சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.087   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருவடுகூர் (ஆண்டார்கோவில்) - குறிஞ்சி தீரசங்கராபரணம் குறிஞ்சி ராகத்தில் திருமுறை அருள்தரு வடுவகிர்க்கண்ணியம்மை உடனுறை அருள்மிகு வடுகேசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=lo0L1dYrDac   Add audio link Add Audio

சுடு கூர் எரிமாலை அணிவர்; சுடர் வேலர்;
கொடுகு ஊர் மழுவாள் ஒன்று உடையார்; விடை ஊர்வர்;
கடுகு ஊர் பசி, காமம், கவலை, பிணி, இல்லார்
வடு கூர் புனல் சூழ்ந்த வடுகூர் அடிகளே.

1
சுடும் தன்மை மிக்க தீபமாலையை அணிபவரும் ஒளி பொருந்திய சூலத்தினரும் கொடிய மழுவாயுதம் ஒன்றைக் கையில் உடையவரும் விடையை ஊர்ந்து வருபவரும் நீர் வளம் மிக்க வடுகூர் இறைவர் ஆவார். மிக்க பசி காமம் கவலை பிணி ஆகியன இல்லாதவரும் ஆவர்.

பாலும் நறு நெய்யும் தயிரும் பயின்று ஆடி,
ஏலும் சுடு நீறும் என்பும் ஒளி மல்க,
கோலம் பொழில்-சோலைக் கூடி மட அன்னம்
ஆலும் வடுகூரில் ஆடும், அடிகளே.

2
பால் நறுமணம் மிக்க நெய் தயிர் ஆகியவற்றை விரும்பி ஆடி பொருந்துவதான வெண்ணீறு என்புமாலை ஆகியவற்றை ஒளிமல்க அணிந்து அழகிய பொழில்களிலும் சோலைகளிலும் வாழும் அன்னங்கள் கூடி ஆரவாரிக்கும் வடுகூரில் நம் அடிகளாகிய இறைவர் மகிழ்வோடு ஆடுகின்றார்.

சூடும், இளந்திங்கள் சுடர் பொன்சடை தன்மேல்
ஓடும் களியானை உரி போர்த்து, உமை அஞ்ச,
ஏடு மலர் மோந்து அங்கு எழில் ஆர் வரிவண்டு
பாடும் வடு கூரில் ஆடும் அடிகளே.

3
ஒளி பொருந்திய பொன்போன்ற சடைமுடிமேல் இளந்திங்களைச்சூடி மதம் கொண்டு தன்பால் ஓடி வந்த யானையை உமையம்மை அஞ்சக் கொன்று அதன் தோலைப் போர்த்து அழகு பொருந்திய வரி வண்டுகள் இதழ்களோடுகூடிய மலர்களை முகர்ந்து தேனுண்டு பாடும் வடுகூரில் அடிகள் நடனம் ஆடுவர்.

துவரும் புரிசையும் துதைந்த மணி மாடம்
கவர எரியூட்டி, கடிய மதில் எய்தார்
கவரும் அணி கொல்லைக் கடிய முலை நல்லார்
பவரும் வடுகூரில் ஆடும் அடிகளே.

4
செந்நிறமும் மதிலும் செறிந்த அழகிய மாடங்களை அழிக்குமாறு தீயைச் செலுத்தி அம்மதில்கள் அழியுமாறு அம்பு எய்த சிவபெருமானார் காவல் பொருந்திய முலையாராகிய பெண் கொடிகள் முல்லைநிலத்தில் கைகளால் இரத்தினங்களைப் பொறுக்கி எடுக்கும் வடுகூரில் நடம்பயிலும் அடிகளாவர்.

துணி ஆர் உடை ஆடை துன்னி, அரைதன்மேல்
தணியா அழல் நாகம் தரியா வகை வைத்தார்
பணி ஆர் அடியார்கள் பலரும் பயின்று ஏத்த,
அணி ஆர் வடுகூரில் ஆடும் அடிகளே.

5
துணிக்கப் பெற்றதாகிய கோவண ஆடையை இடையிலே தரித்து அதன்மேல் தீப்போன்ற விட வெம்மை தணியாத நாகத்தை அழகுறத் தரித்தவராகிய அடிகள் அடியவர் பலரும் பணிந்து பரவி வாழ்த்த அழகிய வடுகூரில் ஆடியருள்கின்றார்.
Go to top

தளரும் கொடி அன்னாள் தன்னோடு உடன் ஆகி,
கிளரும் அரவு ஆர்த்து, கிளரும் முடிமேல் ஓர்
வளரும் பிறை சூடி, வரிவண்டு இசை பாட
ஒளிரும் வடுகூரில் ஆடும், அடிகளே.

6
சுமை பொறுக்காது தள்ளாடும் கொடி போன்ற வளாகிய உமையம்மையோடு கூடி விளங்கும் பாம்பினை இடையிலே கட்டிக் கொண்டு விளக்கம் பொருந்திய முடிமேல் வளரும் பிறைமதி ஒன்றைச் சூடி வரிகள் பொருந்திய வண்டுகள் இசைபாட பலராலும் நன்கறியப்பட்ட வடுகூரில் அடிகளாகிய பெருமான் ஆடியருள்கின்றார் .

நெடியர்; சிறிது ஆய நிரம்பா மதி சூடும்
முடியர்; விடை ஊர்வர்; கொடியர் மொழி கொள்ளார்;
கடிய தொழில் காலன் மடிய, உதை கொண்ட
அடியர் வடுகூரில் ஆடும் அடிகளே.

7
வடுகூரில் ஆடும் அடிகள் பேருருவம் கொள்பவர். சிறிதான கலைநிரம்பாத பிறைமதியைச் சூடும் முடியை உடையவர். விடையை ஊர்ந்து வருபவர். கொடியவர் மொழிகளை ஏற்றுக் கொள்ளாதவர். கொல்லும் தொழிலைச் செய்யும் காலன் மடியுமாறு உதைத்தருளிய திருவடியினர்.

பிறையும் நெடுநீரும் பிரியா முடியினார்,
மறையும் பல பாடி மயானத்து உறைவாரும்
பறையும் அதிர் குழலும் போலப் பலவண்டு ஆங்கு
அறையும் வடுகூரில் ஆடும் அடிகளே.

8
அதிர்கின்ற பறையும் வேய்ங்குழலும் போலப் பல வண்டுகள் ஒலிக்கும் சோலைகளை உடைய வடுகூரில் ஆடும் அடிகள் இளம்பிறை பெருகிய கங்கை நீர் ஆகியன பிரியாத திருமுடியை உடையவர். வேதங்களில் உள்ள சந்தங்கள் பலவற்றையும் பாடிக்கொண்டு இடுகாட்டில் உறைபவர்.

சந்தம் மலர் வேய்ந்த சடையின் இடை விம்மு
கந்தம் மிகு திங்கள் சிந்து கதிர்மாலை
வந்து நயந்து, எம்மை நன்றும் மருள் செய்வார்
அம் தண் வடு கூரில் ஆடும் அடிகளே.

9
அழகு தண்மை ஆகியவற்றை உடைய வடுகூரில் ஆடும் அடிகள் அழகிய மலர்கள் வேய்ந்த சடையின்கண் பெருகி எழும் மணம் மிகும் பிறைமதி வெளியிடும் கிரணங்களை உடைய மாலைநேரத்தில் வந்து விரும்பி எமக்கு நன்றாக அருள் செய்வார்.

திருமால் அடி வீழ, திசை நான்முகன் ஆய
பெருமான் உணர்கில்லாப் பெருமான், நெடு முடி சேர்
செரு மால் விடை ஊரும் செம்மான்-திசைவு இல்லா
அரு மா வடுகூரில் ஆடும் அடிகளே.

10
எட்டுத் திசைகளிலும் ஒளிபரவுமாறு அரிய பெரிய வடுகூரில் நடனம் ஆடும் அடிகள் திருமால் தம் அடியை விரும்பித் தோண்டிச் செல்லவும் திசைக்கு ஒரு முகமாக நான்கு திருமுகங்களைக் கொண்ட பிரமனாகிய தலைவனும் அறிய முடியாத பெரிய முடியினை உடைய இறைவர் போர் செய்யத்தக்க விடைமீது எழுந்தருளிவரும் சிவந்தநிறத்தினர்.
Go to top

படி நோன்பு அவை ஆவர், பழி இல் புகழ் ஆன,
கடிநாள் நிகழ் சோலை கமழும் வடுகூரை,
படி ஆன சிந்தை மொழி ஆர் சம்பந்தன்
அடிஞானம் வல்லார் அடி சேர்வார்களே.

11
இவ்வுலகில் கூறப்படும் நோன்புகள் பலவற்றுக்கும் உரியவராய் விளங்கும் சிவபிரான் எழுந்தருளியதும் குற்றமற்ற புகழோடு கூடிய மணம் கமழும் சோலைகளால் மணம் பெறுவதுமான வடுகூரில் மேவிய இறைவன் திருவடிகளில் படிந்த மனத்தோடு ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகத்தமிழை ஓதி அடிசேர்ஞானம் பெற்றார் திருவடிப்பேறு பெறுவர்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவடுகூர் (ஆண்டார்கோவில்)
1.087   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சுடு கூர் எரிமாலை அணிவர்;
Tune - குறிஞ்சி   (திருவடுகூர் (ஆண்டார்கோவில்) வடுகேசுவரர் வடுவகிர்க்கண்ணியம்மை)

This page was last modified on Thu, 06 Aug 2026 02:07:49 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org or to this WhatsApp Group