழை மேகங்களைக் கிழித்து ஓடிச் சென்று சேரும் குளிர்ந்த சாரலை உடைய கொடுங்குன்றம் பசுவிடம் விளங்கும் பால் நெய் தயிர் கோமயம் கோசலம் ஆகிய ஐந்து பொருள்களையும் மகிழ்ந்தாடி உலகம் போற்றத் தேன்போலும் மொழியினைப் பேசும் உமையம்மையோடு சிவபிரான் மேவிய திருத்தலமாகும்.

மயில் புல்கு தண் பெடையோடு உடன் ஆடும் வளர் சாரல்,
குயில் இன்இசை பாடும் குளிர் சோலை, கொடுங்குன்றம்
அயில் வேல் மலி நெடு வெஞ்சுடர் அனல் ஏந்தி நின்று ஆடி,
எயில் முன்பட எய்தான் அவன் மேய எழில் நகரே.

2
ஆண் மயில்கள் தண்ணிய தம் பெடைகளைத் தழுவித் தோகைவிரித்தாடும் விரிந்த சாரலையும் குயில்கள் இன்னிசை பாடும் குளிர்ந்த சோலைகளையும் உடைய கொடுங்குன்றம் கூரிய வேல்போலும் நெடிய வெம்மையான ஒளியோடு கூடிய அனலைக் கையில் ஏந்தி நின்றாடி முப்புரங்களைக் கணை தொடுத்து அழித்த சிவபிரான் எழுந்தருளிய திருத்தலமாகும்.

மிளிரும் மணி பைம் பொன்னொடு விரை மாமலர் உந்தி,
குளிரும் புனல் பாயும் குளிர் சாரல் கொடுங்குன்றம்
கிளர் கங்கையொடு இள வெண்மதி கெழுவும் சடை தன் மேல்
வளர் கொன்றையும் மத மத்தமும் வைத்தான் வள நகரே.

3
அருவிகள் ஒளிவீசும் மணிகள் பசும்பொன் மணமுள்ள மலர்கள் ஆகியவற்றைத் தள்ளிக்கொண்டு வந்து நீரைச் சொரிதலால் குளிர்ந்துள்ள மலைச்சாரலை உடைய கொடுங்குன்றம் பொங்கி எழும் கங்கையோடு வெள்ளிய பிறைமதி பொருந்திய சடை முடிமேல் மணம் வளரும் கொன்றை மலரையும் மதத்தை ஊட்டும் ஊமத்தை மலரையும் அணிந்துள்ள சிவபிரானது வளமையான நகராகும்.

பரு மா மதகரியோடு அரி இழியும் விரிசாரல்,
குரு மா மணி பொன்னோடு இழி அருவிக் கொடுங்குன்றம்
பொரு மா எயில் வரைவில் தரு கணையின் பொடி செய்த
பெருமான் அவன் உமையாளொடும் மேவும் பெரு நகரே.

4
பெரிய கரிய மதயானைகளும் சிங்கங்களும் இரை தேடவும் நீர் பருகவும் இறங்கிவரும் பெரிய மலைச்சாரலையும் நிறம் பொருந்திய பெரிய மணிகளைப் பொன்னோடு சொரியும் அருவிகளையும் உடைய கொடுங்குன்றம் தன்னோடு பொரவந்த பெரிய முப்புரக் கோட்டைகளை மலை வில்லில் தொடுத்த கணையால் பொடியாக்கிய சிவபிரான் உமையம்மையோடு எழுந்தருளிய பெருநகராகும்.

மேகத்து இடி குரல் வந்து எழ, வெருவி வரை இழியும்
கூகைக்குலம் ஓடித் திரி சாரல் கொடுங்குன்றம்
நாகத்தொடும் இள வெண்பிறை சூடி நல மங்கை
பாகத்தவன் இமையோர் தொழ மேவும் பழ நகரே.

5
மேகத்திடம் இடிக்குரல் தோன்றக் கேட்டுக் கோட்டான் என்னும் பறவை இனங்கள் அஞ்சி மலையினின்றும் இறங்கி வந்து ஓடித்திரியும் மலைச்சாரலை உடைய கொடுங்குன்றம் நாகத்தோடு இளவெண்பிறையை முடியிற் சூடி அழகிய உமை நங்கையை ஒரு பாகமாகக் கொண்டுள்ள சிவபிரான் தேவர்கள் தன்னை வணங்குமாறு எழுந்தருளும் பழமையான நகராகும்.
Go to top

கைம் மா மத கரியின் இனம் இடியின் குரல் அதிர,
கொய்ம் மா மலர்ச் சோலை புக மண்டும் கொடுங்குன்றம்
அம்மான்! என உள்கித் தொழுவார்கட்கு அருள் செய்யும்
பெம்மான் அவன், இமையோர் தொழ, மேவும் பெரு நகரே.

6
துதிக்கையை உடைய கரிய மதயானைகளின் கூட்டம் இடிக்குரல் அதிரக்கேட்டு அஞ்சிக் கொய்யத்தக்க மண மலர்களை உடைய சோலைகளில் புகுந்து ஒளிதற்குச் செறிந்து வரும் கொடுங்குன்றம் இவரே நம் தலைவர் என இடைவிடாது நினைந்து தொழும் அடியவர்கட்கு அருள் செய்யும் சிவபெருமான் விண்ணோர் தன்னைத் தொழ வீற்றிருந்தருளும் பெருநகராகும்.

மரவத்தொடு மணமாதவி மௌவல் அது விண்ட
குரவத்தொடு விரவும் பொழில் சூழ் தண் கொடுங்குன்றம்
அரவத்தொடும் இள வெண்பிறை விரவும் மலர்க்கொன்றை
நிரவச் சடை முடி மேல் உடன் வைத்தான், நெடு நகரே.

7
கடம்பு குருக்கத்தி முல்லை ஆகியவற்றின் நாள் அரும்புகள் குரவமலர்களோடு விண்டு மணம் விரவும் பொழில் சூழ்ந்த தண்ணிய கொடுங்குன்றம் அரவு வெள்ளிய இளம்பிறை மணம் விரவும் கொன்றை மலர் ஆகியவற்றை நிரம்பத் தன் முடிமேல் அணிந்துள்ள சிவபிரானது நெடுநகராகும்.

முட்டா முது கரியின் இனம் முது வேய்களை முனிந்து,
குட்டாச் சுனை அவை மண்டி நின்று ஆடும் கொடுங்குன்றம்
ஒட்டா அரக்கன் தன் முடி ஒருபஃது அவை உடனே
பிட்டான் அவன் உமையாளொடும் மேவும் பெரு நகரே.

8
யானைக் கூட்டங்கள் யாரும் தடுப்பார் இன்றி முதிய மூங்கில்களை உண்டு வெறுத்துப் பிறரால் அகழப்படாது இயற்கையிலேயே ஆழமாக உள்ள சுனைகளில் இறங்கிநின்று நீராடும் கொடுங்குன்றம் தன்னோடு மனம் பொருந்தாது கயிலை மலையை எடுத்த அரக்கனாகிய இராவணனின் முடியணிந்த பத்துத் தலைகளையும் அடர்த்து ஒடித்தவனாகிய சிவபெருமான் உமையம்மையோடு மேவும் பெருநகராகும்.

அறையும் அரி குரல் ஓசையை அஞ்சி, அடும் ஆனை
குறையும் மனம் ஆகி, முழை வைகும் கொடுங்குன்றம்
மறையும் அவை உடையான் என, நெடியான் என, இவர்கள்
இறையும் அறிவு ஒண்ணாதவன் மேய எழில் நகரே.

9
சிங்கத்தின் கர்ச்சனை ஓசையைக் கேட்டு அஞ்சிக் கொல்லும் தன்மையினவாகிய யானைகள் மன எழுச்சி குன்றி மலையிடையே உள்ள குகைப் பகுதிகளில் மறைந்து வைகும் கொடுங்குன்றம் வேதங்களுக்கு உரியவனாய நான்முகன் திருமால் ஆகிய இருவரும் சிறிதும் அறிய முடியாதவனாய் நின்ற சிவபிரான் மேவிய அழகிய நகராகும்.

மத்தக்களிறு ஆளி வர அஞ்சி, மலை தன்னைக்
குத்திப் பெரு முழைதன் இடை வைகும் கொடுங்குன்றம்
புத்தரொடு பொல்லா மனச் சமணர் புறம் கூற,
பத்தர்க்கு அருள் செய்தான் அவன் மேய பழ நகரே.

10
மதம் பொருந்திய யானைகள் தம்மின் வலிய சிங்கம் வருதலைக் கண்டு அஞ்சி மலையைக் குத்திப் பெருமுழையாக்கி அதனிடை வைகும் கொடுங்குன்றம் புத்தர்களும் பொல்லா மனமுடைய சமணர்களும் புறங்கூறத் தன் பக்தர்கட்கு அருள் செய்பவனாகிய சிவபிரான் மேவிய பழமையான நகராகும்.
Go to top

கூனல் பிறை சடைமேல் மிக உடையான் கொடுங்குன்றைக்
கானல் கழுமலமா நகர்த் தலைவன் நல கவுணி,
ஞானத்து உயர் சம்பந்தன நலம் கொள் தமிழ் வல்லார்,
ஊனத்தொடு துயர் தீர்ந்து, உலகு ஏத்தும் எழிலோரே.

11
வளைந்த பிறை மதியைச் சடைமுடிமீது அழகு மிகுமாறு அணிந்த சிவபிரானது திருக்கொடுங்குன்றைக் கடற்கரைச் சோலைகளால் சூழப்பட்ட கழுமலமாநகரின் தலைவனும் நல்ல கவுணியர் கோத்திரத்தில் தோன்றியவனுமாகிய ஞானசம்பந்தன் பாடிய தமிழ்மாலைகளை ஓதி வழிபட வல்லவர் தம்மிடமுள்ள குறைபாடுகள் நீங்கித்துன்பங்கள் அகன்று உலகம் போற்றும் புகழுடையோராவர்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை)
1.014   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வானில் பொலிவு எய்தும் மழை
Tune - நட்டபாடை   (திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை) கொடுங்குன்றேசுவரர் (எ) கொடுங்குன்றீசர் அமுதவல்லியம்மை (எ) குயிலமுதநாயகி)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000