சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.064   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருப்பூவணம் - தக்கேசி கரகரப்பிரியா காம்போதி கர்நாடக காபி ராகத்தில் திருமுறை அருள்தரு மின்னாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு பூவணநாதர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=bjjRLiqCXrk   Add audio link Add Audio

அறை ஆர் புனலும் மா மலரும் ஆடு அரவு ஆர் சடைமேல்
குறை ஆர் மதியும் சூடி, மாது ஓர் கூறு உடையான் இடம் ஆம்
முறையால் முடி சேர் தென்னர் சேரர் சோழர்கள் தாம் வணங்கும்,
திறை ஆர் ஒளி சேர், செம்மை ஓங்கும், தென் திருப்பூவணமே.

1
ஆரவாரித்து வரும் கங்கையும் ஆத்தி மலரும் ஆடும் பாம்பும் பொருந்திய சடையின் மேல் ஒரு கலையாய்க் குறைந்த பிறை மதியையும் சூடி மாதொர்பாகனாக விளங்கும் சிவபிரான் எழுந்தருளிய இடம் நீதியோடு கூடியவராய் முடிசூடி ஆளும் பாண்டியர் சேரர் சோழர் ஆகிய மூவேந்தர்களும் வணங்குவதும் வையை ஆற்றின் அலைகள் வீசுவதும் புகழோடு கூடியதும் வயல் வளம் மிக்கதுமாகிய அழகிய திருப்பூவணமாகும்.

மருவார் மதில் மூன்று ஒன்ற எய்து, மாமலையான் மடந்தை
ஒருபால் பாகம் ஆகச் செய்த உம்பர்பிரான் அவன் ஊர்
கரு ஆர் சாலி ஆலை மல்கி, கழல் மன்னர் காத்து அளித்த
திருவால் மலிந்த சேடர் வாழும் தென்திருப்பூவணமே.

2
பகைவர்களாகிய திரிபுர அசுரர் மதில்கள் மூன்றையும் ஒருசேர எய்து அழித்தோனும் மலையரையன் மகளாகிய பார்வதிதேவியை ஒருபால் கொண்டு தேவர்கள் தலைவனாக விளங்குவோனும் ஆகிய சிவபிரானது ஊர்; கருக்கொண்ட நெற்பயிர்கள் கரும்புகள் ஆகியன நிறைந்ததும் வீரக்கழல் புனைந்த மன்னர்கள் காப்பாற்றிக் கொடுத்த செல்வவளத்தால் சிறந்த மேலானவர்கள் வாழ்வதுமான அழகிய பூவண நகராகும்.

போர் ஆர் மதமா உரிவை போர்த்து, பொடி அணி மேனியனாய்,
கார் ஆர் கடலில் நஞ்சம் உண்ட கண்ணுதல், விண்ணவன், ஊர்
பார் ஆர் வைகைப் புனல் வாய் பரப்பி, பல்மணி பொன் கொழித்து,
சீர் ஆர் வாரி சேர நின்ற தென்திருப்பூவணமே.

3
போர்ப் பயிற்சியுடைய மதம் பொருந்திய யானை யின் தோலை உரித்துப் போர்த்து திருநீற்றுப் பொடி அணிந்த மேனியனாய் கருநிறம் பொருந்திய கடலிடைத் தோன்றிய நஞ்சினை உண்டவனாய் நுதல்விழி உடையவனாய் விளங்கும் சிவனது ஊர் நிலவுலகை வளம் செய்வதற்கு வந்த வையையாறு வாய்க்கால் வழியே பரப்பிப் பலவகை மணிகளையும் பொன்னையும் கொழித்து வளம் செய்யும் அழகிய திருப்பூவணமாகும்.

கடி ஆர் அலங்கல் கொன்றை சூடி, காதில் ஓர் வார்குழையன்,
கொடி ஆர் வெள்ளை ஏறு உகந்த கோவணவன், இடம் ஆம்
படியார் கூடி, நீடி ஓங்கும் பல்புகழால் பரவ,
செடி ஆர் வைகை சூழ நின்ற தென்திருப்பூவணமே.

4
மணம் பொருந்திய கொன்றை மலர் மாலையைச் சூடி ஒரு காதில் நீண்ட குழை அணிந்தவனாய் வெண்மையான விடைக்கொடியைத் தனக்குரியதாகக் கொண்டவனாய் கோவணம் அணிந்தவனாய் விளங்கும் சிவபிரானது இடம் நிலவுலக மக்கள் ஒருங்கு கூடி நீண்டு விரிந்த தன் புகழைக் கூறி வணங்கப் புதர்கள் நிறைந்த வைகையாறு சூழ்ந்துள்ள அழகிய திருப்பூவணமாகும்.

கூர் ஆர் வாளி சிலையில் கோத்துக் கொடி மதில் கூட்டு அழித்த
பார் ஆர் வில்லி, மெல்லியலாள் ஓர் பால் மகிழ்ந்தான், இடம் ஆம்
ஆரா அன்பில் தென்னர் சேரர் சோழர்கள் போற்று இசைப்ப,
தேர் ஆர் வீதி மாடம் நீடும் தென் திருப்பூவணமே.

5
கூர்மை பொருந்திய அம்பை வில்லில் பூட்டி கொடிகள் கட்டிப் பறந்த மும்மதில்களின் கூட்டுக்களையும் ஒருசேர அழித்த போர்வல்ல வில் வீரனும் மெல்லியலாகிய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டு மகிழ்பவனுமாகிய சிவபிரானது இடம் குன்றாத அன்போடு பாண்டியர் சேரர் சோழர் ஆகிய மூவேந்தர்கள் போற்றத் தேரோடும் திருவீதியையும் மாட வீடுகளையும் உடைய அழகிய திருப்பூவணமாகும்.
Go to top

நன்று தீது என்று ஒன்று இலாத நால்மறையோன், கழலே
சென்று பேணி ஏத்த நின்ற தேவர்பிரான், இடம் ஆம்
குன்றில் ஒன்றி ஓங்க மல்கு குளிர் பொழில் சூழ் மலர்மேல்
தென்றல் ஒன்றி முன்றில் ஆரும் தென் திருப்பூவணமே.

6
நன்மை தீமை என்பனவற்றுள் ஒன்றும் இல்லாத வனும் நான்கு வேதங்களை அருளியவனும் தேவர்களின் தலைவனுமான சிவபிரான் தன் திருவடிகளை அடைந்து அன்பர்கள் போற்றி அருள் பெறுமாறு நின்ற இடம் பொதிய மலையில் பொருந்தி அங்கு நிறைந்த ஓங்கிய குளிர் பொழில்களில் உள்ள மலர்களிற் படிந்து வந்து தென்றல் முன்றில்களில் தங்கி மகிழ்விக்கும் அழகிய திருப்பூவணமாகும்.

பைவாய் அரவம் அரையில் சாத்தி, பாரிடம் போற்று இசைப்ப,
மெய் வாய் மேனி நீறு பூசி, ஏறு உகந்தான் இடம் ஆம்
கை வாழ் வளையார் மைந்தரோடும் கலவியினால் நெருங்கிச்
செய்வார் தொழிலின் பாடல் ஓவாத் தென் திருப்பூவணமே.

7
படம் பொருந்திய வாயினை உடைய பாம்பை இடையில் கட்டிக் கொண்டு பூதகணங்கள் போற்றிப் பாட மேனி முழுதும் மெய்மை வடிவான திருநீற்றைப் பூசி விடையேற்றை ஊர்ந்து வரும் சிவபிரானது இடம் கைகளில் வளையல்களை அணிந்துள்ள இளமகளிர் தம் காதலர்களோடு புணர்ச்சி விருப்புடையராய் நெருங்கிச் செய்யப்படும் கலவி பற்றிய பாடல்களின் ஓசை நீங்காத அழகிய திருப்பூவணமாகும்.

மாட வீதி மன் இலங்கை மன்னனை மாண்பு அழித்து,
கூட வென்றிவாள் கொடுத்து ஆள் கொள்கையினார்க்கு இடம் ஆம்
பாடலோடும் ஆடல் ஓங்கி, பல்மணி பொன் கொழித்து,
ஓடி நீரால் வைகை சூழும் உயர் திருப்பூவணமே.

8
மாடவீதிகள் நிலைபெற்ற இலங்கை மன்னன் இராவணன் பெருவீரன் என்று மக்கள் பாராட்டிய சிறப்பை அழித்து அவன் பிழை உணர்ந்து பாடி வேண்டிய அளவில் உடன் வெற்றி நல்கும் வாளைக் கொடுத்து ஆளும் அருட்கொள்கையாளனாகிய சிவ பிரானுக்குரிய இடம் ஆடல் பாடல்களால் மிக்க சிறப்புடையதும் பல்வகை மணிகளையும் பொன்னையும் அடித்து ஓடிவரும் நீரோடு வைகையாறு சூழ்ந்ததுமான உயர்ந்த திருப்பூவணமாகும்.

பொய்யா வேத நாவினானும், மகள் காதலனும்,
கையால் தொழுது கழல்கள் போற்ற, கனல் எரி ஆனவன் ஊர்
மை ஆர் பொழிலின் வண்டு பாட, வைகை மணி கொழித்து,
செய் ஆர் கமலம் தேன் அரும்பும் தென்திருப்பூவணமே.

9
என்றும் பொய்யாகாத வேதங்களை ஓதும் நாவினன் ஆகிய நான்முகனும் மலர்மகள் கணவனாகிய திருமாலும் தம் கைகளால் தன் திருவடிகளைத் தொழுது போற்ற சிவந்த எரி உருவான சிவபிரானது ஊர் கருநிறம் பொருந்திய சோலைகளில் வண்டுகள் பாடுவதும் வைகை ஆறு மணி கொழித்து வளம் சேர்ப்பதும் சிவந்த தாமரை மலர்களில் தேன் அரும்பி நிற்பதுமான அழகிய திருப்பூவணமாகும்.

அலை ஆர் புனலை நீத்தவரும், தேரரும், அன்பு செய்யா
நிலையா வண்ணம் மாயம் வைத்த நின்மலன் தன் இடம் ஆம்
மலை போல் துன்னி வென்றி ஓங்கும் மாளிகை சூழ்ந்து, அயலே
சிலை ஆர் புரிசை பரிசு பண்ணும் தென்திருப்பூவணமே.

10
அலைகள் வீசும் நீரில் நீராடாது அதனைத் துறந்த சமணரும் புத்தரும் புண்ணியப் பேறு இன்மையால் அன்பு செய்து வழிபாட்டில் நிலைத்திராது அவர்கட்கு மாயத்தை வைத்த குற்றமற்ற சிவபிரானுக்குரிய இடம் வெற்றி மிக்க மாளிகைகள் மலைபோல் நெருங்கி அமைய அவற்றைச் சூழ்ந்து கருங்கல்லால் ஆகிய மதில்கள் அழகு செய்யும் அழகிய திருப்பூவணமாகும்.
Go to top

திண் ஆர் புரிசை மாடம் ஓங்கும் தென்திருப்பூவணத்துப்
பெண் ஆர் மேனி எம் இறையை, பேர் இயல் இன்தமிழால்,
நண்ணார் உட்கக் காழி மல்கும் ஞானசம்பந்தன் சொன்ன
பண் ஆர் பாடல் பத்தும் வல்லார் பயில்வது வான் இடையே.

11
வலிமை பொருந்திய மதில்களும் மாடவீடுகளும் நிறைந்த அழகிய திருப்பூவணத்தில் பெண்ணொரு பாகனாம் திருமேனியோடு விளங்கும் எம் தலைவனாகிய சிவபிரானைப் பெருமை பொருந்திய இனிய தமிழால் பகைவராய புறச்சமயத்தவர் அஞ்சுமாறு சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் சொல்லிய இவ்விசைத் தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் ஓதவல்லவர் வாழ்வது வான் உலகமாகும்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்பூவணம்
1.064   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அறை ஆர் புனலும் மா
Tune - தக்கேசி   (திருப்பூவணம் பூவணநாதர் மின்னாம்பிகையம்மை)
3.020   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மாது அமர் மேனியன் ஆகி,
Tune - காந்தாரபஞ்சமம்   (திருப்பூவணம் பூவணநாதர் மின்னாம்பிகையம்மை)
6.018   திருநாவுக்கரசர்   தேவாரம்   வடி ஏறு திரிசூலம் தோன்றும்
Tune - திருத்தாண்டகம்   (திருப்பூவணம் பூவணநாதர் மின்னாம்பிகையம்மை)
7.011   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   திரு உடையார், திருமால் அயனாலும்
Tune - இந்தளம்   (திருப்பூவணம் பூவணநாதர் மின்னாம்பிகையம்மை)
9.014   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா   கருவூர்த் தேவர் - திருப்பூவணம்
Tune -   (திருப்பூவணம் )

This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org