சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.089   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருஎருக்கத்தம்புலியூர் (இராசேந்திரப்பட்டிணம்) - குறிஞ்சி தீரசங்கராபரணம் குறிஞ்சி ராகத்தில் திருமுறை அருள்தரு நீலமலர்க்கண்ணம்மை உடனுறை அருள்மிகு நீலகண்டேசுரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=yMdIOYz2ckU   Add audio link Add Audio

படை ஆர்தரு பூதப் பகடு ஆர் உரி போர்வை
உடையான், உமையோடும் உடன் ஆய் இடு கங்கைச்
சடையான்-எருக்கத்தம்புலியூர்த் தகு கோயில்
விடையான்; அடி ஏத்த, மேவா, வினைதானே.

1
படைகளாக அமைந்த பூதகணங்களை உடையவனும் யானையின் தோலைப் போர்வையாகக் கொண்டவனும் உமையம்மையோடு உடனாய் விளங்குபவனும் வந்து பொருந்திய கங்கையை ஏற்ற சடையை உடையவனும் ஆகிய எருக்கத்தம்புலியூரில் விளங்கும் தகுதிவாய்ந்த கோயிலில் எழுந்தருளிய விடை ஏற்றை உடைய பெருமான் திருவடிகளை ஏத்துவாரை வினைகள் வந்து சாரா.

இலை ஆர் தரு சூலப்படை எம்பெருமானாய்,
நிலையார் மதில் மூன்றும் நீறு ஆய் விழ எய்த
சிலையான்-எருக்கத்தம்புலியூர்த் திகழ் கோயில்
கலையான்; அடி ஏத்த, கருதா, வினைதானே.

2
இலை வடிவமாக அமைந்த சூலப்படையை உடையவனும் எம்பெருமானும் நிலைபெற்ற முப்புரங்களையும் நீறாய்ப் பொடிபடுமாறு கணை எய்த வில்லை உடையவனும் எருக்கத்தம்புலியூரில் விளங்கும் கோயிலில் மேவியிருப்பவனும் ஆகிய கலைகளின் வடிவான சிவபிரானின் திருவடிகளை ஏத்தி வாழ்த்துவோரை வினைகள் கருதா.

விண்ணோர் பெருமானே! விகிர்தா! விடை ஊர்தீ!
பெண், ஆண், அலி, ஆகும் பித்தா! பிறைசூடி!
எண் ஆர் எருக்கத்தம்புலியூர் உறைகின்ற
அண்ணா! என வல்லார்க்கு அடையா, வினைதானே.

3
விண்ணவர் தலைவனே வேறுபட்ட வடிவும் பண்பும் உடையவனே விடைமீது ஏறிவருபவனே! பெண் ஆண் அலி என்னும் திணை பால் பாகுபாடுகளைக் கடந்துள்ளவனே பித்தனே பிறை சூடியவனே எல்லோராலும் எண்ணத்தகும் எருக்கத்தம்புலியூரில் உறைகின்ற தலைவனே என்றுரைத்துப் போற்ற வல்லவரை வினைகள் அடையா.

அரை ஆர்தரு நாகம் அணிவான், அலர்மாலை
விரை ஆர்தரு கொன்றை உடையான், விடை ஏறி,
வரையான், எருக்கத்தம்புலியூர் மகிழ்கின்ற
திரை ஆர் சடையானைச் சேர, திரு ஆமே.

4
இடையிலே பாம்பைப் பொருந்துமாறு அணிந்துள்ளவனும் மணம் கமழும் கொன்றை மலர் மாலையை அணிந்துள்ளவனும் விடைமீது ஏறி வருபவனும் கயிலை மலையைத் தனக்குரிய இடமாகக் கொண்டவனும் எருக்கத்தம்புலியூரில் மகிழ்ந்து உறைபவனும் ஆகிய அலைகள் வீசும் கங்கை நதியை சடைமிசைத்தரித்த சிவபிரானைச் சேர்வோர்க்குச் செல்வங்கள் வந்து சேரும்.

வீறு ஆர் முலையாளைப் பாகம் மிக வைத்து,
சீறா வரு காலன் சினத்தை அழிவித்தான்,
ஏறான், எருக்கத்தம்புலியூர் இறையானை
வேறா நினைவாரை விரும்பா, வினைதானே.

5
வேறொன்றற்கில்லா அழகினை உடைய தனங்களைக் கொண்ட உமையம்மையை இடப் பாகமாகச் சிறப்புடன் வைத்துக் கொண்டருளியவனும் சீறி வந்த காலனின் சினம் அடங்கச் செய்தவனும் இடப ஊர்தியை உடையவனும் எருக்கத்தம்புலியூரில் எழுந்தருளியுள்ள இறைவனும் ஆகிய சிவபிரானைத் தனித்திருந்து தியானிப்பவரை வினைகள் விரும்பா.
Go to top

நகுவெண்தலை ஏந்தி நானாவிதம் பாடிப்
புகுவான் அயம் பெய்ய, புலித்தோல் பியற்கு இட்டுத்
தகுவான்-எருக்கத்தம்புலியூர்த் தகைந்து அங்கே
தொகுவான்; கழல் ஏத்த, தொடரா, வினைதானே.

6
சிரிக்கும் வெள்ளிய தலையோட்டைக் கையில் ஏந்திப் பலவிதமாகப் பாடிக்கொண்டு மகளிர் இடும் பிச்சையை ஏற்கப் புகுபவனாய்ப் புலித்தோலைத் தோளில் இட்டுக்கொண்டு தகுதி வாய்ந்தவனாய் எருக்கத்தம்புலியூரில் தங்கி அங்கே நிலைத்திருப்பவனாகிய இறைவன் கழல்களை ஏத்த வினைகள் தொடரா.

ஆவா! என அரக்கன் அலற அடர்த்திட்டு,
தேவா! என, அருள் ஆர் செல்வம் கொடுத்திட்ட
கோவே! எருக்கத்தம்புலியூர் மிகு கோயில்-
தேவே! என, அல்லல் தீர்தல் திடம் ஆமே.

7
ஆ ஆ என்ற இரக்கக் குறிப்போடு இராவணன் அலறுமாறு அவனை அடர்த்து பின் தேவா என அவன் வேண்ட அருள் நிறைந்த செல்வங்கள் பலவற்றை வழங்கியருளிய தலைவனே எருக்கத்தம்புலியூரில் விளங்கும் சிறப்புமிக்க கோயிலில் எழுந்தருளும் தேவனே என்று போற்ற நம் அல்லல்கள் தீர்தல் உறுதியாகும்.

மறையான், நெடுமால், காண்பு அரியான்! மழு ஏந்தி!
நிறையா மதி சூடி! நிகழ் முத்தின் தொத்து ஏய்
இறையான்! எருக்கத்தம்புலியூர் இடம் கொண்ட
கறை ஆர் மிடற்றானைக் கருத, கெடும், வினையே.

8
வேதங்களை ஓதும் நான்முகனும் நெடுமாலும் காணுதற்கு அரியவனே மழுவைக் கையில் ஏந்தியவனே கலை நிறையாத பிறை மதியைச் சூடியவனே முத்துக்களின் கொத்துப் போன்ற இறையோனே என்று போற்றி எருக்கத்தம்புலியூரை இடமாகக் கொண்ட கறைமிடற்று அண்ணலை நினைந்தால் வினை கெடும்.

புத்தர் அருகர்தம் பொய்கள் புறம் போக்கி,
சுத்தி தரித்து உறையும் சோதி, உமையோடும்
நித்தன்-எருக்கத்தம்புலியூர் நிகழ்வு ஆய
அத்தன்; அறவன்தன் அடியே அடைவோமே.

9
புத்தர் சமணர் ஆகியோர்தம் பொய்யுரைகளை விலக்கித் தூய்மையைத் தழுவி விளங்கும் ஒளி வடிவினனாய் உமையம்மையாருடன் நித்தம் மணாளனாக விளங்குவோனாய் எருக்கத்தம்புலியூரில் விளங்கிக் கொண்டிருக்கும் அறவடிவினனாகிய தலைவன் அடிகளை நாம் அடைவோம்.

ஏர் ஆர் எருக்கத்தம்புலியூர் உறைவானை,
சீர் ஆர் திகழ் காழித் திரு ஆர் சம்பந்தன்
ஆரா அருந்தமிழ் மாலை இவை வல்லார்
பாரார் அவர் ஏத்த, பதிவான் உறைவாரே.

10
அழகிய எருக்கத்தம்புலியூரில் விளங்கும் இறைவனை சீர்மிகு காழிப்பதியில் தோன்றிய திருவார்சம்பந்தன் அருளிய சுவைகுன்றாத அருந்தமிழ் மாலையாகிய இத்திருப்பதிகப் பாடல்களை ஓதுபவர்கள் உலகவர் ஏத்த வானகம் எய்துவர்.
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருஎருக்கத்தம்புலியூர் (இராசேந்திரப்பட்டிணம்)
1.089   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   படை ஆர்தரு பூதப் பகடு
Tune - குறிஞ்சி   (திருஎருக்கத்தம்புலியூர் (இராசேந்திரப்பட்டிணம்) நீலகண்டேசுரர் நீலமலர்க்கண்ணம்மை)

This page was last modified on Thu, 06 Aug 2026 02:07:49 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org or to this WhatsApp Group