சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.061   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருச்செங்காட்டங்குடி - பழந்தக்கராகம் மாயாமாளவகௌளை சுத்த சாவேரி கல்யாணகேசரி ராகத்தில் திருமுறை அருள்தரு திருக்குழல்மாதம்மை உடனுறை அருள்மிகு கணபதீசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=C_MQ8sSlZyk   Add audio link Add Audio

நறை கொண்ட மலர் தூவி, விரை அளிப்ப, நாள் தோறும்
முறை கொண்டு நின்று, அடியார் முட்டாமே பணி செய்ய,
சிறை கொண்ட வண்டு அறையும் செங்காட்டங்குடி அதனுள்,
கறை கொண்ட கண்டத்தான்-கணபதீச்சரத்தானே.

1
அடியவர்கள் நாள்தோறும் விதிப்படி தேன் பொருந்திய நாண்மலர்களைத் தூவி மணம்கமழச் செய்வித்துத் தவறாமல் நின்று பணிசெய்துவழிபட விடக்கறை பொருந்திய கண்டத்தினனாகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் கோயில் சிறகுகளை உடைய வண்டினங்கள் ஒலிக்கும் திருச்செங்காட்டங் குடியில் விளங்கும் கணபதீச்சரமாகும்.

வார் ஏற்ற பறை ஒலியும் சங்கு ஒலியும் வந்து இயம்ப,
ஊர் ஏற்ற செல்வத்தோடு ஓங்கிய சீர் விழவு ஓவாச்
சீர் ஏற்றம் உடைத்து ஆய செங்காட்டங்குடி அதனுள்,
கார் ஏற்ற கொன்றையான்-கணபதீச்சரத்தானே.

2
கார்காலத்தே மலரும் கொன்றை மலரை அணிந்த சிவபிரான் வாரால் இழுத்துக் கட்டப்பட்ட பறைகளின் ஒலியும் சங்குகளின் ஒலியும் வந்திசைக்க ஊர் முழுதும் நிறைந்த செல்வ வளங்களோடு பரவிய புகழை உடைய திருவிழாக்கள் இடைவிடாது நிகழும் திருச்செங்காட்டங்குடியில் விளங்கும் கணபதீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளியுள்ளான்.

வரந்தையான், சோபுரத்தான், மந்திரத்தான், தந்திரத்தான்,
கிரந்தையான், கோவணத்தான், கிண்கிணியான், கையது ஓர்
சிரந்தையான், செங்காட்டங்குடியான், செஞ்சடைச் சேரும்
கரந்தையான், வெண் நீற்றான்-கணபதீச்சரத்தானே.

3
கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் வரந்தை சோபுரம் ஆகிய தலங்களில் எழுந்தருளியிருப்பவன். வேதாகமங்களை அருளிச்செய்தவன். கோவணம் அணிந்தவன். காலிற் கிண்கிணி அணிந்தவன். கையில் உடுக்கை ஒன்றை ஏந்தியவன். சிவந்த சடைமுடிமீது கரந்தை சூடியவன். திருவெண்ணீறு அணிந்தவன். அப்பெருமான் திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான்.

தொங்கலும் கமழ்சாந்தும் அகில் புகையும் தொண்டர் கொண்டு,
அங்கையால் தொழுது ஏத்த, அருச்சுனற்கு அன்று அருள்செய்தான்;
செங்கயல் பாய் வயல் உடுத்த செங்காட்டங்குடி அதனுள்,
கங்கை சேர் வார்சடையான்-கணபதீச்சரத்தானே.

4
மணம் கமழும் மாலைகளும் சந்தனமும் அகில் புகையும் கொண்டு தொண்டர்கள் தம் அழகிய கைகளால் தொழுது போற்றி வணங்கி அருச்சிக்க அவர்கட்கு உடனே அருள்செய்த பெருமானும் கங்கை தங்கிய நீண்ட சடைமுடியை உடையவனுமாகிய சிவ பிரான் சிவந்த கயல் மீன்கள் பாயும் வளமான வயல்கள் புறமாகச் சூழ்ந்த திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான்.

பாலினால் நறு நெய்யால் பழத்தினால் பயின்று ஆட்டி,
நூலினால் மணமாலை கொணர்ந்து, அடியார் புரிந்து ஏத்த,
சேலின் ஆர் வயல் புடை சூழ் செங்காட்டங்குடி அதனுள்,
காலினால் கூற்று உதைத்தான்-கணபதீச்சரத்தானே.

5
தனது இடத்திருவடியால் இயமனை உதைத்தருளிய இறைவன் அடியவர்கள் ஆகம விதிப்படி பாலினாலும் மணம் கமழும் நெய்யாலும் பழவர்க்கங்களாலும் விரும்பி அபிடேகித்து மணமாலைகளைக் கொண்டு வந்து சூட்டி அன்போடு வழிபடுமாறு சேல்மீன்கள் நிறைந்த வளமான வயல்கள் புடைசூழ்ந்துள்ள திருச் செங்காட்டங்குடியில் கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான்.
Go to top

நுண்ணியான், மிகப் பெரியான், நோய் உளார் வாய் உளான்,
தண்ணியான், வெய்யான், நம் தலைமேலான், மனத்து உளான்,
திண்ணியான், செங்காட்டங்குடியான், செஞ்சடை மதியக்
கண்ணியான், கண் நுதலான்-கணபதீச்சரத்தானே.

6
திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் நுண்ணியனயாவற்றினும் மிகநுண்ணியன். பருமையானபொருள்கள் யாவற்றிலும் மிகப்பருமையானவன். நோய் முதலியவற்றால் வருந்துவோர் தம் வாயினால் துதிக்கப் பெறுபவன். தண்மையானவன். புறச்சமயிகட்கு வெய்யவன். நமது முடிமீதும் மனத்தின் கண்ணும் உறைபவன். உறுதியானவன். தனது சிவந்த சடைமீது பிறைமதிக் கண்ணியைச் சூடியவன். நெற்றியில் கண்ணுடையவன்.

மையின் ஆர் மலர் நெடுங்கண் மலைமகள் ஓர் பாகம் ஆம்
மெய்யினான், பை அரவம் அரைக்கு அசைத்தான், மீன் பிறழ் அச்
செய்யின் ஆர் அகன் கழனிச் செங்காட்டங்குடி அதனுள்
கையின் ஆர் கூர் எரியான்-கணபதீச்சரத்தானே.

7
கருங்குவளை மலர் போன்ற நீண்ட கண்களை உடைய மலைமகளாகிய பார்வதிதேவியை ஒரு பாகமாகக் கொண்டுள்ள திருமேனியனும் படம் பொருந்திய பாம்பை இடையிலே கட்டியவனும் கையின்கண் மிகுந்துள்ள தீயை ஏந்தியவனுமாகிய சிவபிரான் மீன்கள் விளங்கித் திரியும் வயல்களாலும் அகன்ற கழனிகளாலும் சூழப்பட்ட திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான்.

தோடு உடையான், குழை உடையான், அரக்கன்தன் தோள் அடர்த்த
பீடு உடையான், போர் விடையான், பெண் பாகம் மிகப் பெரியான்,
சேடு உடையான், செங்காட்டங்குடி உடையான், சேர்ந்து ஆடும்
காடு உடையான், நாடு உடையான்-கணபதீச்சரத்தானே.

8
திருச்செங்காட்டங்குடியில் விளங்கும் கணபதீச் சரத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் ஒரு காதில் தோட்டினை அணிந்தவன். பிறிதொருகாதில் குழை அணிந்தவன். கயிலையைப் பெயர்த்த இராவணனின் தோள்களை நெரித்த பெருமை உடையவன் போரிடும் காளையை உடையவன். பெண்ணை ஒரு பாகமாகக் கொண்டவன். மிகவும் பெரியவன். பெருமைகட்கு உரியவன். பூதகணங்களோடு சேர்ந்தாடும் சுடுகாட்டைத் தனக்குரிய இடமாகக் கொண்டவன். நாடுகள் பலவற்றிலும் கோயில் கொண்டு அருள்புரிபவன்.

ஆன் ஊரா உழி தருவான், அன்று இருவர் தேர்ந்து உணரா
வான் ஊரான், வையகத்தான், வாழ்த்துவார் மனத்து உளான்,
தேனூரான், செங்காட்டங்குடியான், சிற்றம்பலத்தான்,
கானூரான், கழுமலத்தான்-கணபதீச்சரத்தானே.

9
விடைமிசை ஏறி அதனை ஊர்ந்து பல இடங்களிலும் திரிபவன். முன்னொரு காலத்தே திருமால் பிரமன் ஆகிய இருவர் அடிமுடிகளைத் தேர்ந்து உணர முடியாதவாறு வானளாவ ஓங்கி நின்றவன். இவ்வுலகில் சிற்றம்பலத்திலும் தேனூரிலும் கானூரிலும் கழுமலத்திலும் விளங்குபவன். அவ்விறைவன் திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான்.

செடி நுகரும் சமணர்களும், சீவரத்த சாக்கியரும்
படி நுகராது அயர் உழப்பார்க்கு அருளாத பண்பினான்;
பொடி நுகரும் சிறுத் தொண்டர்க்கு அருள் செய்யும் பொருட்டாகக்
கடி நகர் ஆய் வீற்றிருந்தான்-கணபதீச்சரத்தானே.

10
முடைநாற்றத்தை நுகரும் சமணர்களும் காவி யாடை கட்டிய புத்தர்களும் எம்பெருமானுடைய இயல்புகளை அறிந்துணராது துன்புறுபவர்கள். அவர்கட்கு அருள்புரியாத இயல்பினனாகிய சிவபிரான் திருநீற்று மணத்தையே நுகரும் சிறுத்தொண்டர்க்கு அருள்செய்யும் பொருட்டுத் திருச்செங்காட்டங்குடியை விளங்கிய தலமாகக் கொண்டு அங்குள்ள கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான்.
Go to top

கறை இலங்கு மலர்க்குவளை கண் காட்டக் கடிபொழிலின்
நறை இலங்கு வயல் காழித் தமிழ் ஞானசம்பந்தன்,
சிறை இலங்கு புனல் படப்பைச் செங்காட்டங்குடி சேர்த்தும்
மறை இலங்கு தமிழ் வல்லார் வான் உலகத்து இருப்பாரே.

11
கருமை பரவி விளங்கும் மலராகிய குவளை கண்போல் மலர்ந்து விளங்குவதும் மணம் கமழும் சோலைகளிலுள்ள தேனின் மணம் வீசுவதுமான வயல்களால் சூழப்பட்ட சீகாழிப்பதியில் தோன்றிய தமிழ் வல்ல ஞானசம்பந்தன் கரைகளோடு கூடி நீர் நிறைந்து தோன்றும் வயல்கள் சூழ்ந்த திருச்செங்காட்டங்குடியில் விளங்கும் கணபதீச்சரத்து இறைவர் மீது பாடிய வேதப்பொருள் நிறைந்த இத் திருப்பதிகத் தமிழ் மாலையை ஓதவல்லவர் வானுலகில் வாழ்வர்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருச்செங்காட்டங்குடி
1.061   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நறை கொண்ட மலர் தூவி,
Tune - பழந்தக்கராகம்   (திருச்செங்காட்டங்குடி கணபதீசுவரர் திருக்குழல்மாதம்மை)
3.063   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பைங்கோட்டு மலர்ப் புன்னைப் பறவைகாள்!
Tune - பஞ்சமம்   (திருச்செங்காட்டங்குடி கணபதீசுவரர் திருக்குழல்மாதம்மை)
6.084   திருநாவுக்கரசர்   தேவாரம்   பெருந்தகையை, பெறற்கு அரிய மாணிக்கத்தை,
Tune - திருத்தாண்டகம்   (திருச்செங்காட்டங்குடி கணபதீசுவரர் திருக்குழல்மாதம்மை)

This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org